Sunday, November 17, 2019

"ஆயினும் மனுமகன் வரும்பொழுது மண்ணுலகில் விசுவாசத்தைக் காண்பாரோ?"(லூக்.18:8)

"ஆயினும் மனுமகன் வரும்பொழுது மண்ணுலகில் விசுவாசத்தைக் காண்பாரோ?"
(லூக்.18:8)
**     **    **    **    **   **  **   **
"ஏங்க! ..."

..."ஒரு வசனம்....விளக்கம், அவ்வளவுதான?"

"அத எப்படி அவ்வளவு கரெக்டா கண்டுபிடிச்சீங்க?"

..."ஏண்டி, 'இன்னொரு இறைவசனத்திற்கு விளக்கம் வேண்டும், நாளைக்கு.'ன்னு நீதான சொன்ன,  நேற்று!"

"பரவாயில்லையே நேற்று சொன்னதை இன்று வரை ஞாபகத்தில் வச்சிருக்கீங்களே!

ஆண்டவர்,

"ஆயினும் மனுமகன் வரும்பொழுது மண்ணுலகில் விசுவாசத்தைக் காண்பாரோ?"

என்று இயேசு என்ன பொருளில் கூறினார்?"

..."இதில் ஒன்றும் மறைமுகமான பொருள் இல்லையே!

இயேசு கூறிய சந்தர்ப்பத்தை நோக்கினாலே பொருள் விளங்கிவிடுமே!

இயேசு எந்த சந்தர்ப்பத்தில் இவ்வசனத்தைக் கூறினார்?"

"இடைவிடாது செபிக்க வேண்டியதின் அவசியத்தை விளக்குவதற்காக இயேசு ஒரு உவமை கூறினார்.

விதவைப் பெண் ஒருத்தி தனக்கு நீதி வழங்கும்படி ஒரு
நடுவனிடம் முறையிடுகிறாள்.

அவன் கடவுளுக்கும் அஞ்சாதவன். 

மனிதனையும் மதிக்காதவன். 

அவன்  வெகுகாலம் நீதி வழங்காமல் காலம் கடத்திக் கொண்டே வந்தான்.

 என்றாலும், இக்கைம்பெண் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டிருந்ததால் நீதி வழங்கினான்.

கடவுளுக்கே அஞ்சாத அந்த நடுவனே இடைவிடாது தொந்தரவு செய்து கொண்டிருந்த கைம்பெண்ணுக்கு நீதி வழங்கினான் என்றால் 


 'தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூப்பிடும்பொழுது கடவுள் நீதிவழங்காமல் இருப்பாரோ? 

அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரோ?'

விரைவிலேயே அவர்களுக்கு நீதி வழங்குவார் என உங்களுக்குச் சொல்லுகிறேன்.'

என்று இயேசு சொன்னார்.

மனந்தளராமல் எப்பொழுதும் செபிக்க வேண்டும்
என்பதற்காக அவர் இந்த உவமையைச் சொன்னார்.

ஆனால் உவமையைச் சொல்லி முடித்தபின்,

"ஆயினும் மனுமகன் வரும்பொழுது மண்ணுலகில் விசுவாசத்தைக் காண்பாரோ ?" என்றார்.

மனந்தளராமல் செபித்தால் கேட்டது கிடைக்கும் என்று கூறி விட்டு, 

இந்த வசனத்தை ஏன் கூறினார் என்பது புரியவில்லை."

"உனக்கு ஏன் புரியவில்லை என்பதுதான் என்பது எனக்குப்
புரியவில்லை.

விசுவாசத்துக்கும், செபத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கத்தான் இந்த உவமையயை இயேசு சொன்னார்.

கைம்பெண் நடுவன் தன்  தொந்தரவுக்கு செவி சாய்ப்பான் என்ற உறுதியான நம்பிக்கையுடன்தான் அவனைத் தொந்தரவு செய்தாள்.

நாமும் இறைவனிடம் வேண்டும்போது கேட்பது கிடைக்கும் என்று உறுதியாக நம்ப வேண்டும்.

நமது நம்பிக்கைக்கு ஆதாரமாய் இருக்க வேண்டியது 

இறைவன்மீது நாம் கொண்டிருக்க வேண்டிய ஆழமான விசுவாசம்.

குழந்தை ஏன் தன் தாயிடம் பால் கேட்டு அழுகிறது?

முதலில் அதற்கு அவள் தாய் என்று 'உறுதியாகத் தெரியும்.'

அடுத்து தொடர்ந்து அழுதால் பால் கிடைக்கும் உறுதியாக நம்புகிறது.

குழந்தைக்குத் தெரியும் என்றுதான் சொன்னேன், 'விசுவசிக்கிறது' என்று சொல்லவில்லை.

ஏனெனில் விசுவாசம் தேவ சம்பந்தமான புண்ணியம்.
(Theological virtue)

இறைவனைத் தன் தந்தை என்று விசுவசிப்பவர்களுக்கு மட்டுமே அவர்மீது நம்பிக்கையும் பாசமும் வரும்.

நம்மிடம்  விசுவாசம் இருக்கிறது, ஆனால் ஆழமாக இருக்கிறதா?

ஆழமான விசுவாசத்தால்தான் காரியங்களைச் சாதிக்க முடியும்.

தேர்வில் வெற்றி பெற்றவர்கள்தான் வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.

ஒருவன் 35% மார்க் எடுத்து வெற்றி பெற்றிருக்கிறான்.

இன்னொருவன் 50% மார்க் எடுத்து வெற்றி பெற்றிருக்கிறான்.


மற்றும் ஓருவன் 99% மார்க் எடுத்து வெற்றி பெற்றிருக்கிறான்.

மற்றும் ஓருவன் 100% மார்க் எடுத்து வெற்றி பெற்றிருக்கிறான்.

நால்வரும் வெற்றி பெற்றவர்கள்தான்.

நால்வரும் வேலைக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்."

"100% எடுத்தவனுக்குதான்.

நான் கேட்ட கேள்விக்குப் பதில் கூறாமல் எனக்குத் தெரிந்ததையே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். 

"நான் வரும்பொழுது மண்ணுலகில் விசுவாசத்தைக் காண்பேனோ" என்ற சந்தேகம் ஏன் இயேசுவுக்கு வருகிறது? "

..."ஏடி, இயேசு  கடவுள். அளவற்ற ஞானம் உள்ளவர். நித்திய காலமாக அவருக்கு எல்லாம் தெரியும்.

சந்தேகம் ஒன்றும் வராது.

நமது மனித மொழியில் பேசுவதால் நமது பேச்சு வழக்கைப் பின்பற்றுகிறார்.

நாம் வகுப்பில் சொல்வதில்லை?

"இப்படிப் படித்தால் பாஸ் பண்ணுவாயாடா? " என்று.

இதற்கு

'நல்லா படிச்சா பாஸ் பண்ணுவன்னு' அர்த்தம்.

'விசுவாசத்தைக் காண்பாரோ' என்பதை 

இயேசு விசுவாசத்தைக் காண ஆசைப்படுகிறார் 

என்று Positive ஆ எடுத்துக்கொள்வோமே! 

நமது விசுவாசத்தின் அளவு
இயேசுவுக்கு உறுதியாகத் தெரியும்.

இயேசுவின் இரண்டாம் வருகைக் காலம் நெருங்கி விட்டது என்று பலர் கூறுகிறார்கள்.

ஆனால் கடவுளுக்கு மட்டும்தான் தெரியும் எப்போது இறுதிக்காலம் வரும் என்று.

நாம் வயதில் வளரவளர சாவை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்

அதே போல உலகமும் முடிவை  நெருங்கிக் கொண்டுதான் இருக்கிகிறது.

ஆனால் எவ்வளவு நெருங்கி விட்டது என்று யாருக்கும் தெரியாது.

இப்போது பிறக்கிற குழந்தை நூறு ஆண்டுகள் வாழும் என்று வைத்துக்கொண்டால்

அதற்கு ஒரு வயது ஆகும்போதே அது சாவை நோக்கி ஒரு ஆண்டு நெருங்கிவிட்டது என்று கூறலாமே?"

"இங்கே பாருங்க, நான் அந்த விளக்கம் எல்லாம் கேட்கவில்லை.

உலகம் முடிய இன்று 1,000 என்ன
10,000 ஆண்டுகள் வேண்டுமானாலும் ஆகி விட்டுப் போகட்டும்.

நான் கேட்கிற கேள்வி, இப்போது விசுவாச நிலை எப்படி இருக்கிறது?".

..."ரொம்ப பரிதாபகரமான நிலையில இருக்கு!"


"ஏன் அப்படிச் சொல்றீங்க?"

..."உண்மையான விசுவாசம் உள்ளவங்க யாருக்காக, எதுக்காக வாழ்வாங்க?"

"உண்மையான விசுவாசம் உள்ளவங்க யாரை விசுவசிக்கிறாங்களோ அவருக்காக, அவரைத் திருப்திப் படுத்துவதற்காக,

அதாவது கடவுளுக்காக வாழ்வார்கள்!"

..."கடவுளுக்காக மட்டும் வாழ்பவர்கள், 

(மற்றவர்களைக் கணக்கில் சேர்க்கவேண்டாம், அவர்களிடம் விசுவாசம் இல்லை)

கிறிஸ்தவர்களில் எத்தனை பேர் இருப்பார்கள்?"

"தங்களுக்காக வாழ்ந்து கொண்டு,

தங்கள் உதவிக்காக  இறைவனை அழைப்பவர்களின் எண்ணிக்க்கைதான் அதிகம் இருக்கும்."


..."உள்ளூரில் கோவில் இருக்கும். அங்கு போக நேரம் இருக்காது.

ஆனால் குழந்தை வரம் கேட்டு வேளாங்கண்ணிக்குப் போவார்கள்.


உண்மையான விசுவாசிகள்

இறைவனைத் தங்களுக்காக அல்ல, 

தங்களை இறைவனுக்காகப் 
பயன்படுத்துவார்கள்."

"உலகமென்கிலும் இதே கதைதான்.

கோவிலுக்குப் பூசைக்கு வருவோர் எண்ணிக்கை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாகக் குறைந்து கொண்டே வருகிறது.

பாவசங்கீர்த்தனம் செய்வோரின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து விட்டது.

தேவ அழைத்தலை ஏற்றுக் கொள்வோரின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.

குருக்களின் பற்றாக்குறை காரணமாக 
தென்னமெரிக்க நாடுகளில்

 திருமணமான வயதானவர்களுக்குக் குருப்பட்டம் கொடுக்கும்டி

 வத்திக்கானில் நடைபெற்ற ஆயர்கள் பேரவையில்

 பாப்பரசரிடம் விண்ணப்பித்துள்ளனர்.

இதை மற்ற நாடுகளும் ஆசித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

குருக்கள் மத்தியிலும் நற்செய்திப் பணிக்கான ஆர்வம் அதிகரிப்பதாகத் தெரியவில்லை.

சில துறவற சபைக் குருக்கள் பள்ளிக்கூடப் பணியில் காட்டும் ஆர்வத்தை 

நற்செய்திப் பணியில் காட்டுகிறார்களா? 

ஆடம்பரத் திருழாக் கொண்டாட்டத்தில் உள்ள ஆர்வம்

மக்களுக்கு ஆன்மீக வாழ்வில் இருக்கிறதா?

ஏழ்மையில் பிறந்த இறைமகனின் கிறிஸ்மஸ் விழாக்களில் காணப்படும் பணக்காரத்தனமும்,

 ஆடம்பரமுமே 

நமது விசுவாச ஏழ்மையின் கண்ணாடி.

திருவிழாவின் வெற்றி 
பிரியும் காணிக்கையை வைத்துத் தீர்மானிக்கப்படுகிறது.

செபக்கூட்டங்களில்கூட குணமளிக்கும் செபத்தைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்."

..."ஏண்டி, ஒண்ணும் தெரியாதது மாதிரி முழிச்ச

இவ்வளவு தெரிஞ்சி வச்சிருக்க.

இப்போ சொல்லு, இப்போ ஆண்டவர்  உலகிற்கு வந்தார்னா விசுவாசத்தைக் காண்பாரா?"

"சந்தேகம்தான். யாருக்கும் விசுவாசம் இருக்கிறது மாதிரி தெரியல, 

அதாவது வெளியே தெரியற அளவுக்கு இல்ல.


யாரிடமும் அர்ப்பண வாழ்வு இல்ல,

அற்ப பண வாழ்வுதான் இருக்கு.


செபம் சொன்னாக்கூட இவ்வுலகு சம்பந்தப்பட்ட பொருட்களுக்காகத்தான் சொல்றாங்க."

..."ஆனால் அர்ப்பணவாழ்வு உள்ளவங்க யாருமே இல்லைன்னு சொல்ல முடியாது.

இருக்காங்க. ஆனால் உலகம் அவங்கள மதிக்கிறதில்ல."

"உண்மைதான். 

உலகம் பணம் உள்ளவங்களையும் அதிகாரம் உள்ளவங்களையும்தான் மதிக்கிறது."

..."நாம் யாருடைய மதிப்பையும் சம்பாதிப்பதற்காக உலகில் பிறக்கவில்லை.

நமது பிறப்பின் ஒரே நோக்கம் இறைவன் மட்டும்தான்.

இறைவனை அடைவதற்கு இவ்வுலகைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இவ்வுலக காரியங்களுக்காக மட்டும் இறைவனை அணுகி,

நமது உண்மையான நோக்கத்தை மறந்து விடுவோமானால் 

நமது  விசுவாசத்தினால் நமக்குப் பயனில்லை, அது இல்லாதது மாதிரிதான்.

இறைவன் இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்வதுமட்டும் முழுமையான விசுவாசம் அல்ல.

 இறைவனுக்காக நம்மை முழுவதும் அர்ப்பணிப்பதே முழுமையான விசுவாசம். 

ஆகவே,

விசுவசிப்போம்,

அர்ப்பணிப்போம்,

வாழ்வடைவோம்.

"ஆண்டவரே, நீர் வரும் நாளில் விசுவாசத்தைக் காண்பீர்"

என அவருக்கு உறுதி அளிப்போம்! 

லூர்துசெல்வம் 
 

No comments:

Post a Comment