Thursday, November 7, 2019

"மனந்திரும்பும் ஒரு பாவியைக்குறித்துக் கடவுளுடைய தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும்."(லூக்.15:10)

"மனந்திரும்பும் ஒரு பாவியைக்குறித்துக் கடவுளுடைய தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும்."
(லூக்.15:10)
     ******   *******   ******

ஆசிரியர்  வகுப்பிற்குள் நுழைந்து கொண்டிருந்தார்.

இடது கையில் மதிப்பீடு செய்யப்பட்ட தேர்வுத் தாள்க்    (valued answer papers) கட்டு. 

வலது கையில் பிரம்பு.

எல்லா மாணவர்களும் எழுந்து நின்றார்கள்.

"வணக்கம் ஐயா" என்று வாய்கள் ஒரே மாதிரி சொன்னாலும்,

கண்கள் வித்தியாசம் வித்தியாசமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தன.

யாருடைய கண்களும் ஆசிரியர் முகத்தைப் பார்க்கவில்லை.

தினமும் பார்க்கிற முகம்தான்.

சிலருடைய கண்கள் பரீட்சைப் பேப்பர்க் கட்டு மேல்.

சிலருடைய கண்கள் பிரம்பு மேல்.

பிரம்பைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் கண்களில் பயம். 

உள்ளங்கைகளை விரல்களால் தடவி விட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆசிரியர் பிரம்பை மேசை மேல் வைத்துவிட்டு, பேப்பர்க் கட்டை அவிழ்த்தார்.

வழக்கம்போல ஒவ்வொரு பேப்பராக எடுத்து, மதிப்பெண்ணை வாசித்து அதற்குரிய மாணவனிடம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஒரு பையன் அவனுடைய பேப்பரை எடுத்தபோது நடுங்கிக் கொண்டிருந்தான்.

ஆசிரியர் அவனுடைய மதிப்பெண்ணை வாசிக்காமலே பேப்பரைக் கையில் கொடுத்தார்.

அவன் கையில் பேப்பரை வாங்கி மதிப்பெண்ணைப் பார்த்ததுமே அவனுடைய நடுக்கம்  நின்றது.

பயம்  கௌவிக்கொண்டிருந்த முகம் மகிழ்ச்சியால் பொங்கிவடிந்தது.

எல்லோரும் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

100 மார்க் வாங்கினவனின் முகத்தில்கூட அவ்வளவு மகிழ்ச்சி இல்லை.

அவன் எத்தனை மார்க் வாங்கியிருப்பான்? 

ஆசிரியர் ஏன் அவன் மார்க்கை வாசிக்கவில்லை?

எல்லோருடைய கண்களும் அவன் மேல் இருந்தன.

ஆசிரியர் பேப்பர்களை எல்லாம் கொடுத்து முடித்து விட்டார்.

மாணவர்கள் தங்கள் பேப்பரில் காண்பித்த அக்கரையை விட அந்த ஒரு பையனின் பேப்பர் மேல் அதிகம் அக்கரை காட்டுவதுபோல் தெரிந்தது.

அவனது பக்கத்திலிருந்த பையன் மெதுவாக அவனது கையை இடித்து,

 "எத்தனை மார்க்ல?" என்றான்

அவன் சப்தமாகப் பதில் சொன்னான்,

"நான் பாஸ் பண்ணிவிட்டேன்!"

அத்தனை பேருடைய மகிழ்ச்சியையும் சேர்த்தாலும் அவன் மகிழ்ச்சிக்கு ஈடாகாது!

வழக்கமாக 20 மார்க்கைத் தாண்டாத அவன் இப்போது எடுத்திருப்பது 36 மார்க்தான்!

ஆனால் அவனைப் பொறுத்த மட்டில் அது பெரிய சாதனைதான்.

20 எடுத்தவன் 36 எடுக்க முடியுமானால் அடுத்து 52 எடுக்க முடியும். அடுத்து 68 ம்
எடுக்க முடியும். 100 வரை எடுக்க முடியும்!

நடந்தவன் ஓடுவதைவிடப் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியைவிட

 சாகக் கிடந்தவன் எழுந்து உட்காரும்போது ஏற்படுகின்ற மகிழ்ச்சி அதிகமானதாக இருக்கும்.

அதேபோல்தான் பரிசுத்தவான் பரிசுத்தத்தனத்தில் அதிகமாகும்போது ஏற்படும் மகிழ்ச்சியைவிட 

ஒரு பாவி மனம் திரும்பும்போது விண்ணகத்தில் அதிக மகிழ்ச்சி உண்டாகும்.


"மனந்திரும்பும் ஒரு பாவியைக்குறித்துக் கடவுளுடைய தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும்." என்று நம் ஆண்டவர் சொல்கிறார்.

ஏன் அப்படிச் சொன்னார்?

கடவுள் நம்மைப் படைக்கும்போதே ஒவ்வொருவருக்கும் ஒரு காவல் தூதரை நியமித்திருக்கிறார்.

அவருடைய பணி தன் பொறுப்பிலுள்ள நபரை விண்ணகப் பாதையில் வழி நடத்துவது.


நமக்காக இறைவனிடம் வேண்டி நமக்கு வேண்டிய வரங்களைப் பெற்றுத்தருவது,

 இறைவன் நமக்குத் தரும் செய்திகளை நம் உள்ளத்தில் ஏற்படும் தூண்டுதல்கள் மூலம் தெரிவிப்பது,

நாம் பாவ நிலையில் இருக்கும்போது 

நாம் மனம் திரும்பும்படி

 நமக்காக வேண்டிக் கொண்டேயிருப்பார்.

அன்பின் சுபாவம் அன்பு செய்வதும், 

அன்பு செய்யப்பட ஆசைப்படுவதும்தான்.

கடவுள் நம்மைப் படைத்தது

 அன்பு செய்யவும் , 

அன்பு செய்யப்படுவதற்காகவும்தான்.

அவர் நமக்குக் கொடுத்திருக்கும் கட்டளையே

 நமது சிந்தனையாலும்,

 சொல்லாலும்,

செயலாலும்

அவரையும்,

அவரால் படைக்கப்பட்ட நம் அயலானையும் 

அன்பு செய்ய வேண்டுமென்பதுதான்.

நாம் அன்பு செய்ய மறுக்கும்போதுதான் பாவம் செய்கிறோம்.

அன்பு செய்ய மறுப்பது = பாவம் செய்வது.

அன்பும் அன்பும் இணையவேண்டும்.

இறையன்பும், நமது அன்பும் முடிவில்லா காலம் இணைவதுதான் மோட்சம்.

நாம் அன்பு செய்ய மறுக்கும்போது, 

அதாவது,

பாவம் செய்யும்போது

அன்பை எதிர்பார்க்கும், அதற்காகவே நம்மைப் படைத்த இறைவனை நிந்திக்கிறோம்.

When we refuse to love God, we insult Him.

அந்த நிந்தைக்குப் பரிகாரம் செய்யவே இறைவனே மனிதனாகப் பிறந்து,

தன்னையே சிலுவை மரத்தில் பலியாக்கினார்.

இது தன் அன்பின் மிகுதியை நமக்கு வெளிப்படையாகக் காண்பிக்கவே.


தன்னையே பலியாக்கி தன் அன்பை நிரூபித்த இறைவனோடு நாம் இணைய வேண்டுமானால் 

நாம் நமது பாவத்திற்காக வருந்தவேண்டும்.

இதில் உள்ள பெரிய பிரச்சனை

 நாம் நல்லது எதையும் சுயமாகச் செய்ய முடியாது.

நாம் சுயமாகச் செய்ய முடிந்தது பாவத்தை மட்டும்தான்.

பாவத்திலிருந்து விடுதலை பெற இறைவனின் அருள் வேண்டும்.

அந்த அருள் இறைனால் தாராளமாகத் தரப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

இறைவனால் தரப்படும் அருளை ஏற்று நாம் செயல்பட வேடும்.

இறையருளை ஏற்கும்படி சதா நம்மைத் தூண்டிக் கொண்டிருப்பது நமது காவல் சம்மனசுதான்.

காவல் சம்மனசின் தூண்டுதலை ஏற்று,

நாம் மனம் திரும்பி பாவமன்னிப்பு கேட்கும்போது அவர் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறார்.

நாமும் மன்னிப்புப் பெற்று இறையன்போடு இணைவோம்.

ஆகவேதான் நாம் மனம் திரும்பும்போது 

"மனந்திரும்பும் ஒரு பாவியைக்குறித்துக் 

கடவுளுடைய 'தூதரிடையே' மகிழ்ச்சி உண்டாகும்"
என்று இயேசு சொல்கிறார்.

காவல் சம்மனசு நமக்குக் காவல் சம்மனசு.

அவர் நமக்குத் தரும் தூண்டுதல்களை ஏற்போம்,

இறைவழி நடப்போம்.

லூர்துசெல்வம். 


No comments:

Post a Comment