Friday, January 17, 2020

"இயேசுவோ அவர்கள் விசுவாசத்தைக் கண்டு திமிர்வாதக்காரனை நோக்கி, "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்."(மாற்கு, 2:5)

"இயேசுவோ அவர்கள் விசுவாசத்தைக் கண்டு திமிர்வாதக்காரனை நோக்கி, "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்."
(மாற்கு, 2:5)
********************************

வழக்கமாக இயேசு குணமாக்கப்பட்ட நோயாளியை நோக்கி,

" உன் விசுவாசம் உன்னை குணமாக்கிற்று." என்பார்.

ஆனால் இங்கு,

"இயேசுவோ அவர்கள் விசுவாசத்தைக் கண்டு"

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது நோயாளியைக் கொண்டுவந்த அவனுடைய நண்பர்களின் விசுவாசத்தை  முன்னிட்டு இயேசு அவனைக் குணமாக்குகிறார்.

நோயாளியை மட்டும் குறிப்பிடாமல் வந்த அனைவரின் விசுவாசத்தையும் குறிப்பிடுகிறார்.

நற்செய்தியாளரின் இந்தக் குறிப்பிலிருந்து நாம் ஒரு உண்மையை தெரிந்து கொள்ளலாம்.

இறைவன்முன் நாம் தனி நபர்கள் அல்ல. 

ஒரே குடும்பமாகிய  திருச்சபையின் அங்கத்தினர்கள். 

ஆகவே நாம் நமக்காக செய்யும் செபம் மட்டுமல்ல, 

 மற்றவர்களுக்காக செய்யும் செபமும் இறைவனால் கேட்கப்படுகிறது. 

அதுபோல் மற்றவர்கள் நமக்காக செய்யும் செபமும் கேட்கப்படுகிறது.

நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், 

 நாம் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் நமது செபத்தினால் உதவலாம்.

நமக்காக  செபிப்பது போல மற்றவர்களுக்காகவும் செபிக்கலாம்.

மற்றவர்களுக்காக செய்யும் செபத்தில் தன்னலம் இல்லாததால் அதனுடைய மதிப்பும் சக்தியும் அதிகம். 

அதனால்தான் கர்த்தர்கற்பித்த செபத்தில் நாம் எல்லோருக்காகவும் வேண்டிக் கொள்கிறோம். 

'எங்கள் தந்தையே'

'எங்கள் அனுதின உணவை'

'எங்கள் பாவங்களை'

என்று சொல்லும்போது 
இறைக் குடும்பத்திலுள்ள அனைத்து மக்களையும் சேர்த்து 

அனைவருக்காகவும் செபிக்கிறோம். 

அப்படி செபிக்க வேண்டும் என்று நமது ஆண்டவரே கற்று தந்திருக்கிறார்.

புனிதர்களை நோக்கி செபிப்பதை விரும்பாத நம்முடைய சகோதரர்களுக்கு 
ஒரு கேள்வி:

பாவிகளாகிய நமது செபத்தை ஏற்று ஆண்டவர் மற்றவர்களுக்கு உதவுகின்றார் என்றால்,

 பாவமே இல்லாத நம்முடைய உறவினர்களாகிய  மோட்ச வாசிகள் 

 நமக்காகச்  செய்யும்  செபத்தைக்  கேட்டு இறைவன் நமக்கு உதவ மாட்டாரா?

உன் அயலானை நேசி என்று சொன்ன ஆண்டவர் 

அடுத்தவர்களுக்காக  செபிக்கும்போது,

 அது நாமாக இருந்தாலும் சரி, புனிதர்களாக இருந்தாலும் சரி 

கேட்க மாட்டாரா?

நண்பர் ஒருவர் கேள்வி ஒன்று கேட்டார்.

இறைவன்தானே நம்மைப் படைத்து பராமரித்து 
 வருகிறார்.

இன்னொருவருடைய சிபாரிசின் பேரிலா நம்மைப் படைத்தார்?

நம்மை படைத்தவருக்கு நம்மைப் பராமரிக்கத் தெரியாதா? 

 மற்றவர்களுடைய சிபாரிசு வேண்டுமா? 

நம்மைப் படைத்தவரிடம் நமக்கு வேண்டியதை  நாமே கேட்க   வேண்டியதுதானே.

மற்றவர்களின் சிபாரிசு எதற்கு?

நம்மை இரட்சிக்க தானாக மனிதனாய் பிறந்தாரா?

 அல்லது யாராவது சிபாரிசு செய்து மனிதனாகப் பிறந்தாரா?

இவர் எதற்கெடுத்தாலும்,

" பைபிளில் ஆதாரம் இருக்கிறதா?"

 என்று கேட்கக்கூடிய குழுவை சேர்ந்தவர்.

இப்படி கேள்வி கேட்பவர்கள் ஒரு அடிப்படை   உண்மையைத்  தெரிந்து கொள்ள வேண்டும்.

இறைவன் மனிதனைத் தனி  மனிதனாக அல்லாமல் குடும்பமாகப் படைத்தார்.

குடும்பத்தின் அங்கத்தினர்கள் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் அன்பு செய்து, 

 ஒருவருக்கொருவர் உதவி செய்து,

 ஒற்றுமையாக வாழ வேண்டும்

என்பதற்காகத்தான் 

"உன்னை நேசிப்பது போல பிறரையும் நேசி" என்ற கட்டளையையும் கொடுத்தார்.

கிறிஸ்துவின் ஞான உடலாகிய நமது குடும்பம்

 விண்ணில் வாழும் புனிதர்களையும் மண்ணில்  வாழும் மக்களையும் உள்ளடக்கிய   ஒரே குடும்பம்.

இக் குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் நேசித்து,

 ஒருவருக்கொருவர் உதவி செய்து,

 இறைவனில் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே இறைவனது திருவுளம்.

உறவை வளர்ப்பது உரையாடலும் உதவி செய்வதும்தான்.

ஆகவே நாம் இறைவனோடு மட்டுமல்ல 

அவரோடு  விண்ணில் வாழும் புனிதர்களோடும்  உரையாடலாம்,

 அவர்கள் நமக்கு உதவி
 செய்யலாம்.

புனிதர்களோடு உறவாடும் போது  நாமும் அவர்களுடைய நற்குணங்களைப்   பின்பற்றி புனிதர்களாக வாழ நமக்கு உந்துதல் கிடைக்கிறது.

 அந்தோனியார் பக்தி உள்ளவன்  

அவரைப் போல,
புனிதமான குணங்களோடு வாழ்ந்து அவரைப்போல விண்ணகம் அடைய ஆசைப்படுவான்.

எல்லா புனிதர்களுமே மண்ணில் வாழும் மக்களுக்கு புனிதத்துவம் அடைய அவர்களுடைய செபம் மூலம் உதவி செய்யலாம்.

இத்தகைய ஒரே குடும்ப உணர்வை 
வளர்ப்பதற்காகத்தான் 

இயேசுவால் நிறுவப்பட்ட ஒரே சபையாகிய 

பரிசுத்த, அப்போஸ்தலிக்க, பொது, திருச்சபை இயேசுவின் தூண்டுதலால் 

புனிதர்கள் வணக்கத்தை உற்சாகப்படுத்துகிறது.


"இயேசுவோ அவர்கள் விசுவாசத்தைக் கண்டு"
.
அவர்களோடு பக்தி உணர்வு கொண்ட நமக்கும் உதவி செய்வார்.

இறைவனோடு நேரடி தொடர்பு கொள்வதோடு 

அவரோடு விண்ணக வாழ்வு வாழும் அவரது புனிதர்கள் வழியாகவும்

 இறைவனோடு தொடர்புகொண்டு

 இறைவனில் ஒன்றிப்போம்,
விண்ணுலகில் சந்திப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment