"மேலுலகில் உள்ளவற்றை நாடுங்கள்."(கொலோ. 3:1)
** ** ** ** ** ** ** ** ** ** **
மாணவர்கள் பள்ளியில் படிக்கிறார்கள்,
ஆனால் அவர்கள் பள்ளியைச் சார்ந்தவர்கள் அல்ல,
ஏனெனில் இறுதி தேர்வு முடிந்தவுடன் பள்ளியை விட்டு வெளியேற வேண்டும்.
படித்து முடிந்தவுடன் ஒரு அலுவலகத்தில் வேலைக்கு சேருபவர்கள்
அந்த அலுவலகத்தைச் சார்ந்தவர்கள் அல்ல,
ஏனெனில் ஓய்வு பெற்றவுடன் அலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டும்.
இவ்வுலகில் நாம் எந்த இடத்தில் வாழ்ந்தாலும் நாம் அந்த இடத்தை சார்ந்தவர்கள் அல்ல.
ஒரு தந்தைக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள்.
வளர்ந்தபின் மூவரும் வசதியாக வாழ்வதற்கு ஒரு பெரிய வீட்டைக் கட்டினார்.
ஆனால் மூன்று பிள்ளைகளும் வளர்ந்து, படித்து, பட்டம் பெற்று, வெவ்வேறு ஊர்களில் வேலையில் அமர்ந்து
அந்தந்த ஊர்களில் அவரவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொண்டார்கள்.
தந்தை கட்டிய வீட்டில் தந்தையையும் தாயையும் தவிர வேறு யாரும் இல்லை.
மைசூர் மகாராஜா கட்டிய அரண்மனையில் அவரும் இல்லை,
அவரது பிள்ளைகளும் இல்லை.
சுருக்கமாகச் சொன்னால் இவ்வுலகில் நமக்கு எந்த இடமும் நிரந்தரம் இல்லை.
இது மனிதனாய்ப் பிறந்த எல்லோருக்கும் பொருந்தும்.
நாம் பிறந்தது இந்த உலகில் தான்.
ஆனால் நாம் பிறந்தது இங்கு நிரந்தரமாக வாழ்வதற்கு அல்ல.
கொஞ்சநாள் வாழ்ந்துவிட்டு இந்த உலகை விட்டு வெளியேறவே பிறந்தோம்.
நாம் இந்த உலகில் பிறந்தாலும் இந்த உலகை சார்ந்தவர்கள் அல்ல.
ரயிலில் பயணம் செய்கிறோம்அதிலிருந்து இறங்குவதற்காக.
கடைக்கு செல்கிறோம், அங்கேயே தங்குவதற்காக அல்ல.
விளையாடச் செல்கிறோம், விளையாட்டு மைதானத்திலேயே நிரந்தரமாக தங்குவதற்காக அல்ல.
அதேபோல்தான் இவ்வுலகில் மக்களாக பிறந்திருக்கிறோம்,
ஆனால் இவ்வுலகில் நிரந்தரமாக தங்குவதற்காக அல்ல.
இவ்வுலகிற்கு வந்த நாம் இங்கிருந்து இறுதியில் எங்கு செல்கிறோமோ, அதுதான் நமக்கு நிரந்தரமான இடம்.
இவ்வுலகில் நாம் நினைத்து வாழ வேண்டியது நிரந்தரமான எதிர்காலத்தை மட்டும்தான்.
இவ்வுலகில் நாம் சம்பாதிக்க வேண்டியது எதிர்கால நிரந்தர இல்லத்தில் வாழும்போது அனுபவிப்பதற்கான செல்வத்தை தான்.
நாம் இவ்வுலகை விட்டு நிரந்தரமாக செல்லும்போது
நாம் சம்பாதித்த பணம் நம் கூட வராது,
நாம் கட்டிய கட்டடங்கள் நம் கூட வராது,
நாம் ஈட்டிய புகழ் நம் கூட வராது,
நாம் வாங்கும் நிலபுலன்கள் எதுவும் நம்முடன் வராது,
நாம் உடுத்தும் உடையும் நம்மோடு வராது.
நாம் ஊட்டி வளர்க்கும் நமது உடலும் நம்மோடு வராது.
இவை எல்லாம் இவ்வுலகை சார்ந்தவை.
இவ்வுலகைச் சார்ந்த செல்வங்கள்
இவ்வுலக வாழ்வின் இறுதியில் நாம் மறுவுலகிற்குப் பயணமாகும் போது
நம்முடன் வராதாகையால்
அவற்றைச் சம்பாதிப்பதில் நமது முழு சக்தியையும் செலவழிப்பது முட்டாள்தனம்.
மறுவுலகிற்கு நம்முடன் வரும் ஆன்மீகச் செல்வங்களை ஈட்டுவதில் அதிக ஆர்வம் காட்டுவதே புத்திசாலித்தனம்.
அதனால்தான் புனித சின்னப்பர்,
"இவ்வுலகில் உள்ளவற்றின் மீது மனத்தைச் செலுத்தாமல் மேலுலகில் உள்ளவற்றை நாடுங்கள்."(கொலோ. 3:1)
என்கிறார்.
என்றென்றும் நீடிக்கவிருக்கும் விண்ணுலக வாழ்விற்குத் தேவையான
ஆன்மீகச் செல்வங்களை ஈட்டுவதற்காகத்தான் இவ்வுலகில் நாம் வாழ்கிறோம்.
இவ்வுலகச் செல்வங்கள் இவ்வுலகில் நாம் வாழ்வதற்கு மட்டும் பயன்படும்.
ஆன்மீக செல்வங்கள் மட்டும்தான் விண்ணுலக வாழ்வில் நாம் நிரந்தரமாக அனுபவிக்க பயன்படும்.
எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனை நேசிப்பதாலும்,
அவருக்காகநமது அயலானை நேசிப்பதாலும்
நேசத்திலிருந்து புறப்படும் நற்செயல்களாலும்,
நமது செப, தவ வாழ்வினாலும்,
நமது புண்ணிய வாழ்வினாலும்
நாம் இறைவனிடமிருந்து பெறும் ஆன்மீகச் செல்வங்களே
நாம் விண்ணகம் செல்லும்போது நம்மோடு வந்து,
நமக்கு நித்திய பேரின்ப வாழ்வை தந்துகொண்டிருக்கும்.
இச்செல்வங்களை ஈட்ட இறைவனது அருள் வரம் வேண்டும்.
இவ்வருள் வரத்தை நாம் இறைவனிடமிருந்து கேட்டுப் பெறவேண்டும்.
"கேளுங்கள் கொடுக்கப்படும்." என்றார் நம் ஆண்டவர்.
நாம் இவ்வுலக சம்பந்தப்பட்ட செல்வங்களைக் கேட்பதில் நமது பொன்னான நேரத்தை செலவழிக்காமல்
விண்ணக வாழ்விற்கு தேவையான செல்வங்களை அள்ளிக் குவிக்க வேண்டிய வரம் கேட்டு மன்றாடுவோம்.
கேட்ட வரத்தை இறைவன் நிச்சயம் தருவார்.
அதை பயன்படுத்தி இறைவனை எல்லாவற்றிற்கும் மேலாக அன்பு செய்வோம்
இறைவனுக்காக நம் அயலானையும் அன்பு செய்வோம்.
அயலானுக்கு நாம் செய்யும் உதவிகளை இறைவனுக்காக செய்யும்போது
அந்த உதவிகள் நமக்கு விண்ணக செல்வத்தை அபரிமிதமாக ஈட்டித் தருகின்றன.
ஆகவே நமது வாழ்வை அன்பு செயல்களிலே செலவழிப்போம்.
அன்னைத் தெரசாவைப் போல நாமும் ஏழைகளுக்கு, கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்வதன் மூலம்
இறை இயேசுவின் விருப்பத்தை நிறைவேற்றுவோம்.
அவர் பெயரால் ஒரு சிறுவனுக்கு ஒரு தம்ளர் தண்ணீர் கொடுத்தால் கூட அதற்கு இறை உலகில் சன்மானம் ஒன்று என்று கூறினார் நம் ஆண்டவர்.
ஆண்டவர் விருப்பப்படி
பசியாய் இருப்பவர்களுக்கு, உண்ணக் கொடுப்போம்.
. தாகமாய் இருப்பவர்களுக்கு, தண்ணீர் கொடுப்போம்.
அன்னியனாய் இருப்பவர்களை வரவேற்போம்.
ஆடையின்றி இருப்பவர்களுக்கு உடை கொடுப்போம்.
நோயுற்றிருப்பவர்களை, பார்க்கச் செல்வோம்.
.சிறையில் இருப்பவர்களைக் காணச் செல்வோம்.
இயேசுவுக்காக இவற்றை செய்தால் விண்ணகத்தில் நமது செல்வமும், பாக்கியமும் மிகுந்திருக்கும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment