"என் விருப்பத்தை நிறைவேற்ற அன்று, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே நான் வானத்திலிருந்து இறங்கிவந்தேன்
அரு.6:38)
***** ******** *******
"என் விருப்பத்தை நிறைவேற்ற அன்று, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே நான் வானத்திலிருந்து இறங்கிவந்தேன்."
பரிசுத்த தமதிரித்துவத்தில் மூன்று ஆட்கள், ஒரே கடவுள்.
அதாவது ஒரே கடவுள் மூன்று ஆட்களாய் இருக்கிறார்.
மூன்று ஆட்களுக்கும்
ஒரே ஞானம்,
ஒரே சித்தம்,
ஒரே வல்லமை,
ஒரே தேவசுபாவம்.
ஆகவே தந்தையின் 'சித்தம்தான் மகனின் சித்தம்.
மகனின் சித்தம்தான் தந்தையின் சித்தம்.
ஆகவே இயேசு
"என் விருப்பத்தை நிறைவேற்றவே
வானத்திலிருந்து இறங்கிவந்தேன்"
என்று சொல்லியிருந்தால்கூட தப்பே இல்லை.
இருவரின் சித்தமும்,
பரிசுத்த ஆவியையும் சேர்த்துக் கொண்டால்
மூவரின் சித்தமும் ஒரே சித்தம்தான்.
பிறகு ஏன் இயேசு "என் விருப்பத்தை நிறைவேற்ற அன்று, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே"
என்கிறார்?
நமக்காகத்தான்.
நமக்கு பாடம் கற்பிக்கத்தான்.
நமக்குப் புரியவைக்கத்தான்.
உண்மையான ஆசிரியர் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும்போது மாணவர்களுடைய நிலைக்கு
(Level) இறங்கி வந்துவிடுவார்.
சொற்பொழிவு ஆற்றுவது வேறு, போதிப்பது வேறு.
சொற்பொழிவு ஆற்றுவதில் முக்கியத்துவம் பெறுவது 'சொல்'.
போதிப்பதில் முக்கியத்துவம்
பெறுவது 'புரிதல்.'
இயேசு போதித்தார்.
சாதாரண மக்களுக்குப் போதித்தார்.
சாதாரண நடையில் போதித்தார்.
புரியும்படியாகப் போதித்தார்.
அவரது போதனையை மெதுவாக 'அசை போட்டுப் பார்த்தால்' அதாவது 'தியானித்தால்' இது புரியும்.
முதலாவது மக்களுக்குத் தாழ்ச்சியைக் கற்பிக்க வேண்டும்.
தாழ்ச்சிதான் சகல புண்ணியங்களுக்கும் தலையானது.
அது இல்லாததினால்தான் லூசிபெர் சாத்தான் ஆனான்!
தன் தந்தைக்கு நிகரானவராக இருந்தாலும்
நமது பார்வையில் தன்னைத் தாழ்த்தி,
தந்தையின் விருப்பப்படியே தான் நடப்பவராகக் கூறுகிறார்.
நாம் நமது விருப்பப்படி வாழ்ந்தால் அது உலகவாழ்வு,
இறைவன் விருப்பப்படி வாழ்ந்தால்தான் ஆன்மீக வாழ்வு.
கடவுள் தன் விருப்பப்படி செயலாற்றுகிறார்,
அவருடைய பிள்ளைகளாகிய நாமும் அவர் விருப்பப்படியே செயலாற்ற வேண்டும்.
இயேசுவைப் பின்பற்றுபவர்களாகிய நாம் அவரை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.
நாமும் அவரைப் போலவே
கடவுளின் சித்தத்தை நிறைவேற்ற வேண்டும்.
அதற்காகத்தான் படைக்கப் பட்டிருக்கிறோம்.
அடுத்து நமக்கு ஒரு இறையியல் உண்மையைப் புரிய வைப்பதற்காக இவ்வாறு கூறுகிறார்.
கடவுள் ஒருவர், ஆட்கள் மூவர்.
தந்தை மகனும் அல்ல, பரிசுத்த ஆவியும் அல்ல.
அப்படியயே மகனும், பரிசுத்த ஆவியும்.
மனுவுரு எடுத்தது மகன் மட்டும்தான்,
பிதாவும் அல்ல, பரிசுத்த ஆவியும் அல்ல.
ஆனால் ஒரே கடவுள்தான் மனுவுரு எடுத்தார்.
கடவுளைக் கூறுபோட முடியாது.
இந்த மறை உண்மையைப் புரிய வைப்பதற்காகத்தான்
"தந்தை தன் ஒரே பேரான மகனை அனுப்பினார்"
"என் விருப்பத்தை நிறைவேற்ற அன்று, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே"
" பரிசுத்த ஆவியால் கருத்தரித்தாள்"
"இதோ என் நேச மகன்"
"தந்தை என் பெயரால் அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியான துணையாளரும்"
போன்ற வசனங்கள் பைபிளில் வருகின்றன.
நாம் நம்மை நேசிப்பதுபோல நமது அயலானையும் நேசிக்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை.
இக்கட்டளை கடவுள் நித்திய காலமாகச் செய்துவருவதின் பிரதிபலிப்பு,
அதாவது நாம் அவரது சாயல்.
இறைவன் தன்னைத்தானே நித்திய காலமாக நேசிக்கிறார்.
இந்நேசம் தம திரித்துவத்தின் முன்று ஆட்களும் ஒருவரை ஒருவர் முழுமையாக நேசிப்பதில் அடங்கி இருக்கிறது.
அதாவது மூவரின் நேசம்தான் இறைவன் தன்னைத்தானே நேசிக்கும் நேசம்.
ஒரே நேசம்.
நாமும் இறைவனை நேசிக்க வேண்டும்.
நம்மையும் நேசிக்க வேண்டும்.
அயலானையும் நேசிக்க வேண்டும்.
நேசம் ஒன்றுதான்.
நாம் இறைவனின் பிள்ளைகள்.
ஆகவே நம்மில் இருப்பது குடும்ப நேசம்.
ஒரே குடும்பம், ஒரே நேசம்.
இந்த இடத்தில் ஒரு முக்கியமான உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டும்.
நமது மொழி
அளவுள்ள நம்மைப் பற்றிய எண்ணங்களை
நமக்குள் பரிமாறிக் கொள்வதற்காக
நம்மால் உருவாக்கப்பட்டது.
நாம் இந்த மொழியால்தான் அளவற்ற கடவுளைப் பற்றிய உண்மைகளை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறோம்.
ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்கள் உலகியல் கணித அறிவுக்கு அடிப்படை.
அதைக்கொண்டு இறையியல் உண்மையை விளக்க முயல்கிறோம்.
எவ்வளவுதான் முயன்றாலும் நம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது.
இறைவன் கணித இயலுக்கும் அப்பாற்பட்டவர்.
God is beyond Mathematics!
இப்ரச்சினைக்கு ஒரே தீர்வு இயேசுவின் கூற்றை அப்படியே விசுவசிப்பது மட்டும்தான்.
அனால்தான் இயேசு சொல்கிறார்,
'என் தந்தையின் விருப்பம் இதுவே:
மகனைக் கண்டு,
அவரில் விசுவாசம் கொள்பவன் எவனும்
முடிவில்லா வாழ்வு பெறவேண்டும்."
இயேசு ஒவ்வொரு முறை குணமாக்கும்போதும்,
"உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்கிறார்.
அவருக்குத் தெரியும் குணமாக்குவது அவர்தான் என்று.
இருந்தாலும் நமது விசுவாசத்தைப் பெருமைப் படுத்துகிறார்.
ஏன்?
நாம் விசுவாசத்தில் உறுதியாகி வளர்வதற்காகத்தான்.
நாம் குழந்தைகளுக்கு நடக்கச் சொல்லிக் கொடுக்கும்போது
நாம்தான் கையைப் பிடித்துக் கொண்டு போவோம்.
ஆனாலும் குழந்தையிடம் "Good job" என்று கூறி உற்சாகப்படுத்துவோம்.
அதே போல்தான் நம் இரட்சகராகிய இயேசுவும் நம்மை உற்சாகப் படுத்துகிறார்.
அதுமட்டுமல்ல விசுவாசம்தான் ஞான வாழ்வின் உயிர் என்ற உண்மையையும் நம் மனதில் பதிக்க ஆசிக்கிறார்.
நமது விசுவாசத்துக்கு ஆதாரமே இறைவன்தான்.
தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் விசுவசிப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment