Sunday, November 3, 2019

"பாவியோடு தங்குவதற்குப் போயிருக்கிறாரே."(லூக்.19:7)



"பாவியோடு தங்குவதற்குப் போயிருக்கிறாரே."
(லூக்.19:7)
*****     . ******       ******      ****
இயேசு சக்கேயுவின் வீட்டிற்குச் சென்றபோது மக்கள் முணுமுணுத்த வார்த்தைகள்,

"பாவியோடு தங்குவதற்குப் போயிருக்கிறாரே."

ஆசிரியரைப் பற்றி ஒருவர் ,

"இவர் பள்ளிக்கூடத்திற்குப் போய் பாடம் நடத்துகிறாரே!"

என்று முணுமுணுத்தால் எப்படி இருக்குமோ 

அப்படி இருக்கிறது இயேசுவைப் பற்றி மக்களின் முணுமுணுப்பு!

இயேசு மனிதனாய்ப் பிறந்ததே பாவிகளைத் தேடி வரத்தானே! 

மனுக்குலம் பாவம் செய்யாது இருந்திருந்தால் 

கடவுள் மனிதனாகப் பிறந்திருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

அவர் சர்வ வல்லபர்.

அவர் நினைத்திருந்தால் மனிதனாய்ப் பிறக்காமலே

மனுக்குலத்தை மன்னித்திருக்கலாம் அல்லது அழித்திருக்கலாம்.

ஆனால் அன்பே உருவான கடவுள் தனது தன் அன்பை வெளிப்படையாய்க் காட்டவே
மனுவுரு எடுத்து பாடுபட்டு மரிக்கத் திருவுளமானார். 

"தம் மகனில் விசுவாசங்கொள்ளும் எவரும் அழியாமல், முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு அந்த ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள்உலகின்மேல் அன்புகூர்ந்தார்."
(அரு.3:16)

'ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்."

 என்ற வரிகள் கடவுளின் அளவு  கடந்த அன்பை வெளிக் காட்டுகின்றன.

கடவுள் சர்வ ஞானம் உள்ளவர்.

நித்திய காலமாகவே அவருக்குத் தெரியும் 

தான் படைக்கப்போகும் மனிதன் தனக்குக் கீழ்ப்படியமாட்டான் என்று.

ஆயினும் தனது அன்பின் மிகுதியால் அவனைப் படைக்கத் திட்டமிட்டதோடு,

அவனது கீழ்ப்படியாமைக்குப் பரிகாரமாக தானே மனிதனாய்ப் பிறந்து,

பாடுகள் பட்டு, சிலுவையில் மரிக்கவும் திட்டமிட்டு விட்டார்.

படைப்பும், பரிகாரமும் நித்திய காலத் திட்டங்கள்.

நமது முதல் பெற்றோர் பாவம் செய்த போது கடவுள் அவர்கள் மீது  இரக்கப்பட்டார்.

 "உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்: அவள் உன் தலையை நசுக்குவாள்"

என்று அவர் சாத்தானை சபிக்கும்போது

மாதாவின் வழியே இரட்சகர் பிறப்பார், 

பாவத்தையும், அதன் விளைவையும் அழிப்பார் என்ற நற்செய்தியை அறிவித்தார்.

அதன்படியே கன்னி மரியின் வயிற்றில் மனுவுரு எடுத்து, மனிதனாய்ப் பிறந்தார்.

நற்செய்தி அறிவித்த மூன்று ஆண்டுகளும் பாவிகளுக்காகவே வாழ்ந்தார்.

 பாவிகளைத் தேடிச் சென்றார்.

 "மனந்திரும்பும்படி பாவிகளையே அழைக்க வந்துள்ளேன்." 

என்று கூறி, தான் உலகிற்கு வந்ததன் நோக்கத்தைத்  தெளிவுபடுத்தினார்.

பாவிகள் வீட்டில் உணவருந்தினார்.

அவர்களது பாவங்களை மன்னித்தார்.

விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை பரிசேயர் அவரிடம் இழுத்து வந்தபோது கல்லெறியிலிருந்து அவளைக் காப்பாற்றியதோடு, அவளது பாவங்களை மன்னித்து அனுப்பினார்.

இயேசு எங்கு  சென்றாலும் அவர் பேச்சுக்களில் குற்றம் காண்பதற்கும்,

அவரைக் கொல்ல சதி செய்வதற்கும் பரிசேயரும், சதுசேயரும் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.

அந்த வகையில் அவர்களும் பாவிகள்தான்.

இயேசு சென்ற இடமெல்லாம் அவர்கள் அவரைப் பின்தொடர்ந்ததும்கூட

 இறைவனது பராமரிப்பைச் சேர்ந்ததுதான்.

அதனால்தான் அவர்களும் அவரின் நற்செய்தியைக் கேட்கமுடிந்தது.

இயேசு பாவிகள்பால் கொண்ட இரக்கத்தை அறிய முடிந்தது.

அவர்கள் எதிர்மறையாக செயல்பட்டாலும் இறைவனின் அருள் அவர்களிடம் Positiveவாகவே செயல்பட்டது.

விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை அவரிடம் இழுத்து வந்து,

"இப்படிப்பட்டவர்களைக் கல்லாலெறிந்து கொல்லவேண்டுமென்பது மோயீசன் நமக்குக் கொடுத்த சட்டம். நீர் என்ன சொல்லுகிறீர்."

என்று கேட்டபோது,

இயேசு,

"உங்களுள் பாவமில்லாதவன் முதலில் அவள்மேல் கல் எறியட்டும்" என்றார்.

வெளிவேடக்காரர்கள் ஆகிய அவர்கள் அவள் மீது கல்லை எறிந்திருக்கலாம்.

ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை.

 இயேசுவின் அருள் அவர்கள் மனதில் வேலை செய்ய ஆரம்பித்தது.

தங்கள் பாவங்களை ஏற்றுக் கொண்டு ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள்.

அவர்கள் தங்கள் பாவங்களை ஏற்றுக் கொண்டது இயேசுவின் அருளால்தான்.

இது பரிசேயர் மேலும் இயேசு கொண்ட இரக்கத்தையே காண்பிக்கிறது.

அவர்களை இயேசுவின் பின்னால் இழுத்துச் சென்றதும் இறைவனின் அருள்தான்.

இயேசு பரிசேயர்கள் வீட்டிலும் உணவு அருந்தியிருக்கிறார்.

"அவர் பேசிக்கொண்டிருக்கையில் பரிசேயன் ஒருவன் தன்னோடு உண்பதற்கு அவரை அழைத்தான். இயேசுவும் வந்து அமர்ந்தார்."
(லூக்.11:37)

"பரிசேயன் ஒருவன் அவரைத் தன்னுடன் உண்பதற்கு அழைத்தான். அவரும் பரிசேயனுடைய வீட்டுக்கு வந்து உணவருந்த அமர்ந்தார்."
(லூக்.7:36)


"ஓய்வுநாளில் பரிசேயரின் தலைவன் ஒருவன் வீட்டில் அவர் உணவருந்தச் சென்றபோது, அவர்கள் அவரைக் கூர்ந்து கவனித்தனர்."
(லூக்.14:1)

ஆக இயேசு பாரபட்சம் இல்லாமல் எல்லா பாவிகள் மீதும் இரக்கம் காட்டினார்.


தன்னில் குற்றம் கண்டுபிடிப்பதையே குறியாகக் கொண்டிருந்தவர்கள் மேலும்
இரக்கம் காட்டினார்.

தன் சிலுவை மரணத்திற்குக் காரணமானவர்கள் மீதும் இரக்கம் காட்டினார்.

அவர்களை மன்னிக்கும்படித் தந்தையிடம் வேண்டினார்.

இப்போது நம் மீதும் இரக்கம் காட்டுகிறார்.

அவர் நம்மைத் தேடிவருவது நமது பாவங்களை மன்னித்து பரிசுத்தர்கள் ஆக்க.

பாவிகள் இருக்கும் பக்கம் பார்த்துதான் இயேசுவின் அருள் அதிகமாகப் பாய்கிறது.

நம்மிடம் பாயும் அருளை ஏற்றுக்கொண்டால் அது நம்மில் மனஸ்தாபத்தைத் தூண்டும்.

அந்த தூண்டுதலை ஏற்றுக்கொண்டு, நாம் பாவங்களுக்காக வருந்தி அவற்றை சங்கீர்த்தனம் செய்யவேண்டும்.

பாவங்கள் மன்னிக்கப்படும். ஆன்மா பரிசுத்தமாகும்.

தொடர்ந்து பரிசுத்தத்தனத்தில் வளரவேண்டும்.

நம்மில் அவர் வளர வேண்டும், நாம் குறைய வேண்டும்.

அதாவது நமது பாவநாட்டம் குறைய வேண்டும். அவரது பரிசுத்தத்தனம் வளரவேடும்.

முழுமையான பரிசுத்தத்தனத்தோடு விண்ணகம் நுழையவேண்டும்.

இயேசுவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்:

கெட்டவர்களோடு பழகாதே என்று சொல்வார்கள்.

இயேசு அப்படிச் சொல்லவில்லை.

கெட்டவர்களைத்தான் அதிகம் நேசிக்க வேண்டும்.

அவர்களோடுதான் அதிகம் பழக வேண்டும்.

நமது சொல்லாலும்,  செயலாலும் அவர்களை இயேசுவிடம் அழைத்து வர வேண்டும்.

இயேசுவே!  பாவிகளாய் இருக்கிற எங்கள்மேல்
இரக்கமாயிரும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment