Thursday, January 23, 2020

"பெருமை பாராட்டுவோன் ஆண்டவரில் பெருமை பாராட்டுக".(1கொரிந்.1:31)

"பெருமை பாராட்டுவோன் ஆண்டவரில் பெருமை பாராட்டுக".(1கொரிந்.1:31)
*****      *****     *****      *****
ஆண்டவரைச் சுமந்துகொண்டு வந்த கழுதைக்குத்  தலைகால் புரியவில்லை.

 மக்கள் கொடுத்த வரவேற்பு தனக்குத்தான் என்று எண்ணி பெருமைப் பட்டுக் கொண்டது. 

 மறுநாள்தான் அதற்குப்  புரிந்தது, வரவேற்பு  தனக்கல்ல,

 தான் சுமந்து வந்த இறைமகனுக்கு என்று. 




நாம் ஒன்றும் இல்லாமல் இருந்தோம்.

We were nothing.

ஆறறிவையும் தந்து 

பரிபூரண சுதந்திரத்தையும் தந்து 

ஒன்றுமில்லாமையிலிருந்து  நம்மைப் படைத்தவர் இறைவன்.

 நாமே நமக்குச் சொந்தம் இல்லை.

 நம்மிடம் உள்ள திறமைகள் எல்லாம் இறைவன் இலவசமாகத் தந்தவை.

 அவற்றைப் பயன்படுத்த நமக்கு முழு உரிமையும் தந்திருக்கிறார் இறைவன்.

நமக்குத் தரப்பட்டிருக்கும் திறமைகளைப் பயன்படுத்தும்போது கிடைக்கும் பெருமைகளில் ஒரு துளிகூட நமக்கு உரிமை இல்லை. 

எல்லா பெருமையும் இறைவனையே சேரும்.

நம்மை நாமே பீற்றிக் கொண்டால் அதற்கு பெயர் தற்பெருமை. (Pride)

தற்பெருமையால் வீழ்ந்தவன் தான் லூசிபர். 

நமது சுய சக்தியால் ஒரு சிறு துரும்பைக்கூட நம்மால் அசைக்க முடியாது.

நமக்குச் சிந்திக்கும் சக்தியைத் தந்தவர் கடவுள்.

 சிந்தனையை வெளிப்படுத்தும் திறமையைத் தந்தவர் கடவுள்.

 சிந்தனையையும் சொல்லையும் செயலாக்கும் சக்தியைத் தந்தவர் கடவுள். 

கிரேக்க நாட்டிலிருந்து ஆசியா வரை சகல நாடுகளையும் வென்று 

மகா அலெக்சாண்டர் என்று பெயரெடுத்த மாமன்னனை

 ஒரு கொசுப்படை கொன்று  விட்டது!

வீரர்கள் படையை வென்றவனால் கொசுப்படையை வெல்ல முடியவில்லை!

பாபிலோன் மீது படை எடுத்த போது மலேரியா (Malaria)
காய்ச்சலால் மாண்டான்!

மனிதனின் சக்தி  அவ்வளவுதான்!



பள்ளிப்படிப்பின் போது பெற்ற வெற்றிகளும் சரி,

 பணிக்காலத்தில் பெற்ற வெற்றிகளும் சரி,

 பொதுவாழ்வில் பெறும் வெற்றிகளும் சரி

 இறைவன்  தந்த திறமைகளால்தான்.

இதை உணர்ந்தால் தற்பெருமை கொள்ள மாட்டோம்.

நாம் பெற்ற வெற்றிகளை இறைவனின் அதிமிக மகிமைக்கு ஒப்புக்  கொடுப்போம்.

அப்படி கொடுப்பதனால்  அவரது   மகிமை அதிகரிக்க போவதில்லை. 

ஏனெனில் அவர் இயல்பிலேயே அளவில்லாத மகிமை உள்ளவர்.

காலையில் நண்பர்களைச் சந்திக்கும்போது, "Good Morning" என்று வாழ்த்துகிறோம்.

நமக்குத் தெரியும் நமது வாழ்த்துதலால் அவருக்கு ஒன்றும் ஆகப் போதில்லை என்று.


ஆனாலும் ஏன் வாழ்த்துகிறோம்?


வாழ்த்தும்போது நமது நல்ல மனதைத் தெரியப்படுத்துகிறோம்.

நமது நட்பு வளர்கிறது.

அவ்வாறுதான் 

இறைவனது மகிமைக்காக நாம் செயல் புரியும்போது

 இறைவனுக்கும் நமக்கும் உள்ள நெருக்கம் அதிகரிக்கிறது. 

நாம் இறைவனோடு அதிகமாக ஒன்றிக்கிறோம்.

 நமது ஒவ்வொரு செயலையும்  இறைவனுக்காகச் செய்யும்போது  

இறைவன்மீது நமக்குள்ள அன்பையும்  பற்றையும் வெளிப்படுத்துகிறோம்.

இதனால் நமக்குதான் நன்மை ஏற்படுகிறது. 

இறைவன் எப்போதும்போல்தான் இருக்கிறார். 

ஏனெனில் அவர் நிறைவானவர்.

கடவுள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான திறமைகளைக் கொடுப்பதில்லை. 

சிலருக்குப் பாடும் திறமை இருக்கும். 

அவர்கள் தங்கள் திறமையை இறைவன் புகழ் பாட பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

சிலருக்கு எழுதும் திறமை இருக்கும். 

அவர்கள் தங்கள் திறமையை 
இறைவன் புகழ் பரப்ப பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

சிலருக்கு பேசும் திறமை இருக்கும். 

அவர்கள் தங்கள் திறமையை 
இறைவனது நற்செய்தியை அறிவிக்கப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

சிலருக்கு இத்தகைய திறமைகள் இல்லாவிட்டாலும் அவற்றை ரசிக்கும் தன்மை இருக்கும்.

 அவர்கள் தங்கள் ரசிக்கும் திறனை இறைவனைப் பற்றி அறிய பயன் படுத்தி கொள்ள வேண்டும்.

இன்று உலகில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு காரணமே

 திறமையுள்ளவர்கள் அதை இறைவனுக்காக பயன்படுத்தாமல் 

தங்கள் பெருமைக்காகப் பயன்படுத்திக் கொண்டிருப்பதுதான்.

அவரவர் அவரவர் திறமையை ரசிக்க கூட்டம் சேர்த்து கொண்டிருக்கிறார்கள்.

மூன்று பேச்சாளர்கள் இருந்தால் மூன்று ரசிகர் கூட்டங்களும் இருக்கும்.

விளைவு மூன்று கூட்டங்களும் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டிருக்கும்.

நற்செய்தி அறிவிப்பாளர்களுக்குக் கூட ரசிகர் கூட்டங்கள் தோன்ற ஆரம்பித்து விட்டன. 

சிலர் நற்செய்தி அறிவிக்கும்போது அதைக் கேட்க லட்சக்கணக்காக ஆட்கள் கூடுகிறார்கள்.

சிலர் அறிவிக்கும்போது ஆயிரக்கணக்கில் கூடுகிறார்கள்.

சிலர் அறிவிக்கும்போது பக்கத்தில் உள்ளவர்கள் மட்டும் கூடுகிறார்கள்.

நற்செய்திக்  கூட்டங்களுக்கு இன்னார் இன்னார்  பேசுவார்கள் என்று போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டியிருக்கிறது.

இதற்குக் காரணம் கூட்டங்களுக்கு போகின்றவர்கள் 

நற்செய்தியை விட அதை அறிவிப்பவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுதான்.

"பிரசங்கம் எப்படி இருந்தது?"

"சாமியார் சூப்பர்! பிரசங்கத்தை கேட்டுக்கொண்டே இருக்கணும் போல் இருந்தது."

"அப்படி என்ன சொன்னார்?"

"அதெல்லாம் ஞாபகத்தில் இல்லை, நன்றாகப் பேசினார்." 

பங்கு சாமியார் சொன்னார்:

"திருவிழா சமயத்தில் மூன்று நாள் தியானம் இருக்கும்."

மக்கள்  கேட்டார்கள்:

"சுவாமி, தியானம் கொடுக்க எந்த சாமியார் வருகிறார்?"

மக்கள் தியானத்திற்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை விட தியானம் கொடுப்பவர்களுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

அது சாப்பாட்டிற்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை விட

 சாப்பாடு தயாரிப்பவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுபோல் இருக்கிறது!

"சாப்பாடு எப்படி இருந்தது?"

"சமையல்காரர் சூப்பர்.

 நம்ம வீட்டு கல்யாணத்திற்கும் அவரைத்தான் கூப்பிட வேண்டும்!" 

சாப்பாட்டு விஷயத்தில் நடந்து கொள்வதைப் போல நற்செய்தி விஷயத்தில் நடந்து கொள்ள கூடாது.

நற்செய்தி அளிப்பவரை விட,  அளிக்கப்படும் நற்செய்தியே
 முக்கியம்.

கடையில் பொருள் வாங்கப் போகிறோம். 

பொருள் முக்கியமா?

 வியாபாரி முக்கியமா?

 வியாபாரியின் முகத்தைப் பார்த்து அல்ல 

பொருளின் தரத்தைப் பார்த்து வாங்க வேண்டும்.

நற்செய்தி யார் மூலமாக வந்தாலும் 
அது இறைவனிடமிருந்து வருகிறது.

நற்செய்தியாளர் சொல்வன்மை மிக்கவராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

சரியான விளக்கம் கொடுக்க முடிந்தவராய் இருந்தால் போதுமானது. 

கொடுப்பவரும் இறைவனின் மகிமைக்காகக் கொடுக்க வேண்டும்.

பெறுபவரும் இறைவனின் மகிமைக்காகப் பெற வேண்டும். 

நற்செய்தியை பெற்றால் மட்டும் போதாது.

 அதை வாழ்வாக்க வேண்டும்.

"நாளை பக்கத்து ஊரில் நற்செய்தி கூட்டம். சுகமளிக்கும் செபமெல்லாம்
சொல்வார்கள். வர்ரிங்களா?"

"பாவசங்கீர்த்தனம் கொடுப்பார்களா?"

"அதுவும் கொடுப்பார்கள்."

ஆண்டவரும் நற்செய்தியை அறிவிக்கும்போது வந்தவர்களின் உடல் நோயைக் குணமாக்கினார்.

 மறுக்க முடியாத உண்மை.

 ஆனால் அது தேனோடு மருந்தைக் கலந்து கொடுப்பது போல.

ஆண்டவர் மனிதனாகப் பிறந்தது ஆன்மாவைப் பாவத்திலிருந்து மீட்பதற்காக.

உடல் நோயிலிருந்து மீட்பதற்காக அல்ல.

நாம் தேனைவிட மருந்துதான்  முக்கியம் என்பதை மறந்து விட கூடாது.

இயேசு எந்த நோக்கத்திற்காக உலகிற்கு வந்தாரோ, அதை நிறைவேற்றும்போது நாம் இறைவனின் மகிமைக்காகச்
 செயல்புரிகிறோம்.

ஆண்டவரின் அதிமிக மகிமைக்காக நாம் நற்செய்தியை  அறிவிக்க வேண்டும்.

 உலக மக்களின் மீட்பிற்காக நாம் அயராது உழைக்க வேண்டும்.

நமது உழைப்பில் இறைவன் மகிமை பெற வேண்டும். 

இயேசு எதைச்செய்தாலும் தந்தையின் மகிமைக்காகவே செய்தார்.

நாமும் இயேசுவையே பின்பற்ற வேண்டும்.
 
"நீங்கள் என் பெயரால் கேட்பதெல்லாம் செய்வேன்: இதனால் தந்தை மகனில் மகிமை பெறுவார்."
(அரு. 14:13)

தந்தை மகனில் மகிமை பெறுவதுபோல, அவரது மக்களாகிய நம்மிலும் மகிமை பெற வேண்டும்.

நமது நல்ல செயல்களைப்  பார்த்தவர்கள் நம் விண்ணக தந்தையை மகிமைப் படுத்த வேண்டும்.

வாழ்வோம், இறைவனது மகிமைக்காக.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment