Tuesday, January 28, 2020

நம் விலை என்ன?

நம் விலை என்ன?
*****      *****     *****      *****

நாம் ஒரு பொருளை வாங்க விரும்பும் முன்

அந்தப் பொருள் நமக்கு பயன்படக்கூடியதா,

அது கூறப்படும் விலைக்கு ஏற்றதா,

அது தரம் வாய்ந்ததா,

போன்ற பல வினாக்களுக்கு விடை காண்போம்.

நமது வினாக்களுக்கு ஆம் எந்த விடை கிடைத்தால் வாங்குவோம்,

இன்றேல்  விட்டுவிடுவோம்.

ஒருவரது நட்பிற்குள் நுழையும் முன் அவரது நட்பு நமக்கு பயன் தருமா

என்பதை முதலில் ஆலோசிப்போம்.

பயன் தரும் நட்பு என்றால் தொடர்வோம்,

இன்றேல் விட்டுவிடுவோம்.

கடவுள் நம்மை நித்திய காலமாக நேசிக்கிறாரே,

நம்மிடம் உள்ள எந்த தகுதியை பார்த்து?

நாம் யார் என்று நமக்கே தெரியாத காலத்திலிருந்தே கடவுள் நம்மை நேசிக்கிறார்.

அவர் நித்திய காலமாக நம்மை நேசித்துக் கொண்டு இருந்தபோது நாமே இல்லை.

இல்லாதவர்களாக இருந்த நம்மை வாழ்வுக்குள் கொண்டு வந்தவரே அவர்தான்.

நாமும் நமக்கு உள்ளவைகளும் அவருக்கே சொந்தம்.

எதுவுமே சொந்தமில்லாத நம்மை கடவுள் நேசிக்கிறார் என்றால்

அவர் நமது தகுதி கருதி நேசிக்கவில்லை.

பின் எது கருதி நம்மை நேசிக்கிறார்?

அவர் நேசிக்கிறார், ஏனென்றால் நேசிப்பது அவர் சுபாவம்.

It is His nature to love.

அவர் அன்பு மயமானவர்.

அன்பினால் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.

நம் மேல் அவருக்கு உள்ள அன்பு நிபந்தனை அற்றது.

He loves us unconditionally.

நமது முதல் பெற்றோரை பாவம் இன்றி பரிசுத்தர்களாய் படைத்தார்.

பரிசுத்தர்களாய் இருந்த நமது முதல் பெற்றோரை அவர் அளவில்லாத விதமாய் நேசித்தார்.

அவர்கள் பாவம் செய்து தங்கள் பரிசுத்தத்தை இழந்தார்கள். பாவிகளாய் மாறினார்கள்.

அப்பொழுதும் ஆண்டவர் அவர்களை நேசித்தார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

அவர்கள் பரிசுத்தர்கள் என்பதற்காக அவர்களை நேசிக்கவில்லை.

பாவிகள் என்பதற்காக தனது அன்பை விடவும் இல்லை.

தனது படைப்புகள் ஆகிய அவர்களை நேசிக்க வேண்டும் என்பதற்காகத்தான்  நேசித்தார்,

வேறு காரணம் எதுவும் இல்லை.

அவரது அன்பிற்குக் காரணம் அவரது அன்பு தவிர வேறு எதுவும் இல்லை.

தீக்குள் கைவிட்டால் சுடுகிறது. ஏன்?

ஏனென்றால், அது தீ.

சுடுவது அதன் சுபாவம்.

நாம் பாவிகளாகப் பிறந்தோம்,

பாவிகளாக  வளர்ந்தோம்,

பாவிகளாக இருக்கிறோம்.

ஆனாலும் கடவுள்

எந்தவிதமான மாற்றமும் இன்றி

நம்மை நேசிக்கிறார்.

கடவுள்  நல்லவர்களையும் நேசிக்கிறார்,

கெட்டவர்களையும் நேசிக்கிறார்,

ஆத்திகர்களையும்  நேசிக்கிறார்,

நாத்திகர்களையும் நேசிக்கிறார்.

