Tuesday, January 7, 2020

"நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்"(மாற்கு, 6:37)

"நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்"
(மாற்கு, 6:37)
********    **********     *******
இயேசு அன்று தனது சீடர்களை நோக்கிக் கூறிய இதே வார்த்தைகளை இன்று நம்மை நோக்கியும் கூறுகிறார்.

"நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்"

Charity begins at home என்று ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு.

நமது உடல்தான் நமது முதல் வீடு.

இறைவன் ஆதாமைப் படைக்கும்போது முதலில் உடலாகிய வீட்டைக் கட்டிய பின்புதான் அதற்குள் ஆன்மாவைக் குடியேற வைத்தார்.

"கடவுள் களிமண்ணால் மனிதனை உருவாக்கி, 

அவன் முகத்தில் உயிர் மூச்சை ஊதவே, மனிதன் உயிருள்ளவன் ஆனான்."

நாம் நமது தாய் வயிற்றில் உற்பவித்த நொடியிலிருந்தே இந்த வீட்டில்தான் நமது வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்.

நமது உடலாகிய வீட்டில் (home) பல உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு ஆர்வத்துடன் உதவி செய்து கொள்கிறார்கள் என்று நமக்குத் தெரியும்.

நமது வயிற்றுக்கு வேண்டிய உணவைத் தயாரிக்க எல்லா உறுப்புகளும் சேர்ந்தே உழைக்கின்றன. 

வயிறும் உண்ட ஜீரணித்து, சத்தை  எல்லா உறுப்புகளுக்கும் இரத்தத்தின் மூலம் அனுப்பி வைக்கிறது.

ஒவ்வொரு உடல் உறுப்பும் மற்ற உறுப்புகளுக்கு உதவி செய்வதில் போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றன.

இதிலிருந்து ஒன்று நன்றாக புரிகிறது.

இயல்பாகவே நம்மை நாமே மிகவும் அதிகமாக நேசிக்கிறோம்.

அதனால்தான் ஆண்டவர் ,

"உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் 

உன் அயலான்மீதும் அன்பு காட்டுவாயாக." என்றார்.

நாம் நம்மீது அன்பு காட்டுவது இயல்பு.

 அதேபோல நமது அயலான் மீதும் அன்பு காட்டுவதையும்

 நமது இயல்பாக மாற்றிக்கொள்ள வேண்டும்

 என்று ஆண்டவர் விரும்புகிறார்.

நம்மீது இயல்பாகவே அன்பு இருப்பதால்தான் 

நாம் நமக்கு வேண்டிய உதவிகளை 

நாமே, யாரும் சொல்லாமலேயே  செய்து கொள்கிறோம்.

அதுபோலவே நமது அயலானுக்கும் ஏதாவது தேவை ஏற்பட்டால்

 அவன் நம்மிடம் கேட்காமலேயே 

நாம் அவனது தேவையை நிறைவு செய்ய

நமக்கு ஆசை வரவேண்டும்.

பிறர் அன்பு இயல்பானதாக இருந்தால் 

பிறர் பணியும்  இயல்பானதாக வரும்.

நித்திய காலம் தொட்டே நம்மை நேசித்த இறைவன்

 நாம் கேட்காமலேயே நம்மைப் படைத்தது மல்லாமல் 

நமக்கு  தேவையானவற்றை   யெல்லாம் பூர்த்தி செய்து,

நம்மைப் பராமரித்துக் கொண்டே வருகிறார். 

 தன் போதனையைக் கேட்க வந்த மக்களின் பசியை அறிந்து,

 அவர்கள்   கேட்காமலேயே, அவர்களுக்கு உணவு வழங்க தன் சீடரிடம் கூறினார்.

ஒன்றும் இல்லாமையில் இருந்து நம்மை படைத்த கடவுளால்

 ஐந்து அப்பங்கள் இரண்டு மீன்களின் உதவியில்லாமலேயே

5000 பேருக்கு மட்டுமல்ல 

 உலகத்தினர் அனைவருக்கும் கூட உணவை ஊட்ட முடியும்.

  அவர் சர்வ வல்லவர்.

 ஆனாலும் பிறருக்கு உதவி செய்வதில் 

நமது பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காகவே

ஒரு பையனிடமிருந்து ஐந்து வாற்கோதுமை அப்பங்களையும்,  இரண்டு மீன்களையும் பெற்று

5000 பேருக்கு உணவூட்டினார்.

பிறர் பணியில் நமது பங்கின் முக்கியத்துவத்தை உணர்த்தவே இயேசு இவ்வாறு செய்தார்.

வீட்டில் நாம் தொடங்கிய பணி உலகெங்கும் பரவ வேண்டும் வேண்டும்.

Charity begun at home must spread everywhere.

பிறர் பணி இருவகை

 இரண்டும் ஒரு வகை.

பசித்தோர்க்கு உணவு அளித்தல்,

தாகமாய் இருப்போருக்கு தண்ணீர் கொடுத்தல், 

 ஆடை அற்றோர்க்கு ஆடை அணிவித்தல்,
 
 சுகம் இல்லாதவரைக்  கவனித்துக் கொள்ளுதல்,

 துன்பப்படுபவர்களுக்கு உதவுதல் 

போன்ற உடல் சார்ந்த பணிகள் இவ்வுலகை சார்ந்தவை. 


நற்செய்தி அறிவித்தல்,

 கோவில் காரியங்களுக்கு உதவுதல்,

 குருக்களுக்கு அவர்களுடைய ஞான பணியில் உதவியாய் இருத்தல்,

 தேவத்திரவிய அனுமானங்களைப்  பெற மற்றவர்களுக்கு உதவுதல், 

 இன்னும் இது போன்றவை ஆன்மீக பணிகள்.

இவ்வுலகு சம்பந்தப்பட்ட பணிகளையும்

 ஆண்டவருடைய அதிமிக மகிமைக்காகச் செய்தால்

 அவையும் ஆன்மீகப் பணிகளாக மாறிவிடுகின்றன.

இருவகைப் பணிகளும் ஒரு வகைப் பணிகள் தான்.

அதாவது ஆன்மீகப் பணிகள் தான்.

 இருவகைப் பணிகளையும் இயேசுவுக்காகவே செய்ய வேண்டும்.

 நமது திருப்திக்காகவோ, பெருமைக்காகவோ, புகழுக்காகவோ அவற்றைச் செய்தால் 

விண்ணுலகில் அவற்றிற்கு எந்த மதிப்பும் இல்லை.

ஆக நாம் இவ்வுலகில் செய்யவேண்டியது ஆன்மீகப்  பணிகளை மட்டும்தான்.

பெற்றோர் பிள்ளைகளுக்கு ஆற்றும் பணி கடவுளுக்கு செய்யும் பணி.

 ஏனெனில் பணி செய்ய அவர்களுக்குப் பிள்ளைகளைக் கொடுத்தவர் அவரே. 

அதுபோல பெற்றோருக்குப் பிள்ளைகள் ஆற்றும் பணியும் கடவுளுக்கு ஆற்றும் பணிதான்.  

ஏனெனில் யாருக்கு யார் பெற்றோர் என்று  தீர்மானிப்பது இறைவன் மட்டும்தான்.

உலகை  உடலாகவும் அதில் வாழ்வோர் அனைவரையும் உறுப்புகளாகவும் உருவகித்துக் கொண்டால் 

அதில் வாழ்வோர் அனைவரும்

 ஒருவருக்கொருவர் உதவி செய்வது இயல்பாகி விடும்.

 உடலின் உறுப்புக்கள் ஒன்றுகொன்று உதவுவது  இயல்பு.

கடவுள் நம்மைப் படைத்தது பணி செய்வதற்காக மட்டும்தான்.

 பணி செய்வோம்.

 பரமன் பதம் அடைவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment