Sunday, April 19, 2020

இழப்பது ஆசீர்வாதமே.

இழப்பது ஆசீர்வாதமே.

**  **  **   ** ** **   ** ** ** ** **

வாழ்க்கை இரண்டே இரண்டு செயல்களை மட்டும் உள்ளடக்கியது: பெறுதல், கொடுத்தல்.

நாம் நமது தாயின் வயிற்றில் உற்பவிக்கும்போது தாயிடமிருந்து நமது உடலையும், கடவுளிடமிருந்து நமது ஆன்மாவையும் பெறுகிறோம்.

இறக்கும்போது உடலை மண்ணுக்கும், ஆன்மாவை கடவுளிடமும் கொடுக்கிறோம்.

இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட வாழ்க்கை எண்ணற்ற பெறுதல்களாலும், கொடுத்தல்களாலும் ஆனது.

இந்த இரண்டாலும் நாம் பெறும் அனுபவம் இரண்டே இரண்டு தான்: 
இன்பம், துன்பம்.

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நோக்கம் இருக்கும்.

பெற்றும், கொடுத்தும் வாழ்கிறோமே, அதன் நோக்கம் என்ன?

இன்பமா? துன்பமா?

 இந்த இரண்டில் ஒன்று தான் நோக்கமாக இருக்க முடியும்.

இறைவன் நம்மைப் படைத்தது இன்பத்தை, நித்திய பேரின்பத்தை அடைவதற்காக மட்டும்தான்.

துன்பம் நமது நோக்கம் அல்ல.

சென்னையில் இருக்கும் ஒரு நபர் பாவூர்சத்திரத்திற்குப் போகவேண்டும்.

பேருந்து மூலமாகவோ, புகைவண்டி மூலமாகத்தான் போக முடியும்.

பேருந்தோ, அல்லது புகைவண்டியோ அவரது  நோக்கம் அல்ல.

பாவூர்சத்திரத்திற்குப் போவது தான் நோக்கம்.

ஆனால் பேருந்தோ, அல்லது புகைவண்டியோ இல்லாமல்
நோக்கத்தை அடைய முடியாது.

அதேபோல வாழ்வின் நோக்கமாகிய இன்பத்தை துன்பம் மூலமாகத்தான் அடைய முடியும்.

துன்பமாகிய வழியால் அன்றி இன்பமாகிய நோக்கத்தை அடைய முடியாது.

இதை நம் ஆண்டவராகிய இயேசு தன் சொல்லால் மட்டுமல்லாமல்,

செயலாலும் எடுத்துக் காண்பித்திருக்கிறார்.

 சிலுவை மரணத்தின் மூலமாகத்தானே
உயிர்த்தெழுந்தார்!

நமது வாழ்விலும் சிலுவை இன்றி இன்பம் இல்லை.

பெறுவதையும், கொடுப்பதையும் வேறு விதமாகச் சொல்வதானால் அடைதல், இழத்தல்.

ஒரு பொருளை நாம் பெறும்போது நாம் அதை அடைகிறோம்.

கொடுக்கும்போது இழக்கிறோம்.

ஒரு அடிப்படை உண்மையை நினைவில் கொள்ள வேண்டும்.

நான் பெற்றிருப்பது எல்லாம் கொடுப்பதற்கே.

இந்த உண்மை இறைவனின் இரண்டாவது கட்டளையை அடிப்படையாகக் கொண்டது.

"நீ உன்னை நேசிப்பது போல உன் அயலானையும் நேசி."

நம் உள்ளத்தில் அன்பு இருந்தால் அது தன்னையே கொடுப்பதில்தான் வெளிப்படுத்தும்.

நாம் யார் மீது அன்பு வைத்திருத்கிறோமோ

 அவர்களுக்குத் தேவையானதைக் கொடுப்பதின் மூலமாக

 நமது அன்பை வெளிப்படுத்துவோம்.

ஒரு தாய் தன் குழந்தையைப் பார்த்து,

"இங்கே பார், நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்.

எவ்வளவு நேசிக்கிறேன் என்றால், 

உன்னை எடுக்க மாட்டேன்,

பாலூட்ட மாட்டேன்,

நீ அழுதாலும் கவலைப்பட மாட்டேன்,

ஆய் போனால் கழுவி விட மாட்டேன்,

உனக்கு dress போட மாட்டேன்,

உனக்கு என்ன நேர்ந்தாலும் கவலைபட மாட்டேன்."

என்று சொன்னால் அவள் எப்படிப்பட்ட தாய்?

இறைவன் உயிரற்ற பொருட்களைப் படைத்ததுகூட அவை தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்வதற்காக அல்ல.

சூரியன் உலகிற்கு ஒளி கொடுக்கிறது, தனக்குத் தானே அல்ல.

தண்ணீர் நமக்குத்தான் பயன் படுகிறது,  தனக்குத் தானே அல்ல.

கடலால் கடலுக்கு என்ன பயன்? நீராவியாகி நமக்கு மழையாய் பெய்கிறது.

மனிதன் மட்டும்தான் மற்றப் பொருட்களைத் தனக்காகப் பயன்படுத்துகிறான்.

பயன்படுத்தட்டும், பயன்படுத்தாமல் வாழ முடியாது.

ஆனால், தன்னிடம் உள்ளதை மற்றவர்களுக்கும் கொடுத்து உதவ வேண்டும்.

இது மற்றவர்கள் மீது அன்பு இருந்தால் மட்டும் முடியும்.

இப்படி உதவும்போது நிறைய துன்பங்கள் ஏற்படும்.

இவை ஆன்மீக மொழியில் சிலுவைகள் எனப்படும்.

இயேசு சிலுவையைச் சுமந்து, அதில் மரித்து நமக்கு மீட்பைத் தந்தார்.

இயேசுவுக்குத் துன்பங்கள் சிலுவை வடிவில் வந்ததால் நமது துன்பங்களும் சிலுவை எனப்படுகின்றன.

நாம் இயேசுவின் சீடர்கள் ஆகவேண்டுமென்றால் சிலுவையைச் சுமந்து ஆக வேண்டும்.

இறைவனிடமிருந்து உயிரைப் பெற்ற நாம் அவருக்காகவும், நமது அயலானுக்காகவும் உயிரையும்  தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

கொடுப்பதில் மற்றொரு அடிப்படை உண்மையும் இருக்கிறது.

இழப்பது திரும்ப பெறுவதற்கே.

கடவுளின் பெயரால் நாம் இழந்தது வேறு வடிவில் திரும்ப நம்மிடமே வரும்.

நாம் இழந்தது எல்லாம் நாம் எந்த நோக்கத்திற்காகப் படைக்கப் பட்டிருக்கிறோமோ அந்த நோக்கமாகத் திரும்பி வரும்.

அதாவது நித்திய பேரின்பமாகத் திரும்பி வரும்.

"எனக்காகத் தன் உயிரை இழந்தவனோ அதைக் கண்டடைவான்."(மத். 10:39)

இயேசுவுக்காகத் தன் உயிரை இழந்தவன்,

அதை நித்திய பேரின்பத்தில் கண்டடைவான்.

பெற்றதைக் கொடுப்போம் இவ்வுலகில்.

கொடுத்ததைப் பெறுவோம் மறுவுலகில்.

இழப்பது துன்பம்தான்,

ஆனால்

அது தான் பேரின்பத்திற்கான வழி.

இழப்பது ஆசீர்வாதம்தான்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment