இறைவன் என்னோடு இருக்கும்போது யாருக்கு நான் அஞ்ச வேண்டும்?
***** ***** ***** *****
தாயின் கையில் இருக்கும் குழந்தை யாருக்கும் அஞ்சாது.
குழந்தைக்கு தன்மேல் உள்ள நம்பிக்கையை விட தாயின் மேல் நம்பிக்கை அதிகம்.
சர்வ வல்லப கடவுளின் கையில் இருக்கும் நாம் யாருக்கு அஞ்ச வேண்டும்?
சூரிய ஒளியே படாத இடங்கள் இருக்கின்றன.
காற்றே இல்லாத இடங்கள் இருக்கின்றன.
ஆனால் கடவுளே இல்லாத இடம் எதுவும் இல்லை.
நாம் எங்கே இருந்தாலும் கடவுளுக்குள்தான் இருக்கிறோம்.
கடவுள் நமக்குள்ளும் இருக்கிறார்.
கடலுக்குள் வாழும் மீன் அங்கே இருக்கு மட்டும் பாதுகாப்பாய் இருக்கிறது.
கடலுக்கு வெளியே வந்துவிட்டால் மரணம் அடைகிறது.
ஆனால் மனிதன் கடவுளை விட்டு வெளியே வரவே முடியாது.
பிறப்போ இறப்போ நம்மை கடவுளை விட்டு பிரிக்க முடியாது.
ஏனெனில் அவர் இவ்வுலகிலும் இருக்கிறார்,
மறுவுலகிலும் இருக்கிறார்.
நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று தான்.
எப்பொழுதும் கடவுளின் பிரசன்னத்தில் வாழ வேண்டும்.
அதாவது கடவுள் எப்போதும் நம்முடனே இருக்கிறார் என்ற
அசைக்கமுடியாத உணர்வுடன் எப்போதும் வாழவேண்டும்.
கடவுளின் பிரசன்னத்தில் வாழாவிட்டால்
நம்மை நாமே கடவுளிடமிருந்து பிரித்து வைத்துக் கொள்கிறோம்.
இறைப்பிரசன்னத்தில் வாழும்போது நாம் இறைவனுடனே அவருடைய அரவணைப்பில் வாழ்கிறோம்
நாம் நமது அன்புக்கு உரியவர்களோடு இருந்தால் அமைதியாக இருப்போமா?
நாமும் அவர்களோடு பேசுவோம், அவர்களையும் நம்மோடு பேச விடுவோம்.
அவர்களோடு உரையாடுவோம்.
அன்பர்கள் இருவர் அருகருகே அமர்ந்துவிட்டால் அகில உலகமே அவர்களின் நாவிற்குள் வந்துவிடும்.
கடவுளே நம் அருகில் இருக்கும்போது நாம் சும்மா இருக்கலாமா?
சதா அவரை நினைக்க வேண்டும்,
அவரோடு உரையாட வேண்டும்.
உரையாடும்போது நாம் இயேசுவுடன் பேசவேண்டும்.
அவரை நம்மோடு பேச விடவேண்டும்.
அவரது குரலுக்கு செவி சாய்க்க வேண்டும்.
அவரோடு நாம் பேசுவதை விட அவர் பேசுவதை நாம் கேட்பது முக்கியம்.
மனிதனுக்கு இயல்பாகவே ஒரு சுபாவம் உண்டு.
சிறு வயதிலிருந்து நாம் அதை வெளிப் படுத்திக் கொண்டே இருக்கிறோம்.
தந்தையோடு வெளியே சென்றுவிட்டால், அதுவும் கடைத் தெருவிற்கு சென்றுவிட்டால்
எதையாவது வாங்கித் தரச்சொல்லி நச்சரித்துக் கொண்டே இருப்போம்.
அந்த பொருள் நமக்குப் பயன்படுகிறதோ இல்லையோ கண்ணால் பார்த்ததை அப்பா வாங்கித் தர வேண்டும்.
சிறு பிள்ளைகள் கூட தங்கள் வீட்டிற்கு யாராவது உறவினர்கள் வந்துவிட்டால்
அவர்களிடமிருந்து எதையாவது எதிர்பார்ப்பது அவர்களது சுபாவம் ஆகிவிட்டது.
அது நமது இயல்பாக இருப்பதால் இறைவனோடு நாம் பேசும்போதும் அதையே செய்கிறோம்.
"ஆண்டவரே, நன்கு படிப்பதற்கு அறிவை கொடுங்கள்.
படிக்க உதவி செய்யுங்கள்.
நன்கு தேர்வு எழுத உதவுங்கள்.
நல்ல மார்க் வாங்கி தாருங்கள்.
உயர் படிப்பிற்கு இடம் வாங்கி தாருங்கள்.
படித்து முடித்துவிட்டேன்.
நல்ல சம்பளத்தோடு வேலை வாங்கி தாருங்கள்......"
விண்ணப்பங்கள் விடாது தொடர்ந்து கொண்டே இருக்கும்.
விண்ணப்பங்களை கொடுப்பது மட்டுமல்ல,
அவற்றை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று மல்லுக்கு நிற்போம்.
ஆனால் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதை விட
இறைவன் பேசுவதை கேட்பதுதான் மிக முக்கியம்.
ஒரு அம்மா தன் குழந்தையை L.K.G.யில admission போட்ட பின்,
"Teacher.சொல்றத கவனமா கேள். முதலில் கேட்பதுதான் முக்கியம். அப்புறம்தான் மனதில் வைப்பது."
குழந்தை மாலையில் வீட்டுக்கு வந்ததும் தாயிடம் டீச்சரைப் பற்றி குறை சொல்ல ஆரம்பித்தாள்.
" அம்மா நீங்க சொன்னபடி செய்தேன் பதிலுக்கு திட்டுதான் கிடைத்தது."
"என்னடி செய்த ?"
"Teacher சொல்றத கவனமா கேள்னு நீங்கதான சொன்னிங்க?"
"ஆமா. அதுக்கு என்ன?"
"நானும் கேட்டேன், திட்டுதான் கிடைத்தது."
"டீச்சர் என்ன சொன்னாங்க? நீ என்ன கேட்ட?"
"டீச்சர் A for Apple ன்னு சொன்னாங்க.
நான் 'எனக்கு ஒரு Apple தாங்கன்னு' கேட்டேன்.
டீச்சர் கோபமாக Sit downன்னு சொல்லிட்டாங்க.
எனக்கு அழுகை அழுகையா வந்தது."
அம்மாவுக்கு சிரிப்பு வந்தது.
இக்கதையில் எல். கே .ஜி குழந்தை தான் கற்கவேண்டிய கல்வியை மறந்துவிட்டு
அதில் வரக்கூடிய பழத்தைக் கேட்கிறது.
நாமும் அதேபோல்தான் எதற்காக உலகில் பிறந்தோம் என்பதை மறந்துவிட்டு
உலகில் உள்ள லௌகீக பொருள்கள் மீது ஆசைப்பட்டு அவற்றை மட்டுமே கேட்கிறோம்.
ஆம் உலகில் பிறந்தது ஆன்மீக வாழ்வு வாழ்வதற்காகவே.
லௌகீக வாழ்வு வாழ்வதற்காக அல்ல.
இவ்வுலக பொருள்கள் நமது நமது ஆன்மீக வாழ்விற்காகப் பயன்படுவதற்காகவே படைக்கப்பட்டுள்ளன,
அவற்றை மட்டும் அனுபவிப்பதற்காக அல்ல.
இதை உணர்ந்தால் நாம் இறைவனோடு பேசும்போது நமது ஆன்மீக நலன் பற்றியே பேசுவோம்.
இவ்வுலகத்தை ஆன்மீகத்திற்கு எப்படிப் பயன்படுத்துவது என்று ஆண்டவரிடம் ஆலோசனை கேட்போம்.
திருமண விழாவிற்கான திட்டம் வகுக்கும்போது விழா சம்பந்தப்பட்ட பொருள்களை வாங்குவது, உபயோகிப்பது பற்றி பேசுவோம்.
அதாவது பொருட்களை விழாவிற்காக வாங்குவது பற்றி,
விழாவைப் பொருட்களுக்காக கொண்டாடுவது பற்றி அல்ல.
அதேபோல்தான் கடவுளோடு பேசும்போது இவ்வுலக வாழ்க்கையை அவருக்காக எப்படி வாழ்வது பற்றிய ஆலோசனையை கேட்போம்.
அதாவது நமது உரையாடல் இறைவனை மையமாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர நம்மையே மையமாக கொண்டிருக்க கூடாது.
உலகப் பொருட்களைக் கேட்பதற்குப் பதிலாக
அப்பொருட்களை எவ்வாறு இறைவனுக்கு உகந்த விதமாய் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி இறைவனிடம் கேட்போம்.
இறைவனும் நமக்குப் பதில் கூறுவார்.
இறைவன் கூறுவதை உற்றுக் கேட்போம்.
நாம் அவரிடம் கூறியதை விட அவ நம்மிடம் கூறுவதுதான் மிக முக்கியம்.
ஆகவே நமது உரையாடல் இறைவனிடம் வாயால் கேட்பதை விட காதால் கேட்பதையே மையமாக கொண்டிருக்க வேண்டும்.
our conversation with God must be God centred, not self centered.
நாம் இறைவன் சொல்வதைக் காதால் கேட்டு கருத்தில் பதிக்க வேண்டும்.
கருத்தில் பதித்ததை வாழ்விற்குள் கொண்டு வர வேண்டும்.
இயேசுவோடு உறவாடும் போது
வெறுமனே விண்ணப்பங்களை மட்டும் கொடுத்துக் கொண்டு இருக்காமல்
நமது அன்பை அவருக்கு அடிக்கடி தெரிவிக்க வேண்டும். (I love you, Jesus.)
நாம் பெற்றுவரும் உதவிகளுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
இறைவனுக்குரிய ஆராதனையும் செலுத்த வேண்டும்.
நமது ஆன்மீக வாழ்வில் இவ்வுலக பொருள்களால் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதற்கான தீர்வை ஆண்டவரிடம் கேட்க வேண்டும்.
அவர் தரும் தீர்வைக் கவனிக்க வேண்டும்.
இவ்வாறு இறைவனோடு தொடர்பில் இருந்தால்
சாத்தானின் சோதனைகளுக்கு எதிரான இறைவனின் பாதுகாப்பு எப்போதும் இருக்கும்.
சாத்தானால் இறைவனுக்கும் நமக்கும் குறுக்கே பாய முடியாது.
நம்முள் பாய நாம் இறைவனை மறக்கும் நேரத்திற்காக காத்துக்கொண்டே இருப்பான்.
அதற்கு நாம் இடம் கொடுத்து விடக் கூடாது.
நாம் இறைவனோடு இருக்கும்போது
சாத்தானின் சோதனைகளுக்கோ,
உலகம் தரும் சோதனைகளுக்கோ,
நமது உடல் தரும் சோதனைகளுக்கோ நாம் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.
இறைவனையே நினைத்துக் கொண்டிருந்தால்
யாருக்கும் அஞ்சாமல் ஆன்மீகப் பயணத்தைத் தொடரலாம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment