Thursday, January 2, 2020

மாற்றமே இல்லாதவரை நோக்கி மாற்றத்தின் பயணம்.


மாற்றமே இல்லாதவரை நோக்கி மாற்றத்தின் பயணம்.
********    **********     *******

கடவுள் மாற்றம் இல்லாதவர்.

 கடவுள் மட்டுமே மாற்றம் இல்லாதவர்.

 ஏனெனில்,

 கடவுள் நிறைவானவர் (perfect)

 நிறைவு அதிக நிறைவாக முடியாது.

 கடவுளுடைய பண்புகள் அனைத்தும் அளவு கடந்தவை.

 அவை அதிகமாகவும் முடியாது.

 குறைவாகவும் முடியாது.

கடவுளிடம் எதிர்மறை பண்புகள் கிடையாது.

 அதாவது, அன்பு நிறைந்த கடவுளிடம்

 அன்புக்கு எதிரான வெறுப்பு, கோபம், வன்மம் ஆகிய பண்புகள் 

துளிகூட இருக்க முடியாது. 

அன்புக்கு மன்னிக்க மட்டும் தெரியும்.

 தண்டிக்கத் தெரியாது.

நாம் பாவத்தோடு மரித்தால்   

 கடவுள் நம்மை நரகத்துக்கு அனுப்புவது இல்லை.

 நாமே கடவுளைப்  புறக்கணித்து

 நரக நிலைக்கு நம்மையே உட்படுத்தி கொள்கிறோம்.

 அவரது நீதி அன்புக்கு எதிரானது அல்ல.

ஆகையினால்தான் 

நமது முதல் பெற்றோர் பாவம் செய்தபோது

 நீதிப்படி நாம் செய்யவேண்டிய பரிகாரத்தை

 கடவுளே செய்துகொண்டார்.

 மனிதன் செய்த பாவத்திற்கு மனிதனே பரிகாரம் செய்ய வேண்டும் என்பது நீதி.

 ஆகவே கடவுள் மனிதனாக பிறந்து .

மனித செய்யவேண்டிய பரிகாரத்தை தானே செய்தார்.

நாம் குற்றவாளிகள்.

 கடவுள் நீதிபதி.

 வக்கீலும் கடவுளே.

 குற்றத்திற்காக பரிகாரம் செய்பவரும் கடவுளே.

கடவுளுடைய திட்டங்களும் மாறாதவை.

அவருடைய திட்டங்கள் நித்திய காலத்திலிருந்தே தீட்டப்பட்டவை.

 அவரது அளவில்லாத ஞானத்தின் காரணமாக அவருக்கு முக்காலமும் தெரியும்.

மனிதன் திட்டம் தீட்டும் போது எதிர்காலத்தை யூகிப்பான்.

 ஆனால் நிச்சயமாகத் தெரியாது.

 ஆகவே திட்டம் தீட்டியபின்  எதிர்காலத்தில் இடைஞ்சல்  வந்தால் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டியிருக்கும்

 ஆனால் இறைவனைப் பொறுத்தமட்டில் 

அவருக்கு முக்காலமும் தெரியும்.

 ஆகவே அவர் தீட்டும் திட்டங்களுக்கு எதிர்பாராத இடைஞ்சல் எதுவும் வர முடியாது.

மனிதனைப் படைக்க திட்டமிட்ட போது

 மனிதன் பாவம் செய்வான் என்பது கடவுளுக்கு முன்பே தெரியும்.

 ஆகவே மனிதனை இரட்சிக்க  மனிதனாகப் பிறக்கவும் 

நித்திய காலத்திலிருந்தே  திட்டமிட்டு விட்டார்.

ஆகவேதான் கடவுள் மாறாதவர் என்கிறோம்.

ஆனால் கடவுள் உலகைப் படைக்கும்போது அதை மாறக்  கூடியதாகப் படைத்தார்.

மாறாத இயற்கை விதிகளின் அடிப்படையில் மாறக்கூடியது உலகம்.

உலகம் சென்ற ஆண்டு இருந்ததுபோல் 

இந்த ஆண்டு இல்லை.

 அடுத்த ஆண்டும் இருக்காது.

 மாறிக்கொண்டே இருக்கும்.

உலகிலுள்ள எல்லா பொருட்களும் சதா மாறிக்கொண்டே இருக்கும்.

 தண்ணீர் ஆவியாகும்.

 ஆவி மேகம் ஆகும்.

 மேகம் மழையாய்ப் பொழியும்.

பூ காயாகும்.

 காய் பழமாகும். 

பழம் அழுகும்.

மாற்றம் இல்லாவிட்டால் உலகம் இயங்காது.

ஆனால் கடவுள் மாறாதவறாய் இருந்தாலும் சதா இயங்கி கொண்டு இருக்கிறார்.

 நமது இயக்கத்திற்கு காரணம் அவரே.

 மாறாத   கடவுளால்தான் மாறும் நாம் படைக்கப் பட்டிருக்கிறோம்.

சடப்பொருட்களின் மாற்றம் அறிவியல் சம்பந்தப்பட்டது.

 நமது மாற்றம் ஆன்மீகம் சம்பந்தப்பட்டது,

நமது மாற்றம் எனும்போது நமது ஆன்மாவின் மாற்றத்தைக் குறிப்பிடுகிறேன்.

 நமது உடல் சடப்பொருள்.

 அதன் மாற்றங்கள் அறிவியலுக்கு உட்பட்டவை.

மாற்றம் என்பது மாறுவதைக் மட்டுமே குறிக்கும்.

 வளர்ச்சியையோ தளர்ச்சியோ குறிக்காது.

வளர்ச்சியா தளர்ச்சியா என்பது அவரவர் கண்நோக்கைப்  பொறுத்தது.

 வயது ஆகும்போது நாம் வளர்கிறோம் என்று நினைக்கிறோம்.

 ஆனால் உண்மையில் நாம் மரணத்தை நெருங்கி கொண்டிருக்கிறோம்.

முதல் கண்நோக்கு வளர்ச்சி.
 
 இரண்டாவது 
கண்நோக்கு தளர்ச்சி.

நமது ஆன்மா சதா இயங்கிக் கொண்டே இருக்கிறது.

இயக்கத்தின்போது மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

மாற்றங்கள் காரணமாக ஆன்மா நகர்ந்துகொண்டே இருக்கும்.

 இறைவன் நிறைவானவர்.

 ஆன்மா நிறைவை நோக்கி நகர வேண்டும்.

 அதுவே அதன் முன்னேற்றம்

ஒரு ஒப்புமை.

 தென்காசியிலிருந்து நெல்லைக்கு பயணிக்கிறோம்.

 நெல்லையை நோக்கி நகர்வது முன்னேற்றம். 

பாதி வழி வந்த பிறகு,

 தென்காசியை நோக்கி நகர்ந்தால் அது பின்னடைவு.

தென்காசி Starting point.

நெல்லை finishing point.

நமது நகர்வு  finishing point ஐ  நோக்கி இருக்க வேண்டும்.

  நமது ஆன்மீகத்தில் ஞானஸ்நானம்  Starting point.   

கடவுள் finishing point.

ஞானஸ்நானம் பெறுவதற்கு முன் நம் ஆன்மாவில் சென்மப் பாவம் என்னும் அழுக்கு இருந்தது.

ஞானஸ்நானம் பெரும்பொழுது நமது ஆன்மா ஜென்ம பாவம் நீங்கி பரிசுத்தம் அடைந்தது.

அந்த நொடியிலிருந்து நமது ஆன்மிக பயணம் தொடங்கியது.

இந்தப் பயணம் இறைவனை நோக்கி நகர வேண்டும்.

பயணத்தின்போது நமது ஆன்மாவில் பாவ அழுக்கு படியாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.

பிரயாணத்தின் ஒவ்வொரு நொடியும் நமது பரிசுத்தத் தனத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே போக வேண்டும்.

 அப்போதுதான் நாம் நிறைவான இறைவனை நோக்கி நகர்கிறோம் என்று பொருள்.


பரிசுத்தமான நமது ஆன்மாவால்   பயணத்தின் போது  எங்கும் நிற்க முடியாது.

ஒன்று முன்னோக்கி நகர்வோம்.

 அல்லது 

பின் நோக்கி நகர்வோம்.

 அதாவது,

 பரிசுத்தத் தனத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே போனால்

 நமது முன்னோக்கிய நகர்வின் வேகம் அதிகரிக்கும்.

அதிகரிப்பு குறைந்தால் வேகமும் குறையும்.

பாவம் செய்தால் நாம் பின்நோக்கி, 

அதாவது, 

 Starting point ஐ நோக்கி   நகர வேண்டி இருக்கும்.

அதாவது ஞானஸ்நானம் பெறும் முன் நாமிருந்த பாவ நிலையை

நோக்கி   நகர வேண்டி இருக்கும். 

Starting point க்கு வந்துவிட்டால்

 நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்பு

 பெற்றபின் மறுபடியும் நிறைவை நோக்கிய  பயணத்தைத் தொடங்கவேண்டும். 

இத்தகைய நிலைமை ஏற்படாது இருக்க வேண்டுமென்றால் 

பாவம் செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது 

பரிசுத்தத் தனத்தில் வளர வேண்டும்.
 
உழவுத் தொழில் புரிவோர் வயலை பக்குவப் படுத்தினால் மட்டும் போதாது.

 பக்குவப்படுத்தப்பட்ட வயலில்

உரம் போட்டு, 
நாற்று நட்டு, 
நீர்பாய்ச்சி,
 பயிரை வளர்த்து, 
களை எடுத்து,
கதிர் வந்த பின் 
விளைய வைத்து 
அறுவடை செய்து 

பலனை வீட்டிற்குக் கொண்டுவரவேண்டும்.

அவ்வாறு நமது ஆன்மாவிலிருந்து
பாவத்தை நீக்கி

 பக்குவப்படுத்தினால் மட்டும் போதாது. 

இலவசமாகக் கிடைக்கும் இறை அருளின் உதவியுடன்,

'செபம்,

 தவம்.

 நற்செயல்கள் 

தேவத் திரவிய அனுமானங்கள் 

திருப்பலி

 திருவிருந்து. '

மூலம்

 நமது பரிசுத்தத் தனத்தை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

24 மணி நேரமும் இறைவனது பிரசன்னத்தில் வாழ வேண்டும்.

இரவில் தூங்கும்போது கூட இறைவனின் மடியில் தலைவைத்துத் தூங்க வேண்டும். 

இப்போது நமது ஆன்மாவில் ஏற்படும் மாற்றங்கள் நம்மை இறைவனை நோக்கி வேகமாக நகர்த்தி செல்லும்.

நமது ஆன்மா இறைவனை அடைந்த பின்

 அவரோடு நித்திய காலத்திற்கும் இணைந்துவிடும்.

மாறிக்கொண்டே இருக்கும் நாம் பயணிப்பதே 

மாறாத இறைவனோடு இணைவதற்காக மட்டும்தான்.

 கடவுளோடு இணைந்து

 பேரின்பத்தில் நித்திய வாழ்வு வாழ்வதற்காகவே

 நாம்  படைக்கப் பட்டிருக்கிறோம்.

மாறுவோம், பயணிப்போம்,

மாற்றமில்லாத இறைவனை நோக்கி.

மாறும் மண்ணக வாழ்வின் நோக்கமே மாறாத விண்ணக வாழ்வை அடைவதுதான். 

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment