"இயேசுவே, தாவீதின் மகனே, என்மீது இரக்கம்வையும்"
(லூக்.18:38)
* * * * * * * * * * * * * * * * * * * * *
வழியோரத்தில் அமர்ந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்த ஒரு குருடன் இயேசுவைப் பார்க்காமலேயே,
"இயேசுவே, தாவீதின் மகனே, என்மீது இரக்கம்வையும்"
என்கிறான்.
அவன் தன் உடலிலுள்ள பார்வையற்ற கண்கள் பார்வை பெறுவதற்காக இந்த சிறிய செபத்தைச் சொல்லுகிறான்.
அவன் செபம் கேட்கப்படுகிறது.
அவன் பார்வை பெறுகிறான்.
அவனும் கடவுளை மகிமைப் படுத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தான்.
அநேக சமயங்களில் நமது ஆன்மீகக் கண்களின் பார்வை இன்மை (Spiritual blindness) காரணமாக நம்மால் ஆன்மீக உண்மைகளைக் காணமுடிவதில்லை.
பைபிள் வசனங்களை வாசிப்போம், அர்த்தம் தெரியாது.
அர்த்தம் தெரியாவிட்டால்கூட பரவாயில்லை, தவறான அர்த்தம் தோன்றும்.
தெரியாததைவிட தவறாகத் தெரிவது ஆபத்து.
கம்பு என்று நினைத்துக் கொண்டு பாம்பைக் கையில் எடுத்தால் எப்படி இருக்கும்?
இன்று பைபிளை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு,
வெளியே சென்றுள்ள பிரிவினை சபைகள் ஏராளம்.
ஒவ்வொரு சபையினரும் ஒவ்வொரு விதமாகப் பைபிளுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு அர்களுடைய ஆன்மீகப் பார்வை இன்மைதான் (Spiritual blindness) காரணம்.
* * *
இயேசுவே, தாவீதின் மகனே, உம்மைப் பின்பற்றும் எங்கள் மேல் இரக்கம்வையும்.
உமது வார்த்தைகளுக்குச் சரியான பொருள் காண எங்கள் ஆன்மீகக் கண்களுக்கு ஒளிதாரும்.
* * *
நம்மைப் படைத்த எல்லாம் வல்ல இறைவன்
நம்மை எந்த நோக்கத்திற்காகப் படைத்தாரோ
அந்த நோக்கத்தை நாம் அடைய
தனது பராமரிப்பின் மூலம் நம்மை வழி நடத்துகிறார்.
நாம் அநேக சமயங்களில் அவரது வழி நடத்துதலைப் புரிந்து கொள்ளாமல்,
எங்கே அவர் நம்மைக் கவனிக்காமல் இருக்கிறாரோ எனப் பயப்படுகிறோம்.
இதற்குக் காரணம் நமது ஆன்மீகப் பார்வை இன்மைதான்.
உதாரணத்திற்கு, ஏதோ ஒரு வேலையை (Job) மனதில் வைத்துக் கொண்டு அதைப் பெற முயற்சிகள் செய்வதோடு
நம் முயற்சிகள் வெற்றி பெற இறைவனை இடைவிடாது வேண்டுகிறோம்.
ஆனால் நமது முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிகின்றன.
கடைசியில் நாம் விரும்பாத ஒரு பணியில் அமர நேர்கிறது.
இந்நிகழ்வை இரண்டு கண்ணோக்கில் நோக்கலாம்.
1.நாம் எவ்வளவோ செபித்தும் கடவுள் நமது செபத்திற்கு செவி சாய்க்க மறுத்து விட்டார். இனி அவரை நம்பிப் பயனில்லை. (ஆன்மீகப் பார்வை இன்மை)
2. நாம் வேலையைப் பெறுவதற்காக இடைவிடாது செபித்தோம்.
நமக்கு எதிர்காலம் தெரியாது.
ஆனால் நம்மைப் படைத்தவர் நமது எதிகாலத்தை நமது நன்மையைக் கருத்தில் கொண்டே திட்டம் இடுகிறார்.
அவர் என்ன செய்தாலும் நமது நன்மைக்காகத்தான் இருக்கும்.
ஆகவே நமது முயற்சிகள் தோல்வியில் முடிவதும் நமது எதிர்கால வெற்றிக்கே.
வெற்றியோ, தோல்வியோ, இறைவனுக்கு நன்றி.
* * *
இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கம் வையும்.
நீர் என் வாழ்வில் என்ன செய்தாலும் அது என் நன்மைக்கே என்ற உண்மையைக் காண
என் ஆன்மீகக் கண்களுக்கு ஒளி தாரும்.
* * *
நமது தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல
பொது வாழ்விலும் கூட நம்மால் உண்மையை உணர முடியாத அநேக நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
நமது தாய்த் திருச்சபையில்
இன்று
பழமைவிரும்பிகளுக்கும் (Conservatives),
புதுமை விரும்பிகளுக்கும் (progressives)
இடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம்
எங்கே பிரிவினையில் (schism)
முடிந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது.
ஆனால் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கும்போது
இந்தப் பயம்கூட உண்மையை அறிய முடியாத ஆன்மீகப் பார்வை இன்மையின் காரணமாகத்தான் என்று தோன்றுகிறது.
ஏனெனில் திருச்சபையை நிறுவியர் எல்லாம் வல்ல கடவுள்.
"நான் உனக்குச் சொல்லுகிறேன். உன் பெயர் "பாறை."
இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.
நரகத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிக்கொள்ளா."
(மத்.16:18)
இராயப்பர் என்ற பாறைமேல் கட்டப்பட்ட திருச்சபையைமீது
அழிவு சக்திகள் மோதலாம்,
ஆனால் அசைக்க முடியாது.
இராயப்பரே முயன்றால் கூட அதை அதை அசைக்க முடியாது.
ஏனெனில் அதைக்கட்டியவர் சர்வ வல்லப தேவன்.
அதைக் காப்பதற்காகவே
தனது ஆன்மாவோடும், சரீரத்தோடும்
உண்மையாகவே
நம்மோடு திவ்ய நற்கருணையில் தங்கியிருக்கிறார் இயேசு!
'திருச்சபைக்கு எதுவும் ஆகிவிடுமோ' என்று பயந்தால்
அது இயேசுவின் வல்லமையையே சந்தேகப் படுவது மாதிரி!
சாத்தான் இயேசு மேலேயே மோதிப் பார்த்தான்.
இப்போது அவரது திருச்சபை மீது மோதிப்பார்க்கிறான்.
ஆனால் 'நரகத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிக்கொள்ள முடியாது.'
* * *
இயேசுவே! தாவீதின் மகனே!
உமது பிள்ளைகளாகிய எங்கள் மேல் இரக்கம் வையும்.
உமது திருச்சபையின் பிள்ளைகள் நாங்கள்.
உமது திருச்சபைக்கோ, எங்களுக்கோ
எந்த தீய சக்தியாலும்
எதுவும் செய்ய இயலாது என்று உறுதியாக நம்புகிறோம்.
இருந்தாலும் ஒரு வேண்டுகோள்.
நவீனவாதிகளுக்கு (modernists) நல்ல புத்தியைக் கொடும்."
* * *
ஒரு லட்டுவையும், ஒரு கழுதை விட்டையையும் அருகருகே வைத்து,
ஒரு குருடனை அழைத்து வந்து,
"உன் முன்னால் இரண்டு பொருட்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை எடுத்து வாயில் போடு."
என்று சொன்னால்,
அவன் என்ன செய்வான்?
அவன் புத்தி உள்ளவனாக இருந்தால்,
"முதலில் எண் கண்ணுக்கு வைத்தியம் பாருங்கள்.அப்புறமாக எடுக்கிறேன்" என்பான்.
நமது தேர்வுக்காக நம்முன் இரண்டு வித வாழ்க்கைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.
ஒன்று முடியக்கூடிய சிற்றின்பம் நிறைந்த மண்ணுலகம்.
அடுத்தது முடிவில்லா பேரின்பம் நிறைந்த விண்ணுலகம்.
இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இரண்டில் சிற்றின்பம் நிறைந்த மண்ணுலகம் நமது
கண்ணுக்குப் புலப்படுகிறது.
பேரின்பம் நிறைந்த
விண்ணுலகம் நமது
கண்ணுக்குப் புலப்படவில்லை.
இப்போது நாம் ஆண்டவரை நோக்கி வேண்டுவோம்:
"இயேசுவே, தாவீதின் மகனே,
என் மேல் இரக்கம் வையும்.
நான் மண்ணுலகில் இருப்பதால் அதன் சிற்றின்பங்கள் எனது கண்களுக்குப் புலப்படுகின்றன.
அவை என்னைக் கவர்ந்து இழுக்கின்றன.
ஆனாலும் அவை எல்லாம் முடிவுக்கு உரியன என்பதால் அவற்றின் மீது எனக்கு அக்கரை இல்லை.
ஆனால் முடிவில்லா பேரின்பம் உள்ள விண்ணுலகைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
காரணம் எனது அகக்கண்களில் போதிய ஒளி இல்லை.
இறைவா, எனது அகக் கண்களை முற்றிலும் திறந்தருளும்.
அவற்றை உமது தெய்வீக ஒளியால் நிறப்பியருளும்.
அவ்வொளினால் நாம் மறுவுலக வாழ்வைப் பற்றி முற்றிலுமாக உணர்ந்து
அதற்காகவே வாழ உமது அருள் உதவியை அள்ளிஅள்ளித் தாரும்.
என் மீது இரங்கி என் அகக் கண்களைத் திறந்தருளும் ஆண்டவரே. ஆமென்."
லூர்துசெல்வம்.
No comments:
Post a Comment