Sunday, April 12, 2020

உள்ளே, வெளியே.

உள்ளே, வெளியே.
**  **  **   ** ** **   ** ** ** ** **
திரைப்படம் பார்க்க செல்பவர்கள் சிலர் பொழுதுபோக்கிற்காக செல்வார்கள்.

நேரம் போகவேண்டும். அவ்வளவு தான்.

மற்றபடி படம் நல்லதா கெட்டதா என்பதைப்பற்றி அக்கறைப் படுவது இல்லை.

சிலர் தங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடித்த படங்களை அவர்களுக்காகவே பார்க்கச் செல்வார்கள்.

அவர்களுடைய உடல் இருப்பிடங்களில் (Seats) இருக்கும்.

ஆனால் அவர்கள் தங்களுடைய அபிமான நட்சத்திரங்களோடு இணைந்து

கதையில் கலந்து விடுவார்கள்.

படத்தை ஒரு முறை அல்ல,
பல முறைகள்,

பொழுதுபோக்கிற்காக அல்ல,
நட்சத்திரங்களுக்காகவே பார்க்க செல்வார்கள்.

நாம் பைபிள் வாசிக்கிறோம்.

சாமியார் சொன்னார் என்பதுக்காகவா?

வினா விடைப் போட்டியில் கலந்துகொள்ளவா?

கட்டுரைப் போட்டியில் கலந்துகொள்ளவா?

சொற்பொழிவுக்காகவா?

பைபிளைக் கையில் வைத்திருப்பதும், வாசிப்பதும் கிறிஸ்தவனுக்கு அடையா யாளம் என்பதற்காகவா?

அல்லது இவற்றை எல்லாம் தாண்டி, பைபிளுக்குள் நுழைந்து அங்கேயே வாழ்வதற்காகவா?

அனைவருக்கும் தெரியும் உணவு உண்பது ருசிக்காக அல்ல, உயிர் வாழ்வதற்கு என்று.

அதேபோல அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும் இறைவார்த்தை ஆன்மீக வாழ்விற்கான உணவு என்று.

இறைவார்த்தையை வாசிப்பது, அதாவது உண்பது,

அதற்குள், அதனால், அதன்படி, அதற்காக, அதனோடு வாழ்வதற்காக.

உணவு உடலோடு ஒன்றிக்கா விட்டால் உயிர் வாழ முடியாது.

இறைவார்த்தை நமது ஆன்மாவோடு ஒன்றிக்கா விட்டால் ஆன்மீக வாழ்க்கை வாழ முடியாது.

ஆகவே பைபிள் வாசிக்கும்போது வெளியே இருந்து வாசித்துப் பயன் இல்லை,

பைபிளுக்குள் நுழைந்து அங்கு வாழும்    இறைவனோடு வாழ வேண்டும்.

புதிய ஏற்பாட்டை எடுத்துக் கொள்வோம்.

இறை மகன் மரியாளின் வயிற்றில் மனிதனாக பிறந்து,

திருக் குடும்பத்தில் வளர்ந்து,

நற்செய்தி அறிவித்து,

நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக பாடுகள் பட்டு

சிலுவை மரத்தில் தன் உயிரையே பலியாக ஒப்புக்கொடுத்து,

மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து,

சீடர்களுக்கு வழி காண்பித்துவிட்டு,

விண்ணகம் சென்ற வரலாறு புதிய ஏற்பாடு.

எப்பொழுதெல்லாம் புதிய ஏற்பாட்டிற்குள் நுழைகிறோமோ அப்பொழுதெல்லாம் நேரே இயேசுவிடம் சென்று அவர் கரம் பற்றிக் கொண்டு
அவருடனே பயணிக்க வேண்டும்.

அவர் பார்ப்பதை எல்லாம் அவர் எந்நோக்கில் பார்க்கிறாரோ அந்நோக்கில் நாமும் பார்க்க வேண்டும்.

அவர் சொல்வதை  எல்லாம் கூர்ந்து கேட்க வேண்டும். அவர் எந்த பொருளில் கூறுகிறாரோ அப்பொருளிலேயே நாமும் புரிந்து கொள்ள வேண்டும்.

அப்போதுதான் பைபிள் வசனத்திற்கு,

நாம் விரும்புகிற பொருளைக் கொடுக்காமல்,

இயேசு விரும்புகிற பொருளைக் கொடுப்போம்.

இயேசுவின் விருப்பம் தான் நமது விருப்பமாக இருக்க
வேண்டும்.

நமது விருப்பத்தை இயேசுவின் மேல் திணிக்கக் கூடாது.

பைபிளுக்குள் நுழைந்து இயேசுவோடு எவ்வளவு தூரம் பயணிக்கிறோம் என்பது முக்கியமல்ல.

எப்படிப் பயணிக்கிறோம் என்பது தான் முக்கியம்.

சிலர் தினம் ஒரு அதிகாரம் வாசிப்பார்கள். இவர்களின் நோக்கம் புதிய ஏற்பாடு முழுமையும் திரும்பத் திரும்ப வாசிக்க வேண்டும்.

