"எனக்கு நீங்கள் சாட்சியாயிருப்பதற்கு இவை உங்களுக்கு வாய்ப்பு அளிக்கும்." (லூக்.21:13)
* * * * * * * * * * * * *
இயேசு தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு என்ன நேரிடும் என்பதை முன் அறிவிக்கின்றார்:
" என் பெயரின்பொருட்டு
உங்களைப் பிடித்து, செபக்கூடங்களுக்கும்
சிறைச்சாலைகளுக்கும் இழுத்துச் சென்று,
அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் உங்களைக் கையளித்துத்
துன்புறுத்துவர்."
இழுத்துச் செல்லப்படுதல்,
கையளிக்கப்படுதல்
துன்புறுத்தப்படுதல்
ஆகியவை இயேசுவைப் பின்பற்றுவதற்காக இவ்வுலகில் நமக்குக் கிடைக்க இருக்கும் பரிசுகள்.
இயேசுவின் மொழியில் சொல்ல வேண்டுமானால்
நாம் சுமப்பதற்காக நமக்கு கிடைக்கவிருக்கும் சிலுவைகள்.
இவைதான்
இயேசுவுக்கு நாம் சாட்சியாயிருப்பதற்கு
நமக்கு அளிக்கப்படும் வாய்ப்புகள்.
நாம் இயேசுவின் சாட்சிகள் என்பதற்கு அடையாளமாய் இருப்பது இயேசுவுக்காக நாம் அனுபவிக்கும் துன்பங்கள்தான்.
இயேசு நம்மை மீட்பதற்காக
எதிரிகளிடம் கையளிக்கப்பட்டு
தாங்கவொண்ணா பாடுகள் பட்டு,
சிலுவை மரத்தில் தன்னைப் பலியாக்கினார்.
நாம் எதிரிகளிடம் கையளிக்கப் பட்ட இயேசுவின் சீடர்கள்.
தாங்கவொண்ணா பாடுகள் பட்ட இயேசுவின் சீடர்கள்.
சிலுவை மரத்தில் பலியான இயேசுவின் சீடர்கள்.
தாயைப் போலவே பிள்ளை என்பதைப்போல
எசமானைப் போலவே சீடர்கள்.
இயேசுவின் சிலுவை மரணத்திற்குப்பின் எப்படி உயிர்த்தாரோ
அதே போலவே நாமும் உயிர்ப்போம்.
அவரது மரணத்திலும், உயிர்ப்பிலும் பங்கு பெற்ற நாம்
அவரது முடிவில்லா பேரின்பத்திலும் பங்கு பெறுவோம்.
இன்று நாம் வாழ்ந்து கொண்டிருப்பது
மிகப் பெரிய சோதனை காலம்.
"கிறிஸ்தவ சமயத்தை அழித்தே தீருவோம்" என்று கங்கணங்கட்டிக் கொண்டிருப்போர் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நாம் இயேசுவுக்குச் சாட்சிகளாய் வாழ்ந்து,
அவருக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்!
இதற்காக வரும் துன்பங்களை மட்டுமல்ல
நமக்கு வரும் சகலவிதத் துன்பங்களையும் இயேசுவுக்காக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நமக்குத் துன்பங்கள் வரும்போது அவற்றிலிருந்து தப்பிக்கவே முயல்கிறோம்.
துன்பங்களிலிருந்து தப்பிக்க முயல்வது
இன்பத்திலிருந்தும்
தப்பிக்க முயல்வதற்குச் சமம்.
கடைக்குச் சென்று காசு கொடுத்தால்தான் பொருள் வாங்கலாம்.
'காசு கொடுக்க மாட்டேன், ஆனால் பொருள் வேண்டும்' என்று கூறுபவன் எப்படிப் பட்டவனோ
அப்படிப்பட்டவன்தான்
'இவ்வுலகில் சிலுவை எதுவும் வேண்டாம், மறுவுலக பேரின்பம் மட்டும் வேண்டும்'
என்பவனும்.
அப்படியானால் வியாதி மற்றும் சங்கடங்கள் வரும்போது அவற்றிலிருந்து விடுதலை பெற இறைவனிடம் கேட்கக் கூடாதா?
கேட்கலாம். தப்பில்லை.
ஆனால் உண்மையான விசுவாசி இப்படிக் கேட்பான்:
"தந்தையே, உமக்குச் சித்தமானால் எனக்கு ஏற்பட்டிருக்கும் வியாதியிலிருந்து விடுதலை தாரும்.
நான் துன்பப்பட வேண்டும் என்பது உமது சித்தமானால், அதை நல்ல மனதுடன் தாங்க வேண்டிய மன வலிமையைத் தாரும்."
நமக்கு வரும் துன்பங்களை ஏற்று அவற்றை இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தால்
அவை நாம் இறைவனுக்குச் செலுத்தும் பலிப் பொருளாக மாறிவிடுகின்றன.
இறைவன் தன்னையே சிலுவை மரத்தில் பலியாக்கினாரே,
அதற்குப் பதிலாக நாம் ஒரு சிறிய பலியை ஒப்புக் கொடுக்கக் கூடாதா?
நாம் அனுபவிக்கும் துன்பங்கள்தான் நாம் இயேசுவின் சீடர்கள் என்பதற்குச் சாட்சிகள்.
நாம் அனுபவிப்பதோ முடிவுள்ள துன்பம்.
அனுபவிக்கப் போவதோ முடிவில்லா பேரின்பம்!
நாம் இயேசுவின் சீடர்கள் என்பதற்காக மற்றவர்கள் நம்மை துன்புறுத்தும்போது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டால்
அதுவே நாம் ஆற்றும் மிகப் பெரிய நற்செய்திப் பணி!
லூர்துசெல்வம்.
No comments:
Post a Comment