Wednesday, April 29, 2020

கவனம், வில்லனும் நம்மோடு தான் வருகிறான். (தொடர்ச்சி.)

கவனம், வில்லனும் நம்மோடு தான் வருகிறான்.

தொடர்ச்சி.
**  **  **   ** ** **   ** ** ** ** **
 சாத்தானுக்கு  நம்மைப் பின்தொடர்வதைத் தவிர  வேறு வேலையே இல்லை.

எதற்காக நம்மைப் பின்தொடர்கிறான்?

நாம் நடந்து கொண்டிருப்பது விண்ணகப் பாதையில்.

நமது பாதை குறுகலானது.

முன்னோக்கிய பார்வையில் கவனமாக நடக்க வேண்டும்.

நம்மை ஒட்டியே அகலமான பாதை ஒன்று இருக்கும்.

அது சாத்தானுக்கு உரியது.

நமது கவனத்தைச் சிதறடித்து நம்மை  அகலமான பாதைக்குள் விழ வைக்க வேண்டும் என்பதே அவன் நோக்கம்.

அதற்காக நம்மிடம் ஏதாவது பேசிக்கொண்டே நம்மைப் பின் தொடர்ந்தே வந்து கொண்டிருக்கிறான்.

அவனது பேச்சுக்குச் செவி கொடாமல்

செவியில் விழுந்தாலும் அதைப் பற்றிக் கவலைப் படாமல்

வழிமேல் விழிவைத்துப் போய்க்கொண்டே இருக்க வேண்டும்.

ஒரு வியாபாரி.

எட்டு மணிக்கு ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலி.

7.45க்கு வீட்டிலிருந்து கோவிலுக்கு புறப்படுகிறான்.

ஒரு போன் வருகிறது.

"சார் இப்ப வந்தா நீங்க நேற்று கேட்ட வியாபாரத்தை பேசி முடித்துவிடலாம்."

"ஒரு மணி நேரம் கழித்து வரலாமா?"

"அரை மணி நேரம் கழித்து வந்தால் கூட வியாபாரம் கைவிட்டுப் போய்விடும்.

போட்டிக்கு ஆட்கள் நிறைய உள்ளனர்."

"எட்டு மணிக்கு திருப்பலி முடிந்து வரலாமா என்று பார்த்தேன்."

அப்பொழுது  சாத்தான் நல்லவன் போல ஒரு ஆலோசனை கொடுக்கிறது.

 "வியாபாரத்தில் எப்படியும் ஒரு லட்சம் லாபம் கிடைக்கும்.

 அதை வைத்து 10 பேருக்கு உதவி செய்யலாம்.

அயலானை நேசி என்று ஆண்டவர் சொல்கிறார்.

 அயலானுக்கு உதவி செய்ய பணம் வேண்டும்.

திருப்பலிக்கு அடுத்த வாரம் போய்க்கொள்ளலாம்."

 காவல் சம்மனசு சொல்கிறது,

".ஞாயிறு திருப்பலிக்குப் போகாவிட்டால் சாவான பாவம்."


"சாமியார் கோவில் வேலைக்கு நன்கொடை கேட்டார். வியாபாரத்தை முடித்துவிட்டால் கேட்ட நன்கொடையைக் கொடுத்து விடலாம். திருப்பலிக்கு அடுத்த வாரம் போய்க்கொள்ளலாம்."

இப்படித்தான் சாத்தான் நல்லவன் போல பேசி நம்மைத் தன்  வலையில்  விழ வைக்க முயல்வான்.

 கவனமாக இல்லாவிட்டால் சிக்கிக் கொள்ள நேரிடும்.

 கவனமாய் இருப்போம்.
                     
              .        **               
கோவில் திருவிழாவைச் சிறப்பாய்க் கொண்டாட சாமியார் அழைப்பு விடுக்கிறார்.    

அதற்கென பங்கின் முக்கியமானவர்கள் அடங்கிய பணிக்குழு ஒன்றை அமைக்கிறார்.

எப்படி இயேசு பாவிகளைத் தேடி வருகிறாரோ,

அதே போல்தான் சாத்தான் இறைப்பணியாளர்கைைளைத் தேடி வருவான்,

 அவர்கள்மத்தியில்தான் சாத்தானுக்கு வேலை அதிகம்.

சாதாரண மக்களிடையே வீட்டுக்கு ஒரு பேய் இருக்குமாம், சோதிக்க,

சந்நியாசிகள் இல்லத்தில்  ஓட்டுக்கு ஒரு பேய் இருக்குமாம்.


அதே போல் தான் திருவிழா பணிக்குழு மத்தியில் ஆளுக்கொரு பேயுடன் சாத்தானும் பணியைத் துவக்குவான்.

சந்நியாசிகள் மத்தியிலும், கோவில் பணியாளர்கள் மத்தியிலும் அவனுடைய  வேலை வித்தியாசமானது.

எப்படி?

அவர்களை உற்சாகமாகத் தம் பணியைச் செய்யத் தூண்டுவது.

பணி முடியுமட்டும் நல்லவன் போல துணையாய் இருப்பது.

நல்ல முறையில் பணி முடிந்தபின், 

எல்லோரையும் அவர்களைப் பாராட்ட வைத்து,

 தற்பெருமையை ஊட்டி, இறைவன் முன் ஒரு பலனும் இல்லாமல் செய்துவிடுவது!

ஊதிய பலூனை Show காட்டிவிட்டு உடைத்து விடுவது போல.

தற்பெருமையால் (Pride) கெட்டவன் தானே சாத்தான்!

லூசிபெரை சாத்தானாக்கியது தற்பெருமைதான்!

ஒவ்வொரு நாளும் மாலையில்  அன்று நாம் செய்த நற்செயல்களை எண்ணி மகிழ்வோமானால் சாத்தான்  நம்மை விட அதிகம் மகிழ்வான்.

  ஒவ்வொரு நாளும் 
மாலையில்  

அன்று நாம் செய்த பாவங்களை  எண்ணி வருந்தி, அழுவோமானால் 

 சாத்தான்  நம்மை விட அதிகம் அழுவான்.

சாத்தான் நம்மோடு வருவதை நம்மால் தடுக்க முடியாது.

 ஆனால் நம்மால் அவனை
அழ வைக்க முடியும்.

 அழ வைப்போம்.

லூர்து செல்வம்.


No comments:

Post a Comment