''இச்சோதனைகள் நிகழ்வது உங்கள் விசுவாசம் உண்மையானதென்று காட்டவே." (1இரா .1:7)
********************************
"Helo! கையில் என்ன கத்தரிக்கோல்?"
"உன்னை வெட்ட வேண்டாமா?"
"என்னது? என்னை வெட்டவா? நான் என்ன பாவம் செய்தேன்?"
"பாவம் எதுவும். செய்யவில்லை. ஆனால் துணியான உன்னை சட்டையாக ஆக்கணுமே.  
 அளவுப்படி வெட்டா விட்டால் எப்படி சட்டை தைக்க முடியும்?"
             *           *
"கையில் என்ன மண் வெட்டி?"
"தோண்டுவதற்கு."
"என்னையா தோண்டப்போற?"
"ஆமா."
"வலிக்குமே!"
"எனக்கும்தான் கை வலிக்கும்.
ஆனா தோண்டாம எப்படி மரக்கன்று நட முடியும்?"
               *           *
   "கையில் என்ன?"
"தீப்பெட்டி."
"எதுக்கு?"
"தீ பற்றவைக்க."
"எதுக்கு?"
"உன்னை உள்ளே போட."
"உனக்கு என்னாச்சி? என்ன தீக்குள்ள போட்டா பயங்கரமா வலிக்கும். நான் உருகிப்போய்விடுவேன்"
"உன்னை உருக்குவதற்காகத்தான் நெருப்பில் போடப்போறேன்."
"நான் மணப்பெண்ணுக்குக் தாலியாகப் போகிறேன்.
 என்னை உருக்க வேண்டும் என்கிறாய்!."
"உன்னை உருக்கினால்தான் நீ அழுக்கு நீங்கி சுத்தமான தங்கமாய் மாறுவாய். 
புடம் போடப்பட்ட தங்கத்தைக் கொண்டுதான் தாலி செய்ய வேண்டும்.''
                *         *
"ஆண்டவரே, என்னைப் படைத்தவரே,  என்னைப் பாரும்.
 உம்மால் படைக்கப்பட்ட  நான் துன்பப் பட்டுக் கொண்டிருக்கிறேன்.
 தயவுசெய்து பாரும்."
"பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். உனக்கு துன்பங்களை அனுமதித்தவன்  நான்தானே."
"ஆண்டவரே ஏன் எனக்குத் துன்பங்களை அனுமதிக்கிறீர்?
துன்பப் படுவதற்காகவா என்னைப் படைத்தீர்?"
"இல்லை பேரின்ப வாழ்விற்காக.
நித்திய காலமாக பேரின்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நான் 
 ஏன் மனிதனாக பிறந்து துன்பப் பட்டேன்?
 எதற்காக சிலுவையில் மரணம் அடைந்தேன்?"
"நாங்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக."
"எதற்காகப் பரிகாரம் செய்ய வேண்டும்?"
"நாங்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்தால் தான் மீட்பு பெற முடியும்."
"மீட்புப் பெற முதல் தேவை என்ன?"
"விசுவாசம்."
"நீ என்னை விசுவசிக்கிறாயா?''
"விசுவசிக்கிறேன், ஆண்டவரே.
நோயாளிகளை குணமாக்கிவிட்டு 
'ஒரு விசுவாசம் உன்னைக்  குணமாக்கிற்று' 
என்றீர்.
என்னிடம்தான் விசுவாசம்தான் இருக்கிறதே, பிறகு எதற்கு நோய்?"
"உன்னுடைய விசுவாசம் ஆழமானதா?"
."அப்படி என்றால்?"
"ஒரு ஒப்புமை கூறுகிறேன்.உனக்காக உன் தோட்டத்தில் ஒரு விதையை ஊன்றி வைக்கிறேன். 
நீ என்ன செய்வாய்?"
"அதற்கு நீரூற்றி, முளைக்க வைத்து, கன்றாக்கி, அதற்கும் நீரூற்றி உரமிட்டு மரமாக வளர்ப்பேன்."
"கரெக்ட். விதையை மரமாக்க நீ முயற்சி செய்வாய்.
அதேபோல நான் உனது உள்ளத்தில் ஊன்றிய விசுவாச விதையை மரமாக வளர  வைக்க நீ முயற்சி செய்ய வேண்டாமா?"
"விசுவாசமே நீங்கள் தந்த இலவச பரிசு. (free gift) அதை நீங்கள்தான் வளர்க்க வேண்டும்.  என்னால் என்ன செய்ய முடியும்?" 
"கரெக்ட். உனது விசுவாசத்தை பலப்படுத்தவும் வளர்க்கவும்தான்  நான் உனக்கு சோதனைகளையும், துன்பங்களையும்  அனுமதிக்கிறேன்."
"புரியவில்லை. சோதனைகளால் எப்படி விசுவாசத்தை வளர்க்க முடியும்?"
"ஒரு குழந்தைக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அது என்ன செய்யும்?"
."அம்மாவைக் கூப்பிடும். அம்மாவினால் மட்டும்தான் குழந்தையின் பிரச்சினையை தீர்க்க முடியும்."
"உனக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் நீ யாரைக் கூப்பிட வேண்டும்?" 
, "எனக்கு அம்மாவும் நீங்கள்தான்  அப்பாவும் நீங்கள்தான். 
உங்களைத்தான் கூப்பிட வேண்டும்."
"நீ என்னைக் கூப்பிட வேண்டும் என்பதற்காகத்தான் சோதனைகளை அனுமதிக்கிறேன்."
."அதாவது, உங்களை நினைக்காமல் இவ்வுலக காரியங்களில் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறேன். 
என் கவனத்தை உங்கள் பால் திருப்பி உங்களோடு பேசுவதற்காக எனக்கு சோதனைகளை அனுமதிக்கிறீர்கள் அப்படித்தானே?" 
"நித்திய காலத்திலிருந்தே
 நீ உன் தாயின் வயிற்றில் உற்பவிக்கும் முன்பிருந்தே
 நான் உன்னை ஒவ்வொரு வினாடியும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். 
ஆனால் உன்னால் எனக்காக 
சிறிது நேரம் கூட ஒதுக்க முடியவில்லை.
சோதனை வரும்பொழுது என்னிடம் வரவேண்டும் 
.'ஆண்டவரே என் விசுவாசத்தை பலப்படுத்தும்,
 சோதனைகளில் வெற்றியைத் தாரும், 
துன்பங்களை பொறுமையாக ஏற்றிட வேண்டிய சக்தியை தாரும். 
ஆண்டவரே நான் உங்களது பிள்ளை.
உங்களுக்காக, உங்கள் நினைப்பில் வாழ அருள் வரங்களை அள்ளிதாரும் '
என்று நீ என்னிடம் கேட்க வேண்டும். 
கேளுங்கள், கொடுக்கப்படும் என்று நான்  சொன்னது ஞாபகத்தில் இருக்கிறதா?"
"ஞாபகத்தில் இருக்கிறது.
 ஆனால்,  'நமக்கு  என்ன வேண்டும் என்று ஆண்டவருக்குதான்  தெரியுமே.'
என்று  எண்ணி விட்டேன்."
"எனக்கு எல்லாம் தெரியும்.
ஆனால் உனக்கு வேண்டியதை நீதான் கேட்டு பெற வேண்டும்.
அப்போதுதான் நீ  எப்போதும் என்னோடு தொடர்பில் இருப்பாய்.
எப்போதும் என்னோடு தொடர்பில் இருப்பதைத்தான்
உங்கள் மொழியில் செபம்  என்கிறீர்கள்.
சிலர் சோதனைகள் , கஷ்டங்கள் வரும்போது மட்டும் ஜெபிப்பார்கள். 
அப்படி பட்டவர்களுக்கு செபத்தை ஞாபகப் படுத்துவதற்காக சோதனைகள், கஷ்டங்கள் வரும். 
சிலர் தங்கள் சிந்தனை, சொல், செயல் அனைத்தையும் அதாவது வாழ்க்கையையே செபமாக மாற்றி விடுவார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு சோதனைகள் துன்பங்களும் செபமாக மாறிவிடும்.
அப்படிப்பட்டவர்களுக்கு சோதனைகளும், துன்பங்களும் 
அவர்களது விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்கான சாதனங்களாக மாறிவிடும்.
The more they suffer, the Stronger will become their faith. 
ஒரு போர் வீரனது வீரம்
 யுத்த களத்தில்  அதிகரிப்பது போல,
செப வீரனது   விசுவாசம் சோதனை காலங்களிலும் துன்ப காலங்களிலும் அதிக பலமடையும்.
விவசாயி பயன்படுத்தும் மண்வெட்டி, அறுவாள், கத்தி போன்ற உபகரணங்களைப் 
பயன் படுத்தா விட்டால் அவை துருப்பிடித்து விடும்.
பயன்படுத்தும்போது அடிக்கடி தீட்ட வேண்டியிருக்கும்.
தீட்ட தீட்ட அவை கூர்மையாகும். 
சோதனை காலங்களில் விசுவாசம் கூர்மையாகும்.
சோதனைகள் நிகழும்போது தான்  உங்கள் விசுவாசம் உண்மையானதென்று தெரியும்.
நெருப்பு தங்கத்தைப் புடம் போடுவது போல,
 சோதனைகள் விசுவாசத்தைப் புடம் போடுகின்றன.
ஆகவே சோதனைகளையும் துன்பங்களையும் கண்டு பயப்படாதே.
வீர விசுவாசத்தோடு அவற்றை எதிர்கொண்டு வெற்றி பெறு.
வெற்றி வீரனாய் விண்ணகத்திற்குள் நீ நுழையும்போது  
விண்ணவர் அனைவரின் வீர வரவேற்பு உனக்காக காத்திருக்கும்."
"நன்றி, ஆண்டவரே, நன்றி.
சோதனைகளையும் துன்பங்களையும் தாராளமாக வரவிடும்.
அவற்றை வெற்றிகொள்ளத் தேவையான அருள் வரங்களையும் கூடவே அனுப்பும். 
வரவு இருப்பவன் செலவைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?
அருள் வரம் வரவு இருக்கும்போது சோதனையை கண்டு ஏன் பயப்பட வேண்டும்?''
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment