Wednesday, April 8, 2020

மாற்றமும், நிலைத்தன்மையும்.

மாற்றமும். நிலைத்தன்மையும்.
**  **  **   ** ** **   ** ** ** ** **
கடவுள் ஒருவரே மாறாதவர் நிலைத்தன்மை உடையவர்.

மாறாமை, நிலைத்தன்மை ஆகிய வார்த்தைகளை நமக்குப் பயன்படுத்தும்போது அவற்றின் பொருள் வேறு.

கடவுளுக்குத் துவக்கமும், முடிவும் இல்லை.

ஆனால்  உலகத்துக்கும், அதைச் சார்ந்தவற்றுக்கும் துவக்கமும், முடிவும் உண்டு.

கடவுள் நித்தியத்துக்கும் நிலையானவர்.

ஆனால் உலகம் நிலையானது அல்ல.

ஆனாலும் அது துவங்கிய காலத்திலிருந்து அழியும்வரை அதற்கு ஒரு நிலைத்தன்மை இருக்கிறது.

கடவுளின் நிலைத்தன்மைக்கு முடிவு இல்லை.

ஆனால் உலகத்தின் நிலைத்தன்மைக்கு முடிவு உண்டு.

கடவுள் மாறாதவர், உலகம் மாறிக்கொண்டே இருக்கும்.

கடவுள் மாற்றமே இல்லாமல் நித்தியமும் இயங்கிக் கொண்டேயிருக்கிறார்.

ஆனால் உலகம் மாறினால்தான் இயங்க முடியும்.

நமது உடல் தாயின் வயிற்றில் ஆரம்பமானது. இறக்கும்போது முடிவுக்கு வந்துவிடும்.

இந்த இடைப்பட்ட காலத்தில் நமது உடல் நமது உடலாகவே இருந்து இறப்பிற்கு வருகிறது.

ஆனால் நமது தாயின் வயிற்றில் இருந்து பிறந்த அதே உடல் இறக்கும் போதும்  அதே உடல்தான், 

ஆனால் அதே உடல் இல்லை.

பிறக்கும்போதும் தாயின் பிள்ளைதான்.

இறக்கும்போதும் தாயின் பிள்ளைதான்.

ஆனால் அதே உடல் அல்ல.

எப்படி?

நமது உடல் கோடிக்கணக்கான செல்களால்  ஆனது..

ஒரு செல்லின் வயது 6 வருடங்கள் மட்டும்தான்.

ஒரு செல் 6. வருடம் கழித்து இறந்தவுடன் புதிய செல் உற்பத்தி ஆகிவிடும்.

குழந்தை பிறந்து ஆறு வருடம் கழித்து இருப்பது பிறக்கும்போது இருந்த அதே உடல் அல்ல, ஆனால் அதே உடல் தான்.

ஏனெனில் எல்லா செல்களும் மாறிவிட்டன, ஆனால்  அதே உடல் தான்.

83 வயது ஆகிவிட்டாலும், நான் என் பெற்றோரின் மகன்தான்.

ஆனால் நான் பிறக்கும்போது இருந்த ஒரு செல்கூட இப்போது என்னிடம் இல்லை.

இப்போது ஒரு உண்மை புரிந்திருக்கும்.

மனிதனைப் பொறுத்த மட்டில் மாற்றம் இருந்தால்தான் வளர்ச்சி இருக்கும்.  

ஆனால் மாற்றம் நிலைத்தன்மைக்கு எதிரானது அல்ல.

தாயின் வயிற்றில் உற்பத்தியான  அதே மனிதன்தான் வயதாகி இறக்கிறான்.

ஆனால் கரு குழந்தையாக மாறி, 

குழந்தை பையனாக மாறி, 

பையன் வாலிபனாக மாறி, 

வாலிபன் ஆளாக மாறி, 

ஆள் கிழவனாக மாறி....

ஆக மாற்றத்தையும், வளர்ச்சியையும் பிரிக்க முடியாது.


ஆன்மாவும், உடலும் சேர்ந்துதான் மனிதன்.

 
 உடல் சடப்பொருள், matter,
ஆன்மா ஆவி, Spirit.


ஆன்மாவும் வளரவேண்டும்.

ஆனால் ஆன்மாவின் வளர்ச்சிக்கும்,

உடலின் வளர்ச்சிக்கும் பாரதூர வித்தியாசம்.

சடப்பொருள் ஆகிய உடல்  செல்களால் ஆனது. 

ஆனால் ஆன்மா ஆவி அதற்கு உருவம் இல்லை.
செல்களும் இல்லை. 

ஆன்மா இறைவனின் சாயலில் படைக்கப்பட்டது.

இறைவன் ஆவி. ஆன்மாவும் ஆவி.

இறைவனுக்குத் துவக்கமும், முடிவும் இல்லை.

ஆன்மாவுக்குத் துவக்கம் உண்டு. ஏனெனில் அது படைக்கப் பட்டது. 

ஆனால் முடிவு இல்லை.

தன்னுடைய பண்புகளை இறைவன் ஆன்மாவுடன்  பகிர்ந்து கொண்டார்.

இறைவனுடைய பண்புகள் 

நிறைவானவை. perfect.

ஆன்மாவின் பண்புகள் அளவுள்ளவை, நிறைவற்றவை. Imperfect.

ஆன்மாவின் பண்களாகிய அன்பு, அதைச் சார்ந்த பரிவு, மன்னிக்கும் தன்மை, நீதி போன்ற பண்புகளில் ஆன்மா பெறும் வளர்ச்சியே ஆன்மாவின் வளர்ச்சி.

ஆன்மாவையும், மாற்றங்களையும் பற்றித் தொடருமுன் ஒரு அடிப்படை உண்மையை ஞாபகப்படுத்த வேண்டும்.

ஆன்மீகப் பயணத்தில் நிற்றல்
(stagnation) என்ற பேச்சுக்கே இடம் இடமில்லை.

ஒன்று முன்னோக்கி நகரும், அல்லது பின்னோக்கி நகரும். இருவகை நகர்விலும் மாற்றம் இருக்கும்.

ஆகவே மாற்றத்தை முன்னேற்றத்தின் அடையாளம் என்று எடுத்துக் கொள்ள முடியாது.

முன்னேற காரணமான மாற்றங்களைத்தான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

முதலில் நமது மனம் விண்ணகத்தை நோக்கி திரும்ப வேண்டும், 

அதாவது மனம் திருந்த வேண்டும், 

அதாவது மனம்மாற வேண்டும்.

"மனந்திரும்புங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது" 
(மத். 3:2)

மனம் திரும்பியபின் நமது ஆன்மீகப்பயணம் விண் நோக்கி நகர வேண்டும்.

இறைவன் மீது நாம் கொண்டுள்ள அன்புதான் நமது விண்ணகப் பயணத்தின் உயிர்.

எவ்வளவுக்கு எவ்வளவு  நமது அன்பு அதிகரிக்கிறதோ

அவ்வளவுக்கு அவ்வளவு ஆன்மீகப் பயணம் முன்னேறும்,

அதாவது ஆன்மீக வளர்ச்சி ஏற்படும்.

எவ்வளவுக்கு எவ்வளவு  நமது அன்பு குறைகிறதோ

அவ்வளவுக்கு அவ்வளவு ஆன்மீகப் பயணம் பின்னோக்கி நகரும்.

ஆகவே நாம் ஆன்மீகத்தில் வளர நமது இறையன்பின் ஆழத்தை அதிகரிக்க வேண்டும்.

இறை அன்பை அதிகரிப்பது எப்படி?

1.தியானத்தின் மூலம்.

 ஒவ்வொரு நாளும் நேரம் கிடைக்கும்போதெல்லாம்

 இறைவன் நம்மை படைத்தது,

 பராமரித்து வருவது,

நமக்காக பாடுபட்டு மரித்தது,

 அவரிடமிருந்து நாம் பெற்ற உதவிகள் 

ஆகியவை பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும்,

 அதாவது தியானிக்க வேண்டும்.


 இறைவன் நம்மீது கொண்ட அன்பு நமக்கு புரியும்.

அவரது அன்பு புரிய புரிய நம்முடைய அன்பும் வளரும்.

இறையன்போடு  பிறரன்பும் வளரும்.

2. நற்செயல்கள்.

பிறரன்பு வளரவளர பிறரன்பு செயல்கள் அதிகமாகும்.

 நற்செயல்கள் அதிகமாக அதிகமாக ஆன்மாவின் விண்ணுலக பயணம் வேகமடையும்.

நமது ஆன்மீக வளர்ச்சி அதிகமாகும்.

நமது ஆன்மீக வளர்ச்சியின் அளவிற்கு ஏற்ற நமது விண்ணுலக  பேரின்பம் அதிகமாகும்.

நமது  செபங்களில் நமக்கான விண்ணப்பங்களை குறைத்துவிட்டு,

நாம் இறையன்பிலும், பிறரன்பிலும்  வளர வரம்  கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

 நம்மிடம் தருவதற்கு அளவுகடந்த வரங்களை வைத்திருக்கும் இறைவன் நாம் கேட்கும்போதெல்லாம் தருகிறார்.

நாம் அவரது அன்பில் வளர வேண்டிய வரங்களைக் கேட்பதற்கு பதில் 

நமது உலக சம்பந்தப்பட்ட சௌகரியங்களை கேட்டு விண்ணப்பங்களை அவர்முன் குவிக்கிறோம்.

உலகம் நிரந்தரமற்றது.

 விண்ணகம் நிரந்தரமானது. 

 விண்ணகத்திற்குச் செல்ல தேவையான இறையன்பைத் தான் முதலில் தேட வேண்டும்.

அதைத்தான் இறைவனிடம் முதலில் கேட்க வேண்டும்.

உலக சம்பந்தமான உதவிகளையும் கேட்கலாம்.

 ஆனால் அவற்றை மட்டும் கேட்டுவிட்டு இறை அன்பை முற்றிலும் மறந்து விடக்கூடாது.

உடல் வளர்ச்சியை கண்ணால் பார்க்கலாம். ஆனால் ஆன்மீக வளர்ச்சியை ஊனக் கண்ணால் பார்க்க இயலாது.

ஆனாலும் ஆன்மீக வளர்ச்சியின் செயல்களைக் காணலாம்.

ஆன்மா தனது அன்பின் மிகுதியால் செய்யும் நற்செயல்களைச் செய்ய உதவிகரமாய் இருப்பது உடலே.

தனது அயலானின் நலனுக்காக நற்செயல்கள் புரிய ஆன்மா உடலைப் பயன்படுத்திக் கொள்கிறது.

ஆன்மீகத்தில் வளர்வதற்காக நமது உடலைக் கட்டுப் பாட்டிற்குள் வைத்திருப்பது நமது ஆன்மாதான்.

இறைவன் தந்த பத்துக் கட்டளைகட்டளைகளையும் விண்ணகப் பயணத்தின் நெறிமுறைகளாக வைத்துக் கொண்டு

அவற்றின் அடிப்படையில் உடலில்  இயல்பாக ஏற்படும் இச்சைகளைத் தன் கட்டுப் பாட்டிற்குள் வைத்துக் கொண்டு, 

தனது ஆன்மீகப் பயணத்தில் உடலையும் உதவிகரமாகப் பயன்படுத்திக் கொள்கிறது.


உதாரணத்திற்கு,

அளவுக்கு மிஞ்சி சாப்பிட உடல் இச்சைப் படும் போது மட்டசனம் என்னும் அங்குசத்தால் இச்சையைக் கட்டுப்படுத்தி,

புண்ணிய வழியில் வெற்றிநடை போடுகிறது.

விண்ணக வாசலை, அதாவது, மரணத்தை, அடையும்வரை உடல் ஆனமாவிற்கு புண்ணிய வழியில் உதவிகரமாக இருந்து விட்டு,

வாயிலை அடைந்தவுடன் ஆன்மாவிற்கு good bye சொல்லி விண்ணகத்திக்குள் அனுப்பி விட்டு

தான் வந்த இடத்திற்கு, அதாவது, மண்ணிற்குள் போய்விடுகிறது.

மனம் மாறி, இயேசு காட்டிய புண்ணிய நெறியில் நடந்தால்
நிலைவாழ்வு உறுதி.

நாம் மனம் மாறாவிட்டால் எவ்வளவு செபம்  செய்தும் பயன் இல்லை.

மனம் மாறுவோம்,

இயேசுவின் வழியில் நடப்போம்,

நிலைவாழ்வை அடைவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment