''அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது" (அரு. 21:25)
********************************
ஒரு அப்பா தன் பையனை ஒரு பள்ளியில் ஆறாவது வகுப்பில் admission போட்டு விட்டு வீடு திரும்பினார்.
சாயங்காலம் வீட்டிற்குத் திரும்பிய பையன் அமைதியாக உட்கார்ந்து வீட்டுக் கணக்கு செய்து கொண்டிருந்தான்.
அப்பா,
"என்னடா செய்ற?"
"வீட்டுக் கணக்கு, அப்பா."
"இன்னும் புத்தகம் எதுவும் வாங்கவில்லையே,
வாத்தியார் கணக்கு எப்படி போட்டார்?"
."கணக்கு வாத்தியாருக்கு கணக்கு போடத் தெரியாதா, அப்பா?"
"அவர் போட்ட கணக்கு
கணக்குப் புத்தகத்தில் இருக்கிறதா?"
"நான் இன்னும் புத்தகமே வாங்கவில்லை, அப்பா."
"அப்போ ஒண்ணு செய்.
புத்தகம் வாங்கிய பிற்பாடு இந்த கணக்கு புத்தகத்ல இருக்கான்னு பாரு.
இருந்தா கணக்கு செய், இல்லாவிட்டால் செய்ய வேண்டாம்."
"வாத்தியார் போட்ட கணக்கு, அப்பா."
"யார் போட்ட கணக்கா இருந்தாலும் சரி,
புத்தகத்துல இருந்தா மட்டும் செய்.
அல்லது செய்ய வேண்டாம். நோட்டை மூடு."
ஐயோ பாவம், பையன்!
நம்மிடம் கோபித்துக்கொண்டு தனிக் குடித்தனம் போயிருக்கும் நம்முடைய உடன்பிறப்புகள்
நம்மீது உள்ள கோபத்தினால் நாம் ஏற்றுக் கொள்பவற்றை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.
கணக்கு வாத்தியார் மேல் கோபம் இருந்தால் கணக்கு பொய்யாகிவிடுமா?
நாம் பைபிளையும் பாரம்பரியத்தையும் ஏற்றுக் கொள்கிறோம்.
அவர்கள் பைபிளை மட்டும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
முதலில் பின்வரும் வசனங்களைப் பார்ப்போம்:
"அவர் கலிலேயா எங்கும் சுற்றி, அவர்களுடைய செபக்கூடங்களில் போதித்து, விண்ணரசைப்பற்றிய நற்செய்தியை அறிவித்து, மக்களிடையே எல்லா நோயையும் பிணியையும் குணமாக்கிவந்தார்."
(மத். 4:23)
''அவ்வாறே கலிலேயா எங்கும் அவர்களுடைய செபக்கூடங்களில் தூது அறிவித்தும், பேய்களை ஓட்டியும் வந்தார்."
(மாற்கு, 1:39)
"ஓய்வுநாளன்று செபக்கூடத்தில் போதிக்கத் தொடங்கினார். கேட்டவர் பலர் மலைத்துப்போய், "இதெல்லாம் இவருக்கு எங்கிருந்து வந்தது? என்னே இவர் பெற்ற ஞானம்! என்னே இவர் கையால் ஆகும் புதுமைகள்! "(மாற்கு 6:2)
"சுற்றிலுமுள்ள ஊர்களில் போதித்துக் கொண்டு வந்தார்." (மாற்கு 6:6)
"அவர்கள்மீது மனமிரங்கி நெடுநேரம் போதிக்கலானார்.
35 இதற்குள் நேரமாகிவிடவே" (மாற்கு 6:34,35)
"யூதர்களுடைய செபக்கூடங்களில் அவர் போதித்துவந்தார். யாவரும் அவரை மகிமைப்படுத்தினர்."
(லூக்.4:15)
"அங்கே மக்களுக்கு ஓய்வு நாளில் போதித்து வந்தார்."
(லூக் 4:31)
"அதன்படியே, கலிலேயாவின் செபக்கூடங்களில் தூது உரைத்துவந்தார்." (லூக். 4:44)
"பின்னர் கடவுளின் அரசைப்பற்றிய நற்செய்தியை அறிவித்துக்கொண்டே இயேசு ஊர் ஊராய்ச் செல்லலானார். பன்னிருவரும் அவருடன் சென்றனர்." (லூக்.8: 1)
"இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது என்று கருதுகிறேன்."
(அரு. 21:25)
இயேசு மூன்று ஆண்டுகள் நற்செய்தியை அறிவித்தார்.
அவர் அறிவித்த நற்செய்திகள் அனைத்தும் எழுதப்படவில்லை
என்பதற்கு மேற்கூறிய வசனங்களே சான்று.
எழுதப்பட்ட நற்செய்திகள் அனைத்தும் பைபிளில் உள்ளன.
எழுதப்படாதவை அவற்றைக் கேட்டவர்களின் மனதில் இருந்திருக்கும்.
எழுதப்பட்டவையும், எழுதப்படாதவையும் அவருடன் மூன்று ஆண்டுகள் போதனையின்போது அவருடன் இருந்த
அவருடைய அப்போஸ்தலர்களுக்கும், சீடர்களுக்கும் தெரியும்.
அப்போஸ்தலர்களுக்கு
உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிக்கும் பணியை ஆண்டவர் அளித்தார்.
அவர்களுள் மத்தேயுவும், அருளப்பரும் நற்செய்தி நூல்களை எழுதினார்கள்.
நற்செய்தி நூல்களை எழுதிய
மற்ற இருவரும் சீடர்கள்.
திரு மடல்களை எழுதியவர்கள் அப்போஸ்தலர்கள்.
அருளப்பரின் கூற்றுப்படி இயேசு செய்தவை யாவும் எழுதப்படவில்லை.
ஆனால் ஆண்டவர் போதித்தவை எல்லாம் அப்போஸ்தலர்களாலும், சீடர்களாலும் போதிக்கப்பட்டன.
அவர்களது வழி வந்தவர்களால் (successors ) தலைமுறை தலைமுறையாக வாய்மொழி போதனை மூலமாக பரிமாறப்பட்டன. (transferred)
இயேசுவிடமிருந்து அப்போஸ்தலர்களுக்கும்,
அவர்களிடமிருந்து ஆதி திருச்சபையினருக்கும்,
அவர்களிடமிருந்து பிற்காலத்
திருச்சபையினருக்கும்,
தொடர்ந்து நமக்கும் வந்த நற்செய்திகளில்
எழுதப்பட்டவையும் இருக்கின்றன,
எழுதப்படாதவையும் இருக்கின்றன.
ஆதித் திருச்சபையின் விசுவாச வாழ்க்கை இரண்டு வகை நற்செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டது.
எழுதப்பட்ட வார்த்தைகளுக்கான விளக்கம்
எழுதப்படாத வார்த்தைகளில் அடங்கியிருக்கலாம்.
இது ஆதித் திருச்சபையினருக்குத் தெரியும்.
இன்றைய நமது திருச்சபை வெறும் திருச்சபை அல்ல,
அப்போஸ்தலிக்க திருச்சபை.
அதாவது அப்போஸ்தலர் காலத்திலிருந்து தொடர்பு அறுபடாமல்
போதிப்பவர்களும் போதனைகளும் வந்திருக்கும் திருச்சபை.
போதிப்பவர்களில் திருச்சபையின் தலைவரும், ஆயர்களும், குருக்களும் அடங்குவர்.
அவர்களது போதனை அப்போஸ்தலர்கள் வழிவந்த இயேசுவின் போதனை.
இதில் புதிய ஏற்பாட்டில் எழுதப்பட்டவையும் அடங்கும்,
எழுதப்படாதவையும் அடங்கும்.
இரண்டுமே திருச்சபையின் பாரம்பரியத்தின் வழியாக நமக்கு வந்தவைதான்.
உண்மையான கிறிஸ்தவன் இயேசுவின் போதனைகள் அனைத்தையும்,
அதாவது
எழுதப்பட்டவற்றையும் எழுதப்படாதவற்றையும் நம்புகிறான்.
ஏனெனில் அவை ஆண்டவராகிய இயேசுவிடமிருந்து அவரால் அங்கீகரிக்கப்பட்ட போதனையாளர்கள் வழியாக நமக்கு வந்தவை.
குருவானவர் தன் பொறுப்பில் உள்ளவர்களுக்குப் போதிக்கும்போது,
விசுவாசி,
''சாமியார் சொல்லுவது பைபிளில் இருக்கிறதா?" என்று கேட்க மாட்டான்.
"அப்போஸ்தலர்கள் வழிவந்த போதனைத் தொகுப்பில் உள்ளதா?" என்று மட்டும் கேட்பான்.
ஏனெனில் அவனுக்குத் தெரியும்,
திருச்சபையின் போதனை பைபிளிலும், பாரம்பரியத்திலும் (Tradition) இருக்கிறது என்று.
"கிளையானது திராட்சைக் கொடியில் நிலைத்திருந்தாலன்றி, தானாகக் கனி தரமுடியாது."
(அரு.15:4)
என்ற பைபிள் வசனத்தை பிரிந்து சென்றவர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment