விண்ணும் மண்ணும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழியவே ஒழியா.
(லூக்.21:33)
* * * * * * * * * *
இப்போதெல்லாம் எல்லோருடைய கையிலும் பைபிள் இருக்கிறது.
ரொம்ப சந்தோசம்.
பைபிள் வாசிக்கும் பழக்கமும் இருக்கிறது.
ரொம்ப ரொம்ப சந்தோசம்.
பைபிள் இறைவனுடைய
வார்த்தை என்ற நம்பிக்கையும் இருகிறது.
ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசம்.
ஆனால், இறை வார்த்தையில்
நம்பிக்கை இருகிறதா?
யாரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டாலும், "ஆம்" என்ற பதில் வரும்.
ஆனால் பதிலை வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்து
அது எந்த அளவுக்கு வாழ்க்கையோடு ஒத்துப் போகிறது என்று அவரவர்.
சுய பரிசோதனை (Self examination) செய்து பார்க்க வேண்டும்.
தேர்வு முடிவுகள் ஆளுக்கு ஆள் மாறுபடும்.
நண்பர் ஒருவர் ஒருநாள் ரொம்ப கவலையோடு உட்கார்ந்திருந்தார்.
"என்ன சார் விசயம்? ஏதாவது கப்பல் கவுந்து போச்சா?"
"கவுந்தது மட்டுமல்ல, முங்கியே போச்சி சார்."
"என்ன சொல்றீங்க?"
"I. A. S தேர்வில எல்லா Attemptம் போச்சி."
"தினசரி பைபிள் வாசிக்கும் பழக்கம் உண்டா? "
"ஒவ்வொரு நாளும் எழுந்தவுடன் பைபிள் வாசித்துவிட்டு, வசனங்களைத் தியானித்து விட்டுதான் அடுத்த வேலை."
"வாசிப்பது சரி. வாசிக்கிறதை நம்புகிறீர்களா?"
"என்ன சார், கடவுள் நம்பிக்கை இல்லாத ஆள் மாதிரி பேசறீங்க? "
"ஹலோ! கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க."
"இறை வார்த்தை என் உயிர். என் உயிரை நான் நம்பாதிருப்பேனா?"
" உங்களைப் பார்க்க உயிர் உள்ள ஆள் மாதிரி தெரியல.
உயிர் இருந்தால் இப்படி இருக்க மாட்டீங்க. உற்சாகமாக, மகிழ்ச்சியாக இருப்பீங்க."
"என் கவலைக்கு காரணத்தை ஏற்கனவே சொல்லி விட்டேன்.
நீங்கள் என்னை நக்கல் பண்ணுறது மாதிரி தெரியுது."
"இறைவார்த்தையை நீங்கள் நம்புறதா இருந்தால் மகிழ்ச்சியாய் இருந்துதான் ஆகவேண்டும்.
'என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்'
என்பது இறை வார்த்தை.
என்ன நேர்ந்தாலும் -
வெற்றி கிடைத்தாலும்,
தோல்வி அடைந்தாலும்,
நோய் சுகமானாலும்,
சுகமாகா விட்டாலும்,
சுனாமியால் நகரமே அழிந்தாலும்,
உலகமே அழிந்தாலும்
நன்றி கூறுங்கள்.
நன்றி கூறிவிட்டு யாராவது கவலையாய் இருப்பார்களா? "
"உண்மைதான். ஆனால்..."
"என்ன ஆனால்?
நம்பிக்கையில் நடுநிலை கிடையாது.
No neutral position!
ஒன்று நம்புகிறோம்,, அல்லது நம்பவில்லை.
நம்பினால் மகிழ்ச்சி,
நம்பாவிட்டால் கவலை.
நீங்க கவலையாய் இருக்கிறீங்க. . அப்போ என்ன அருத்தம்?"
"சரி, ஆளவிடுங்க."
"என்னது? ஆளவிடவா? நம்ம நாட்டையா?"
"விண்ணும் மண்ணும் ஒழிந்துபோம்."
(இன்று இருக்கிற பிரபஞ்சம் முழுவதும் ஒருநாள் அழியும் என்பதற்கு ஆதாரமான இறைவார்த்தை.)
விண் வெளியில் உள்ள சூரிய, சந்திர, நட்சத்திரங்களும், நாம் வாழும் உலகமும் அழிந்து போகும்.
ஆனால் இயேசுவின் வார்த்தை என்றும் நிலைத்து நிற்கும்.
அதாவது இறைவார்த்தை நிச்சயமாக நிறைவேறும்.
நாம் ஒரு நிமிடம் சிந்திப்போம்.
நாம் இறைவார்த்தையை நம்பி வாழ்கிறோமா?
இந்த உலகை நம்பி வாழ்கிறோமா?
One crucil question:
இந்த நொடியில் இயேசு நம்மிடம் ஒரு கேள்வி கேட்கிறார்.
" கேட்பது உடனே கிடைக்கும்.
உனக்கு உடனடியாக மரணம் வேண்டுமா?
அல்லது நீண்ட ஆயுள் வேண்டுமா?"
உடனே பதில் சொல்வோமா? கொஞ்சம் அவகாசம்(Time) கேட்போமா?
நாம் என்ன பதில் சொல்லுவோம்?
நாம் யாருக்கும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும்போது ,
'நீண்ட நாள் வாழ்க என்றுதான் வாழ்த்துகிறோம்.
'சீக்கிரம் மரித்து நித்திய வாழ்வு வாழ்க' என்று வாழ்த்துவதில்லை.
ஒருவர் படித்துக் கொண்டிருக்கிறார்.
அவரை
"படிப்பு முடிந்தவுடன்,
சீக்கிரம் வேலை கிடைக்க வாழ்த்துகிறேன்"
என்று வாழ்த்துகிறோம்.
ஆனால் இன்றுதான் பிறந்த குழந்தையை,
"வாழ்க்கை முடிந்தபின் நல்ல மரணம் அடைந்து மோட்சத்திற்குப் போக வாழ்த்துகிறேன்."
என்றா வாழ்த்துகிறோம்?
இப்படி வாழ்த்திவிட்டு அடிபடாமல் திரும்ப முடியாது.
நம் எல்லோருடைய மனதிலும் ஒரு எண்ணம் இருக்கிறது,
'இவ்வுலகில் நீண்டநாள் வாழ்ந்துவிட்டு அப்புறமாக மோட்சத்திற்குப் போகவேண்டும்.'
"உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன்."
(அரு.14:3)
"நீங்கள் நினையாத நேரத்தில் மனுமகன் வருவார்."
(மத்.24:44)
"இதோ நான் திருடனைப்போல் வருகின்றேன்.
விழித்திருப்பவன் பேறுபெற்றவன்."
(திருவெளி.16:14, 15)
"திருடன் நள்ளிரவில் வருவதுபோல் ஆண்டவருடைய நாள் வரும்."
(1தெசெலோ.5:2)
இவை எல்லாம் இறைவார்த்தைகள்.
சும்மா பயம் காட்டுவதற்காகச் சொல்லப்பட்டவை அல்ல.
உண்மையிலேயே நாம் எதிர்பாராத தேரத்தில் மரணம் வரும்.
இறை வார்த்தை நிறைவேறியே தீரும்.
ஆகவே, நாம் மரணம் அடைய
எப்போதும், ஒவ்வொரு நொடியும் தயாராய் இருக்க வேண்டும்
என்பதற்காகச் சொல்லப்பட்ட இறை வார்த்தைகள்.
மரணம்
கருவில் இருக்கும்போதே வரலாம்.
பிறந்தவுடனே வரலாம்.
இளமையிலும் வரலாம்.
முதுமையிலும் வரலாம்.
விழித்திருக்கும்போதும் வரலாம்.
தூங்கும்போதும் வரலாம்.
இயல்பாகவும் வரலாம்.
விபத்திலும் வரலாம்.
நாம் எதிர்பாராதபோது வரும்.
இறைவார்த்தைகளை நாம் உண்மையிலேயே நம்பினால்
நாம் எப்போதுமே மரணத்திற்குத் தயாராய் இருப்போம்.
மகிழ்ச்சியாயும் இருப்போம்.
எப்போதுமே மரணத்திற்குத் தயாராய் இருப்பது எப்படி?
1. எந்தச் சூழ்நிலையிலும் சாவான பாவம் செய்யக்கூடாது.
2. பலகீனம் காரணமாக பாவத்தில் விழ நேர்ந்தால்
உடனே பாவசங்கீர்த்தனம் செய்து
ஆன்மாவைத் தயார் நிலைக்குக் கொண்டுவந்து விட வேண்டும்.
மரணத்திற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
3.ஒவ்வொரு நாள் படுக்கப் போகும்போதும் ஆன்மப் பரிசோதனை செய்ய வேண்டும்.
சாமியார் பிரசங்கத்தை உற்றுக் கேட்டு விட்டு பூசை முடிந்தவுடன் மறந்து விடுவது போல்
பைபிள் வசனங்களை வாசித்துவிட்டு, எழுந்தவுடன் மறந்து விடக் கூடாது.
இறைவார்த்தைகள் வெறுமனே வாழ்க்கை வழிகாட்டிகள் மட்டுமல்ல
அவைதான் நம் வாழ்க்கையே.
நமது வாழ்வும், வழியும், உயிரும் இயேசுவே.
இயேசுவின் வார்த்தை அழியாது.
இயேசு சொன்ன ஒவ்வொரு சொல்லும் நிறைவேறும்.
ஆகவே இயேசுவின் வார்த்தைகளை வாழ்வோம்.
நிலைவாழ்வை அடைவோம்.
லூர்துசெல்வம்.
No comments:
Post a Comment