பாவிகளைத் தேடி.
** ** ** ** ** ** ** ** ** ** **
இறைமகன் இயேசு விண்ணிலிருந்து மண்ணிற்கு வந்தது பாவிகளைத் தேடி.
ஏன் பரிசுத்தராகிய இயேசு பாவிகளை தேடி வந்தார்?
பாவிகளால் அவருக்கு என்ன பயன்?
தான் பயன் பெறுவதற்காக பாவிகளைத் தேடி வரவில்லை,
பாவிகள் பயன் பெறவே அவர்களைத் தேடி வந்தார்.
அவர் நமது முதல் பெற்றோரை பரிசுத்த நிலையில்தான் படைத்தார்.
அவர்கள் இறைவனின் கட்டளைகளை மீறி பாவம் செய்தார்கள்.
பரிசுத்தர்கள் பாவிகளாக மாறினார்கள்.
மனிதர் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்து, அவற்றை மன்னித்து, பாவிகளை பரிசுத்தராக மாற்ற இறைவன் விரும்பினார்.
அந்த நோக்கத்திற்காகவே இயேசு பாவிகளைத் தேடி வந்தார்.
இயேசுவைப் பொறுத்தமட்டில் மனிதர்கள் அனைவருமே பாவிகள்தான்.
அனைவருமே இரட்சிக்கபட வேண்டியவர்கள்.
மனிதர்களிடையே இயற்கையாகவே ஒரு சுபாவம் உண்டு. இது அவர்கள் செய்த பாவத்தின் விளைவு.
தங்கள் பாவ நிலையை உணராமல் மற்றவர்களை பாவிகள் என்று அழைப்பது.
இறைவன் ஆதாமின் பாவத்தை சுட்டிக் காட்டியபோது அவன் பழியை ஏவாள் மீது போட்டான்.
ஏவாளை கேட்டபோது பாம்பின் மேல் போட்டாள்.
இருவருமே தாங்கள் செய்த பாவத்திற்கு பொறுப்பை தாங்கள் ஏற்கவே இல்லை.
மனம் திரும்பிய பாவியாகிய ஒரு பெண் இயேசுவின் பாதங்கள்மேல் கண்ணீர் பொழிந்து
அவற்றைக் கூந்தலால் துடைத்து, முத்தமிட்டு அப்பாதங்களில் தைலம் பூசிய போது,
அவரை விருந்துக்கு அழைத்த பரிசேயன்
"இவர் இறைவாக்கினராய் இருந்தால் தம்மைத்தொடும் இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார். இவளோ பாவி" என்று நினைத்தான்.
பரிசேயன் அவளைப் பாவி என்று நினைத்தான்!
இயேசு அவனைப் பார்த்து,
"அவள் செய்த பாவங்கள் பல மன்னிக்கப்பட்டன. அவள் காட்டிய பேரன்பே அதற்குச் சான்று." என்றார்.
இயேசு கடவுள்.
பாவிகளை மீட்கவே மனிதனாகப் பிறந்ததால்
அவரது மன்னிக்கும் அருள்வரம் பாவிகளை நோக்கியே பாயும்,
அதிலும் பெரிய பாவிகளை நோக்கி அதிகமான அருள் பாயும்.
இதை உணராத பரிசேயன் ஒரு பாவி இயேசுவின் பாதங்களில் பரிமல தைலம் பூசுவதில் குறைகண்டான்.
இயேசு மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தபோது முதல் முதல் காட்சி கொடுத்தது மனம் திரும்பிய பாவியாகிய மரிய மதலேனாளுக்குதான்.
அவள் மூலமாகத்தான் அவர் உயிர்த்த செய்தி சீடர்களுக்கு அனுப்பப்படுகிறது.
இதிலிருந்து பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டு மனம் திரும்புகிற பாவிகளுக்கு இயேசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது தெரிகிறது.
இன்றும் இயேசு பாவிகள் பக்கம் தன் அருள் வரங்களோடு காத்துக்கொண்டிருக்கிறார், அவர்கள் மனம் திரும்ப வேண்டும் என்று.
இன்றைய காலத்கட்டத்தில் கொரோனா வைரசைக் காரணம் காட்டி
கோவில்கள் எல்லாம் மூடப்பட்டிருக்கின்றன.
நாம் திருப்பலியில் பங்கேற்கவும், திருப்பந்தியில் கலந்து கொள்ளவும் முடியவில்லை.
என்ன நடந்தாலும் இறைவனின் திட்டப்படிதான் நடக்கும்.
இயேசுவின் இத்திட்டத்திற்கு என்ன காரணமாய் இருக்கக்கூடும் என்று யோசித்துப் பார்க்கும்போது
"இதற்காக இருக்கலாமோ?" என்று மனதில் படுகிறது.
எதற்காக இருக்கலாமோ?
வரவர விசுவாசம் குறைந்து வருவது மக்களுடைய வாழ்க்கை முறையிலிருந்தே தெரிகிறது.
கிறிஸ்தவர்களிடையே பாவ உணர்ச்சி (sense of sin.) குறைந்துவிட்டது ஆகவே பாவசங்கீர்த்தனங்கள் குறைந்துவிட்டன.
Pope Pius XII spoke a prophetic word: “Perhaps the greatest sin in the world today is that men have begun to lose the sense of sin.”
ஞாயிற்றுக்கிழமை முழு பூசை காணாமல் இருப்பது பாவம் என்று மக்கள் உணர்வதில்லை.
பாவத்தோடு நற்கருணை வாங்குவதும் பாவம் என்பதையும் மக்கள் உணர்வதில்லை.
ஆகவே அவர்கள் கோவிலுக்கு வருவதும், திருப்பலி காண்பதும், நற்கருணை வாங்குவதும் அவர்களுடைய வசதிப்படியன்றி திருச்சபையின் ஒழுங்குப்படி அல்ல.
நற்கருணை கொடுக்கும் நேரத்தில் கோவிலுக்கு வந்து
கையில் வாங்கி வாயில் போட்டு விட்டு
வீட்டுக்கு போய்
"நான் பூசைக்குப் போய்விட்டு வந்தேன்"
என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.
நாம் இந்தியாவில் பிறந்ததால் இந்தியர்களாக இருக்கிறோம்.
அதேபோல அநேகர் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்ததால் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள்,
விசுவாசத்தினால் அல்ல.
இப்படிப்பட்டவர்களுக்கு Shock treatment கொடுப்பதற்காகத்தான் இன்றைய நிலையை இறைவன் அனுமதித்திருக்கிறார் என்று எண்ணுகிறேன்.
குருக்கள் எவ்வளவோ சொல்லியும், பிரசங்கங்கள் வைத்தும் திருந்தாத இத்தகையயோர்
ஒருவேளை கொரோனாவிற்குப் பயந்து, சாவு பயத்திலாவது
நல்ல கிறிஸ்தவர்களாக மாற வாய்ப்பு கொடுப்பதற்காகத்தான்
இறைவன் இந்நிலையை அனுமதித்திருக்கிறார் என்று எனக்கு தோன்றுகிறது.
ஒழுங்காகப் பள்ளிக்கு வராத மாணவனிடம்
தலைமையாசிரியர்,
"ஒழுங்காக பள்ளிக்கூடம் வருவதாக இருந்தால் வா,
அல்லது,
T.C வாங்கிக்கொண்டு வீட்டுக்கு போ"
என்று தலைமையாசிரியர் பயம் காட்டினால்
திருந்தி ஒழுங்காகப் பள்ளிக்கூடம் வருகிற மாணவர்கள் உண்டு.
இந்த பள்ளிக்கூட அனுபவத்தை வைத்துத்தான் நான் இப்படி நினைக்கிறேன்.
நிலைமைையைக் குறை சொல்வதற்கு பதில் நாம் திருந்த வேண்டும்.
திருச்சபையின் ஒழுங்குகளை அறிந்து அதன்படி ஆன்மீக வாழ்வு வாழ வேண்டும்.
நம்மை வழி நடத்துபவர்கள் பள்ளிக்கூடங்களும், கோவில்களும் கட்டுவதில் காண்பிக்கும் ஆர்வத்தை,
திருச்சபையை
(அதாவது மக்களை)
கட்டியெழுப்புவதில் காண்பிக்க வேண்டும்.
நிர்வாகத்தை விட பராமரிப்பிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
திருச்சபையின் எல்லா மட்டத்திலும் எல்லோரும் திருந்த வேண்டும் என்றே இறைவன் எதிர்பார்க்கிறார் என்று எண்ணுகிறேன்.
வகுப்பில் மாணவர்களைத் திருத்த ஆசிரியர் பிரம்பைப் பயன்படுத்துவது போல
மக்களை திருத்துவதற்காகத் தான் இறைவன் வைரஸைப் பயன்படுத்துகிறார் என்று எண்ணுகிறேன்.
உயிர்த்த இயேசு மனந்திரும்பிய பாவிக்குதான் முதல் முதல் காட்சி அளித்தார்.
அதிலிருந்து பாவிகளாகிய நாம் மனம் திரும்புவதை எவ்வளவு விரும்புகிறார் என்பது புரிகிறது.
இயேசுவின் விருப்பத்தை நிறைவேற்றுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment