"சக்கேயுவே, விரைவாய் இறங்கி வா. இன்று உன் வீட்டில் நான் தங்கவேண்டும்"
(லூக்.19:5)
* * * * * * * * * * * * * * *
சக்கேயுவுக்கு இயேசுவை யாரென்று பார்க்கமட்டுமே ஆசை.
இயேசுவைப் பார்க்க ஆசைப்படுவதற்கும்
யாரென்று பார்க்க ஆசைப்படுவதற்கும்
வித்தியாசம் இருக்கிறது.
பார்க்க ஆசைப்படுபவன்
அவரால் ஈர்க்கப்பட்டு,
எதாவது காரியத்தைச் சாதிக்க விரும்புவான்.
யாரென்று பார்க்க ஆசைப்படுபவன் சும்மா ஆள் யாரென்று பார்க்க விரும்புவான்.
இயேசுவைத் தன் வீட்டிற்கு அழைக்க வேண்டுமென்றோ,
அவருக்கு விருந்து கொடுக்க. வேண்டுமென்றோ,
அவரைத் தன் வீட்டில் தங்க வைக்க வேண்டுமென்றோ
அவன் நினைக்கவில்லை.
அவர் யாரென்றே பார்க்கவே ஆசைப்பட்டான்.
ஆனால் இயேசு கடவுள்.
அவர் உலகிற்கு வந்ததே பாவிகளைத் தேடித்தான்.
ஆகவே சக்கேயுவின் எண்ணத்தை அறிந்திருந்தமையால்
அவராகவே சக்கேயுவை
அழைக்கிறார்.
"சக்கேயுவே, விரைவாய் இறங்கி வா.
இன்று உன் வீட்டில் நான் தங்கவேண்டும்."
சக்கேயுவின் ஆசைக்கு இயேசு பல மடங்கு சன்மானம் தருகிறார்.
சக்கேயு பார்க்க மட்டும்தான் ஆசைப்பட்டான்.
இயேசுவோ
அவன் வீட்டுக்குச் செல்கிறார்.
விருந்து உண்கிறார்.
அவனது பாவங்களை மன்னிக்கிறார்.
அவன் வீட்டிலுள்ள அனைவருக்கும் இரட்சண்யம் அளிக்கிறார்.
(இன்று இவ்வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று.)
அவனோடு தங்குகிறார்.
இயேசு தனது பண்புகளில் அளவற்றவர் மட்டுமல்ல,
தன்னிடம் உள்ளதைத் தாராளமாகப் பகிர்ந்து கொள்ளக்கூடியவர்.
நாம் வாயைத் திறந்தாலே போதும், வயிறார ஊட்டி விடுவார்!
அவரை ஏக்கத்தோடு பார்த்தாலே போதும், கேட்காமலே நமக்கு வேண்டியதை எல்லாம் தந்து விடுவார்.
திவ்ய நற்கருணைப் பேழையில் வீற்றிருக்கும் இயேசுவைச் சந்திக்கச் செல்லும்போது
அவரோடு வார்த்தைகளால் பேச வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை.
மனதில் அன்போடு அவரைப் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும்.
அவருக்கு வேண்டியது நமது வார்த்தைகள் அல்ல, நமது மனது, திறந்த மனது.
திறந்த மனதோடு அவரை பார்த்துக் கொண்டே இருந்தால் தனது அருள் வரங்களால் நமது மனதை நிறப்புவார்.
ஒரு ஏழை விபசாயி தினமும் காலையில் வேலைக்குப் போகுமுன் கோவிலுக்குச் சென்று,
திவ்யநற்கருணைப் பேழையைப் பத்து நிமிடங்கள் பார்த்துக் கொண்டே நின்று விட்டு வேலைக்குப் போவான்.
இதைத் தினமும் கவனித்துக் கொண்டிருந்த பங்குத் தந்தை அவனிடம் கேட்டார்:
"தினமும் காலையில் ஆண்டவரிடம் என்ன வேண்டுவாய்?"
"எனக்கு வேண்டியதெல்லாம் அவருக்குத் தெரியுமே, சாமி.
நான் அவரைப் பார்ப்பேன், அவரும் என்னைப் பார்ப்பார், அவ்வளவுதான்."
உண்மையில் கண்களின் மௌன மொழியைவிட சக்தி வாய்ந்த மொழி எங்கும் இல்லை.
சக்கேயுவிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன.
சக்கேயு ஒரு பாவி, நாமும் பாவிகள்.
உண்மையில் பாவிகள்தான் இயேசுவை வரவேற்க முழுத்தகுதி பெற்றவர்கள்.
ஏனெனில் அவர்களுக்குதான் அவருடைய உதவி அதிகம் தேவை.
Sinners are the most qualified people to welcome Jesus, because it is they who need Him most.
சக்கேயுவுக்கு இயேசு யாரென்று பார்க்க ஆசை.
நமக்கு இயேசு யாரென்று தெரியும். நாம் அவரைப் பார்க்க மட்டுமல்ல, பார்த்துக் கொண்டே இருக்க ஆசைப்படுவோம்.
எப்படி எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பது?
'யாருக்கு எதைச் செய்தாலும் அதை எனக்கே செய்கிறீர்கள்' என்று இயேசு சொல்லி இருக்கிறார்.
ஆகவே நாம் யாரைப் பார்த்தாலும் அவரில் இயேசுவைக் காணவேண்டும்.
நமது உற்றார் உறவினர்களாய் இருந்தாலும் சரி,
தெரியாதவர்களாய் இருந்தாலும் சரி,
பாவிகளாய் இருந்தாலும் சரி,
விரோதிகளாய் இருந்தாலும் சரி
எல்லோரிடமும் நாம் இயேசுவைக் காணவேண்டும்.
குறிப்பாக யாரெல்லாம் நம்மை வெறுக்கிறார்களோ அவர்களிடமும் இயேசுவைக் காணவேண்டும்.
அப்படிக் காணும்போது இயேசுவை நேசிக்கும் நாம் அவர்களையும் நேசிப்போம்.
அவர்களை வெறுத்தால் அவர்களோடு இருக்கும் இயேசுவையும் வெறுக்கிறோம்.
அந்த உணர்வு நம்மிடம் இருந்தால் நாம் யாரையும் வெறுக்க மாட்டோம்.
இயேசுவை வெறுப்பவர்களைக்கூட நாம் நேசிப்போம், ஏனெனில் இயேசுவும் அவர்களை நேசிக்கிறார்.
நாமும் எல்லோரையும் நேசிப்போம்.
இயேசுவை வரவேற்றவுடன், அதுவரை பண ஆசை பிடித்திருந்த அவன் மனம் மாறியது.
இரு எசமானர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது என்பதை உணர்ந்தான்.
இயேசுவின் மீது பற்று ஏற்பட்டதால் பணப்பற்று விட்டது.
இனி அவன் இயேசுவுக்கு மட்டுமே ஊழியன்.
ஆகவே
தன் உடைமையில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கவும்,
எவனையாவது ஏமாற்றி எதையாவது கவர்ந்திருந்தால், நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுக்கவும்
தீர்மானித்தான்.
நாம் எப்படி?
பணப்பற்று கூடாது என்று சொல்கிறோம்.
உண்மையாகவா அல்லது வாயளவில் மட்டும்தானா?
ஏதாவது ஒரு பொருள் தொலையும்போது நமக்குள் ஏற்படும் Reactionனின் அளவு = பொருட்பற்றின் அளவு.
வருத்தம் அதிகம் = பற்றும் அதிகம்.
கவலையில்லை = பற்றில்லை.
லௌகீக வாழ்க்கையில் மட்டுமல்ல, திருச்சபையின் வாழ்விலும்கூட பணம் தேவைதான்.
ஆனால் பணம்தான் வாழ்வல்ல.
பணவிசயத்தில் தப்பு செய்திருந்தால் நாமும் சக்கேயுவைப் பின்பற்றுவோம்.
எல்லோரையும் நேசிப்பதில்
இயேசுவைப் பின்பற்றுவோம்.
இயேசுவை நினைப்போம்.
அவர் நம்மை நிறைப்பார்.
லூர்துசெல்வம்.
No comments:
Post a Comment