"நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு. "
(அரு. 6:51)
** ** ** ** ** ** ** ** ** ** **
பைபிளில் உயிர், வாழ்வு, மரணம் ஆகிய வார்த்தைகளில் ஒவ்வொன்றுக்கும் இரண்டு பொருள்கள் உண்டு.
ஒன்று உடலைச் சார்ந்தது. அடுத்தது ஆன்மாவைச் சார்ந்தது.
"பாலைவனத்தில் உங்கள் முன்னோர் மன்னாவை உண்டனர்: ஆயினும் இறந்தனர்.
50 ஆனால், நான் குறிப்பிடும் உணவை உண்பவன் சாகான். இதற்காகவே இவ்வுணவு வானினின்று இறங்கியது."
(அரு. 6:49, 50)
முதல் வசனத்திலுள்ள 'இறந்தனர்' உடலைச் சார்ந்தது. ஏனெனில் மன்னா உடலுக்கு உணவு.
இரண்டுமே உலகைச் சார்ந்தவை. அழியக்கூடியவை.
அழியக்கூடிய உணவை உண்கின்ற உடலும் அழியக் கூடியதுதான்.
உடல் ஒரு போதும் உயிருள்ள உணவை உண்ணாது.
உயிருள்ள மிருகங்களைக் கொன்றுதான் சாப்பிடும்.
இரண்டாவது வசனத்திலுள்ள
'சாகான்' ஆன்மாவைச் சார்ந்தது.
ஏனெனில் ஆண்டவர் குறிப்பிடும் உணவை, அதாவது, அவரை, உணவாகக் கொள்ளும் ஆன்மா என்றும் சாகாது.
என்றென்றும் வாழும்.
உடலைப் போலல்லாமல், ஆன்மா அழியாது.
அழியாத ஆன்மா என்றும் சாகாதிருக்க,
ஒரு போதும் அழியாத,
என்றும் உயிரோடு இருக்கும் உணவே தேவை.
ஆகவேதான் நமது ஆன்மாவைக் காப்பாற்ற
வானினின்று இறங்கி வந்த இயேசு தன்னையே அதற்கு உணவாகத் தருகிறார்.
அழியக்கூடிய உடல் அழியக் கூடிய, உயிரற்ற உணவை உண்கிறது.
நமது அழியாத ஆன்மா என்றும் உயிருள்ள உணவை,
அதாவது இயேசுவையே உண்கிறது.
இங்கு அழியாது, சாகாது என்ற இரண்டு வார்த்தைகளைக் கவனிக்க வேண்டும்.
ஆன்மாவிற்கு அழிவு இல்லை.
சாவும், சாகாமையும் அதன் நிலையைப் பொறுத்தது.
பாவத்தின் விளைவு ஆன்மாவின் மரணம்.
பாவம் மன்னிக்கப் படும்போது மரணித்த ஆன்மா உயிர் பெறுகிறது.
பாவத்தினால் ஆன்மா மரணம் அடைந்தாலும் அது அழியாது,
பாவத்தினால் மரணித்த ஆன்மா அழியாது, நித்தியமும் நரக நிலையில் இருக்கும்.
உயிருள்ள ஆன்மா நித்தியமும் இறைவனோடு இணைந்து வாழும்.
ஆன்மாவின் உயிர் தேவ இஸ்டப் பிரசாதம். (Sanctifying grace.)
நாம் ஞானஸ்நானம் பெறும் போது தேவ இஸ்டப் பிரசாதத்தைப் பெற்று ஆன்மா உயிர்பெறுகிறது.
சாவான பாவம் ஏதும் செய்யாமல் நமது ஆன்மாவின் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
காப்பாற்றிக் கொண்டால் மட்டும் போதாது. அது இறை அருளில் வளர வேண்டும்.
வளர வேண்டுமானால் உணவு வேண்டும்.
உயிருள்ள ஆன்மாவின் உணவும் உயிர் உள்ளதாய் இருக்க வேண்டும்.
என்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இறைமகன் இயேசுவே அந்த உணவு.
இயேசுவை உணவாக உண்டு அவரது அருளோடு என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவன் என்றுமே சாகமாட்டான்,
அதாவது பாவம் செய்ய மாட்டான்.
பாவமற்ற பரிசுத்தமான நிலையில் உடலை விட்டு பிரியும் ஆன்மா நித்திய காலமும் அருளின் ஊற்றாகிய இறைவனோடு இணைந்து என்றென்றும் வாழும்.
"நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு. இதை எவனாவது உண்டால், அவன் என்றுமே வாழ்வான்"
இது வாக்கு மாறாத நம் தேவன் நமக்கு அளித்துள்ள வாக்குறுதி.
திருப்பலியின்போது திவ்ய 'நற்கருணை மூலமாக இயேசுவை நமது ஆன்மீக உணவாக உண்கிறோம்.
'உயிருள்ள ஆன்மாதான்,
அதாவது,
சாவான பாவம் இல்லாத ஆன்மாதான்.
திருவிருந்தை உண்ண வேண்டும்.
உயிருள்ள ஆன்மாதான் இறை அருளில் வளர முடியும்.
உயிரற்ற ஆன்மா,
அதாவது, சாவான பாவ நிலையிலுள்ள ஆன்மா,
பாவசங்கீர்த்தனம் மூலமாக பாவமன்னிப்பு பெற்று,
அதாவது உயிர் பெற்று,
திரு விருந்தை உண்ண வேண்டும்.
சாவான பாவத்தோடு நற்கருணை உண்பது ஒரு சாவான பாவம்.
குளிக்கப் போய் சேற்றை பூசி வந்த கதையாகிவிடும்.
பரிசுத்த நிலையில்
பரிசுத்தரை உண்டு
பரிசுத்தரோடு என்றென்றும் வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment