http://lrdselvam.blogspot.com/2019/11/1433.html
"இவ்வாறே தன் உடைமையெல்லாம் துறக்காவிடில் உங்களுள் எவனும் என் சீடனாயிருக்க முடியாது."(லூக்.14:33)
******* ******* *******
"அப்பா, நான் இயேசுவின் சீடனாக முடியாதோ?"
"யார் சொன்னது? நாம் ஞானஸ்நானம் பெற்ற அன்றே இயேசுவின் சீடர் ஆகிவிட்டோம்."
"ஆனால் இயேசுவே
'தன் உடைமையெல்லாம் துறக்காவிடில் உங்களுள் எவனும் என் சீடனாயிருக்க முடியாது'
என்று கூறியிருக்கிறாரே!
நான் என்னிடம் உள்ளதை எல்லாம் துறந்துவிட்டால் இவ்வுலகிலேயே வாழ முடியாதே?!"
..."நீ இயேசு கூறியதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
'துறவு' என்ற சொல்லுக்கு 'பற்று இல்லாதிருத்தல்' என்பது பொருள்.
உனது உடைமைப் பொருள் ஒன்று கூறு."
"என்னுடைய Cell phone."
"Suppose , நான்
'உனக்கு Cell phone. வேண்டாம். என்னிடம் தந்துவிடு'
என்று கூறுகிறேன். உனது உணர்வுகள் எப்படி இருக்கும்?"
"நிச்சயமாகத் தரமாட்டேன். இன்றைய காலக்கட்டத்தில் அது இல்லாமல் இருக்க முடியாது. நீங்கள் அதைப் பிடுங்கிக் கொண்டால் ரொம்ப வருந்துவேன்."
"அப்படியானால் உனக்கு அதன் மேல் பற்று இருக்கிறது என்று அருத்தம்."
"இத்தகைய பற்று உலகில் வாழும் அனைவருக்கும்தான் இருக்கும்."
"இருக்கிறதா, இல்லையா என்பது கேள்வி அல்ல.
இயேசுவின் சீடனாக இருக்க விரும்பினால் முதலில் உலகப் பற்றை விடவேண்டும்."
"அதுதான் எப்படி என்று கேட்கிறேன்."
"வங்கிக்குப் போயிருக்க.
பணம் எடுக்கும் விண்ணப்பப் படிவத்தில் எழுதணும்.
கையில் பேனா இல்ல. என்ன செய்வ?"
"யாரிடமாவது ஒரு பேனா இரவல் வாங்கி எழுதுவேன்."
"அப்புறம்?"
"பேனாவை உரியவரிடம் கொடுத்துவிடுவேன்."
"இந்த இடைப்பட்ட காலத்தில் உனக்கும் பேனாவிற்கும் உள்ள உறவு என்ன?"
"இரவல்."
"நீ எழுதிக் கொண்டிருக்கும்போதே பேனாவுக்கு உரியவர் கேட்டால் என்ன செய்வ?"
"கொடுத்து விடுவேன். மீதியை வேறு யாரிடமாவது வாங்கி எழுதுவேன்."
"பேனா மேல பற்று?"
"பேனா மேல பற்றா? அது என் பேனா இல்லையே!''
"Very good"
"எதுக்கு Very good?''
"சரியாய்ப் புரிந்து பதில் சொல்கிறாய். அதற்குத்தான்.
நீ பிறக்குமுன் எங்கே இருந்தாய்?"
"அம்மா வயித்துக்குள்ள."
"அதுக்கு முன்?"
"நானே இல்ல."
"நீயே இல்லாதிருந்தபோது
உனக்கு என்னவெல்லாம் சொந்தமாய் இருந்தது?"
"நானே இல்ல! பிறகு 'எனக்கு'ன்னு எப்படிச் சொல்ல முடியும்?"
"சரி. கடவுள் உன்னைப் படைத்தார். அப்போது உனக்கு என்ன சொந்தமாய் இருந்தது?"
"நானே எனக்குச் சொந்தம் இல்லை.
என்னைப் படைத்தவருக்குதான் சொந்தம்.
அப்புறம் எனக்கு
என்ன சொந்தமாய் இருக்க முடியும்?
சொல்லப் போனால் நீங்களே
எனக்கு சொந்தமில்லை.
படைத்தவர் உங்களை என் அப்பாவாகப் பயன்படுத்தி இருக்கிறார்.அவ்வளவுதான்."
"பரவாயில்லையே! கரெக்டா புரிஞ்சி பேசற."
"மீதியையும் புரிஞ்சிக்கிட்டேன். சொல்லவா?"
"சொல்லு."
"நான் பிறக்கு முன்னே இந்த உலகம் இருந்தது.
நான் எனக்கும் சொந்தம் இல்லை, உங்களுக்கும் சொந்தம் இல்லை.
நான் என்னுடையவை என்று சொல்பவை எல்லாம் கடவுளுக்கு மட்டுமே சொந்தம். .
பயன்படுத்த மட்டுமே என்னிடம் தந்திருக்கிறார்.
நான் அவற்றின்மீது பற்றோ, ஆசையோ வைக்கக்கூடாது.
பத்திரமாகப் பயன்படுத்த வேண்டும், அவ்வளவுதான்."
"கரெக்ட். இப்போ இயேசுவின் வார்த்தைகளைப் புரிந்து கொள்ளலாம்.
நாம் இயேசுவின் சீடர்களாக இருக்க வேண்டுமென்றால் அவரது கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும்.
முதல் கட்டளை நாம் அவரை நேசிக்க வேண்டும்.
இரண்டாவது நமது அயலானை நேசிக்க வேண்டும்.
நமது தந்தை, தாய், மனைவி, மக்கள், சகோதரர் சகோதரிகள், மற்றும் உலகில் உள்ள அனைவரும் நமது அயலான்கள்தான்.
நமது அயலானை நேசிப்பதைவிட இயேசுவை அதிகமாக நேசிக்க வேண்டும்."
"அப்பா, ஒரு சின்ன சந்தேகம்.
அன்புக்க்கும், பற்றுக்கும் என்ன வித்தியாசம்?"
"ஆள்மேல வைக்கப்படுவது அன்பு.
பொருள்மேல வைக்கப்படுவது பற்று.
அன்பு நேசிக்கப் படுபவனை மையமாகக் கொண்டது.
அதாவது நேசிக்கப் படுபவனுக்காக நேசம் செய்பவன் தன்னையே தியாகம் செய்வான்.
இயேசு நம்மை நேசித்தார். நமக்காகத் தன்னையே சிலுவையில் பலியாக்கினார்.
பற்று, வைத்திருப்பவனை மையமாகக் கொண்டது.
உனக்கு உனது Cellphone மேல பற்று இருக்கு.
ஆனால் அதுவால உனக்கு ஒரு ஆபத்துன்னா நீ அதைத் தூரப் போட்டுவிடுவாய்."
"புரிந்துகொண்டேன்.
மீன் பிடிக்கக் கடலுக்குப் போகிறேன்.
நிறைய மீன்கள் கிடைத்திருக்கின்றன.
படகு மூழ்கும் அளவிற்கு மீன்கள் கிடைத்துள்ளன.
நமக்கு நமது உயிர் முக்கியம்.
ஆகவே அதைக் காப்பாற்ற படகு மூழ்காத அளவுக்கு மீன்களை வைத்துக்கொண்டு
மீதியைக் கடலுக்குள் வீசி விடுவோம். சரியா?"
" Super சரி!
நீ பயன்படுத்துவதற்காக பொருட்களைக் கடவுள் தந்திருக்கிறார்.
தேவைப்பட்டால் அவற்றை மற்றவர்களுக்கும் கொடுத்து உதவ வேண்டும்.
உனக்குத் தேவைப்பட்டால் மற்றவர்களிடம் உதவி கேட்கலாம்.
ஒருவருக்கொருவர் கொடுத்து உதவுவதற்காகத்தான் கடவுள் உலகப் பொருட்களை நம்மிடம் தந்திருக்கிறார்.
இயேசுவின் மீதும், அயலான் மீதும் உண்மையான அன்பு உள்ளவன்
தன் உடைமைகள்மீது பற்று வைத்திருக்க மாட்டான்.
அதனால்தான் இயேசு
"தன் உடைமையெல்லாம் துறக்காவிடில் உங்களுள் எவனும் என் சீடனாயிருக்க முடியாது."
என்றார்.
புரிகிறதா?"
"நன்கு புரிகிறது.
இயேசுவுக்காக உங்களைக்கூட துறக்கத் தயாராய் இருக்கிறேன்.
போதுமா?"
"இப்போ நீ உண்மையாகவே இயேசுவின் சீடன்!"
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment