Wednesday, November 20, 2019

"உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்""(லூக்.19:26)

"உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்""
(லூக்.19:26)
*   *   *   *   *   *   *   *   *   *   *   *

இயேசு தனது செய்திகளை (Messages) நேரடியாகக் கொடுக்காமல் கதைகள் மூலம் கொடுக்கிறார்.

அவருடைய போதனைகளில் கதைகள் செய்திகளைச் சுமந்து வருகின்றன.

நாம் எடுக்க வேண்டியது செய்திகளை.

ஒவ்வொரு செய்தியும் ஒரு நற்செய்தி.

நற்செய்தி இறைவனிடமிருந்து வருவது.

இறைவனுக்கும் நமக்கும் இடையே ஆன்மீக உறவை ஏற்படுத்தவும், வலுப்படுத்தவும் தரப்படுவது நற்செய்தி.

இயேசு சொன்ன கதைகள் யாவும் ஆன்மீகம் சம்பந்தப்பட்டவை.

அதில் ஆன்மீகச் செய்திகள் இருக்குமே தவிர இவ்வுலகச் செய்திகள் இருக்காது.

நற்செய்தி அருளப்படுவது விண்ணுலகை அடைய,

மண்ணுலகைக் காக்க அல்ல.


இயேசு சொன்ன   பொற்காசுகள் கொடுக்கப்பட்ட கதையை ஒரு நண்பரிடம் சொல்லி,

"இக்கதை வழியாக இயேசு என்ன போதிக்க விரும்புகிறார்?" என்று கேட்டேன்.

அவர் சொன்னார், "கடவுள் நமக்குக் கொடுத்த பணத்தைக் கொண்டு வியாபாரமோ, Business ஓ செய்து பெரிய பணக்காரனாக மாற வேண்டும். அப்படிச் செய்யாதவன் உள்ளதையும் இழந்து பரம ஏழையாகிவிடுவான்!"

நான் சிரித்தேன்.

"ஏன் சிரிக்கிறீங்க?"

"என்னமோ இயேசு வியாபாரமும், தொழிலும் செய்ய மனித அவதாரம் எடுத்தது மாதிரி  பேசறீங்க!"

" சார்,அவர் சொன்ன கதையில் கொடுக்கப்பட்டது பொற்காசுதானே சார்!

'நீ ஏன் என் பணத்தை வட்டிக்காரரிடம் கொடுத்துவைக்கவில்லை?

நான் வந்து வட்டியோடு திரும்பப்பெற்றிருப்பேனே'

என்று கதாநாயகன் சொல்லுகிறானே!

வட்டிக்கடை தொழில்தானே!"

"இயேசு சொன்னது கதை, பாட்டி வடை சுட்ட கதை மாதிரி!

அக்கதை சொல்லும் கருத்து என்ன என்பதைத்தான் பார்க்க வேண்டும்."

"அப்போ நீரே சொல்லும்."

"மனித உறவுகளுக்குள்ளே கொடுக்க வாங்க பயன்படுவது காசு.

யாருக்காவது உதவி செய்யணும்னா காசுதான் கொடுப்பாங்க.

எவ்வளவுக்கெவ்வளவு காசு இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு ஒருவன் ஏழை அல்லது பணக்காரனாக கருதப்படுகிறான்.

உலகினர் தங்களிடம் இருக்கும் பணத்தை அதிகப்படுத்துவதையே வாழ்க்கையாகக் கொண்டுள்ளனர்.

அதற்காகத்தான் உத்தியோகம், பதவி, வியாபாரம், தொழில்  எல்லாம்.

மனிதருக்குத் தெரிந்த பணப்பழக்கத்தை கதையாகச் சொல்லி

தெரியாத, தெரியவேண்டிய இறை,மனித உறவு பற்றிய செய்தியை இயேசு கொடுக்கிறார்."

"அதாவது  தெரிந்ததைச்  சொல்லி தெரியாததை விளக்குகிறார்."

"அப்படியேதான்."

"அப்போ நீங்க விட்டதிலிருந்து
நான் தொடரலாமா? "

"விட்டதிலிருந்தா? நான் இன்னும் விடவேயில்லையே!

இனிமேதானே ஆரம்பிக்கப் போகிறேன்."

"நான் ஒரு பழமொழி சொல்லலாமா?  கதையோடு சம்பந்தப்பட்டதுதான்."

"சொல்லுங்க."

"பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை,

அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை."

"Caught the point! Now you are fully qualified to continue. "

"Thanks!

கதையில் வரும் பெருங்குடி மகன் தன் ஆட்களிடம் பொருளைக் கொடுக்கிறான், அதை வைத்து அதிகம் சம்பாதிப்பதற்கு.

இறைவன் தன் அடியாருக்கு அருளைக் கொடுக்கிறார் அதிக அருளைச் சம்பாதிப்பதற்கு.

இறையருள்தான் ஆன்மீக வாழ்வின் உயிர்நாடி.

இறைவனின் அருள் இல்லாதவர்கள் ஆன்மீக வாழ்வே இல்லாதவர்கள்.

ஆன்மீக வாழ்வே இறையருளை ஈட்டதான்.

எல்லோருக்கும் ஒரே அளவு அருளைக் கொடுப்பதில்லை.

அவருடைய அன்னைக்குக் கொடுத்த அளவு வேறு யாருக்கும் கொடுக்கவில்லை.

தேவ இஸ்டப்பிரசாதம் என்னும் அருள் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே உறவை ஏற்படுத்துகிறது.

உதவி வரப்பிரசாதம் என்னும் அருள் நாம் நற்செயல்கள் செய்ய உதவுகிறது.

எல்லோருக்கும்  ஒரே அளவு அருள் கொடுக்கப் படாவிட்டாலும் கிடைத்த அருளை நாம் அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

கதையில் வருபவன் பத்து காசை அதிகப் படுத்துவதைப்போல

நாம் இறைவனிடமிருந்து பெற்ற அருளை அதிகப்படுத்த வேண்டும்.

எவ்வளவுக்கெவ்வளவு பெற்ற அருளை அதிகப் படுத்துகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நாம் ஆன்மீகத்தில் வளர்கிறோம்.

உண்மையில்,  பெற்ற அருளை அதிகப்படுத்தவே வாழ்கிறோம்.

நாம் ஈட்டும் இறையருளின் அளவிற்கேற்ப விண்ணுலகில் நமது பேரின்பத்தின் அளவும் இருக்கும்.

அருளை எப்படி அதிகப்படுத்துவது?

அருள் ஒரு வியாபாரப் பொருளல்ல.

அருளின் ஊற்று இறைவன் மட்டுமே.

இறைவனிடம் இருந்துதான் அருளைக் கேட்டுப் பெறவேண்டும்.

நமது செபம், தவம், நற்செயல்கள், தேவத்திரவிய அனுமானங்கள் மூலம் இறை அருளைப் பெறுகிறோம்.

  இறையருளைப் பெற   இடைவிடாது செபிக்க வேண்டும்.

நமது வாழ்வையே செபமாக மாற்ற வேண்டும், கடவுளுக்காக வாழ்வதன்மூலம்.

தவசு காலத்தில் மட்டுமல்ல வாழ்நாழ் முழுவதுமே தவமுயற்சிகள் செய்யவேண்டும்.

மேலும் நற்செயல்கள் மூலம் இறையருளை ஈட்ட வேண்டும்.

நமது அயலானுக்கு இறைவன் பெயரால் செய்யும் எல்லா உதவிகளும் நற்செயல்கள்தான்.

இறைவன் தரும் அருள் உதவியால் நற்செயல் புரியும்போது மேலும் அருள் கிடைக்கிறது.

தேவத்திரவிய அனுமானங்கள் பெறும்போதெல்லாம் நம்மேல் அருள் மழை பொழிகிறது.

அடிக்கடி,

முடிந்தால் தினமும்,

திருப்பலியில் கலந்து கொண்டு, திருவிருந்திலும் பங்கேற்கவேண்டும்.

திருவிருந்தின்போது அருளின் ஊற்றே நம்மிடம் வருகிறார்.

பாவசங்கீர்த்தனம் செய்யும் போதெல்லாம் நமக்கு நிறைய இறையருள் கிடைக்கிறது.

ஆனால் முதலில் தரப்படுகின்ற அருளைப் பயன்படுத்தாமல்,

செபம், தவம், நற்செயல்கள், தேவத்திரவிய அனுமானங்கள் போன்ற எதிலும் கலந்து கொள்ளாமல்

மனம் போன போக்கில் வாழ்பவன் பாவத்தில் வீழ்ந்து முதலில் கிடைத்த அருளையும் இழந்துவிடுவான்."

"அதுசரி,

கதையின் கடைசியில்

"உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்"

என்று இயேசு சொல்கிறாரே.
அதன் பொருள் என்ன?"

"கொஞ்சம் யோசித்துதான் சொல்ல வேண்டியிருக்கு.

நான் சொல்வது சரியான விளக்கமாக இல்லாவிட்டாலும் அது சரியான விளக்கம்தான்."

"அதென்ன புதிர்?"

"புதிர் ஒன்றுமில்லை. தன்னிலேயே அது சரியான விளக்கம்தான்.

ஆனால் இந்த இடத்திற்குரிய விளக்கமா என்பது புரியவில்லை.''

"முதலில் சொல்லுங்க."

"இப்போ இறைவன் தரும் அருளைப்பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறோம்.

அப்படியானால்

'உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும்,'

என்பதில் 'உள்ளவன்' என்றால் 'அருள் உள்ளவன்.'

இங்கே அருள் தேவ இஸ்டப்பிசாதத்தைக் (Sanctifying grace) குறிக்கிறது.

இந்த அருள்தான் நமக்கும் இறைவனுக்கும் இடையில் உறவை ஏற்படுத்துகிறது.

இறைவனோடு உறவில் இருந்தால்தான் அவரிடமிருந்து வேண்டிய அருளைப் பெறலாம்.

நாம் சாவான பாவம் செய்தால்
இந்த அருளை இழந்து விடுவோம்.

அருளை இழந்தால் இறைவனோடு உள்ள உறவு அறுந்துவிடும்.

உறவு அறுந்து விட்டால் நம்மால் நற்செயல் எதுவும் செய்ய இயலாது,

அதாவது நாம் செய்யும் எந்த செயலுக்கும் அருள் கிடைக்காது.

சாவான பாவ நிலையில் நமது ஆன்மா விண்ணகம் செல்லும் நிலையை இழந்துவிடும்.

அந்த வாக்கியத்தை இப்படிச் சொல்லலாம்:

'தேவஇஸ்டப்பிரசாத அருள் நிலையில் 'உள்ளவனுக்கு' சகல வித அருள் வரங்களும் கொடுக்கப்படும்.

சாவான பாவத்தினால்
தேவஇஸ்டப்பிரசாத அருளை இழந்தவனிடமிருந்து,

அதாவது இறையுறவு 'இல்லாதவனிடமிருந்து'

ஏற்கனவே இருந்த அருளும் எடுக்கப்படும்.
(Loss of all the merits acquired (through good deeds) in previous life, regardless of how saintly it was.)

சரியா?"

"Correct.

தேவஇஸ்டப்பிரசாதத்தை இழந்தவன் ஆன்மீக வாழ்வே
'இல்லாதவன்'.

ஆனால் ஆன்மீக வாழ்வை இழந்தவன்

நல்ல பாவசங்கீர்த்தனம்  செய்தால்

இழந்த இறையுறவை மீண்டும் பெறுவான்.

இறைவன் தரும் அருளைப் பயன்படுத்தி இறை உறவில் நீடிக்க வேண்டும்.

நாம் இவ்வுலகில் வாழ்வதே விண்ணுலக வாழ்விற்கு வேண்டிய அருள் வரங்களை மிகுதியாக ஈட்டதான்.

ஈட்டியதை ஒரு சாவான பாவத்தினால் இழந்து விடக்கூடாது."

ஆண்டவர் நமக்குத் தந்த அருளை நமது

செப, தவ வாழ்வினால்,

நற்செயல்களால்,

தேவதிரவிய அனுமானங்களினால்,

திருப்பலி காண்பதினால்,

திருவிருந்தில் கலந்து கொள்வதினால்

மிகுதியாக்குவோம்.

இறுதி நாளில் இறைவனைச் சந்திக்கும்போது

நாம் ஈட்டிய அருளுக்குப் பரிசாக

 விண்ணுலகையே   அளிப்பார்.

முடிவில்லா காலம் இறைவனோடு இணைந்து பேரின்பத்தில் வாழ்வோம்.

லூர்துசெல்வம். 

No comments:

Post a Comment