"விசுவாசிகள் அத்தனை பேரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்:"
(அப்.4:32)
** ** ** ** ** ** ** ** ** ** **
விசுவாசிகள்
அத்தனை பேரும்
ஒரே உள்ளமும்
ஒரே உயிருமாய்
மனித வாழ்வு மூன்றே வார்த்தைகளில்:
ஒன்றிப்பு,
ஒன்றிப்பு,
ஒன்றிப்பு.
ஒன்றிப்பால் உருவானோம்.
ஒன்றித்து வாழ்கிறோம்.
ஒன்றித்து வாழ்வோம்.
இறைவன்
களிமண்ணிலிருந்து உடலை உருவாக்கி,
ஆன்மாவைப் படைத்து,
'
அதை உடலோடு ஒன்றித்து மனிதனைப் படைத்தார்.
மனிதனைப் படைத்தபின் மனுசியையும் படைத்து அவளை அவனோடு ஒன்றித்து குடும்பத்தை உருவாக்கினார்.
அதேபோல்தான் நாமும் நமது தாய் வயிற்றில் உடலும் ஆன்மாவும் ஒன்றித்து பிறந்தோம்.
பிறந்த பின்பும் ஒன்றிப்பின் காரணமாகவே வாழ்கிறோம்.
உடலோடு உணவு ஒன்றிப்பதால் உடல் வளர்கிறது.
இறைவனோடு ஒன்றிப்பதால் ஆன்மா வளர்கிறது.
உடல் வளர்ச்சியும் ஆன்மீக வளர்ச்சியும் இணைந்து வளரும்போது மனிதம் வளர்கிறது.
இவ்வுலக வாழ்வு முடிந்தவுடன் ஆன்மா இறைவனோடு நித்தியத்திற்கும் ஒன்றித்து வாழ்கிறது.
ஒன்றிப்பு இல்லையேல் வாழ்வு இல்லை.
இப்போது நாம் தியானிக்கத் தெரிவு செய்த இறை வசனத்தை எடுத்துக் கொள்வோம்.
"விசுவாசிகள் அத்தனை பேரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்:"
துவக்க கால திருச்சபையில் விசுவாசிகள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை இந்த சிறு வசனம் சுருக்கமாக விபரிக்கிறது.
இறைமகன் இயேசுவை
வாழ்வாகவும்,
வாழ்வின் வழியாகவும்,
ஒளியாகவும், உயிராகவும்
உளமாற ஏற்றுக்கொண்டு அதன்படி வாழ்பவர்கள் விசுவாசிகள்.
அவர்கள் ஏறக்குறைய இயேசுவின் சம காலத்தில் வாழ்ந்தவர்கள்.
அவர்களை வழிநடத்தியவர்கள் இயேசுவோடு வாழ்ந்தவர்கள்.
கிறிஸ்தவ விசுவாசிகள் எப்படி வாழவேண்டுமென்று இயேசு விரும்பினாரோ
அப்படியே ஆதித் திருச்சபையினர் வாழ்ந்தார்கள்.
"தந்தாய்,...
என்னில் விசுவாசம் கொள்பவர்க்காகவும் மன்றாடுகிறேன்.
21 எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக.
தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல், அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்:
நீர் என்னை அனுப்பினீர் என்று இதனால் உலகம் விசுவசிக்கும்.
நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி, நீர் எனக்கு அளித்த மகிமையை நான் அவர்களுக்கு அளித்தேன்.
23 இவ்வாறு நான் அவர்களுள்ளும், நீர் என்னுள்ளும் இருப்பதால், அவர்களும் ஒருமைப்பாட்டின் நிறைவை எய்துவார்களாக:"
(அரு. 17:20:23)
பரிசுத்த தம திரித்துவத்தின் மூன்று ஆட்களும் ஒரே கடவுளாய் இருப்பதுபோல,
விசுவாசிகள் அனைவரும் கிறிஸ்துவின் ஒரே ஞான சரீரமாக வாழ்ந்தார்கள்.
அனைத்து விசுவாசிகளும் தங்கள் உள்ளங்களில் ஒரே இயேசுவை முழுமையாக ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.
ஒரே இயேசுவை முழுமையாக ஏற்றுக் கொண்டிருந்ததால்
எல்லோருடைய உள்ளங்களிலும் இயேசுவின் பண்புகள் அவர்களை இயக்கும் சக்தியாக விளங்கின.
அன்பு, இரக்கம், மன்னிப்பு முதலான இயேசுவின் அனைத்துப் பண்புகளாலும் இயக்கப் பட்டதால்,
இயேசுவே அனைவருக்கும் உயிராய் இருந்தார்.
உயிர் தானே எல்லோருக்கும் இயக்க சக்தி!
அனைவரும் இயேசுவோடு ஒன்றித்திருந்தார்கள்.
இயேசுவே அனைவருக்கும் உயிராய் இருந்ததால்
அனைவரும் ஒரே உயிராய் வாழ்ந்தார்கள்.
வாழ்ந்தது அவர்களல்ல, இயேசுவே அவர்களிடம் வாழ்ந்து கொண்டிருந்தார்.
ஆனால், இன்றைய நிலை என்ன?
ஒரே இயேசுவே அனைவர் உள்ளத்திலும் இருந்தால்,
ஒன்றுக்கு ஒன்று ஒத்து வர மறுக்கும்
ஆயிரக்கணக்கான பிரிவுகள் நமமிடம் எப்படி வந்தன?
இயேசு ஒன்றுக்கு ஒன்று ஒத்து வராத பிரிவுகள் உள்ளவரா?
இயேசு ஒன்றிப்பின் தேவன்.
அவர் தந்தையிடம் என்ன வேண்டினார்?
"தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல், அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்:"
என்று தானே வேண்டினார்!
நாம் நம்முள் ஒன்றாய் இருக்கிறோமா?
கிறிஸ்தவக் குடும்பங்களுக்குள் ஒற்றுமை இருக்கிறதா?
கிறிஸ்தவக் குடும்பங்களுக்கிடையே
ஒற்றுமை இருக்கிறதா?
குருக்களுக்குள்
ஒற்றுமை இருக்கிறதா?
ஆயர்களுக்குள் ஒற்றுமை இருக்கிறதா?
இயேசு மாறாதவர், அவர் பழைமைவாதியுமல்ல,
புதுமைவாதியுமல்ல.
மாறாத இயேசுவை முழுமையாக ஏற்றுக் கொண்டால்
ப. பு. வாதங்கள் எப்படி வந்தன?
கடவுள் மாறாதவர், மனிதர்கள் மாறினால்தானே வளரலாம் என்று வாதிடலாம்.
மறுக்கவில்லை.
ஆனால் மாற்றம் எதில்?
பண்புகளின் அளவு மாறவேண்டும்,
குறைந்த அன்பு நிறைந்த அன்பாக மாற வேண்டும்.
குறைந்த இரக்கம் நிறைந்த இரக்கமாக மாற வேண்டும்.
குறைந்த மன்னிப்பு நிறைந்த மன்னிப்பாக மாற வேண்டும்.
குறைந்த பொறுமை நிறைந்த பொறுமையாக மாற
வேண்டும்.
குறைந்த தாழ்ச்சி நிறைந்த தாழ்ச்சியாக மாற வேண்டும்.
வேறு வகையில் சொன்னால்,
குழந்தை வளர்ந்து கிழவராக மாற வேண்டும்.
இயேசு நிறைவானவர், நாம் அவரது நிறைவை நோக்கி மாறவேண்டும்.
ஒரே வரியில் அனைத்துக் கிறிஸ்துவர்களும்
கிறிஸ்துவில் ஒன்றித்து, கிறிஸ்துவாக மாற வேண்டும்.
பாப்பா முதல் பாப்பரசர் வரை அனைவரும் ஒரே கிறிஸ்துவாக மாற வேண்டும்.
ஒன்றிப்புதான் உண்மையான மாற்றம், பிரிந்து போவதல்ல.
ஒன்றிப்போம் இயேசுவோடு.
ஒன்றிப்போம் நமக்குள்ளும்.
சிந்திப்போம், செயல்படுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment