மனந்திரும்புங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது" (மத். 4:17)
******** ********** *******
"தாத்தா."
"என்னடே? இன்றைக்கும் ஏதாவது சந்தேகமா?"
"இல்ல, தாத்தா, சந்தேகமில்லை. ஆனால் ஒரு வார்த்தைக்கு விளக்கம் தேவை."
"என்ன வார்த்தை?"
" விண்ணரசு. இந்த வார்த்தையை ஆண்டவர் அடிக்கடி பயன்படுத்துகிறார். இதனால் ஆண்டவர் எந்த அரசைக் குறிக்கிறார்?"
"விண் என்ற வார்த்தைக்கு இரண்டு பொருள்கள் உண்டு.
ஒன்று ஆகாயம், மற்றது. மோட்சம்.
ஆகாயத்தில் இருக்கும் நட்சத்திரங்களை விண்மீன்கள் என்று அழைக்கிறோம்.
மோட்சத்தில் கடவுளோடு இருப்பவர்களை விண்ணவர் என்று அழைக்கிறோம்.
ஆண்டவர் விண் என்ற வார்த்தையால் மோட்சத்தைக்
குறிப்பிடுகிறார்.
விண் அரசு என்றால் (Kingdom of Heaven)
இறைவனுடைய அரசு.
((Kingdom of God.)
அரசர் என்றால் ஆள்பவர்.
அரசு என்றால் அவர் ஆளும் நாடு."
"அதாவது ஆண்டவர் மோட்சத்துக்கு அரசர்.
சரி. நாம் வாழும் மண்ணுலகமும் அவரால்தானே படைக்கப்பட்டது. அதற்கு அவர் அரசர் இல்லையோ?"
"நாம் வாழும் உலகத்திற்கு மட்டுமல்ல
கோடிக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்ட பிரபஞ்சத்திற்கே அவர்தான் அரசர்.
வீடு, குடும்பம் இரண்டு வார்த்தைகளும் எதை குறிக்கும்."
" வீடு கட்டடத்தை குறிக்கும். குடும்பம், அதில் வாழும் மனிதர்களைக் குறிக்கும்."
"உனது அப்பா வீட்டு தலைவரா, குடும்பத் தலைவரா?"
" குடும்பத்தலைவர். "
" வீட்டிற்கும் அவர்தான் தலைவர். ஆனாலும் சொல் வழக்கில் குடும்பத்தலைவர் என்றுதான் சொல்கிறோம்.
எப்படி நாட்டை ஆளும் அரசன் நாட்டு மக்களை ஆள்கிறானோ,
எப்படி வீட்டை ஆளும் அப்பா குடும்பத்தை ஆள்கிறாரோ ,
அதேபோல் பிரபஞ்சத்தின் அரசராகிய கடவுள் அதில் வாழும் மக்களை ஆள்கிறார்."
"நாம் மண்ணுலகில் வாழ்கிறோம்.
நமது அரசர் கடவுள்.
விண்ணுலக அரசரும் கடவுள்தான்.
இயேசு விண்ணரசு நெருங்கி விட்டது என்கிறாரே,
அப்படியானால், நாம் உடனே மோட்சத்திற்கு போகப் போகிறோமா?"
"மண்ணில் வாழும் நாம் விண்ணிற்கு உரியவர்கள்.
அதாவது நமது உடல் மண்ணுக்காகவும்,
ஆன்மா விண்ணிற்காகவும் படைக்கப்பட்டுள்ளன.
இயேசு விண்ணக அரசர் என்பதாலும்,
நமது ஆன்மா விண்ணகத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளது என்பதாலும்
அவர் நமது ஆன்மீக அரசர்.
நாம் மண்ணில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் விண்ணரசு நமது அருகில்தான் இருக்கிறது.
ஆனால் அதில் நுழைய நாம் பாவம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.
நம்மிடம் பாவம் இருந்தால் நாம் அதற்காக மனஸ்தாபப்பட்டு (repent)
இறைவனிடம் மன்னிப்புக்
கேட்டு
பெற்று
நமது ஆன்மாவை பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பரிசுத்தமான ஆன்மாக்கள் மட்டுமே விண்ணரசிற்குள் நுழைய முடியும்.''
"எதைவைத்து விண்ணரசு அருகில் இருக்கிறது என்று சொல்லுகிறீர்கள் ?"
" இதை இரண்டு விதமாக சொல்லலாம்.
கிறிஸ்து உலகிற்கு வந்தது நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்து நம்மை
இரட்சித்து விண்ணரசாகிய மோட்சத்திற்கு அழைத்துச் செல்வதற்காகத்தான்.
இயேசு போதித்துக் கொண்டிருந்த காலத்தில்
இன்னும் மோட்சத்தின் கதவுகள் திறக்கப்படவில்லை.
பழைய ஏற்பாட்டின் புனிதர்கள் இரட்சகருக்காகப் பாதாளத்தில் காத்துக் கொண்டிருந்தார்கள்.
இயேசு பாடுபட்டு சிலுவையில் மரித்து நமக்கு மீட்பைபெற்றுத் தந்த பின்தான் மோட்சத்தில் கதவு திறக்கும்.
விசுவாசப் பிரமாணத்தில் இயேசு
'மரித்து பாதாளங்களில்
இறங்கி' மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
எங்கு சொல்லுகிறோம் அல்லவா?
பாதாளங்களில் இறங்கியது அங்கு காத்துக்கொண்டிருந்த பழைய ஏற்பாட்டின் புனிதர்களை மோட்சத்திற்கு அழைத்து வருவதற்காகத்தான்.
இயேசு மரித்து, உயிர்த்து நம்மை இரட்சித்த பின்னரே
மோட்சத்தின் வாயில்கள், அதாவது விண்ணரசின் வாயில்கள்,திறக்கும்.
இயேசு பூமிக்கு வந்துவிட்ட படியால் அவரது மரிப்பின் காலம்,
அதாவது,
இரட்சண்யத்தின் காலம் நெருங்கிவிட்டது.
அதாவது விண்ணரசு திறக்கப்பட வேண்டிய காலம் நெருங்கிவிட்டது.
பூமியில் உள்ளோர் அதற்காக தங்களையே தயாரிக்கவேண்டும்.
அதற்காக, அவர்கள் தாங்கள் செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி,
மனம் திரும்பி,
தங்களைப் பரிசுத்தமாக்கி விண்ணரசுக்குள் நுழைய
தங்களையே தயாரித்துக்கொள்ள வேண்டும்.
ஆகவேதான் ஆண்டவர் சொல்கிறார்,
"மனந்திரும்புங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது"
ஆண்டவர் மீட்பு தந்தால் மட்டும் போதாது.
நான் அதை ஏற்க வேண்டும்.
மீட்பை ஏற்கவேண்டும் என்றால்
நாம் பாவம் இன்றி பரிசுத்தமாய் இருக்க வேண்டும்."
"இன்னொரு விதமாக எப்படி?"
"முதலில் ஆண்டவர் உலகில் வாழ்ந்த காலத்திற்கு.
அடுத்தது,
நமது காலத்திற்கு.
நாம் இப்போது உலகில் வாழ்ந்து கொண்டிருந்தாலும்
விண்ணகம் செல்லவே நம்மைத் தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.
விண்ணகம் நமது அருகில் தான் உள்ளது.
நமக்கும் விண்ணகத்திற்கும் இடையில் தடையாய் இருப்பது நமது உடல் மட்டும்தான்.
உடல் நம்மை விட்டுப் பிரிந்த நொடியில்
நாம் விண்ணகத்தில்,
நாம் பரிசுத்த நிலையில் இருந்தால்,
நுழைவோம்.
நாம் எந்த வினாடியும் இறைவனால் அழைக்கப்படலாம்.
ஆகவே நாம் எப்பொழுதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
தயார்நிலை என்றால் மனம் திரும்பிய நிலை."
"விண்ணகம் நமது அருகில் தான் உள்ளது என்றால்?"
"உலக வரலாற்றின் கால அளவோடு ஒப்பிடும்போது நமது வாழ்நாள் காலம் மிகக் குறுகியதே.
அடுத்து விண்ணகம் என்பது நமது பூமியைப் போல ஒரு இடம் அல்ல.
அது ஒரு வாழ்க்கை நிலை.
நாம் இப்பொழுது இருப்பது மண்ணகம் என்ற இடத்தில்.
நமது ஆன்மா உலகம் என்ற
இடத்தில் வாழும் நம்முடைய உடலைப் பிரிந்து,
விண்ணக நிலையை அடைய ஒரு நொடி கூடஆகாது.
விண்ணகம் அருகில் உள்ளதா தூரத்தில் உள்ளதா?"
"ஒரு நொடி கூடஆகாது என்றால், அருகில்தான் உள்ளது.
ஒரு ஒப்புமை சொல்லுங்களேன்."
"உனக்குக் கணக்குத் தெரியுமா?"
"ஏதோ கொஞ்சம் தெரியும்.
சொல்லுங்க, புரியுதான்னு பார்ப்போம்."
"ஒரு கோட்டை இன்னொரு கோடு வெட்டும்போது என்ன ஏற்படும்?"
"கோணம் ஏற்படும்."
"வெட்டி எவ்வளவு நேரம் கழித்து கோணம் ஏற்படும்?"
"நேரமா? வெட்டும்போதே கோணம் ஏற்படும். துளி கூட நேர இடைவெளி கிடையாது."
"வெட்டும்போதே கோணம் ஏற்படுவது போல ,
மரணம் அடைந்த உடனேயே விண்ணக நிலையும் கிடைக்கும்.
இப்போ சொல்லு. மோட்சம் எங்க இருக்கு?"
"ரொம்ப ரொம்ப பக்கத்தில்."
"எவ்வளவு பக்கத்தில் என்றால் பரிசுத்தமான ஆன்மா உடலில் இருக்கும் போதே மோட்சத்தின் முன்சுவையை உணரும்.
If we are holy We Can have a pretaste of heaven!"
"இயேசு பாலன் புனித அந்தோனியாரின் கையில் தவழ்ந்தபோது அந்தோனியார் மோட்சத்தின் முன்சுவையை நிறைய அனுபவித்திருப்பார். "
"இயேசு நம் நாவில் வரும்போது?."
"நமக்கு அனுபவிக்கத் தெரியவில்லை.
அந்தோனியாரைப்போல பரிசுத்தவான்களால் மட்டும்
அனுபவிக்க முடியும்."
"அப்படிச் சொல்லக்கூடாது.
அந்தோனியார் மேல் உண்மையான பக்தி இருந்தால்
அவரைப்போல நாமும் பரிசுத்தவான்களாக ஆக முயற்சி எடுக்க வேண்டும்.
பரிசுத்தத்தனம் எல்லோருக்கும் பொது.
அதை நோக்கி வளரவே நாம் கிறிஸ்துவின் சீடர்களாக வாழ்கிறோம்.
"ஆதலால், உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
என்று நான் சொல்லவில்லை.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே சொல்லியிருக்கிறார்.
ஆகவே மனம் திரும்பினால் மட்டும் போதாது,
புனிதர்களாக மாற வேண்டும்.
ஏனெனில் அதற்காகத்தான் உலகில் நாம் படைக்கப் பட்டிருக்கிறோம்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment