அவிசுவாசத்தின் வயது 2020!
** ** ** ** ** ** ** ** ** ** **
கபிரியேல் தூதர் சக்கரியாசிடம் அருளப்பரின் 'பிறப்பு பற்றி முன்னறிவித்த போது,
சக்கரியாஸ்
"இவையாவும் நிகழும் என எனக்கு எப்படித் தெரியும் ?"
எனக்கேட்டு அவிசுவாசத்தை ஆரம்பித்து வைத்தார்.
கபிரியேல் தூதர் அவரை நோக்கி
"இதோ! இவை நடைபெறும் நாள்வரை நீ பேசாமலும் பேச முடியாமலும் இருப்பாய். ஏனெனில், உரிய காலத்தில் நிறைவேறும் என் சொல்லை நீ நம்பவில்லை " என்றார்."
(லூக். 1:20)
இயேசு மரியாளின் வயிற்றில் உற்பவித்ததற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே அவிசுவாசம் நுழைந்துவிட்டது.
இயேசு தனது நற்செய்திப் பணியை கலிலேயாவில் தொடங்கினார்.
அங்குள்ள மக்கள் அவர் போதனையை விசுவாசத்தோடு ஏற்று கொண்டார்கள்.
ஆனால் அவர் தனது சொந்த ஊருக்கு வந்தபோது அந்த மக்கள் அவர் மேல் போதிய விசுவாசம் வைக்கவில்லை.
இதற்கு இயேசு அங்கேயே சிறுவயது முதலே வளர்ந்தது காரணமாக இருக்கலாம்.
யாவரும் அவரைப் பாராட்டினார்கள்,
அவர் வாயினின்று எழுந்த அருள்மொழிகளை வியந்தார்கள்,
ஆனால்,
அவரை சூசையின் மகன், தச்சன் என்று பார்த்தார்களே அன்றி, மெசியா என்று பார்க்க வில்லை.
விசுவாசம் இன்மை காரணமாக அங்கு அவர் அதிகமாக புதுமைகள் ஏதும் செய்யவில்லை.
இயேசு தான் நிறுவ இருக்கும் திருச்சபையை உலகெங்கும் பரப்புவதற்காக 12 சீடர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்தார்.
இயேசு சென்றவிடமெல்லாம் அவளுடனே சீடர்களும் சென்றார்கள்.
தான் சாதாரண மக்களுக்கு போதித்ததை எல்லாம்
சீடர்களோடு தனியாய் இருக்கும்போது
அவர்களுக்கு விளக்கினார்.
ஆனாலும் சாதாரண மக்களிடம் இருந்த விசுவாசத்தின் அளவிற்கு இவர்களிடம் விசுவாசம் இருந்ததாகத் தெரியவில்லை.
காரணம் சீடர்களில் சிலர் இயேசுவை மெசியா என்று ஏற்றுக்கொண்டாலும்
அவர் யூதர்களை ரோமையின் அடிமைத் தனத்திலிருந்து மீட்டு,
புதிய அரசு நிறுவுவதற்காகவே வந்தவர் என்று தவறாக எண்ணினார்கள்.
புதிய அரசில் தங்களுக்கு உயர்ந்த பதவி கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான் சிலர் சீடர்களாகவே ஆனார்கள்.
ஒரு முறை அருளப்பருக்கும், யாகப்பருக்கும் புதிய அரசில் உயர் பதவி கேட்டு அவர்களுடைய அம்மா சிபாரிசு கூட செய்தார்கள்.
(மத்.20:21)
சாதாரண
நோயாளிகளைக் குணமாக்கும்போதெல்லாம் இயேசு
"உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று,''
என்று கூறினார்.
குணமாக்கியவர் இயேசு.
ஆயினும் விசுவாசத்தின் முக்கியத்துவத்தை அழுத்தமாகக் கூறுவதற்காக இயேசு விசுவாசம் குணமாக்கிற்று என்றார்.
வெற்றி பெறுபவர் ஆளாக இருந்தாலும்,
"உனது முயற்சி வென்றது" என்று கூறுகிறோம் அல்லவா.
அதுமாதிரி.
"உங்கள் விசுவாசம் எங்கே?"
இது இயேசு புயற்காற்றை அடக்கிவிட்டு, தன் சீடர்களைப் பார்த்து கேட்ட கேள்வி.
சென்ற இடமெல்லாம் புதுமைகள் செய்துவந்த இயேசுவின் மீது சீடர்களுக்கு விசுவாசம் இருந்திருந்தால்
புயற்காற்று வீசியவுடன்
"போதகரே, மடிந்து போகிறோமே: உமக்கு அக்கறை இல்லையா?"
என்று அவரை எழுப்பியிருக்க மாட்டார்கள்.
"ஆண்டவர் நம்முடன் இருக்கும் போது நாம் ஏன் அஞ்ச வேண்டும்''
என்று அமைதியாக இருந்திருப்பார்கள்.
இயேசு தான் பாடுபட்டு மரிக்கயிருப்பதையும், மூன்றாம் நாள் உயிர்
பெறவிருப்பதையும் பற்றி சீடர்களுக்கு ஏற்கனவே கூறியிருக்கிறார்.
"மேலும், "மனுமகன் பாடுகள் பல படவும். மூப்பராலும் தலைமைக்குருக்களாலும் மறைநூல் அறிஞராலும் புறக்கணிக்கப்பட்டு, கொலையுண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழவும் வேண்டும்" என்று சொன்னார்.
(லூக்.9:22)
இயேசு மெசியா என்ற உண்மையும் சீடர்களுக்குத் தெரியும்.
இராயப்பர் மறுமொழியாக, "நீர் மெசியா" என்றார்.
(மாற்கு 8:29)
இராப்போசனத்தின்போது, அதாவது, சிலுவை மரணத்திற்கு முந்திய இரவு இயேசு ,
"நான் பாடுபடுவதற்கு முன் உங்களோடு இந்தப் பாஸ்கா உணவை உண்ண ஆசைமேல் ஆசையாய் இருந்தேன்."
என்று சீடர்களிடம் சொன்னார்.
பொது வாழ்வில் நற்செய்தி அறிவித்த காலத்திலேயே
தனது பாடுகள் பற்றியும், மரணம் பற்றியும், உயிர்ப்பு பற்றியும் அறிவித்திருந்தும்,
மரணத்திற்கு முந்திய இரவில்
சீடர்களுடைய மனநிலை எப்படி இருந்தது?
கடைசி இரவு உணவின்போது
"தங்களுள் யாரைப் பெரியவனாகக் கருதவேண்டும் என்ற வாக்குவாதம் அவர்களிடையே உண்டாயிற்று.''
மறுநாள் இயேசு பாடுகள் பட்டு மரிக்கப் போகிறார் என்று தெரிந்திருந்தும்
தங்களுள் யார் பெரியவன் என்று வாதித்துக் கொண்டிருந்தால் அவர்களுடைய விசுவாசத்தின் அளவு பற்றி என்ன சொல்ல?
இயேசு இரத்த வியர்வை வியர்த்துக் கொண்டிருக்கிறார்,
அவருக்கு நெருக்கமான மூன்று சீடர்களும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்!
பள்ளிருவரில் ஒருவன் அவரைக் காட்டிக் கொடுக்கிறான்,
இயேசு கைது செய்யப்பட்டவுடன்
"சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டு ஓடிப்போயினர்."
(மத் 26:56)
என்னே விசுவாசம்!!
இயேசு மரித்த மூன்மூன்றாம் உயிர்த்தெழுவார் என்று அவர்களுக்குத் தெரியும்.
ஆனால் அவர்களுடைய நடைமுறை அவர்களுக்குத் தெரிந்தது மாதிரியா இருந்தது?
"முன்பு இயேசுவோடு இருந்தவர்களிடம் அவள் போய் இதை அறிவித்தாள்.
அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தனர்.
11 இயேசு உயிருடனிருக்கிறார், அவள் அவரைக் கண்டாள் என்பதை அவர்கள் கேட்டபோது நம்பவில்லை."
(மாற்கு 16:10, 11)
"துயருற்று அழுதுகொண்டிருந்தனர்."
"நம்பவில்லை."
இந்த வார்த்தைகள் அவர்களுடைய விசுவாசம் எப்படி இருந்தது என்பதை நன்றாகவே விளக்குகின்றன!
இங்கு ஒரு முக்கியமான உண்மையைக் குறிப்பிட வேண்டும்.
இயேசு தனது நற்செய்தியை உலகின் கடைசி எல்கை வரை அறிவிக்க இப்படிப்பட்ட கோழைகளைத் தேர்ந்தெடுத்தார்!
இயேசுதான் தேர்ந்தெடுத்தார்!
"நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்."
பன்னிரண்டு கோழைகளை இயேசு அப்போஸ்தலர்களாகத் தேர்ந்தெடுத்ததை நினைக்கும் போது ஒரு தமிழ்ப் பழமொழி நினைவுக்கு வருகிறது.
"வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!"
இயேசுவோ சர்வ வல்லவர்!
சர்வ வல்லவராகிய அவருக்கு ஆயுதமே தேவை இல்லை.
இந்த கோழைகளை பெந்தேகோஸ்தே திருநாளன்று
பரிசுத்த ஆவியின் அருள் வரத்தால் எதற்கும் அஞ்சாத வீரர்களாக மாற்றினார்.
அளவு கடந்த துணிச்சலோடு
அவர்கள் உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவித்தார்கள்.
இயேசுவுக்காக வீரமரணம் அடைந்து வேத சாட்சிகளாக மாறினார்கள்.
இதிலிருந்து நாம் ஒரு முக்கிய உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்.
நாம் எல்லோருமே குற்றம் குறையுள்ள பாவிகள்.
உண்மையில் பரிசுத்தமான திருச்சபை பாவிகளின் கூடாரம்தான்.
பாவிகளைப் பரிசுத்தர்களாக மாற்றுவதுதான் திருச்சபையின் பணி.
பாவிகளாகிய நமது விசுவாசம் தளர்ந்து விட்டது உண்மைதான்.
இவ்வுலகில் நம்மை வழி நடத்துபவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான்.
அவர்களிடமும் குறைகள் இருக்கின்றன என்பதும் உண்மைதான்.
ஆனாலும் குறையுள்ள மனிதர்களைக் கொண்டு திருச்சபையை வழிநடத்துபவர்
குறையே இல்லாத, நிறைவான நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே.
நம்மை வழி நடத்துபவர்களில் அவர்களை கருவிகளாகக் கொண்டு வழிநடத்தும் இயேசுவை காண்போம்.
உண்மையில் நம்மை வழிநடத்துபவர் இயேசுவே.
நம்மிடம் ஆயிரம் குறைகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் பொறுத்துக் கொண்டு நம்மை திருத்தி பராமரித்து வழிநடத்துபவர் அவரே.
பொற்கொல்லன் தங்கத்தை நெருப்பிலிட்டு சுத்தமான தங்கமாக மாற்றுவது போல
இறைவன் நம்மையும் சிலுவை ஆகிய நெருப்பினால் புடமிட்டு பரிசுத்தராக மாற்றுகிறார்.
நாம் அதற்காக நன்றி கூறுவதோடு நமது விசுவாசத்தை ஆழப்படுத்த ஆண்டவரின் அருள் உதவியை நாடுவோம்.
இறையருளின் உதவியோடு நமது விசுவாசத்தை உறுதிப்படுத்துவோம்.
குறைகளை களைவோம்.
கோழைகளை வீரர்களாக மாற்றிய அதே இயேசு இன்றும் நம்மோடு இருக்கிறார்.
கஷ்டங்கள் மத்தியிலும் விண்ணகம் நோக்கி வீர நடை போடுவோம்.
வெற்றி நமதே.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment