"மனிதன் வெளிக்குத் தோன்றுபவற்றை மட்டும் பார்க்கிறான்: ஆண்டவரோ இதயத்தை பார்க்கிறார்"
(1 சாமு .16:7)
********************************
ஆண்டவராகிய கடவுள் களிமண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் முகத்தில் உயிர் மூச்சை ஊதவே, மனிதன் உயிருள்ளவன் ஆனான்.
உடலும் ஆன்மாவும் உள்ளவன் மனிதன்.
உடலை நம்மால் பார்க்க முடியும், ஏனெனில் அது சடப்பொருள்.
ஆனால் ஆன்மாவைப்
பார்க்க முடியாது,
ஏனெனில் அது ஆவி.
ஆன்மா அகம், உடல் புறம்.
பார்க்கச் கூடியது புறம்.
பார்க்க முடியாதது அகம்.
ஒவ்வொரு பொருளுக்கும் புறமும் உண்டு அகமும் உண்டு.
பழத்தைக் கண்ணால் பார்க்கலாம், ஆனால் அதன் ருசியைப் பார்க்க முடியாது.
செய்யும் செயலுக்குக் கூட அகமும் புறமும் உண்டு.
செயலில் கண்ணால்
பார்க்கக் கூடியது புறம்,
அதன் நோக்கம் அகம்.
மனிதர்களாகிய நாம்
ஒரு ஆளுடைய,
அல்லது
பொருளுடைய
அல்லது
செயலுடைய
புறத்தை வைத்துதான், அதன் அடிப்படையில்தான்
ஆள், பொருள், செயலுடைய தன்மையை மதிப்பீடு செய்கிறோம்.
பொண்ணு பார்க்கப் போன மாப்பிள்ளையிடம்,
"பொண்ணு எப்படி?"
"அழகா இருக்கா."
"பிடிச்சிருக்கா?"
" பிடிச்சிருக்கு.''
"முடிச்சிறுவோமா?"
" முடிச்சிறுவோம்."
பொண்ணு பார்க்க அழகாயிருந்தா நல்ல பொண்ணு!
பையன் அமைதியாக இருந்தால் நல்லவன்,
கோபமாக இருந்தால் கெட்டவன்.
ஏன் இந்த அமைதி, ஏன் இந்தக் கோபம் என்று ஆராயமலேயே முடிவுக்கு வந்து விடுகிறோம்.
விளம்பரங்களில் அழகாகக் காட்டப்படும் பொருட்கள் எல்லாம் பயனுள்ளவை என்ற முடிவுக்கு வந்து விடுகிறோம்.
கலர் கலராய் உள்ள தின்பண்டங்கள் எல்லாம் உடலுக்கு நன்மை பயப்பவை என்று எண்ணி ஏமாந்து விடுகிறோம்.
செய்யப்படும் உதவிகள் எல்லாம் உதவிகள் என்று எண்ணி ஏமாந்து விடுகிறோம்.
உதாரணத்திற்கு தேர்தல் சமயங்களில் கொடுக்கப்படும் பணம் மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்.
வியாபாரத்தை உதவி என்று எண்ணி தவறு செய்துவிடுகிறோம்.
இதற்கெல்லாம் காரணம் புறத்தை பார்க்க முடிந்த நம்மால் உள்ளத்தைப் பார்க்க
முடியாததுதான்.
புறத்தில் அடிப்படையில் நாம் இடும் தீர்ப்பு சரியாக இருக்க முடியாது.
Any judgement made based on the externals Cannot be correct.
ஒருவன் மது கடைக்குள் நுழைவதைப் பார்த்துவிட்டு அவனை குடிகாரன் என்று தீர்ப்பிட்டு விட கூடாது.
அவனுடைய நோக்கம் நமக்கு தெரியாது.
யார் மேலும் தீர்ப்புச் சொல்ல நமக்கு எந்த உரிமையும் இல்லை.
நம்மைப் படைத்த கடவுளுக்கு நமது அகமும் புறமும் நன்கு தெரியும்.
நாம் ஒருவரின் வெளிப்புற தோற்றத்தை மட்டுமே பார்க்கிறோம்.
ஆனால் கடவுள் நமது உள்ளத்தையும் பார்க்கிறார்.
நமது அடிமன ஆழத்தில் உள்ள எண்ணங்களையும் அவர் பார்க்கிறார்.
வெளிப்புறத் தூய்மையை விட உள்புற தூய்மைதான் முக்கியம்.
உடலைச் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டியது அவசியம்தான்.
ஆனால் மனதில் அசுத்தம் இருந்தால் வெளிப்புற சுத்தத்தால் எந்த பயனும் இல்லை.
நமது ஆன்மீக வாழ்வில் நமது உள்ளத்தை பாவ மாசு மரு இன்றி காப்பாற்ற வேண்டியது மிக முக்கியம்.
சுத்தமாக வைத்திருந்தால் மட்டும் போதாது. அதை ஆண்டவரின் அருள் வரங்களால் அலங்கரிக்க வேண்டும்.
தாழ்ச்சி முதலிட்ட எழுவகை புண்ணியங்களாலும், பரிசுத்த ஆவியின் வரங்களாலும் நமது உள்ளத்தை அழகுபடுத்த வேண்டும்.
ஏனெனில் நமது உள்ளம் பரிசுத்த ஆவியின் ஆலயம்.
நம் வாழ்வின் நோக்கம்
நம்முள் வாழும் பரிசுத்த ஆவியைத் திருப்தி படுத்த வேண்டியது மட்டும்தான்.
உலகத்தினரைத் திருப்தி படுத்துவது அல்ல.
நமது ஆன்மீக வாழ்வு நம்முள் வாழும் ஆண்டவருக்காக.
ஆண்டவர், உலகம் இருவருடைய
வாழ்வின் அளவுகோல்கள் வித்தியாசமானவை.
கடவுளின் அளவுகோல் வேறு,
உலகத்தவரின் அளவுகோல் வேறு.
ஒன்றுக்கொன்று எதிர்மாறானவை.
ஆண்டவரின் அளவுகோல் படி
'எளிய மனதோர் பேறுபெற்றோர்.'
விண்ணரசை அடைவதுதான் ஆன்மீக வாழ்வின் நோக்கம்.
உலக செல்வங்களின் மீது பற்று இல்லாதவன்தான் விண்ணரசை அடைய முடியும்.
உலகியல் கருத்துப்படி நிறைய செல்வங்கள் சேர்ப்பவனுக்கு தான் உலகில் மதிப்பும், மரியாதையும் உண்டு.
ஏழைகளுக்கு இடம் இல்லை.
இறைவன் பார்வையில்
நாம் எவ்வளவுக்கு எவ்வளவு செல்வத்தின் மீது உள்ள பற்றை விட்டு விடுகிறோமோ,
அவ்வளவுக்கு அவ்வளவு இறைவனை நெருங்குகிறோம்.
உலகத்தின் கருத்துப்படி எவ்வளவுக்கு எவ்வளவு செல்வம் அதிகமாக சேர்க்கிறோமோ,
அவ்வளவுக்கு அவ்வளவு உலகில் செல்வாக்குடன் வாழ்வோம்.
ஆனால் இந்த செல்வாக்கு உலகிற்கு மட்டும்தான், விண்ணிற்குச் செல்லாது.
இங்கு ஒரு உண்மையைக் கவனிக்க வேண்டும்.
செல்வம், செல்வம் இன்மை ஆகிய புறத் தோற்றங்கள் நமது ஆன்மாவின் நிலையை தீர்மானிப்பது இல்லை.
மாறாக பற்று, பற்றின்மை என்ற அக நிலைமையே நமது ஆன்மாவின் நிலையை தீர்மானிக்கின்றது.
ஏழைக்கு செல்வத்தின் மீது பற்று இருந்தால் அவன் மண்ணிற்கு உரியவனே.
செல்வம் இருந்தாலும் அதன் மீது பற்று இல்லாதவன் விண்ணிற்கு உரியவன்
ஆண்டவரின் அளவுகோல் பற்றின்மை.
உலகின் அளவுகோல் பற்று.
எவ்வளவு துன்பங்கள் துயரங்கள் வந்தாலும்,
அவற்றை ஏற்றுக்கொண்டு
ஆண்டவருக்கு அர்ப்பணிப்போர் பேறு பெற்றவர்கள்,
ஏனெனில் அவர்கள் துயரம் விண்ணுலகில் பேரின்பம் ஆக மாறும்.
மாறாக துன்பங்கள் வரும்போது ஏற்றுக் கொள்ளாமல் முணுமுணுப்போருக்கு,
முணுமுணுப்பினால் இவ்வுலகிலும் பயனில்லை, மறு உலகிலும் பயனில்லை.
ஆண்டவரின் அளவுகோல் அவருக்காக துன்பங்களை ஏற்றுக் கொள்ளுதல்.
உலகின் அளவுகோல் ஏற்றுக் கொள்ளாமை.
எவ்வளவுக்கு எவ்வளவு துன்பங்களை ஆண்டவருக்காக ஏற்றுக் கொள்கிறோமோ,
அவ்வளவுக்கு அவ்வளவு விண்ணுலகில் பேரின்பம் அதிகரிக்கும்.
ஆண்டவரின் அளவுகோல் படி
தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர்.
எவ்வளவுக்கு எவ்வளவு நமது ஆன்மா பாவ மாசு அன்றி தூய்மையாக இருக்கிறதோ
அவ்வளவுக்கு அவ்வளவு
விண்ணுலகில் பேரின்பத்தின் அளவு அதிகரிக்கும்.
ஆனால் உலகம் உள்ளத் தூய்மையை பற்றி கவலைப் படுவதே இல்லை,
அதற்கு வேண்டியது எல்லாம் புற அழகும் கவர்ச்சியும்தான்.
ஆண்டவரின் அளவுகோல்படி நீதியினிமித்தம் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்.
நீதியின் வழி நிற்போர் அதற்காகத் துன்பப்பட நேர்ந்தால் அவர்கள் பாக்கியவான்கள்,
ஏனெனில் இவ்வுலகத் துன்பம் மறுவுலகில் இன்பமாக மாறும்.
ஆனால் உலகம் நீதியைப் பற்றிக் கவலைப் படுவதேயில்லை. துன்பம் இல்லாமல் வாழ்ந்தாலே போதும்.
ஆனால் இவ்வுலக இன்பத்தினால் மறுவுலகில் எந்தப் பயனும் இல்லை.
ஆண்டவனின் அளவுகோல் நீதியால் வரும் துன்பம்.
உலகின் அளவுகோல் நீதியை பற்றி கவலைப்படாத இன்பம்.
ஆக உலகம் புறத்தை வைத்து ஒருவரின் தன்மையை தீர்மானிக்கிறது.
ஆனால் ஆண்டவரோ அகத்தை வைத்துத் தீர்மானிக்கிறார்.
ஏனெனில் உலகத்தால் அகத்தைப் பார்க்க முடியாது.
இறைவனால் அகத்தையும், புறத்தையும் பார்க்க முடியும்.
இதிலிருந்து நாம் அறிய வேண்டிய முக்கியமான உண்மை:
நாம் இறை வழி நடக்கும் போது உலகம் நம்மை பற்றி என்ன நினைக்கிறது என்று கவலைப் படவே கூடாது.
நமக்கு இருக்க வேண்டிய ஒரே நோக்கம் கடவுளுக்காக வாழ வேண்டும்.
கடவுளுக்காக மட்டுமே வாழ வேண்டும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment