"அவரைப்பற்றிய பேச்சு கலிலேயா நாடெங்கும் பரவிற்று." (மாற்கு, 1:28)
********************************
"அவனோ சென்று நடந்ததைச் சொல்லி எங்கும் விளம்பரப்படுத்தினான். ''
(மாற்கு, 1:45).
"அவன் சென்று இயேசு தனக்குச் செய்ததெல்லாம் தெக்கப்போலி நாட்டில் அறிவிக்கத் தொடங்கினான். "
(மாற்கு,5:20).
" இதை ஒருவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். எவ்வளவுக்கு அவர் கட்டளையிட்டாரோ, அவ்வளவுக்கு அதிகமாய் அவர்கள் அதை விளம்பரப்படுத்தினர்."
(மாற்கு, 7:36).
"இச்செய்தி அந்நாடெங்கும் பரவிற்று." (மத்.9:26)
"அவர்களோ வெளியே போய் அவரைப்பற்றி நாடெங்கும் பேசலாயினர்." (மத்.9:31)
"அவரைப்பற்றிய பேச்சு இன்னும் மிகுதியாய்ப் பரவிற்று." (லூக்.5:15)
"அவரைப்பற்றிய பேச்சு யூதேயா முழுவதிலும் சுற்றுப்புறமெங்கும் பரவியது."
(லூக்.7:17)
"அவன் போய், தன்னைக் குணமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு
அறிவித்தான்." (அரு.5:15)
இயேசு மனிதனாகப் பிறந்தது நமது ஆன்மீக நோயாகிய பாவத்திலிருந்து மீட்கவே,
உடல் நோயைக் குணமாக்குவதற்காக அல்ல.
ஆயினும், ஆன்மீக மருந்தாகிய நற்செய்தியை அறிவிக்கும்போதே உடல் நோயையும் குணமாக்கினார்.
இது தேனோடு மருந்தை கலந்து நோயாளிக்குக் கொடுப்பது போல.
பாவத்தினால் வீழ்ச்சி அடைந்திருந்த மனிதனின் இயல்பு (fallen nature) இயேசுவுக்கு தெரியும்.
ஆன்மீக மருத்துவராகிய இயேசு ஆன்மீக நோயாளியாகிய மனிதனை ஆன்மீகத்தை நோக்கி கவர்வதற்காகவே
அவனுடைய உடல் நோயை முதலில் குணமாக்கினார்.
இயேசு மனிதரை நோயிலிருந்து மீட்பதை அறிந்த யூத மக்கள்
குணம் பெறுவதற்காக இயேசுவைத் தேடி வந்தார்கள்.
அப்படி தேடிவந்த மக்களுக்கு ஆன்மீக மருந்தாகிய நற்செய்தியையும் கொடுத்தார்.
உடல் நலம் தேன். ஆன்மீக மருந்து நற்செய்தி.
ஆகவேதான் இயேசு சென்ற இடமெல்லாம் மக்களுடைய நோய்களை குணமாக்கினார்.
அவர்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.
குணம் பெற்ற ஒவ்வொருவரிடமும்,
" உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று," என்றார்.
குணம் பெற்ற ஒவ்வொருவரும்
தாங்கள் சென்றவிடமெல்லாம் தங்களுக்கு குணம் அளித்த இயேசுவை பற்றி மக்களிடம் பேசியதால்,
அவரைப் பற்றிய செய்தி நாடெங்கும் பரவியது.
இயேசுவின் கையால் குணம் பெற்றவர்கள் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எங்கும் பரப்பினார்கள்.
நாம் எப்படி?
இவ்வுலகு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும்போது உதவி பெற இயேசுவை நாடிச் செல்கின்றோம்.
இயேசுவின் அருளால் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.
நாம் அதோடு நின்று விடக்கூடாது.
இயேசுவை அடைந்துவிட்ட நாம்
அவர் எந்த நோக்கத்திற்காக உலகிற்கு வந்தாரோ
அதை நிறைவேற்றவேண்டும்.
முதலில் நமது ஆன்மீக மருந்தாகிய நற்செய்தியை இயேசுவிடமிருந்து பெறவேண்டும்.
அடுத்து இயேசுவையும் அவரது செய்தியையும் மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.
நாம் பெற்ற சுகத்தை மற்றவர்களும் பெற உதவ வேண்டும்.
இதைத்தான் இயேசு வாழ்ந்த காலத்தில் அவர் கையால் குணம் பெற்றவர்களும் செய்தார்கள்.
தாங்கள் பெற்ற இயேசுவைத் தாங்கள் சந்தித்த அனைவருக்கும் கொடுத்தார்கள்.
இதனால் நாடு எங்கிலும் இருந்து மக்கள் கூட்டம் இயேசுவை நோக்கி வந்தது.
இயேசு தன்னிடம் வந்த மக்களுக்கும்,
தான் தேடி சென்று பார்த்த மக்களுக்கும்
உடல் குணத்தையும் ஆன்மீக குணத்தையும் அளித்தார்.
கேட்டும், கேளாமலும் இயேசுவிடம் இருந்து நிறைய உதவிகளை பெற்ற நாம்
நமது ஆன்மீகக் கடமையை நிறைவேற்றுகிறோமா?
இயேசுவையும் அவரது நற்செய்தியையும் மற்றவர்களுக்கு அறிவிக்கின்றோமா?
ஒறு முறை புனித பிரான்சிஸ் அசிசியார் அவரது சபை சகோதரர்களில் சிலரை அழைத்து,
"வாருங்கள் நற்செய்தியை அறிவித்துவிட்டு வருவோம்" என்றார்.
அவர்களுடன் நகரின் சில தெருக்கள் வழியாக செபம் சொல்லி கொண்டு நடந்து சென்றார்.
யாருடனும் ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை.
சில தெருக்களைச் செபத்தோடு சுற்றிய பின் இல்லத்திற்கு அவர்களை அழைத்து வந்தார்.
ஒரு சகோதரர் அவரிடம்,
"Brother, நற்செய்தியை அறிவிப்போம் வாருங்கள் என்று அழைத்துச் சென்றீர்களே,
ஆனால் நாம் யாரிடமும் பேசவே இல்லையே? "
அசிசியார் சொன்னார்,
" நாம் செபம் சொல்லிக்கொண்டே அமைதியாக நடந்து சென்றது ஒரு நற்செய்தி அறிவிப்பு தான்.
நமது நடை, உடை, பாவனையே நம்மைப் பார்த்தவர்களுக்கு நற்செய்தியை அறிவித்திருக்கும். "
சொல் மூலம் செய்யும் நற்செய்தி அறிவிப்பை விட
செயல் மூலம் செய்யும் நற்செய்தி அறிவிப்பு அதிக சக்தி வாய்ந்தது.
நமது வாழ்க்கையே சக்திவாய்ந்த நற்செய்தி.
நமது விசுவாச அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால்
அவர்களும் இயேசுவையும் அவரது வல்லமையையும் பற்றி அறிந்து கொள்வார்கள்.
நமது வாழ்க்கையின் மூலம் நற்செய்தியை அறிவிப்பது கடினமான காரியமல்ல,
நல்ல கிறிஸ்தவனாக வாழ்ந்தாலே போதும்.
நமது வீட்டில் நம்முடைய அம்மாவுக்கு சமைக்கத் தெரியும்,
ஆனாலும் சமைக்கும்போது தன்னுடைய மகளை தனக்கு உதவி செய்ய அழைக்கிறார்.
ஏன்?
உண்மையில் தனக்கு உதவி செய்ய அல்ல,
ஆனால் மகளும் சமையல் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவளை அழைக்கிறாள்.
நமது உதவி இல்லாமலேயே இவ்வுலகையும் அதில் வாழும் மக்களையும் படைத்த கடவுளால்
நமது உதவி இல்லாமலேயே உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் நற்செய்தியை அறிவிக்க முடியும்.
உலகம் ஒரு குடும்பம்.
குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாவிட்டால்
குடும்பத்தில் கலகலப்பும், மகிழ்ச்சியும் எப்படி நிலவும்?
குடும்பத்தின் மகிழ்ச்சியே அதன் அங்கத்தினர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சிகரமான செய்திகளை பரிமாறி கொள்வதிலும்,
ஒருவருக்கொருவர் உதவி செய்வதிலும்தானே அடங்கி இருக்கிறது.
இயேசுவின் நற்செய்தியை விட மகிழ்ச்சிகரமான செய்தி வேறு உண்டா?
ஒவ்வொருவரும் தான் பெற்ற இறை அனுபவத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால்
குடும்பம் முழுவதும் சேர்ந்து இறை அனுபவத்திலும், அன்பிலும் வளரும்.
அறியாதவர்களுக்கு அறிவை ஊட்டும்போது ஏற்படும் மகிழ்ச்சி
தாய் தன் பிள்ளைக்கு உணவு ஊட்டும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு இணையானது.
இயேசுவை அறியாதவர்களுக்கு அவரை அறிவிக்கும்போது ஏற்படும்
மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவும் இல்லை.
இயேசுவை மற்றவர்களுக்கு
அறிவிக்கும்போது ஏற்படும்
ஆன்மீக உறவுக்கும் ஈடு இணை எதுவும் இல்லை.
இயேசு நம் ஒவ்வொருவரையும் இணைப்பதோடு
எல்லோரையும் தன்னோடு இணைத்துக் கொள்கிறார்.
இந்த இணைப்புப் பணியில் நமக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்று எண்ணும் போது நாம் பெறும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இந்த மகிழ்ச்சியை நாம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான்
இயேசு நம்மையும் நற்செய்தி பரப்புப் பணியில் ஈடு படுத்திக் கொள்கிறார்.
நாம் மகிழும் போது நமது மகிழ்ச்சியின் பொருட்டு நம்மைவிட அதிகம் மகிழ்பவர் இயேசு மட்டுமே.
இயேசு நமது மகிழ்ச்சிக்காக மனிதன் ஆனார்,
நாம் இயேசுவின் மகிழ்ச்சிக்காக இயேசுவாக மாறுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment