"ஆகவே, தேவ ஆவி, நீர், இரத்தம் ஆகிய மூன்று சாட்சிகள் உள்ளன: "
(1 அரு.5: 7)
********************************
ஸ்நாபக அருளப்பர் யோர்தான் நதியில் ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தார்.
பாவமன்னிப்படைய,
மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறவேண்டுமென்று
யோர்தான் ஆற்றை நோக்கி மக்கள் கூட்டம் வந்த வண்ணமாய் இருந்தது.
இயேசுவும் ஞானஸ்நானம் பெறுவதற்காக அருளப்பரிடம் வந்தார்.
இயேசு கடவுள்.
அவரிடம் பாவம் எதுவும் இல்லை.
நமது பாவங்களை நீக்க வந்தவர் அவர்.
பாவமே இல்லாத அவர் ஏன் ஞானஸ்நானம் பெற வந்தார்?
பாவம் செய்தவர்கள்தான் பரிகாரம் செய்ய வேண்டும்.
ஆனால் இயேசு ஏன் சிலுவையில் பாவங்களுக்காக பரிகாரம் செய்தார்?
இயேசு நமது பாவங்களுக்காக பரிகாரம் செய்தார்.
நமது பாவங்களைத் தன்மேல் சுமந்துகொண்டு அவற்றுக்காக பரிகாரம் செய்தார்.
தனது பாவப் பரிகார வாழ்க்கையை ஞானஸ்நானத்தோடு துவக்கினார்.
நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்யவே இயேசு வந்திருக்கிறார் என்பதை மக்களுக்கு அறிவிக்க ஸ்நாபக அருளப்பர்,
"இதோ! கடவுளுடைய செம்மறி: இவரே உலகின் பாவங்களைப் போக்குபவர்."
என்று கூறினார்.
இயேசு ஞானஸ்நானம் பெற்று, செபித்துக்கொண்டிருக்கும்போது விண்ணிலிருந்து கடவுளே அவருக்கு சாட்சி அளித்தார்.
வானம் திறந்தது.
பரிசுத்த ஆவி புலப்படும் வடிவெடுத்து, புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார்.
வானத்திலிருந்து குரலொலி உண்டாகி, " நீரே என் அன்பார்ந்த மகன். உம்மிடம் நான் பூரிப்படைகிறேன் " என்றது.
இதிலிருந்து ஒரு உண்மை புலன்ஆகிறது.
மனிதனாக பிறந்து, பாடுபட்டு, மரித்து நமக்கு மீட்புப் பெற்றுத் தந்தவர்
தமதிரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதன் கடவுள்.
ஆனாலும் நமது மீட்பில்
பரிசுத்த தமிழ் திரித்துவத்தின் முழுப் பங்கும் இருக்கிறது.
ஏனெனில் பிதாவும் , மகனும், பரிசுத்த ஆவியும் பிரிக்கமுடியாத ஒரே கடவுள்.
கடவுள் நம்மைப் படைத்தார்.
கடவுள் மனிதனாகப் பிறந்தார்.
கடவுள் நம்மை மீட்டார்.
கடவுள் மூன்று ஆட்களாய் இருக்கிறார்.
ஒரே கடவுள் மூன்று ஆட்களாய் இருக்கிறார் என்பதற்கு
வானில் இருந்து பேசிய தந்தை,
ஞானஸ்நானம் பெற்ற மகன்,
அவர் மேல் புறா வடிவில் தங்கிய பரிசுத்த ஆவி
அதாவது பரிசுத்த தமதிரித்துவமே சாட்சி.
அருளப்பர் கூறினார்,
"நீரால் ஞானஸ்நானம் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்,
"ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுப்பவர்."
பரிசுத்த ஆவியை பார்த்த பின்புதான் அருளப்பர்
இயேசுவைக் கடவுளின் மகன் என்று சாட்சியம் கூறினார்.
"அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுப்பவர்"
என்றும் கூறினார்.
நீரினால் ஞானஸ்நானம் பெற்ற இயேசு,
"நான் பெற வேண்டிய ஞானஸ்நானம் ஒன்று உண்டு. அது நிறைவேறுமளவும் நான் எவ்வளவோ ஏக்கமாயிருக்கிறேன்."
(லூக். 12:49)
என்று கூறியது அவரது பாடுகளைப் பற்றி.
இயேசு பாடுகளை ஞானஸ்நானம் என்று குறிப்பிட்டதால் அதை நாம் இரத்த ஞானஸ்நானம் என்று எடுத்துக் கொள்ளலாம்.
ஆகவேதான் அருளப்பர் தனது திருமடலில்,
"இயேசு கிறிஸ்து நீராலும் இரத்தத்தாலும் வந்தவர்.
நீரோடு மட்டுமன்று, நீரோடும் இரத்தத்தோடும் வந்தார்.
இதற்குத் தேவ ஆவியே சாட்சி:
ஏனெனில், தேவ ஆவி உண்மையானவர்.
ஆகவே, தேவ ஆவி, நீர், இரத்தம் ஆகிய மூன்று சாட்சிகள் உள்ளன: "
(1 அரு.5: 6,7)
என்றார்.
தேவ ஆவியின் சாட்சியோடு
நீரினால் ஞானஸ்நானம் பெற்ற இயேசு,
இரத்தம் சிந்தி பாடுகள் பட்டு உயிரை பலியாக்கி நம்மை மீட்டார்.
ஆகவே நாம் மீட்பு பெறவேண்டுமென்றால்
1. தண்ணீரினால் ஞானஸ்நானம் பெற வேண்டும்.
2. ஞானஸ்நானம் பெறும் போது
பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நம்மிடம் உள்ள எல்லா பாவங்களும் நீங்கும்.
3.இயேசு இரத்தம் சிந்தி சிலுவையை சுமந்து பாடுகள் பட்டது போல
.
நாமும் நமக்குக் கடவுளால் தரப்படும் சிலுவைகளை பொறுமையுடன் சுமந்து மீட்பைப் பெற வேண்டும்.
ஞானஸ்நானம் பெறும் போது
1. நமது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
2.பரிசுத்த ஆவியை பெறுகிறோம்.
3.திருச்சபையின் அங்கத்தினர்கள் ஆகிறோம்,
4.நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் இறைவனின் அருள் வரங்களை பெற தகுதி உள்ளவர்கள் ஆகிறோம்.
5. நித்திய பேரின்ப வீட்டிற்குள் நுழைய தகுதி உள்ளவர்கள் ஆகிறோம்.
நமது சிலுவையை சுமக்கும் போது,
'
1.நமது பாவங்களுக்குப்
பரிகாரம் செய்கிறோம்,
2.இயேசுவை அதிகமாகப் பிரதிபலிப்போம்.
இயேசுவின் சீடர்கள் என்று அழைக்கப்பட தகுதி பெறுவோம்.
3.இறைவனின் அருள் வரங்களைப் பெறுகிறோம்,
4.உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனை காலம் குறையும்.
5.மோட்சத்தில் நமது பேரின்பத்தின் அளவு அதிகரிக்கும்.
நமது வாழ்வினாலும்,
நமது பாடுகளினாலும் இயேசுவுக்கு சாட்சிகளாய் விளங்குவோம்
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment