என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்.
** ** ** ** ** ** ** ** ** ** **
நமது எண்ணம் சொல் செயல் மூன்றும் நமது விசுவாசத்தோடு ஒத்துப் போக வேண்டும்.
ஆரம்பப் பள்ளியில் நாம் படித்துக்கொண்டிருந்தபோது கணக்கு பாடத்தில் வாய்ப்பாடு படித்திருக்கிறோம்.
அடுத்து நாம் படிக்கவிருக்கும் எல்லாவிதமான கணக்குகளுக்கும் அவையே அடிப்படை.
கணிதத்தில் Phd. செய்பவர்களுக்கும் வாய்ப்பாடுதான் அடிப்படை.
நமது கிறிஸ்தவ வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் நமது விசுவாசத்தின் அடிப்படையில்தான் வாழ வேண்டும்.
கடவுள் அன்பு மயமானவர் என்று விசுவசித்து விட்டு
அவரை
"தண்டிக்கிறார், அழிக்கிறார்,
பழிவாங்குகிறார்"
போன்ற வார்த்தைகளால் விமர்சிப்பது நமது விசுவாசத்திற்கு எதிரானது.
அன்பு மயமானவரிடம் அன்பிற்கு எதிரான,
அன்போடு ஒத்துவராத
எந்த பண்பும் இருக்க இயலாது.
ஆசிரியர் வகுப்பில் பிரம்பை பயன்படுத்துகிறார்.
அது மாணவர்களைத் தண்டிக்கவா, அழிக்கவா, பழி வாங்கவா அல்லது அவர்களை திருத்தவா?
நகை செய்பவர் தங்கத்தை நெருப்பில் உருக்கி, கட்டியாக்கி, கம்பியாக இழுத்து, சுத்தியலால் அடித்து அழகான நகை செய்வது போல,
விவசாயி நிலத்தை உழுது, வெட்டி பயிர் இடுவது போல,
தையல்காரர் புதிய துணியை வெட்டி, துண்டு துண்டாக்கி, தைத்து புதிய ஆடை தயாரிப்பது போல
ஆசிரியர் நல்ல உபயோகமுள்ள மாணவரை உருவாக்குகிறார்.
ஒரே நேரத்தில் நீர் தண்ணீராகவும்
வெந்நீராகவும் இருக்க முடியாது.
அதேபோல்தான் அன்பு நிறை கடவுளிடம் வெறுப்பு இருக்க இயலாது.
கடவுளிடம் அன்பு இல்லை. கடவுள்தான் அன்பு. .
God does not have love.
God is love.
அன்பு எப்படி வெறுப்பு ஆகும்?
கடவுள் நல்லவர்.
நல்லவர் நல்லதை மட்டும்தான் செய்ய முடியும்.
கடவுள் நம்மைப் படைத்தார்.
நாம் முழுக்க முழுக்க கடவுளுக்கே சொந்தம்.
ஒவ்வொரு வினாடியும் நம்மை பராமரித்து வருபவர் கடவுள் மட்டுமே.
பராமரிப்பின் போது அவர் நமக்காக என்ன செய்தாலும் அது நமது நன்மைக்கே என்பதை நாம் உணர வேண்டும்.
அதை உணராவிட்டால் நாம் கடவுளை நல்லவர் என்று ஏற்றுக் கொள்ளவில்லை என்று பொருள்.
கடவுளை நல்லவர் என்று ஏற்றுக்கொள்பவர் அவர் செய்யும் எல்லா செயல்களையும் நல்லவை என்று ஏற்றுக்கொண்டு
அவருக்கு நன்றி கூறுவர்.
அதாவது கடவுளால் நமக்கு என்ன நேர்ந்தாலும் நாம் நன்றி கூறுவோம்.
வியாதி குணமாக வேண்டும் என்று டாக்டரிடம் செல்லும் நோயாளி முதலாவது டாக்டரை டாக்டராக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வைத்தியத்தின் போது அவர் செய்யும் செயல்கள் நாம் குணம் பெறுவதற்காகவே என்று நம்புபவன்தான் டாக்டரை டாக்டராக ஏற்றுக்கொள்கிறான்.
டாக்டர் கசப்பான மருந்தைக் கொடுக்கும்போது,
"ஐயோ டாக்டர் என்னை பழிவாங்குகிறார், என்னை
வதைக்கிறார், என்னைத் தண்டிக்கிறார்"
என்று எண்ணுபவன் எப்படிப்பட்டவன்?
கஷ்ட காலத்தில் கடவுளை நோகிறவனும் அப்படி பட்டவன்தான்.
கடவுள் நமக்குத் தந்த பரிசாகிய சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி அவரது அன்பை மறந்து அவருக்கு விரோதமாக பாவங்கள் செய்கிறோம்.
பாவம் ஆன்மாவிற்கு ஏற்படும் நோய்,
இந்நோயைக் குணமாக்கி நம்மைப் பரிசுத்தர்களாக மாற்றுவதற்காக இறைவன் சிலுவை என்ற கசப்பான மருந்தை நமக்குத் தருகிறார்.
மருந்தை மருந்தாக ஏற்றுக்கொண்டு அவருக்கு நன்றி கூறுவதோடு
பாவ நிலையிலிருந்து மனம் திரும்ப வேண்டும்.
இன்று உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் கூட
உலகைத் திருத்துவதற்காக இறைவன் தந்திருக்கும் கசப்பான மருந்துதான்.
வைரஸிலிருந்து தப்பிக்க நமக்கு உதவும்படி இறைவனிடம் கேட்கும் முன்
நாம் மனம் திரும்பி இறைவனை இறைவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நம்மில் அநேகருக்கு
வியாதியிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறதே தவிர
பாவங்களுக்காக வருந்தி, திருந்தி இறைவனிடம் வரவேண்டும்
அவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்,
நல்லவர்களாக மாறவேண்டும்,
இவ்வுலக வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாமல்
விண்ணகம் நோக்கி நடைபோட வேண்டும் என்ற எண்ணமே வருவது இல்லை.
ஒருவன் வெளியூர் சென்று வியாபாரம் செய்து நிறைய சம்பாத்தியம் செய்தான்.
ஈட்டிய பணத்தை எல்லாம் ஒரு பையில் வைத்து
பையை பத்திரமாக கையில் வைத்து கொண்டு வந்தான்.
வரும் வழியில் ஆறு ஒன்றை கடக்க வேண்டி இருந்தது.
எதிர்பாராத விதமாக ஆற்றில் நிறைய வெள்ளம் வந்து கொண்டிருந்தது.
தண்ணீரில் இறங்கி நடந்து சென்று விடலாம் என்ற நம்பிக்கையுடன் ஆற்றில் இறங்கினான்.
ஆனால் அளவுக்கு மிஞ்சி வெள்ளம் வந்ததால் அவனால் சமாளிக்க முடியவில்லை.
கொண்டுவந்த பணப்பை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது.
"ஐயோ என் பணப்பை வெள்ளத்தில் போகிறதே, யாராவது காப்பாற்றுங்களேன்"
என்று கத்தினான்.
ஆற்றங்கரையில் நின்றுகொண்டிருந்த ஒரு வாலிபன் பணப்பையை மீட்பதற்காக ஆற்றில் குதித்தான்.
அதற்குள் பணப்பை கொஞ்ச தூரம் சென்றுவிட்டது.
வாலிபன் கஷ்டப்பட்டு பணப்பையை மீட்டான்.
மீட்ட பையை உரியவனிடம் கொடுப்பதற்காக திரும்பினான்.
அதற்குள் பைக்கு உரியவனை வெள்ளம் அடித்து சென்று விட்டது!
அவன்
"என்னைக் காப்பாற்றுங்கள்"
என்று கத்தியிருக்க வேண்டும்
அப்படிக் கத்தியிருந்தால் வாலிபன் அவனை காப்பாற்றி இருப்பான்.
அவன் பணத்தைப் பற்றி மட்டும் கவலைப்பட்டடதால் வெள்ளத்தோடு போய்விட்டான்.
நம்மை ஏதாவது ஆபத்து நெருங்கி வந்தால் நாம் முதலில் செய்யவேண்டியது
"இறைவா என் ஆன்மாவை காப்பாற்றுங்கள்."
என்ற செபத்தைத்தான்.
மனிதனுக்கு வரக்கூடிய கஷ்டங்கள் எல்லாம்
அவனது நன்மைக்காகவே,
அதாவது, அவனை உலக நாட்டத்திலிருந்து இறைவனை நோக்கி திரும்ப வைப்பதற்காகத்தான்,
மனிதன் இறைவனைத் தேடாமல்
உலகத்தை பற்றிக் கொள்வதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்துவதுதான்
அவனது பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம்.
கஷ்டங்கள் வரும்போது இறைவனை தேடுவோம்.
அவரைத் தேட உதவிய கஷ்டங்களை அனுப்பிய அவருக்கு நன்றி கூறுவோம்.
என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment