"நாங்கள் பயனற்ற ஊழியர்கள், செய்ய வேண்டியதைத்தான் செய்தோம்" (லூக். 17:10)
****** .*********** ******
ஒருநாள் இரண்டு மாணவர்கள் பேசிக்கொள்கிறார்கள்:
"பரீட்சை எப்படி எழுதியிருக்க?"
"ஏதோ எழுதியிருக்கேன்."
"அதென்ன ஏதோ எழுதியிருக்கேன்?"
"பிறகென்ன பிரம்மாதமா எழுதியிருக்கேன்னா சொல்லமுடியும்? என்னால் இயன்றத எழுதியிருக்கேன்."
"எல்லாரும் அவங்களுக்கு இயன்றதத்தான் எழுதுவாங்க.
கோழி வேகத்திலதான் கோழி ஓடும்.
நாய் வேகத்திலதான் நாய் ஓடும்.
குதிரை குதிரை வேகத்திலதான் குதிரை ஓடும்.
குதிரை, "நான் நாயை விட வேகமா ஓடுவேன்"னு சொல்ல முடியாது."
"நாயையும் குதிரையையும் ஒப்பிட முடியாது. ஆனால் நாயையும் நாயையும் ஒப்பிடலாமல்லவா? "
"அதுதான் முடியாது. உன்னையும், உன் பக்கத்தில உள்ளவனையும் ஒப்பிட்டு
அவன் அளவிற்கு என்னால் மார்க் வாங்க முடியலியேன்னு ஒப்பாரி வைக்கக் கூடாது.
படைப்பின் இரகசியத்தைப் புரிஞ்சவங்க ஒப்பிட்டுப் பேசமாட்டாங்க.
கடவுள் ஒவ்வொருவனையும் அவனவனுக்குரிய தனித் தன்மையுடன் படைத்திருக்கிறார்.
அவனவன் அவனவனுக்குரிய தன்மைகளை முழுவதும் பயன்படுத்தி சாதனைகள் புரியவேண்டும்.
பள்ளிக்கூடத்தில் மதிப்பெண் பெற முடியாதவர்கள் விஞ்ஞானிகளாகக் கூட சாதனைகள் புரிந்திருக்கிறார்கள்.
ஆகையினால பள்ளிக்கூடத் தேர்வுகளில் மதிப்பெண் பெற முடியவில்லையே என்று கவலைப்பட வேண்டாம்.
உனக்கு எதில் திறமை இருக்கிறது உனக்கே தெரியும்.
அது எதுவாக இருந்தாலும் அதைப் பயன்படுத்தி வாழ்க்கையில் சாதனைகள் புரியலாம்."
மாணவர்களுடைய உறையாடலிலிருந்து ஒரு உண்மை வெளிப்படையாகத் தெரிகிறது.
யாருமே சொந்தத் திறமையால் செயல்படுவதில்லை.
கடவுள் கொடுத்த திறமைகளைக் (Talents)
கொண்டு ஒருவர் சாதனை புரிந்தால்
அதற்காக உண்மையில் போற்றப்பட வேண்டியவர் கடவுள்தான்.
திறமையைப் பயன்படுத்தி செயல்பட்டவர் கடவுளின் பணியாளர் மட்டுமே.
அப்படிப்பட்ட பணியாளர்கள்
தாழ்ச்சியோடு,
"நாங்கள் பயனற்ற ஊழியர்கள், செய்ய வேண்டியதைத்தான் செய்தோம்"
என்று தங்கள் உண்மையான நிலைமையை ஏற்றுக்கொள்ளள வேண்டும்.
அப்போஸ்தலர்கள்
இயேசுவின் பொருட்டு ஆளுநரிடமும் அரசர்களிடமும் இழுத்துச் செல்லப்படும்போது
அவர்கள் பேசப்போவதுபற்றி குறிப்பிட்ட இயேசு,
"ஏனெனில், பேசுவது நீங்கள் அல்லீர்: உங்களில் இருந்து பேசுவது உங்கள் தந்தையின் ஆவியே." என்றார்.
(மத்.10:20)
ஆக அப்போஸ்தலர்கள் நற்செய்தியைப் பரப்பியபோது உண்மையில் செயல்பட்டவர் தந்தையே.
அதைவிட ஒரு படி மேலே போய்
இறைமகனாகியஇயேசு தன்னைப் பற்றியே தாழ்ச்சியுடன் பேசுகிறார்.
"நான் உங்களுக்குக் கூறும் சொற்களை நானாகவே கூறுவதில்லை: என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் என் தந்தையே."(அரு.14:10)
இயேசுவுக்குத் தெரியும்
தான் தந்தையுடனும், பரிசுத்த ஆவியுடனும் ஒரே கடவுள் என்று.
அதாவது சொற்களைக் கூறுவதும், செயலாற்றுபவரும் பரிசுத்த தமதிரித்துவமாகிய ஒரே கடவுள்தான்.
ஆனாலும், "சொற்களை நானாகவே கூறுவதில்லை:"
என்று தன்னையே தாழ்த்திப் பேசுகிறார்.
இப்படித் தன்னையே தாழ்த்திப் பேசுவது நமக்கு முன் மாதிரிகை காட்டத்தான்.
அதாவது எந்த நற்செயலையும் இறையருள் உதவி இன்றி செய்ய இயலாது என்பதை உணர்ந்து
நாம் நல்லது எதைச் செய்தாலும்,
"நான் பயனற்ற ஊழியன்.
ஆயினும் இறைவன் என்னுள் இருந்து
பயனுள்ள காரியங்களைச் செய்கிறார்.
அவருக்கே மகிமை."
என்று இறைவனைப் போற்ற வேண்டும்.
இன்று நமது திருச்சபை ஒரு சோதனையான காலக் கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது.
உள்ளும், புறமும் இருந்து தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
எங்கே பிரிவினை வந்துவிடுமோ என்று அநேகர் அஞ்சுகிறார்கள்.
ஆனால் அஞ்சவேண்டாம்.
"இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்." (மத்.28:20) என்று கூறிய இயேசு நம்மோடுதான் இருக்கிறார்.
அவருடைய திருச்சபை
எல்லா எதிர்ப்புகளையும் அழித்து வெற்றி பெறும்.
இறுதி வெற்றி இயேசுவுக்கே!
பயனற்ற ஊழியர்களாகிய நம்மையே அவரது வெற்றிக்குப் பயன்படுத்துவார்!
இயேசுவுக்கே புகழ்!
லூர்துசெல்வம்.
No comments:
Post a Comment