Wednesday, January 8, 2020

"அவர் வளரவேண்டும், நானோ குறையவேண்டும்.''(அரு.3:30)

"அவர் வளரவேண்டும், நானோ குறையவேண்டும்.''
(அரு.3:30)
********    **********     *******
இவ்வார்த்தைகள் ஸ்தாபக அருளப்பரால் இயேசுவைக்
 குறித்து கூறப்பட்டவை.

அருளப்பர் இயேசுவின் வருகையைக் குறித்து முன்னறிவித்து,

அவர் வரும் பாதையை செம்மைப் படுத்துவதற்காக அனுப்பப்பட்டவர். 

இயேசு வந்த பின் அருளப்பர் பணி முடிவுக்கு வந்தது, இயேசுவின் பணி ஆரம்பித்துவிட்டது. 

இனி அருளப்பரைச் சுற்றி  வந்த மக்கள் எல்லோரும் இயேசுவைச் சுற்றிவர ஆரம்பிப்பார்கள். 


நமது ஆன்மீக வாழ்வின் வளர்ச்சியைக் குறித்து விவரிக்க நாம் இதே வசனத்தைப் பயன்படுத்தலாம்.

நாம் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்னால் நமது வாழ்வில் இயேசு இல்லை.

 ஞானஸ்நானம் பெற்றவுடன் இயேசு நம் வாழ்வில் நுழைகிறார்.

 அவரோடு, நமது ஆன்மீக வாழ்க்கை ஆரம்பமாகிறது.

 நமது ஆன்மீக வாழ்க்கையின் நோக்கம் என்ன?

இயேசுவின் துணையுடன் நாம் ஆன்மீகத்தில் வளர வேண்டும்.

இயேசு ஆன்மீகத்தில் வளர முடியாது.

 ஏனெனில் அவர் நிறைவான இறைவன்.

 ஆன்மீகத்தில் வளர வேண்டியது நாம்.

நாம் ஆன்மிகத்தில் வளர வேண்டுமென்றால்

 இயேசுவின் பண்புகளான

 அன்பு, 

நீதி,

 இரக்கம்,

 மன்னிக்கும் தன்மை,

 பொறுமை

போன்றவற்றை  நமதாக்கிக்  கொண்டு,

 அந்த பண்புகளோடு நாம் வளர வேண்டும்.

இயேசுவின் பண்புகளோடு நாம் வளரும்போது இயேசுவை நமது வாழ்வில்  பிரதிபலிப்போம்.

எந்த அளவிற்கு நாம் இயேசுவின் பண்புகளோடு ஒன்றிக்கிறோமோ,

 அந்த அளவிற்கு நமது ஆன்மீக வளர்ச்சியும் இருக்கும்.

ஒன்றிப்பு அதிகமாக அதிகமாக,

 இயேசுவின் பிரதிபலிப்பும்  அதிகமாகும். 

இயேசுவின் பண்புகளோடு முற்றிலும் ஒன்றித்துவிட்டால்

நம்மைப் பார்ப்பவர்கள் நம்மில் இயேசுவைப் பார்ப்பார்கள்.

நமக்குள் ஏற்பட்ட வளர்ச்சி நமது வளர்ச்சி அல்ல,

 இயேசுவின் பண்புகளின் வளர்ச்சி.  

அதையே நாம்,

"வளர்ந்தது நானல்ல, இயேசு என்னுள் வளர்ந்து விட்டார்" என்று கூறலாம்.   

 "நான் தேயவேண்டும், இயேசு வளரவேண்டும்" என்றால்

 நமது கெட்ட பண்புகள் தேய்ந்து, இல்லாமை ஆகிவிட வேண்டும்,

 இயேசுவின் பண்புகள் நமக்குள் நாளுக்கு நாள் வளர்ந்து 

பண்புகளில் நாம் இயேசுவாக மாற வேண்டும்" என்பது பொருள்.  

With Jesus in us we must grow into Jesus.

இயேசுவைப் போல நாமும் நமது விரோதிகள் உட்பட எல்லோரையும் நேசிக்க வேண்டும்.

 எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும்.

எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அவற்றைப் பொறுமையுடன் சகித்துக்கொள்ள வேண்டும்.

இயேசு நமக்காக சிலுவையை சுமந்தது போல 

நாம் அவருக்காக சிலுவையை சுமக்க வேண்டும். 

நாம் இயேசுவாக மாறும் போதுதான் கிறிஸ்தவனாக மாறுகிறோம்.

நாம் இயேசுவாக மாறாவிட்டால் கிறிஸ்தவன் என்ற வார்த்தை  நமக்குப் பொருந்தாது.

பண்புகளில் கிறிஸ்துவாக நாம் மாறிவிட்டால்,


''இனி,வாழ்பவன் நானல்ல: என்னில் வாழ்பவர் கிறிஸ்துவே."

என்று கூறிய புனித சின்னப்பரோடு நாமும்  துணிந்து கூறலாம்,

"வளர்வது நானல்ல கிறிஸ்து என்னில் வளர்கிறார்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment