"நான் கடவுளுக்கு அன்பு செய்கிறேன்" என்று சொல்லிக்கொண்டு, ஒருவன் தன் சகோதரனை வெறுத்தால், அவன் பொய்யன்." (1 அரு.4:20)
******** ********** *******
சூரியன் இயல்பாகவே ஒளி தரக்கூடியது.
நெருப்பு இயல்பாகவே சுடக் கூடியது.
தண்ணீர் இயல்பாகவே குளிர்ச்சியாக உள்ளது.
கடவுள் இயல்பாகவேஅன்பு நிறைந்தவர்.
நாம் கடவுளின் சாயலாக படைக்கப்பட்டிருப்பதால் இயல்பாகவே அன்பு உள்ளவர்கள்.
கடவுளால் தன் இயல்பில் இருந்து மாற முடியாது. ஆகவே என்ன நேர்ந்தாலும் கடவுள் அன்பிலிருந்து மாற மாட்டார்.
படைக்கப்பட்ட பொருள்கள் இயற்கை விதிகளுக்கு கட்டுப்பட்டு இருப்பதால்
அவைகள் தங்கள் இயல்புத் தன்மையை இழக்காமல் இருக்கின்றன.
ஆனால் மனிதன் தனக்கு இறைவனால் அருளப்பட்ட சுதந்திரத்தைத்
தவறாக பயன்படுத்தி பாவம் செய்தமையால்
அவனுடைய இயல்புத்தன்மை பழுது அடைந்து இருக்கிறது.
கடவுளால் அன்பு செய்ய மட்டுமே முடியும், வெறுக்க முடியாது.வெறுப்பு அவரது இயல்பு அல்ல.
மனிதனிடம் இருக்கும் அன்பு இறைவனிடமிருந்து வந்தது,
வெறுப்பு பாவத்தின் விளைவு.
ஒரே நபரை மனிதனால் ஒரே நேரத்தில் நேசிக்கவும் வெறுக்கவும் முடியாது.
Love and hatred cannot coexist.
மனிதரிடம் இறைவனின் சாயல் உள்ளது.
ஆகவே இறைவனை நேசிக்கும் ஒருவனால் இறைவனின் சாயலுள்ள மனிதனை வெறுக்க முடியாது.
"நான் கடவுளை நேசிக்கிறேன்,
என் விரோதிகளை வெறுக்கிறேன்,"
என்று சொல்பவன் பொய்யன்.
கடவுளை உண்மையிலேயே நேசிப்பவனால் யாரையும் வெறுக்க முடியாது.
அதேபோல கடவுளை எனக்கு பிடிக்காது,
ஆனால் மனிதர்களை பிடிக்கும் என்று சொல்பவனும் பொய்யன்.
கடவுளை நம்பாமல் மனிதர்களை மட்டும் நம்புபவன் ஏமாற்றத்தைத்தான் சந்திப்பான்.
சிலர் "கடவுளை நம்புகிறேன், நேசிக்கிறேன்" என்பார்கள்.
கோவிலுக்கு ஒழுங்காக போவார்கள். .
செபம் சொல்வார்கள்.
காணிக்கை போடுவார்கள்.
வேண்டுதல் வைப்பார்கள்.
நேர்ச்சைகள் நிறைவேற்றுவார்கள்.
ஆனால் வீட்டில் சமாதானம் இருக்காது.
உறவினர்களோடு சமாதானம் இருக்காது.
இவர்கள் பார்வைக்கு கடவுளோடு அன்பாய் இருப்பதுபோல் தோன்றும்,
'
ஆனால் அது வெறும்
தோற்றமே.
தன் அயலானோடு சமாதானமாக இல்லாத ஒருவனால் கடவுளோடு சமாதானமாக இருக்க முடியாது.
"கடவுளே உம்மை நான் நேசிக்கிறேன்.
ஆனால் உமது பிள்ளைகளை நேசிக்க மாட்டேன்.
உமது சொல்லை மதிக்க மாட்டேன்.
உமது சொற்படி நடக்க மாட்டேன்.
உமது கட்டளைகளை மீறுவேன்.
நான் கேட்பதை நீர் தரவேண்டும், ஆனால் நீர் கேட்பதை நான் தரமாட்டேன்."
என்று சொல்பவரிடம் எப்படி உண்மையான அன்பு இருக்க முடியும்?
கடவுளால் படைக்கப்பட்ட அயலானை நேசிக்காமல்
கடவுளை மட்டும் நேசிக்கிறேன் என்பவர்கள்
கடவுளை தங்கள் வசதிக்காக 'காக்கா பிடிக்க' நினைக்கிறார்கள்.
"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: சின்னஞ் சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்."
என்று இயேசு சொல்லியிருக்கிறார்.
இயேசுவின் சின்னஞ்சிறிய சகோதர சகோதரிகளுக்கு நாம் எதைச் செய்தாலும்
இயேசுவுக்கே செய்கிறோம்.
அவர்களை நேசித்தால் இயேசுவை நேசிக்கிறோம்.
அவர்களை வெறுத்தால் இயேசுவையே வெறுக்கிறோம்.
நாம் இயேசுவின் உண்மையான சீடர்களானால் இயேசுவின் சொற்படி நடப்போம்.
நாம் இயேசுவின் சொற்படி நடக்காமல்
நம்மை அவருடைய சீடர்கள் என்று சொன்னால்
நாம் சொல்வது பொய்.
கண்ணால் காணப்படக்கூடிய சகோதரரை அன்பு செய்ய முடியாதவன்
கண்ணால் பார்க்கமுடியாத கடவுளை எப்படி அன்பு செய்வான்?
தந்தை இறைவன் நம்மை சந்தித்தால்:
''தினமும் என்னைப் பார்த்து 'எங்கள் தந்தாய்' என்று சொல்கிறாயே,
நீ ஒருவன் மட்டும்தான் நிற்கிறாய், மீதிப்பேர் எங்கே?"
"தெரியாது ஆண்டவரே. உமது மகன்தான் அப்படிச் சொல்லச் சொன்னார்."
"அப்போ நீ புரிந்து சொல்லவில்லை?"
"புரியவில்லை ஆண்டவரே, புரியும்படி விளக்குங்களேன்."
"நீ மட்டுமல்ல, இவ்வுலகில் வாழும் அனைத்து மக்களும் என் பிள்ளைகளே.
நீ எங்கள் என்று சொல்லும் போது அனைத்து மக்களையும் குறிக்கிறாய்.
நீ உனக்காக மட்டுமல்ல அனைவருக்காகவும் செபிக்கிறாய்.
செபத்தின் இரண்டாவது பகுதியைச் சொல்லு."
"எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று தாரும்."
"எல்லோருக்காகவும் உணவு கேட்கிறாயா அல்லது உனக்கு மட்டும் கேட்கிறாயா?"
"எங்களுக்கு என்று சொல்லியிருக்கிறேன்.
ஆகவே எல்லோருக்காகவும் தான் கேட்கிறேன்."
"நீ சாப்பிடும்போது சாப்பிடாத மற்றவர்களுக்காக கவலை பட்டிருக்கிறாயா?"
"இல்லை, ஆண்டவரே."
"எல்லோருக்காகவும்உணவு கேட்டுவிட்டு,
யாரைப்பற்றியும் கவலைப்படாமல் தனியாக சாப்பிட்டால் எப்படி?"
"ஆண்டவரே செபம் சொல்லும்போது என்ன சொல்லுகிறோம் என்று புரியாமல் தான் சொல்கிறோம்.
அது தப்புதான். ஆனால் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.
மன்னியும் ஆண்டவரே."
"அகுத்த வரியை சொல்லு."
"எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல எங்கள் பாவங்களை எங்களுக்குப் பொறுத்தருளும்."
"இதுவரை எத்தனை பேரை மன்னித்திருப்பாய்?"
"மன்னியுங்கள் ஆண்டவரே. இனிமேல் செபித்தபடி நடப்பேன், ஆண்டவரே."
"இந்த செபத்தின் நோக்கமே
நீ என்னை நேசிப்பது போல மற்ற எல்லோரையும் நேசிக்க வேண்டும் என்பதுதான்.
அதனால்தான் தினமும் பல முறை உனக்காக மட்டும் அல்ல எல்லோருக்காகவும் வேண்டுகிறாய்.
மற்றவர்களை நேசிக்கா விட்டால் என்னை நேசிக்கவில்லை என்றுதான் பொருள். புரிகிறதா?"
"புரிகிறது, ஆண்டவரே."
"என்ன புரிகிறது?"
"உம்மை உண்மையிலேயே நேசித்தால் எங்கள் அயலானையும் நேசிப்போம்.
அயலானை நேசிக்காமல் உம்மை நேசிக்கிறோம் என்று சொன்னால் அது முழுப் பொய்.
இனிமேல் பொய் சொல்ல மாட்டேன்."
"Very good. கொடுத்த வாக்கை காப்பாற்று."
"ஆமென்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment