"நாங்கள் பார்த்ததையும் கேட்டதையும் பேசாமல் இருக்க எங்களால் இயலாது"
(அப்.4:20)
**  **  **   ** ** **   ** ** ** ** **
யூத மக்கள் தலைவர்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும்
இராயப்பரிடமும், 
அருளம்பரிடமும்
இனி இயேசுவின் பெயரைச் சொல்லி, எதுவும் பேசவோ போதிக்கவோ கூடாது எனக் கட்டளையிட்டனர்.
ஆனால் அவர்கள்,
"நாங்கள் பார்த்ததையும் கேட்டதையும் பேசாமல் இருக்க எங்களால் இயலாது"
என்றார்கள்.
இயேசு விண்ணகம் எய்து முன் தன் சீடர்களிடம்
"நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள். 
பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து,
20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள்."
(மத். 28:19, 20)
இயேசு நற்செய்தியை போதிக்கும் கட்டளையை  யாருக்குக் கொடுத்தார்?
சீடர்களுக்கு.
இயேசு சீடர்களிடம்
"நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள். 
ஆதாவது சீடர்கள் சீடர்களை உருவாக்க வேண்டும்.
சீடர்கள் உருவாக்கிய   சீடர்கள்
சீடர்களை உருவாக்க வேண்டும்.
சீடர்களால் உருவாக்கப்பட்ட அனைவரும் சீடர்கள் தான்.
உருவாக்கப்பட்ட ஒவ்வொரு சீடருக்கும் நற்செய்தி அறிவிக்கும் பணி இருக்கிறது.
ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் இயேசுவின் சீடர்கள் தான்.
"குருக்கள் மட்டும்தான் இயேசுவின் சீடர்கள்,
 அவர்களுக்கு மட்டும்தான் நற்செய்தி அறிவிக்கும்  பணி இருக்கிறது" என்று தவறாக எண்ணக் கூடாது.
கிறிஸ்மா எண்ணையைத் தலையில் பூசும்போது ஆயர் உருவாகிறார்.
அதே கிறிஸ்மா எண்ணையை கையில் பூசும்போது குருவானவர் உருவாகிறார்.
 கிறிஸ்மா எண்ணைதான் ஞானஸ்நானம் கொடுக்கவும்
பயன்படுகிறது. 
ஞானஸ்நானத்தால் நாம்
 கிறிஸ்தவன் ஆகிறோம்.
முதலில் நாம் கிறிஸ்தவர்களாக அபிஷேகம் செய்யப்பட்டோம்.
நம்மில் சிலர் குருக்களாக  அபிஷேகம் செய்யப் படுகிறார்கள்.
அவர்களில் சிலர் ஆயர்களாக 
அபிஷேகம் செய்யப் படுகிறார்கள்.
ஆக கிறிஸ்துவின் சீடர்கள் அனைவரும்,
(பாப்பரசரிலிருந்து  இப்போதுதான் ஞானஸ்நானம் குழந்தை வரை)
அபிஷேகம் செய்யப் பட்டவர்களே.
குருத்துவம் கிறிஸ்துவிலிருந்து வருகிறது.
 கிறிஸ்தவர்கள் அனைவரும் குருக்களே.
ஞானஸ்நானம் பெறும்போது 
நாம் கிறிஸ்துவின் பொதுக் குருத்துவத்தில் பங்கு பெறுகிறோம்.
குருப்பட்டம் பெறுகிறவர்கள்
கிறிஸ்துவின் பணிக் குருத்துவத்தில் பங்கு பெறுகிறார்கள்.
பணிக் குருத்துவத்தில் பங்கு பெறுகிறவர்களை நாம் நமது ஞான மேய்ப்பர்கள் என்று அழைக்கிறோம்.
தேவ திரவிய அனுமானங்களைக் கொடுத்து நம்மை விண்ணக பாதையில் வழி நடத்துபவர்கள் நமது ஞான மேய்ப்பர்கள்.
இது பணி குருத்துவம்.
இறைவார்த்தையை அறிவித்து
 மற்றவர்களை இயேசுவின் சீடர்கள் ஆக்குவது 
 பணிக் குருத்துவத்திற்கும் உண்டு,
 பொதுக்  குருத்துவத்திற்கும் உண்டு.
நம்மிடம் ஆலயங்களும்  உண்டு, பள்ளிக்கூடங்களும் உண்டு.
ஆலயங்களைத் தேவ திரவிய அனுமானங்களை நிறைவேற்றவும் நற்செய்திையை அறிவிக்கவும் பயன்படுத்துகிறோம்.
நம் நாட்டிற்கு நமது மறையை அறிவிக்க வந்த வேத போதகர்கள்
 வேத போதக பணிக்காகத் தான்
 பள்ளிக்கூடங்களை நிறுவினர்.
 ஆனால், இன்று எந்த அளவிற்கு அந்த நோக்கத்தை நாம் நிறைவேற்றி கொண்டிருக்கிறோம் என்பது ஆராயப்பட வேண்டிய விஷயம்.
திருச்சபையின் செலவில் நடத்தப்படுகின்ற  தமது பள்ளிக்கூடங்களில்
 மொழிப்பாடம் நடக்கிறது, 
கணித பாடம் நடக்கிறது, 
அறிவியல் பாடம் நடக்கிறது, தேர்வுகள் நடத்தப்படுகின்றன, மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுக்கப்படுகின்றன, படித்தவர்களுக்கு வேலை கிடைக்கிறது,
ஆனால் நமது பள்ளிக்கூடங்களில் மறைபணி அதாவது நற்செய்தி அறிவிக்கும் பணி எந்த அளவிற்கு நடக்கிறது?
 ஏதோ  45 நிமிடங்கள் திருமறையில் உள்ளவர்களுக்கு மட்டும்
 திருமறைப் போதனை நடக்கிறது.
திருமறையை அறியாதவர்களுக்கு நற்செய்தி அறிவிக்கப் படுகிறதா?
மருத்துவ மனைகள் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்ப்பதற்கு,
நமது கல்விக்கூடங்களில் திருமறையை அறிந்தவர்களுக்கு போதிப்பதில் தவறில்லை,
 ஆனால் அறியாதவர்களுக்கு போதிக்காமல் இருப்பது?
நமது ஆண்டவர் விண்ணகம் எய்து முன், தனது சீடர்களுக்கு ஒரு meeting போட்டு,
"இராயப்பா, நான் மூன்று ஆண்டுகள் நற்செய்தி அறிவித்த இடங்களை எல்லாம் ஒரு மறைமாவட்டமாக்கு.
அதை பல
வட்டங்களாகப் பிரி.
ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு  பங்குச்சாமியை நியமி.
பங்குச்சாமி என்னால் ஞானஸ்நானம் பெற்றவர்களை திரு மறையில் உறுதிப்படுத்த வேண்டும்.
தேவத்திரவிய அனுமானங்களைக் கொடுக்க வேண்டும்.
அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும்.
உங்கள் காலத்திற்குப் பிறகுப் சிறிஸ்தவர்களைக் கவனிக்க குருக்களை நியமி.
இது காலங்காலமாக நடக்கும்."
என்று சொன்னாரா? 
அல்லது,
"நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள்."
என்று சொன்னாரா?
நாம் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறோம்?
ஒவ்வொரு பங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.
நமது அரசு "மத போதனை  செய்யாதே" என்கிறது.
திருச்சபையின் ஆரம்பக் கட்டத்திலும் அரசாங்கம் அப்படித்தான் சொன்னது.
ஆனால் சீடர்கள் என்ன சொன்னார்கள்?
"நாங்கள் பார்த்ததையும் கேட்டதையும் பேசாமல் இருக்க எங்களால் இயலாது"
(அப்.4:20)
அப்படிச் சொல்ல நமக்கு ஏன் தைரியம் இல்லை?
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment