Wednesday, November 27, 2019

என்றும் நம்மோடு வாழும் இறைவன்.

என்றும் நம்மோடு வாழும் இறைவன்.
*   *    *   *   *    *   *    *    *   *    

இறைவன் நித்திய காலமும் நம்மோடுதான் வாழ்கிறார்.

நித்திய காலம் என்றால் துவக்கமும் முடிவும் இல்லாத காலம்.

இறைவனுக்குத் துவக்கமும் முடிவும் இல்லை. சரி.

நமக்குதான் துவக்கம் உண்டே, துவக்கம் உள்ள நாம் எப்படித் துவக்கம் இல்லாத காலத்திலிருந்து வாழ்ந்திருக்க முடியும்?

நமக்கு துவக்கம் உண்டு, ஆனால் நம்மைப் படைத்த இறைவனுக்குத் துவக்கம் இல்லை.

அவருடைய மனதுக்கும் துவக்கம் இல்லை.

துவக்கமும் முடிவும் இல்லாத இறைமனதில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதைப் புரிந்துகொள்ள இதற்கான அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொருவர் வாழ்விலும் இரண்டு நிலைகள் உண்டு.

எண்ண நிலை. (Idea)

உண்மை நிலை.(Reality)

கடவுளுக்குத் துவக்கமும் முடிவும் இல்லாதது போலவே

 அவரது திட்டங்களுக்கும் துவக்கமும் முடிவும் இல்லை.

நாம் ஒவ்வொருவரும் அவரது நித்திய திட்டத்திற்கு உட்பட்டவர்கள்தான்.

அதாவது நம் ஒவ்வொருவரைப் பற்றியும் கடவுள் நித்திய காலமாக திட்டமிட்டு,

திட்டத்தைச் செயல்படுத்துகிறார்.

திட்டமிடும்போது அவரது உள்ளத்தில் நாம் எண்ண நிலையில் , Idea, இருக்கிறோம். 

திட்டத்தைச் செயல் படுத்தும்போது நாம் உண்மை நிலையில், Reality, இருக்கிறோம்.

வேறு வார்த்தைகளில்,

நாம் நம் அன்னையில் வயிற்றில் உண்மையாக கருத்தரிக்குமுன்

இறைவனின்  உள்ளத்தில் எண்ணமாக இருந்தோம்.

நாம் பிறந்தபின்தான் நம்மை நமக்குத் தெரியும்.

கடவுளுக்கு நாம் பிறக்கு முன்பே நம்மைத் தெரியும்.

ஆகவேதான் சொன்னேன்,

"இறைவன் நித்திய காலமும் நம்மோடுதான் வாழ்கிறார்.''

பாவத்தோடு பிறந்த நம்மை பாவத்திலிருந்து மீட்பதற்காக
இறைவன் மனுவுரு எடுத்தார்.

அவர் நம்மைப்போல் மனிதனாக இவ்வுலகில் வாழ்ந்த காலம் 33 ஆண்டுகள்.

இக்காலக்கட்டத்தில் மனிதனோடு மனிதனாக வாழ்ந்தார்.

நற்செய்தியை அறிவித்து,

நமது பாவங்களுக்குப் பரிகாரமாகப் பாடுகள் பட்டு,

சிலுவையில் தன்னையே பலியாக்கி மரித்து,

உயிர்த்து விண்ணகம் செல்ல வேண்டு மென்பது அவர் திட்டம்.

நித்திய காலமும் நம்மோடு வாழவேண்டும் என்று ஆசித்து வாழும் இறைவன்,

தான் இறந்த பின்னும் நம்மோடு உயிருள்ள மனிதனாக வாழ ஆசைப்பட்டார்.

வாழ மட்டுமல்ல தன்னையே நமது ஆன்மீக உணவாகத் தரவும் ஆசைப்பட்டார்.

ஆசைப்பட்டபடி நம்மோடு உயிருள்ள மனிதனாக வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்.

தன்னையே நமக்கு உணவாகத் தந்து கொண்டும் இருக்கிறார்.

உலகில் வாழ்ந்து, இறந்து விண்ணகம் சென்றபின்னும் 

எப்படி அதே உலகில் உயிருள்ள மனிதனாக மனிதரோடு வாழ முடியும்?

எப்படித் தன்னையே உணவாகத் தரமுடியும்?

நம்மால் முடியாது, ஆனால் இறைவனால் முடியும். 

ஏனெனில் எல்லாம் வல்லபர்.

அவரால் முடியாதது எதுவும் இல்லை.

இதற்காகத்தான் இயேசு மரிக்குமுன்பே

பெரிய வியாழக்கிழமையன்று

 திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.

தனது சர்வ வல்லமையால் அப்பத்தையும், ரசத்தையும் தனது உடலாகவும், இரத்தமாகவும் மாற்றி 

அதைத் தன் சீடர்களுக்கு ஆன்மீக உணவாகக் கொடுத்தார்.

அவர்களும் இயேசுவின் உடலையும், இரத்தத்தையும் உணவாக உண்டார்கள்.

அன்றே சீடர்களுக்குக் குருப்பட்டமும் கொடுத்தார்.

திருப்பலி நிறைவேற்றவும்,

 திருப்பலியின்போது அப்பத்தையும், ரசத்தையும் தனது உடலாகவும், ரத்தமாகவும் மாற்றவும்

 வல்லமையைக் கொடுத்தார்.

அன்று முதல் இன்று வரை இயேசு   தன் தாயின் உதரத்தில் எடுத்த அதே உடலோடும், இரத்தத்தோடும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார்.

 திருவிருந்தின்போது உண்மையாகவே நமது ஆன்மீக உணவாகத் தம்மையே நமக்குத் தருகிறார்.

நித்திய காலமாக நம்மை தன் உள்ளத்தில் சுமக்கும் இறைவன் 

மனிதனாக நம்மோடு  வாழ்வதற்கே திவ்யநற்ருணையை நிருவினார்.

திவ்ய நற்கருணைப் பேழையில் நமக்காக இரவும்பகலும் காத்துக்கொண்டிருக்கிறார்.

திவ்நற்கருணையை நினைக்கும்போது 

இறைவன் நம்மீது கொண்டுள்ள அளவில்லா அன்பும், 

சாதாரணமான நம்மோடு தங்கி உறவாடுவதற்கு சர்வவல்லபருக்கு இருக்கும் ஆவலும்,

அந்த ஆவலை நிறைவேற்றுவதற்காக 

நமக்கு உணவாகப் பயன்படக்கூடிய அப்பத்தையும் ரசத்தையும் தனது உடலாகவும், இரத்தமாகவும் மாற்றி,

நமது ஆன்மீக உணவாக, நமது உடலாலேயே உண்ணப்பட்டு 

நமது  இரத்த நாளங்களால் நமது உடல் முழுவதும் பரவி

நமது ஆன்மாவோடும், ஆன்மாவோடும் இணைந்து வாழும் பாங்கையும் நினைக்கும்போது

நம்மால் ஆச்சரியப் படாமல் இருக்க முடியவில்லை!

சர்வ வல்லவருக்கு அற்பப் பதராகிய நம்மீது எவ்வளவு ஆசை! 

இதற்காகத்தானே நித்திய காலமாக நம்மையே நினைத்து திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்!  

நற்கருணைநாதர் நம்மோடு இணைவது 

விண்ணரசில் முடிவில்லா காலம் நம்மோடு இணைந்து

 பேரின்பக் கடலில் நம்மை நீந்த வைப்பதற்கான ஒத்திகை! (Rehearsal!)

நித்திய பேரின்பத்திற்கான முன்சுவை!  (Pretaste!)

ஆனால் எனக்கொரு சங்கடம்.

கணவனும் மனைவியும் சந்திக்கும்போதும், கட்டித்தழுவி முத்தமாரி பொழியும்போதும்

இருவர் உள்ளங்களிலும் அன்புத் தீ பற்றி எரியும்!

அந்தத் தீயில் இருவரும் பற்றி எரிவார்கள்.

ஆசைக் கடல் சுனாமியாக மாறி இருவரையுமே சேர்த்து இழுத்துக் கொண்டு போகும்!

இருவருமே பரபரப்பான உள்ளக் கிளர்ச்சியில்  (Thrilling feeling) திக்குமுக்காடிக் கொண்டிருப்பார்கள்!

அணுகுண்டால்கூட அவர்களைப் பிரிக்க முடியாது!

அழிந்தாலும் சேர்ந்தே அழிவார்களே தவிர

பிரியமாட்டார்கள்.

இறைவன் இயேசு நம்மோடு நம்மாக நற்கருணை மூலம் இணையும்போது

 நாம் இத்தகைய உணர்வை அனுபவிக்கிறோமா? 

இயேசுவுக்கு உள்ள ஆர்வமும், துடிப்பும் நமக்குள்ளுமே இருக்கிறதா?

இயேசு சாதாரணமான நம்மைத் தன் நண்பர்களாக மாற்றி 

உண்மையான நண்பராக

 நம்மோடு நட்பில் ஒன்றிக்கிறாரே,

 அதற்கு ஈடான நட்பு உணர்வு நம்மிடம் இருக்கிறதா?

சந்தேகம்தான்.

சர்வ வல்லவருக்கு சாதாரணர்களாகிய நம்மால் ஈடு கொடுக்க முடியாதுதான்.

ஆனால் அதற்கான உணர்வும், முயற்சியும் நம்மிடம் இருக்கிறதா?

சற்றே கற்பனை செய்து பாருங்கள். 

நாம் நெடுநாள் பார்க்காத நண்பரைக் காண அளவில்லா ஆவலோடும், ஆர்வத்தோடும் அவர் இல்லத்திற்குச் செல்லுகிறோம்.

நாம் வீட்டிற்குள் போனபின்னும் அவர் நம்மைக் கண்டும் காணாதது போலிருந்தால் நமக்கு எப்படி இருக்கும்?

நாமும் அநேக சமயங்களில்

 பார்த்தும் பாராதது மாதிரி நம்மிடம் நடந்து கொண்ட நண்பரை மாதிரிதானே

நம் ஆண்டவரிடம் நடந்து கொள்கிறோம்.

நற்கருணை வாங்கப் போகும்போது நம்மைப் படைத்த எல்லாம் வல்ல தேவனை வாங்கப் போகிறோம்.

நமக்காகச் சிலுவையில் உயிர்விட்ட நம் இரட்சகரை வாங்கப் போகிறோம்.

தன் தந்தையை நமக்குத் தந்தையாகத் தந்து நம்மை அவரது சுவீகாரப் பிள்ளைகளாக மாற்றிய அன்புச் சகோதரரை வாங்கப் போகிறோம்.

ஆனால் நாம் இந்த உணர்வுடனா அவரை வாங்கப் போகிறோம்?

அதுமட்டுமல்ல. நமது இதய வீடாவது பரிசுத்தரை வரவேற்கும்  நிலையில் இருக்கிறதா?

இதயம் பாவ அழுக்கால் நிறைந்திருந்தால்

 பாவசங்கீர்த்தனம் மூலம் அதைச் சுத்தப்படுத்த வேண்டும் 
என்ற அக்கரை அநேகருக்கு இருக்காது.


முன்பெல்லாம் இயேசுவைத் தொடுவதற்கென்றே அர்ச்சிக்கப்பட்ட கரங்களிலிருந்துதான்

 இயேசுவை நாவில் வாங்குவோம்.

முன்பெல்லாம் கடவுள் முன் முழந்தாள் படியிட்டு பயபக்தியுடன் இயேசுவை நாவில் வாங்குவோம்.

ஆனால் இப்போது

அர்ச்சிக்கப்படாத கரங்களும் (காலத்தின் கோலம்) இயேசுவை எடுத்துத் தருகிறார்கள்.

நாமும் கூட்டத்தோடு கூட்டமாய் நடந்து சென்று,

தின்பதற்கு தின் பண்டம் வாங்குவதைப் போல கையில் வாங்கி,

 வாயில் போட்டுவிட்டு

 இடத்தில் போய் அமர்ந்து,

 நமக்குள் நம்மோடு உரையாடக் காத்துக் கொண்டிருக்கும் ஆண்டவரை மறந்துவிட்டு 

கற்பனைக் குதிரை ஏறி, கண்ட இடமெல்லாம் சுற்றிக் கொண்டிருப்போம்.

அப்படியே இயேசுவிடம் பேசினாலும்,

"அதைத் தாரும், இதைத் தாரும்" என்று  விண்ணப்பங்களை அவர் முன் அடுக்கிக் கொண்டிருப்போம்.

அவரைப் பேச விட மாட்டோம்.

இயேசுவுக்கு நம்மேல் உள்ள ஆர்வமும் அக்கரையும் அவர்மேல் நமக்கு இல்லை.

இது மிகப் பரிதாபகரமான நிலை.

இயேசு கடவுள் என்று நமக்குத் தெரியும்.

நம்மைப் பாவத்திலிருந்து மீட்பதற்காக மனிதனாகப் பிறந்தார் என்ற விபரமும் நமக்குத் தெரியும்.

கடவுளிடம் எந்த அளவுக்குப் பயபக்தியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற விபரமும் நமக்குத் தெரியும்.

பயபக்தி என்றால் பயம் (Fear) கலந்த பக்தி (Love).

நாம் பக்தி, அதாவது அன்பு , பற்றி அதிகம் பேசுவதால் அநேகருக்கு பயத்தைப் பற்றிய எண்ணமே வரவில்லை.

தெய்வ பயமே ஞானத்தின் ஆரம்பம்.

Fear of God is the beginning of wisdom.

'பயம்' முதலாளியைப் பார்த்து வேலைக்காரன் பார்த்துப் படும் பயத்தைக் குறிக்காது.

It is not servile fear. 

'தந்தையின் மனதை எந்த வகையிலும் புண்படுத்திவிடக்கூடாதே'

என்று பயத்துடன் மகன் செயல்படுகிறானே அந்த பயம்.
(Filial fear)

இந்த பயம் அன்போடு இணைந்து செல்லும்.




ஒரு பையனுக்கு அப்பா மேல்.  அன்பு இருக்கிறது,  

அப்பா சொல்லுக்குக் கீழ்ப்படியாவிட்டால் அப்பாவின் மனம் புண்படும்.

அப்பாவின் மனம் புண்படாமல் வாழ்வதே அன்புள்ள பிள்ளைக்கு அடையாளம்.

இயேசுவின்பால் உண்மை யான அன்பு உள்ளவன்

 அவருக்குப் பிரியமாக வாழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகப் 

பாவமே செய்யமாட்டான்.

 தப்பித் தவறிப் பாவம்  செய்துவிட்டால்


 பாவசங்கீர்த்தனம் மூலம் 

தன் உள்ளத்தைச் சுத்தப்படுத்தி விட்டுதான்

  நற்கருணை மூலம் அவரைத் தன்னுள் வரவேற்பான்.

இயேசுவுக்குக் கடவுளுக்குரிய மரியாதை கொடுக்க வேண்டும்.

மரியாதை என்பது சாதாரண வார்த்தை, இறைவனுக்காக பயன்படுத்த இதை விட உயர்ந்த வார்த்தை நம்மிடம் இல்லை. 

அதனால்தான் இந்த வார்த்தையைப் பயன்டுத்தி யிருக்கிறேன்.

 மரியாதை முதலில் மனதில் இருக்க வேண்டும்.

மனதில் உள்ள மரியாதையைக் காட்ட அதன் அளவிற்கு ஏற்றபடி சில வெளி அடையாளங்கள் உள்ளன.

அடையாளங்கள் மாறும்போது மரியாதையின் அளவும் மாறும்.

சில அடையாளங்கள் மனிதருக்குப் பொதுவானவை.

பெரியவர்கள் வந்தவுடன் எழுவது, கை கூப்புவது போன்றவை.

நம் ஆலயங்களில் 

திவ்ய நற்கருணைக்கு முன்னால் முழங்கால் படியிடுவது (Genuflection)

 இறைவனுக்குச் செய்யும் மரியாதையாக 

தொன்று தொட்டு பழக்கத்தில் இருந்தது.

திவ்ய நற்கருணை இல்லாத ஆலயகளில் பாடுபட்ட சுரூபத்துக்கு தலை வணங்குவது பழக்கத்தில் இருந்தது.  

ஆனால் சமீப காலத்திலிருந்து 

திவ்ய நற்கருணைக்கு
முன்னும் தலை வணங்கும் பழக்கத்தை நம்மை ஆளும் திருச்சபை அதிகாரிகள் புகுத்தி உள்ளனர்.

ஏன் தலை வணங்கும் பழக்கம் புகுத்ப்பட்டது?

திவ்ய நற்கருணையில் இயேசுவின் உண்மைப் பிரசன்னத்தை (Real presence) மறந்து விட்டனரா

 அல்லது.....கேட்கவே பயமாக இருக்கிறது.

பாடுபட்ட சுரூபத்தில் இயேசுவின் உண்மைப் பிரசன்னம் இல்லை.

ஆகவே தலை வணங்குகிறோம்.

திவ்ய நற்கருணையை பாடுபட்ட சுரூபத்தின் நிலைக்கு தாழ்த்தியது ஏன்?

என்ன செய்தாலும் ஆண்டவர் அமைதியாய் இருப்பதுதான் காரணமா?

வசீகரிக்கப்பட்ட அப்பத்தை எத்தனை துண்டுகளாக பிரித்தாலும்

 ஒவ்வொரு துண்டிலும் ஆண்டவர் முழுமையாக இருக்கிறார்.


குருவானவர் நற்கருணையைக் கொடுக்க ஓஸ்தியைக் கையில் எடுக்கும்போது 

அதிலிருந்து துகள்கள் விழ வாய்ப்பு இருக்கிறது.

 ஒவ்வொரு துகளிலும் ஆண்டவர் முழுமையாக இருக்கிறார்.

 ஆகவே துகள்கள் கீழே விழாதிருக்கும்படி 

பீடச்சிறுவன் நற்கருணை  வாங்கும் நமது வாய்க்குக் கீழே

 ஒரு தட்டைப் பிடிக்கிறான்.


இப்போது விருப்பப்பட்டவருக்கு நற்கருணையைக் கையில் கொடுக்கும் பழக்கம் புகுத்தப்பட்டுள்ளது.

நமது கலாச்சாரத்திற்கே எதிராக  நற்கருணையை இடது கையால் வாங்குகின்றனர்.

பிறகு வலது கையால் எடுத்து உண்கின்றனர்.

நற்கருணையைக் கையில் வைக்கும்போது துகள்கள் கையில் விழும்.

வாங்குபவர்கள் அதைப் 
பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்கள். 

போகிறபோக்கில் கையை உதறிவிட்டுப் போவார்கள்.

துகள்கள் தரையில் விழும். 

வருவோர் போவாரால் மிதிபடும்.

ஒவ்வொரு துகளிலும் ஆண்டவர் முழுமையாக இருக்கிறார்.

ஆண்டவர் சிலுவைப் பாதையில் ரோமை படை வீரரால்  பட்ட மிதிகளை எல்லாம் 

திரும்பவும் படுவார் நம் கால்களாலேயே!

ஆண்டவருக்கு எவ்வளவு அவசங்கை!

எவ்வளவு அவமரியாதை!

இதற்கெல்லாம் காரணர் யார்?

நற்கருணையை கையில் வழங்குபவர்களும், அதற்கு அனுமதி கொடுத்தவர்களும்தான்!

ஆண்டவரை அவமதிக்கவா பட்டம் பெற்றார்கள்! 

நாம் தேவசாஸ்திரம் படிக்காதவர்கள், பக்தியோடு பயமும் உள்ளவர்கள்  

ஒன்றை மட்டும் புரிந்து கொள்வோம்,

உலகம் முடியும் வரை
நம்மோடு மனித உருவிலும் வாழ்வற்காகத்தான் இயேசு நற்கருணையை ஏற்படுத்தினார். 

நித்திய காலமும் இறைவன் நம்மோடு வாழ்கிறார்.

நாம் அவரோடு வாழ்கிறோமா?


லூர்துசெல்வம்.

No comments:

Post a Comment