கடவுளது நிபந்தனை அற்ற  அன்பைப் புரிந்துகொண்டால் நாமும் அவரை நிபந்தனை  இன்றி நேசிப்போம்.

அதாவது கடவுளை கடவுள் என்பதற்காகவே நேசிப்போம்.

அன்பை அன்பு என்பதற்காகவே நாம் அன்பு செய்வோம்.

நம்மைப் படைத்ததற்காக அல்ல,

நம்மைக் காப்பாற்றிக்  கொண்டிருப்பதற்காக  அல்ல,

நமக்கு விண்ணகத்தைத்  தருவார் என்பதற்காக அல்ல,

அவர் அன்பு என்பதற்காக அவரை அன்பு செய்வோம்.

அன்பு அன்பை ஈர்க்கும்.

கடவுள் நம்மை நேசிப்பது மட்டுமல்ல நம்மை நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்கிறார்.

இதை ஊதாரிப்  பிள்ளையின் உவமை நன்கு புரிய வைக்கும்.

இளைய மைந்தன் தந்தையின் சொத்துக்களில் பங்கு கேட்டபோது ஏன் எதற்கு என்று கேட்காமல் அவனது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டார்.

அவன் சொத்துக்களை எல்லாம் வீணடித்து விட்டு திரும்பி வந்த போதும்

அவனுக்கு எந்த நிபந்தனையும் விதிக்காமல் அவனை  அப்படியே ஏற்றுக்கொண்டார்.

நம்மை முழுமையான சுதந்திரத்தோடு படைத்தார்.

ஆகவே நாம் அவருக்கு விரோதமாக பாவம் செய்தபோதும் அவர் குறுக்கே வரவில்லை.

நாம் மனம் வருந்தி அவரிடம் திரும்பி வரும்போதும் நம்மை முழுமையாக ஏற்றுக்கொள்கிறார்.

நாம் எவ்வளவு பெரிய பாவம் செய்தாலும், எத்தனை முறை செய்தாலும் முழு நம்பிக்கையுடன் ஆண்டவரிடம் திரும்பி வரலாம்.

அவர் நம்மை ஏற்றுக் கொள்வார். 

ஒருவன் வாழ்நாள் எல்லாம் பாவியாக வாழ்ந்துவிட்டு

கடைசி வினாடியில்

"தந்தையே மன்னியும்"

என்று கேட்டால்

கடவுள் மன்னித்து ஏற்றுக் கொள்கிறார்.

அவரது மன்னிப்பிற்கு அளவே கிடையாது.

ஒரு முறை அல்ல, ஓராயிரம் முறை நாம் பாவம் செய்தாலும் மன்னிப்பு கேட்கும்போதெல்லாம் மன்னிக்கிறார்.

வெட்கப்படாமல் பாவம் செய்தவர்கள் கடவுளிடம் திரும்பி வரவும் வெட்கப்பட வேண்டாம்.

பாவம் செய்வது நமது சுபாவம் என்றால் மன்னிப்பது அவர் சுபாவம்.

To err is human.
To forgive is divine.

நமக்கு விரோதமாக மற்றவர்கள் குற்றம் செய்தால் அவர்களை நாமும் நிபந்தனையின்றி மன்னிக்க வேண்டும்.

இலவசமாக பெற்றுக்கொண்டதை இலவசமாக கொடுப்போம்.

நமக்கு மன்னிப்பு இலவசமாக கிடைக்கிறது,

நாமும் அதை மற்றவர்களுக்கு அப்படியே கொடுப்போம்.

நாம் உலகில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மதிப்பீடு (value) வைத்திருக்கிறோம்.

உலகத்தின் பொருள்களுக்கு தன்னிலே எந்த மதிப்பீடும் கிடையாது.

தேவைதான் (demand) அதன்
value வைத் தீர்மானிக்கிறது.

விலை உயர்ந்ததாக கருதப்படும் தங்கத்தை யாருமே விரும்பாவிட்டால் அது மதிப்பு அற்றதாக மாறிவிடும்.

யாருமே வெங்காயத்தை வாங்காவிட்டால் அதன் விலை சரிந்துவிடும்.

நாம் எந்த பொருள் மீது ஆசை வைக்கிறோமோ, அந்த பொருளுக்கு நமது ஆசையின் அளவின் அடிப்படையில் விலையும் இருக்கும்.

நமது விலை என்ன? அதாவது நமது value என்ன?

களிமண்ணால் ஆன உடலையும், பாவத்தால் நிறைந்த ஆன்மாவையும் கொண்ட நமக்கு என்ன மதிப்பு இருக்க முடியும்?

Weight அடிப்படையில் நமக்கு விலை போட்டால், ஒரு கொழுத்த பன்றிக்குக் கிடைக்கும் விலை நமக்குக் கிடைக்காது.

தேவை அடிப்படையில் போட்டாலும் தண்ணீருக்கு உள்ள விலை நமக்குக் கிடைக்காது.

ஆனாலும் நாம் விலை மதிப்பற்றவர்கள்.

எப்படி?

களிமண்ணில் இருந்து நமக்கு உருக் கொடுத்தவர் சர்வ வல்லப கடவுள்.

நமக்குள் இருப்பது அவர் ஊதிய உயிர் மூச்சு.

நாம் பெற்றிருப்பது அவரது சாயல்.

ஆனால் நாம் செய்த பாவத்தினால் நமது மதிப்பை  முழுவதுமாக இழந்தோம்.

இறைவனின் பிள்ளைகளாக இருந்த நாம் சாத்தானின் பிள்ளைகளாக மாறினோம்.

நமக்காக எப்பொழுதும் திறந்தே இருந்த மோட்ச வாசலை நாமே இழுத்து மூடினோம்.

ஆனால் நம்மை படைத்தவர் நம்மை கைவிடவில்லை.

தானே மனிதனாய் பிறந்து,

தமது விலை மதிப்பு இல்லாத ரத்தத்தைச் சிந்தி, 

சிலுவை மரத்தில் உயிரைக் கொடுத்து,

தன்னையே பலியாக்கி

தன்னையே விலையாகக் கொடுத்து நம்மை சாத்தானின் பிடியிலிருந்து மீட்டார்.

திரும்பவும் சொல்லுகிறேன் 

தன்னையே விலையாகக் கொடுத்து நம்மை மீட்டார்.

கொடுக்கப்படுகிற விலைதான் வாங்கப் படுகிற பொருளின் மதிப்பு.

இயேசு தன்னையே விலையாகக் கொடுத்து நம்மை வாங்கியதால்

நம்மை அவர் அளவிற்கு உயர்த்தி இருக்கிறார்.

அதனால் தான் நமக்கு அவரது தந்தையை

"விண்ணகத்தில் உள்ள எங்கள் தந்தையே"

என்று அழைக்க அனுமதி கொடுத்தார்.

இயேசு தந்தை இறைவனின் மகன்.

நாமும் தந்தை இறைவனின் மக்கள்.

இறைவன் அரசர் என்றால் நாம் அனைவரும் இளவரசர்கள்.

றை அரசுக்கு உரிமையாளர்கள்.

நமது மதிப்பை  உணர்ந்து அதற்கு எந்தவித பங்கமும் ஏற்படாத வண்ணம் நாம் நடந்து கொள்ள வேண்டும். 

நம்மைப் பார்ப்பவர்கள் நமது நடை, உடை, பாவனையைக் கொண்டு

நாம் இறையரசின் இளவரசர்கள் என்பதைப்  புரிந்து கொள்ள வேண்டும்.

நமது நடை, உடை, பாவனையே விண்ணரசையும்
இயேசுவின் செய்தியையும் உலகிற்கு அறிவிக்க வேண்டும்.

நாம் நடமாடும் பைபிள்களாக மாற வேண்டும்.

நம்மைப் பார்ப்போர் நம்மில்  இறை வார்த்தையை வாசித்து அதன்படி நடக்க வேண்டும்.

அதாவது நாம் இறைவார்த்தையை வாழ வேண்டும்.

அதாவது நாம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக,

இறைவார்த்தையின் படி நடக்க வேண்டும்.

உம் வார்த்தையை எம் வாழ்வாக்க வரம் அருளும் இறைவா!

லூர்து செல்வம்.


No comments:

Post a Comment