தந்தையுடன் சில மணித்துளிகள். (தொடர்ச்சி)
********************************
"அப்பா வந்துவிட்டேன்."
"டீ குடிச்சாச்சா?"
"குடித்துவிட்டேன் அப்பா."
"இன்னும் ஒரு கேள்வி இருப்பதாகச் சொன்னாயே, கேள்."
"நாங்கள் புனிதர்களை வணங்குவதற்கு சு௹பங்களைப் பயன்படுத்துவதை
சில சகோதரர்கள் விக்கிரக ஆராதனை என்று சொல்லுகிறார்களே,
எங்களுக்குத் தெரியும்
நாங்கள் சுரூபங்களை ஆராதிக்கவில்லை என்று.
ஆனால், எங்களைக் குறை சொல்வதையே குறிக்கோளாக கொண்ட
எங்களுடைய சில சகோதரர்கள் கூறும் இந்த அபாண்டமான கூற்றுக்கு நாங்கள் என்ன பதில் சொல்ல வேண்டும்? "
"எனது வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொள்ளாத சிலருடைய வாதம் இது.
என்னுடைய பைபிளை வாசிக்க தெரிந்தால் மட்டும் போதாது,
பைபிள் வசனங்களுக்கு சரியான முறையில் விளக்கம் கொடுக்கவும் தெரிய வேண்டும்.
சொற்களை மட்டும் பிடித்துக்கொண்டு செய்தியை கைவிடும் சிலரால் வரும் பிரச்சனைதான் இது.
உதாரணத்திற்கு
என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேரமாட்டான்.
வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடப்பவனே சேருவான்."
என்ற எனது வார்த்தையை சரியாகப் புரிந்து கொள்ளாமல்
'' இயேசுவை நோக்கி ஆண்டவரே என்று கூறக்கூடாது,
அப்படிச் சொல்பவன் விண்ணகம் செல்ல மாட்டான்
என்று அவரே கூறியுள்ளார்.''
என்று கூறும் பிற மதத்தவர்களும் உண்டு.
அதே போன்றதுதான் சிலைகளை செய்யக்கூடாது என்று நான் பைபிளில் கூறிய வார்த்தைகளும்.
அக்காலத்தில் என்னை நம்பாத அஞ்ஞானிகள்
(Pagans)
என்னால் படைக்கப்பட்ட பொருள்களுக்கு
உருவம் கொடுத்து,
எனக்குத் தரவேண்டிய ஆராதனையை அந்த சிலைகளுக்குக் கொடுத்து வந்தார்கள்.
அதன் பெயர்தான் விக்கிரக ஆராதனை.
விக்கிரகங்களை ஆராதிப்பது எனது கட்டளைக்கு விரோதமான பாவம்.
ஆராதிப்பதற்பதற்கு என்றே சிலைகளைச் செய்வது பாவம்.
பாவம் சிலைகளைச் செய்வதில் அடங்கி இருக்கவில்லை,
அவற்றைச் செய்வதன் நோக்கத்தில் (intention) தான் அடங்கி இருக்கிறது.
சிலைகளைச் செய்வதே பாவம் என்றால்
நானே உடன்படிக்கை பேழையின் மேல் வைப்பதற்கு
cherubகளின் உருவங்களை செய்ய சொல்லி இருப்பேனா?
என் மக்கள் வனாந்திரத்தில் அலைந்தபோது சர்ப்பத்தின் 'உருவத்தைச் செய்ய சொல்லி இருப்பேனா?
பாவம் செயலில் இல்லை, செயலின் நோக்கத்தில்தான் இருக்கிறது.
நீ வாத்தியார் தானே,
எப்பொழுதாவது உனது மாணவர்களை அடித்து இருக்கிறாயா? ''
"எப்பொழுதாவது அல்ல.
கையில் பிரம்பு இல்லாமல் நான் பாடம் நடத்தியதே இல்லை.
நீங்கள் தச்சன் வீட்டில் 30 ஆண்டுகள் வாழ்ந்தவர்கள் தானே.
உங்களுக்கு நன்கு தெரியும்,
கை ரம்பம் (hand Saw) இல்லாமல் தச்சுவேலை செய்ய முடியுமா?
நீங்கள் கை ரம்பத்தை மரத்தினால் ஆன பொருள்களை ஆக்கப் பயன்படுத்தியது போல
நான் கைப் பிரம்பை நல்ல மாணவர்களை உருவாக்க பயன்படுத்தினேன்."
"Correct. செயலின் நோக்கம்தான் அதன் தன்மையை தீர்மானிக்கிறது.
சரியான நோக்கத்தோடு செய்யும் செயல் சரியானது.
இப்போ கவனி.
நீ உன்னுடைய மகனுடைய செலவிற்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறாய், அதற்கு பெயர் என்ன?"
"Pocket money."
"உன் மகனை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கு பணம் கட்டுகிறாய், அதன் பெயர் என்ன?"
"Admission fee."
"உன் மகன் படிக்கும் பள்ளிக்கூடத்தின் கட்டட நிதிக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறாய் அதன் பெயர் என்ன?''.
"நன்கொடை,"
"கோவிலில் உண்டியலில் போடும் பணத்திற்கு பெயர் என்ன?"
"காணிக்கை."
"உன் மகனை
வேலையில் சேர்ப்பதற்கு அரசு அதிகாரிகள் உன்னிடம் 10 லட்சம் ரூபாய் கேட்கிறார்கள். அதற்குப் பெயர் என்ன?"
"இலஞ்சம், "
"பணம் ஒன்றுதான், ஆனாலும் அது பயன்படுத்தப்படும் நோக்கத்தை வைத்து அதன் பெயர் மாறுகிறது.
நீ சொன்ன பெயர்களில் தவறான பெயர் எது? "
"இலஞ்சம்."
"இப்போது உனக்கு ஒன்று புரிந்திருக்கும்.
பணத்தைக் கொடுப்பதோ வாங்குவதோ குற்றம் அல்ல,
ஆனால் இலஞ்சமாக கொடுப்பதும் வாங்குவதும் குற்றம்.
ஏனெனில் நோக்கம் தவறு.
அதேபோல்தான் உருவங்களைச் செய்வது குற்றமில்லை.
ஆனால் அவற்றை கடவுளாக நினைத்து ஆராதிப்பதற்காகச் செய்வதுதான் பாவம்.
உனக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்."
"எனக்குப் புரிகிறது.
ஆனால் தவறாகப் புரிந்து வைத்திருக்கும் என்னுடைய அன்பு சகோதரர்களுக்கு
எப்படி புரிய வைப்பது என்று தான் புரியவில்லை."
"சரி, புரிய வைக்கிறேன்.
நான் இப்போது உன்னுடைய அன்பு சகோதரர்களின் இடத்தில் இருந்து கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லு.
ஆராதிப்பதற்காக இல்லை என்றால் உருவங்களை எதற்காக செய்கிறீர்கள்?".
"அப்பா"
"நான் இப்போது உன்னுடைய சகோதரர்களின் இடத்தில் இருந்து பேசுகிறேன்.
அவர்களிடம் எப்படிப் பதில் சொல்வாயோ அப்படியே சொல்லு."
"நம்மை ஆண்டவர் காணக்கூடாத ஆன்மாவாக மட்டுமல்ல,
காணப்படக்கூடிய சடப்
பொருளாகிய உடலோடும் சேர்த்துதான் படைத்திருக்கிறார்.
நம்மால் ஆவியாகிய தந்தை இறைவனை நமது ஊனக்கண்களால் பார்க்க முடியாது.
தந்தை இறைவனை வெளி உதவி இன்றி மனதில் தியானிக்க வேண்டுமென்றால்
ஆழமான ஆன்மீக பயிற்சி பெற்ற புனிதர்களால் மட்டுமே முடியும்.
நம்மைப் போன்ற சாதாரண மனிதனின் மனதில் ஒரு வெற்றிடமே தோன்றும்.
வெற்றிடத்தை தியானிக்க முடியாது.
அளவுகடந்த தந்தையை அளவுள்ள நமது மனதிற்குள் கொண்டு வரவேண்டும் என்றால்
நமது இயல்புக்கு ஏற்றபடி அவருக்கு ஒரு உருவம் கொடுத்தாக வேண்டும்.
ஏனெனில் நம்மால் உருவத்தை மட்டுமே பார்க்க முடியும், நினைக்க முடியும்.
என்னைப் பொறுத்த மட்டில் தந்தையை ஒரு நீளத்தாடி உள்ள தாத்தா போல் மனதில் உருவப்படுத்திக் கொள்கிறேன்.
அந்த தாத்தா உருவம் தந்தையல்ல,
அது எனக்குத் தெரியும்.
ஆனால் தந்தையை நினைவு படுத்துகிறது.
விண்ணகம் சென்ற பின், அந்த உருவ உதவி தேவை இல்லை.
ஆனால் இவ்வுலகில் சடப் பொருளாகிய உடலுடன் இருக்கும் வரை உருவ உதவி தேவைப்படுகிறது.
நான் உருவப்படுத்தி இருப்பது விக்கிரகத்தை அல்ல,
அடையாளத்தை.
அந்த அடையாளம் எனது விண்ணகத் தந்தையை எனக்கு ஞாபகப்படுத்துகிறது
மகன் தேவன் மனிதனாக பிறந்துவிட்டமையால்
அவரை நினைத்துப் பார்ப்பது எளிது.
ஏனெனில் அவருக்கு நம்மைப்போல ஒரு உடல் இருக்கிறது.
பரிசுத்த ஆவி மனிதர் பார்க்க வேண்டும் என்பதற்காகவே புறா வடிவில் காட்சி அளித்தார்.
ஆகவேதான் பரிசுத்த தம
திரித்துவத்தை
நாம் நமக்கு ஏற்ற முறையில் நினைத்துப் பார்ப்பதற்கு வசதியாக
தந்தையை தாத்தா வடிவிலும்,
மகனை சிலுவையில் பாடுபட்ட வடிவிலும்
பரிசுத்த ஆவியை புறா வடிவிலும்
சித்திரம் வரைந்திருக்கிறார்கள்.
இந்த சித்திரம் ஒரு விக்கிரகம் அல்ல,
ஒரு உருவம்.
இது தமதிரித்துவத்தின் செபம் சொல்ல உதவியாய் இருக்கிறது.
பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்று நாம் சொல்லும்போது,
நமது மனதில் சித்திரத்தில் உள்ள மூன்று உருவங்களை நினைத்துக் கொண்டால்
நமது மனது ஒருநிலைப்படும்.
புனிதர்களுக்காக நாம் வைத்திருக்கும் சொரூபங்கள்
நமக்கு அவர்களை ஞாபகப்படுத்தும் அடையாள சின்னங்களே.
இறந்துவிட்ட நமது முன்னோர்களை நினைத்துப் பார்ப்பதற்காக
அவர்களின் புகைப்படங்களை நமது வீட்டில் வைத்திருப்பது போல.
சுரூபங்களின் முன்நின்று நாம் சொல்லும் செபம் ,
அவை நமக்கு நினைவூட்டும் புனிதர்களுக்கு,
சுரூபங்களுக்கு அல்ல.
நாம் சுரூபங்களை ஆராதிப்பது இல்லை.
நாம் என்ன செய்கிறோம் என்று நாம்தான் சொல்ல வேண்டும்.
'ஆராதிக்கவில்லை' என்று நாம் சொல்லும்போது
'இல்லை, இல்லை, நீங்கள் ஆராதிக்கிறீர்கள்'
என்று அவர்கள் சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்?
குற்றம் செய்யாத ஒருவனை நோக்கி நீ குற்றம் செய்ததாக ஒத்துக் கொள்
என்று கட்டாயப் படுத்துவது போல் இருக்கிறது அவர்களுடைய கூற்று.
அப்பா இப்போது நீங்கள் சொல்லுங்கள்.
நான் சொல்வது சரியா தவறா?"
"சுரூபங்களை அடையாளங்களாக வைத்துக்கொண்டு
அவை குறிப்பிடும் புனிதர்களுக்கு. வணக்கம் செலுத்துவது
முற்றிலும் சரி.
சுரூபங்களின் முன் மக்களின் மனது ஜெபத்தில் மட்டும் ஈடு பட்டிருக்க வேண்டும்.
நான் வெளிச் செயல்களை விட செய்பவர்களின்
மனதைத்தான் அதிகம் பார்க்கிறேன்.
மனநிலையை வைத்துதான் அவர்களின் பக்தி நிலையைத் தீர்மானிக்கிறேன்.
நோக்கம் மனதில்தான் உள்ளது.
கத்தோலிக்க திருச்சபைதான் நான் நிறுவிய ஒரே திருச்சபை.
அதை 'அறியாமல்' வெளியே உள்ளவர்களுக்குக் கூட
இரட்சண்யம் கத்தோலிக்க திருச்சபையில் இருந்துதான் செல்லவேண்டும்.
நீ கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் மனம் திரும்புவார்கள்."
"நன்றி அப்பா.
புரியாதவர்களுக்கு புரியவைக்க என்னால் முடிந்த அளவு முயற்சி செய்கிறேன்.
ஆனால் புரிய வைக்க வேண்டியது நீங்கள்தான்.
உங்களால்தான் எல்லா முடியும்."
லூர்து செல்வம்.
.
No comments:
Post a Comment