"ஆகையால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: அநீத செல்வத்தைக்கொண்டு நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்ளுங்கள்."
(லூக்.16:9)
** ** ** ** ** ** ** ** ** ** **
மனிதன் இரண்டு தலைவர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது.
நமது ஆன்மா இறைவனது சாயலாகப் படைக்கப் பட்டிருப்பதால் அது இறைவனுக்கு ஊழியம் செய்ய விரும்புவது இயல்பு.
நமது உடல் மண்ணிலிருந்து உருவாக்கப் பட்டிருப்பதால் அது இவ்வுலக பொருட்களை நோக்கி ஈர்க்கப்படுவது இயல்பு.
ஆன்மாவும் உடலும் சேர்ந்ததுதான் மனிதன்.
ஊன் இயல்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இறை இயல்பை மறந்து விடுவார்கள்.
இறை இயல்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்
ஊன் இயல்பை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார்கள்.
இறைவன் மட்டுமே நமது தலைவர்.
நாம் அவருக்கு மட்டுமே ஊழியம் செய்ய வேண்டும்.
உலக பொருள்கள் நமக்கு ஊழியம் செய்ய வேண்டும்,
அதற்காக தான் அவற்றை படைத்திருக்கிறார் இறைவன்.
"படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக,
மனுவைப் படைத்தான் தனை வணங்க."
இது தமிழ்ப் பழமொழி.
இறைவன் நமது முதல் பெற்றோரை நோக்கி இவ்வுலகப் பொருட்களை
"கீழ்ப்படுத்துங்கள்:"
"subdue it,"
"ஆண்டு கொள்ளுங்கள்"
"have dominion over"
( ஆதி. 1:28
என்றுதான் சொன்னார்.
உலகப் பொருள்களை நாம் ஆள வேண்டுமே தவிர
அவை நம்மை ஆண்டு விடக் கூடாது.
பணம், நல்லதா? கெட்டதா?
தன்னிலே பணம் நல்லதுதான்.
ஏனெனில் இறைவன் படைத்த எல்லா பொருட்களும் நல்லவைதான்.
பண்டப் பரிமாற்றத்தில் பண்டத்திற்குப் பதில் பணத்தைப் பரிமாறுகிறோம்.
நெல் இறைவனின் படைப்பு. அதை வாங்க பணம் கொடுக்கிறோம்.
நெல் நல்லதானால் அதற்குப் பதிலாகக் கொடுக்கும் பணமும் நல்லதுதான்.
மனிதன் நல்ல நோக்கத்தோடு தன் தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்தும் எதுவும் நல்லதுதான்.
ஆனால் மனிதனின் நோக்கம்
தவறாக இருந்தால்
அதற்காக பயன்படுத்தப்படும் பணம், அல்லது பொருள்,
மனிதனின் கெட்ட பெயரை அது தாங்கிக் கொள்கிறது.
செல்போன் நல்லதா? கெட்டதா?
செல்போனை நல்ல நோக்கத்தோடு பயன்படுத்தினால் செல்போன் பயன் உள்ளது என்போம்.
அதையே தவறான நோக்கத்தோடு பயன்படுத்தினால் செல்போன் மோசமானது என்போம்.
தேவைக்கு உண்போமானால் உணவு அது வயிற்றுக்கு நல்லது.
தேவைக்கு அதிகமாக உண்போமானால் அது வயிற்றுக்கு வலியைக் கொடுக்கும்.
உன்னைப்போல் உன் அயலானையும் நேசி என்று ஆண்டவர் கூறியிருக்கிறார்.
நேசம் செயலாக மாற வேண்டும்.
அப்படியானல் நம்மை நேசிக்கும் நாம் நமது தேவைகளைப் பூர்த்தி செய்வது போல
நம்மால் நேசிக்கப்படும் அயலானின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
நமது தேவைகளுக்குப் போக மீதி பணம் இருந்தும் அதை அயலானின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தாவிட்டால் நாம் இறைவனின் கட்டளையை மீறுகிறோம்.
நாம் நீதிக்குப் புறம்பாக கட்டளையை மீறுவதால் நாம் அநீதர்கள்.
அநீதர்கள் கையிலுள்ள செல்வம் அநீத செல்வம்.
நமது தேவைக்கு அதிகமாக உள்ள அநீத செல்வத்தை நல்ல செல்வமாக மாற்ற வேண்டும்.
அப்படி மாற்றிவிட்டால் நாம் நீதி உள்ளவர்களாக மாறி விடுவோம்.
"அநீத செல்வத்தைக்கொண்டு நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ளுங்கள்" என்று இயேசு கூறுகிறார்.
அதாவது நமது தேவைக்கு அதிகமாக உள்ள செல்வத்தை
ஆண்டவரின் கட்டளைப்படி தேவைகள் உள்ள அயலானுக்குக் கொடுத்து உதவ வேண்டும்.
இவ்வாறு செய்யும்போது விண்ணக வாழ்வுக்கு ஏற்றவர்கள் ஆகிறோம்.
தேவைப்படுகின்றவர்கள் அருகில் இல்லாவிட்டால் நம்மிடம் இருக்கும் அச்செல்வத்தை எதிர்காலத்தில் அதே நோக்கத்திற்காகப் பயன் படுத்த வேண்டும்.
இப்போது ஒரு வினா எழலாம்.
நமது இன்றைய தேவைக்குப் போக மீதியை
நமது, மற்றும் நமது சந்ததியாரின் எதிர்கால தேவைக்குச் சேமித்து வைப்பது தவறா?
இவ்வுலக விழுமியப்படி (value) இதில் தவறு இல்லை. நாம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.
கிறிஸ்தவ விழுமியம் (Christian value) வித்தியாசமானது.
கிறிஸ்து விரும்பும் நிறைவை நோக்கிப் பயணிப்போர் கிறிஸ்தவ விழுமியத்தைப் பின்பற்றுவர்.
இயேசு
"எங்கள் அன்றாட உணவை இன்று தாரும்."
"Give us this day our daily bread."
அன்றுதான் செபிக்கக் கற்றுக் கொடுத்தார்.
"எதிர்காலத்துக்கும் சேர்த்துத் தாரும்" என்று கேட்கச் சொல்ல வில்லை.
"நாளைய தினத்தைக் குறித்துக் கவலைப்படாதீர்கள். நாளைய தினம் தன்னைப்பற்றிக் கவலைகொள்ளும். அன்றன்றைய தொல்லை அன்றன்றைக்குப் போதும்."
(மத். 6:34)
இதுதான் கிறிஸ்துவின் போதனை.
கிறிஸ்தவ விழுமியப்படி நடப்பவர்கள் அதனால் உலகில் ஏற்படும் கஷ்டங்களை நம் ஆண்டவருக்காக தாங்கிக் கொள்ள வேண்டும்.
கிறிஸ்தவ விழுமியப்படி நாம் நடக்கிறோமா என்பது நமது ஆன்மப் பரிசோதனைக்கு உரிய விசயம்.
ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இறைவன் நமக்குத் தந்திருப்பது நமக்கும், நம் அயலானுக்கும் சேர்த்துதான்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment