Saturday, January 25, 2020

"நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கேற்ற வாழ்க்கை நடத்துங்கள்."(எபேசி: 4:1)

"நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கேற்ற வாழ்க்கை நடத்துங்கள்."
(எபேசி: 4:1)
*****      *****     *****      *****
சிறுவர்களாய் இருந்தபோது தெருவில் மணலால் வீடு கட்டி விளையாடியிருக்கிறோம்.

 விளையாடி முடிந்தவுடன் கையால் கட்டிய  வீட்டைக் காலால்  அழித்துவிட்டு நம் வீட்டிற்கு சென்றிருக்கிறோம்.

பொம்மைகள் வாங்கி விளையாடியிருக்கிறோம்.

ஆனால் கடவுள் நம்மை விளையாட்டுப் பொருள்களாக படைக்கவில்லை.

 நேரம் போவற்காக விளையாடிவிட்டு அழித்து விடுவதற்காக நம்மைப்
 படைக்கவில்லை.

அம்மா நம்மை விளையாடுவதற்காகவா பெற்றார்கள்?

அவர்கள்  நம்மோடு விளையாடியிருக்கலாம். ஆனால்  நம்மை விளையாடுவதற்காகப் பெறவில்லை.

யாராவது நம்மிடம் ஏதாவது கேள்வி கேட்டு அதற்கு உரிய பதில் சொல்ல விரும்பாவிட்டால் 

அதற்குரிய பொதுவான
 பதில் ஒன்றை தயாராக வைத்திருக்கிறோம். . 

"தூரமா போகிறீர்கள்?"

"சும்மா. பக்கத்திலே தான்."

"என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்?"

"சும்மா இருக்கிறேன்,"

"என்ன இந்த பக்கம்?''

''சும்மாதான் வந்தேன்." 

இதே மாதிரி கடவுளிடம்,

 "ஏன் ஆண்டவரே, என்னைப் படைத்தீர்கள்?"

 என்று கேட்டால், அவர் 

"சும்மாதான் படைத்தேன்." 

என்று சொல்ல மாட்டார்.


எல்லாவற்றிற்கும் ஆதி காரணரான  அவர் எதைச் செய்தாலும் 

அதற்கு ஒரு காரணமும் இருக்கும், நோக்கமும் இருக்கும்.

ஒரு சிறு கொசுவைக் கூட அவர் காரணமும், நோக்கமும் இன்றி படைத்திருக்க மாட்டார்.

அவர் நம்மை படைத்ததற்குக் காரணம் அவர் நம்மீது கொண்டுள்ள மட்டில்லா அன்பு.

நோக்கம் அவரோடு நித்திய காலமும் பேரின்பத்தில் இணைந்து வாழ்வதற்காக.

படைப்பிற்கும், முடிவில்லா பேரின்ப வாழ்விற்கும் இடையில் 

துவக்கமும் முடிவும் உள்ள இவ்வுலக வாழ்க்கை ஒன்றை நமக்குத்  தந்திருக்கிறார்.

இவ்வுலக வாழ்க்கைக்கும் ஒரு நோக்கம் உண்டு.

அவர் நமக்கு தந்திருக்கும் கடமைகளைத் திறம்பட செய்து 

நம்மை முடிவற்ற நிலை வாழ்விற்குத் தயாரிப்பதே அந்த நோக்கம். 

கோடானுகோடிப் பேர் படைக்கப் பட்டிருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை ஒன்று.

எல்லோருக்கும் பொதுவான கடமை அன்பு செய்வது.

அதுபோக தனிப்பட்டோர் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கடமை உண்டு.

இக்கடமையை அழைத்தல் என்போம்.

அரசன் முதல் ஆண்டி வரைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு அழைத்தல் உண்டு.

இந்த அழைத்தல் தேவனிடமிருந்து வருவதால்

 இதைத் 'தேவ அழைத்தல்' என்போம்.

நாம் குருத்துவத்திற்கும், கன்னிமை வாழ்விற்கும் அழைக்கப்படும் அழைப்பைத்தான் 'தேவ அழைத்தல்' என்று சொல்லி கொண்டிருக்கிறோம்.

ஆனால் நம் எல்லோருக்கும் தேவ அழைத்தல் உண்டு.

அதனால்தான் புனித சின்னப்பர் நம்மைப் போன்ற சாதாரண விசுவாசிகளை நோக்கி கூறுகிறார்,

"நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கேற்ற வாழ்க்கை நடத்துங்கள்."

அதாவது அவரவர் அவரவருக்கு கிடைத்த அழைப்பிற்கு ஏற்றபடி வாழ்க்கை நடத்த வேண்டும்.

கல்வி கற்பதற்காக அழைக்கப்பட்டோர் ஒழுங்காக கல்வி கற்க வேண்டும்.

திருமண வாழ்வுக்காக அழைக்கப்பட்டோர் தங்களது திருமண வாழ்க்கையை இறைவன் சித்தப்படி ஒழுங்காக வாழ வேண்டும். 

குழந்தைகளைப் பெற்று,

 அவர்களை இறை அன்பிலும், பிறர் அன்பிலும் வளர்த்து

 நல்ல கிறிஸ்தவப் பணி வாழ்விற்கு அவர்களை தயாரிக்க வேண்டியது

அவர்களின் கடமை.    

குருத்துவ வாழ்விற்காக அழைக்கப்பட்டோர் குருத்துவத்திற்கான பணிகளை அர்ப்பண  உணர்வோடு நிறைவேற்றவேண்டும்.

எல்லா விசுவாசிகளுக்கும் பொதுவான பணி இறைவனையும் பிறரையும் அன்பு செய்து வாழ்வதும்,

இறைவனது நற்செய்தியை அறிவித்தலும் ஆகும்.

நற்செய்தியை அறிவிக்கும் பணி அப்போஸ்தலர்களுக்கு  மட்டும் கொடுக்கப்பட்டது அல்ல.

எவ்வாறு நம் ஆண்டவராகிய இயேசு தனது அன்னையை அருளப்பர் வழியாக நம் அனைவருக்கும் அன்னையாக தந்தாரோ 

அதேபோல நற்செய்தியை அறிவிக்கும் பணியை அப்போஸ்தலர்கள்  வழியாக அவருடைய சீடர்களாகிய நம் அனைவருக்கும் தந்திருக்கிறார். 

நமக்கு இயல்பான குணம் ஒன்று உண்டு.

நமக்குத் தெரிந்த செய்தியை அருகில் உள்ளவர்களோடு பகிர்ந்து கொள்வது நமக்கு இயல்பாய் உள்ள குணம். 

பெண்களுக்கு இந்த குணம் நிறையவே உண்டு.

ஆகையினால்தான் சிலர் வேடிக்கையாக பெண்களை 'நடமாடும் ரேடியோ ஸ்டேஷன்' என்று சொல்வார்கள்.

உண்மையில் நம் அனைவருக்கும்  அந்த பட்டப்பெயர் பொருந்தும். 

ஆனால் நமக்கு இன்னொரு சுபாவமும் உண்டு.

நாம் அனைவருமே நல்ல செய்திகளை விட விரும்பத்தகாத செய்திகளை பரப்புவதில் கில்லாடிகள். 

இந்த கில்லாடித்தனத்தை நற்செய்தியைப் பரப்புவதில் காண்பிப்போம்.

நமக்குக் கிடைக்கும் நல்ல செய்திகளை மட்டும் பரப்பினால் மக்களிடையே ஒற்றுமை வளரும்.

இயேசுவின் நற்செய்தியை பரப்பினால்  விண்ணகம் நிறைவடையும்.

திருமணம் ஆனவர்களுக்கு ஒரு மிக முக்கியமான கடமை உண்டு.

ஒரு கனியில் இருந்து மரத்தின் தன்மையை அறிந்து கொள்ளலாம் என்பார்கள்.  

'நூலைப் போல் சேலை
தாயைப்போல் பிள்ளை' என்பது தமிழ்ப் பழமொழி.

பிள்ளைகளின் குணத்திலிருந்து பெற்றோரின் குணத்தை அறிந்து கொள்ளலாம்.

பெற்றோரின் வளர்ப்பிற்கு ஏற்ப பிள்ளைகளின் குணமும் இருக்கும்.

ஆகவே பிள்ளைகளைக் குறை சொல்வதற்குப் பதிலாக பெற்றோர் தங்களைத் தாங்களே ஆய்வு செய்ய வேண்டும்.

வீட்டை  ஆள்கின்றவர்களும் சரி,

நாட்டை ஆள்கின்றவர்களும் சரி,

திருச்சபையை ஆள்கின்றவர்களும் சரி 

எல்லோரும் பெற்றோரால் வளர்க்கப்பட்டவர்களே.

அப்படிப் பார்த்தால் குருத்துவ அழைப்பை விட திருமண அழைப்பே மிக பொறுப்பு வாய்ந்தது.

ஒரு கர்தினால் (பெயர் ஞாபகமில்லை) பாப்பரசராகத் தெரிவு செய்யப்பட்ட பின் பாப்பரசரின் பட்டமளிப்பு விழாவிற்கு தன் பெற்றோரையும் அழைத்திருந்தார். 

பட்டமளிப்பு முடிந்தபின் நடந்த விழாவின்போது பாப்பரசர் தன் மோதிரக் கையை உயர்த்தி தன் பெற்றோரிடம் காண்பித்தாராம்.

உடனே அவர்கள் இருவரும் தங்கள் கைகளை உயர்த்தி திருமண மோதிரங்களைக் காண்பித்தார்களாம்.

"இம்மோதிரங்கள் இல்லாவிட்டால் அம்மோதிரம் இல்லை" 

என்பது அதன் பொருள்!

நாற்றங்காலில் நாற்று நன்றாக இருந்தால்தான் நடப்படும் நாற்று 

நன்கு தனிர்த்து,

நன்கு வளர்ந்து, 

நன்கு பலன் தரும்.

நாற்றங்கால் மோசமாக இருந்தால் அறுவடையும் மோசம்தான்.

குடும்பம் ஒரு நாற்றங்கால் நாற்றுப்பாவி வளர்ப்பவர்கள் பெற்றோர். 
'
அங்கிருந்து பரிக்கப்பட்ட நாற்றுகளில் சில ஆசிரியர் பணிக்குச் செல்லும்,

 சில அரசாங்க வேலைக்கு செல்லும்.

 சில சமூகப்பணிக்குச் செல்லும்.

சில அரசியல்வாதிகளாக மாறும்,

சில சட்டசபைக்கு செல்லும்,

 சில மந்திரி சபைக்குச் செல்லும்,

சில குருத்துவ பணிக்குச்  செல்லும்.

ஆக அடி மட்டத்திலிருந்து உச்சிவரை 

உலக வாழ்க்கைக்கும் சரி,

 ஆன்மிக வாழ்க்கைக்கும் சரி

 மக்களைத் தயாரிப்பது குடும்பம் என்ற அமைப்புதான். 

குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தத்தான்  

நமது ஆண்டவராகிய இயேசு தமது 33 வருட உலக  வாழ்க்கையில்

 முப்பது ஆண்டுகளை திருக் குடும்பத்தில் செலவழித்தார். 

அவர் கடவுள்,

 பயிற்சி ஒன்றும் தேவை இல்லை, 

ஆனாலும் நமக்கு உண்மையை உணர்த்துவதற்காக 

தன்னைத் தானே தாழ்த்தி

 தனது தாய்க்கும் வளர்த்த தந்தைக்கும் 

30 ஆண்டுகள் கீழ்ப்படிந்து நடந்தார்.


குடும்பம் அவ்வளவு முக்கியம்.

ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால்: 

வேலைக்கு போகின்றவர்கள் குறைந்தது 12 ஆண்டு படிப்பு + அந்தந்த வேலைக்குரிய பயிற்சியும் பெற வேண்டி இருக்கிறது.

குருக்களாக விரும்புவோர் குறைந்தது பதினாறு ஆண்டுகள் பள்ளியிலும் கல்லூரியிலும்  படித்துவிட்டு,

குரு மடத்தில் குறைந்தது 14 ஆண்டுகள் படிக்க வேண்டியுள்ளது. 

ஆனால் இவர்களுக்கு அடிப்படை போடும் பெற்றோர்களுக்கு எந்தவிதமான நேரடிப்  பயிற்சியும் கிடையாது.

புதுமணத் தம்பதிகள் ஒரு சில நாட்கள் வகுப்பிற்கு சென்று விட்டு ஒரு சர்டிபிகேட் வாங்கிவிட்டு வந்தால் திருமணத்திற்கு ரெடி!

பெற்றோர் தங்களை தாங்களே ஆன்மீக வாழ்வில் வளர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

ஆண்டிற்கு ஒருமுறையாவது refresher Course ஆவது கொடுத்தால் நல்லது. 

அதுவும் அவர்கள் வளர்த்து  விட்ட  குரு பிள்ளைகள் நான் கொடுக்க வேண்டியிருக்கும்!

எது எப்படி இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் சுய பொறுப்பு ஒன்று உண்டு.

நான் எப்படி வளர்ந்தாலும் வளராவிட்டாலும் கணக்கு கொடுக்க வேண்டியது கடவுள் ஒருவருக்குத்தான்.

ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் ஒரு அழைப்பு இருக்கிறது.

அந்த அழைப்பின்படி ஒவ்வொருவருக்கும்  கொடுக்கப் பட்டிருக்கும் அந்தஸ்தின் கடமைகளை  

இறைவனின் மகிமைக்காக சரிவர  நிறைவேற்ற வேண்டும்.

அனைவரும் அவரவர் கடமைகளை ஒழுங்காகச் செய்தால் உலகத்தில் பிரச்சினை எதுவும் வராது. 

நமது முகம் நமக்கு நமக்குத் தெரிவதில்லை.

நமது குறைகளும் நமக்கு தெரிவதில்லை. ஆனால் மற்றவர்களுக்கு தெரியும்.

பொறுப்பில் உள்ளவர்கள் நமது குறைகளைச் சுட்டிக் காண்பிக்கும்போது நல்ல மனதுடன் அவற்றை திருத்திக் கொள்ள வேண்டும். 

ஞானஸ்நானம் பெற்ற சிறு குழந்தையிலிருந்து

 பரிசுத்தபாப்பரசர் வரை  

அனைவரும் அவரவர் அழைப்பிற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் என்பதே நம் ஆண்டவருடைய ஆசை.

லூர்து செல்வம்.  

No comments:

Post a Comment