நிறைய விசயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு வசனத்தைச் சொன்னால் அது எங்கே இருக்கிறது என்று உடனடியாகச் சொல்லிவிடுவார்கள்.

இவர்களுக்கு ஒரு வார்த்தை.

எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது முக்கியமல்ல.

எப்படி சீரணம் ஆகிறது என்பதுதான் முக்கியம்.

நிறைய சாப்பிட்டு சீரணம் ஆகாவிட்டால் வயிற்றுவலி தான் மிஞ்சும்.

நிறைய வாசித்து வாழ்க்கையாக மாறாமல் வெறும் அறிவாக மட்டும் இருந்தால் தலைக்கனம்தான் மிஞ்சும்.

தாய்த் திருச்சபை தினசரி வாசிப்பதற்குக் குறிப்புகள் தந்திருக்கிறது.

அதன்படி வாசித்து அதில் கிடைக்கும் இறைவார்த்தையை வாழ்வாக்கினாலே போதும்.

இயேசுவைப் பற்றி அறிவது அறிவு.

இயேசுவை அறிவது வாழ்க்கை.

தவசு காலத்தில் வாழ்ந்தோம்,

குருத்தோலைப் பவனியின் போது அவரை ஒட்டியே பயணித்தோம்,

கடைசி இரவு உணவின்போது சீடர்களுடன் நாமும் இருந்தோம்,

சீடர்களுடைய பாதங்களைக் கழுவும்போது "ஆண்டவரே, நானும் உமது சீடன்தான்." என்று ஆண்டவர் முகத்தைப் பார்த்தோம்,

அவரது திருவுடலை (ஆசை நன்மையாக) உணவாக உண்டோம்,

செத்சமனி தோட்டத்திற்குள் அவருடனே நடந்தோம்,

அவர் சிந்திய இரத்த வியர்வையில் நாமும் நனைந்தோம்,

அவரைக் காட்டித் கொடுத்த யூதாசைக் கோபமுடன் பார்த்தோம்,

ஓடிப்போன சீடர்களைப் பரிதாபமாகப் பார்த்தோம்,

அவர் யூதர்களுடைய நீதிமன்றத்திலும், ஏரோது முன்னும், பிலாத்து முன்னும் பட்ட அவமானங்களைக் கண்ணீர் மல்க பார்த்தோம்,

அவர் பட்ட கசையடிகளை நாமும் உணர்ந்தோம்,

சிலுவைப் பாதையிலும் அவருடன் நடந்தோம்,

அவர் ஆடைகள் அகற்றப்படும் போதும், சிலுவையில் தொங்கிய போதும், உயிர்விடும் போதும் சிலுவை அடியில்தான் நின்றோம்,

அவர் அடக்கம் பண்ணப்படும் போதும் கண்ணீர் மல்க அங்கேதான் நின்றோம்.

இவை எல்லாம் பைபிளுக்குள் அவரோடு பயணித்தபோது.

இந்த பைபிள் அனுபவத்தை வாழ்வாக்கினோமா?

தவக்கால வாழ்வில்,

ஆண்டவருடைய பாடுகள் பற்றிய தியானத்திற்கு எவ்வளவு நேரம் ஒதுக்கினோம்?

எத்தனை முறை நமது பாவங்களை நினைத்து வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கேட்டோம்?

ஆண்டவருக்காக தவக்காலத்தில் நமது ஆசை உணவுகளில் என்னென்ன உணவுகளைத் தியாகம் செய்தோம்?

தியாகம் செய்தோமா அல்லது எப்போதும் போலவே சாப்பிட்டோமா?

எத்தனை ஏழைகளுக்கு உதவி செய்தோம்?

நமது என்னென்ன ஆசைகளை ஆண்டவருக்காக ஒடுக்கினோம்?

சுருக்கமாகச் சொன்னால் தவக்காலத்தில் தவ வாழ்வு வாழ்ந்தோமா?

அல்லது எப்போதும் போல வாழ்ந்தோமா?

ஆண்டவர் தாமாகவே தேடிச் சென்று சிலுவையைச் சுமந்தார், நாம் நம்மைத் தேடி வந்த சிலுவையையாவது ஏற்றுக் கொண்டோமா?

கொஞ்சம் சிந்திப்போம்.

நாம் உண்மையிலேயே பைபிளுக்குள் நுழைந்து பயணித்திருந்தால்,

நமது வாழ்வு   தவவாழ்வாகத்தான்  இருந்திருக்கும்.

நாம் வெறுமனே பார்வையாளராக இருந்து

பாடுகளைப் பார்க்க மட்டும் செய்திருந்தால்

நமது வாழ்வும் பாடுகளோடு சம்பந்தம் இல்லாததாகத்தான் இருந்திருக்கும்.

இயேசுவோடு சேர்ந்து பாடுபட்டவர்களுக்கு மட்டுமே

அவரது உயிர்ப்பின் மகிழச்சி முழுமையாகக் கிடைக்கும்.

லூர்து செல்வம்.

1 comment:

  1. This is a lovely inspiration. Can you do it in English too please?

    ReplyDelete