"வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்"(மத்.12:50)
* * * * * * * * * *
ஏற்கனவே தங்கள் மனதில் தாங்களே உருவாக்கிய கருத்திற்கு (Preconceived idea) பைபிளில் ஆதாரம் தேடி அலைபவர்கள்
ஏதாவது ஒரு வசனத்தைப் பிடித்துக்கொண்டு,
"இதோ ஆதாரம்" என்பார்கள்.
ஆனால் உண்மையில் அவர்களுடைய கருத்துக்கும், வசனத்துக்கும் சம்பந்தமே இருக்காது.
கணக்கிற்கு விடை தேடாமல்
ஏதோ ஒரு விடைக்கு கணக்கைத் தேடுவது எப்படி?
அப்படிப்பட்டவர்கள் கையில் இவ்வசனம் மாட்டிவிட்டது.
1. யார் அவர்கள்?
2. ஏற்கனவே அவர்களாகவே கற்பனை செய்துள்ள கருத்து எது?
3. வசனத்திற்குரிய விளக்கம் என்ன?
1.நமது சகோதரர்கள்தான்.
நம்மை விட்டுத் தனிக்குடித்தனம் போனவர்கள்.
இவர்கள்தான் அவர்கள்.
2. அவர்கட்கு நமது அம்மாவைப் பிடிக்காது.
நமக்கு அம்மாவைப் பிடிக்கிறதுவும் அவர்களுக்குப் பிடிக்காது.
அவர்களுக்கு இயேசுவைப் பிடிக்கும்.
பைபிளையும் பிடிக்கும்.
பைபிள் வசனங்களுக்கு தங்கள் இஸ்டம்போல் விளக்கம் கொடுப்பதும் பிடிக்கும்.
பைபிள் இயேசுவுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது அவர்கள் கருத்து.
மரியாள் இயேசுவைப் பெற்றாள் என்பதைத் தவிர அவளுக்கு வேறு முக்கியத்துவம் இல்லை,
மற்ற பெண்மணிகளைப்போல மரியாளும் ஒரு சாதாரண பெண்மணிதான் என்பது அவர்கள் கருத்து.
'மரியாள் இயேசுவின் தாய், இறைவனின் தாய்
என்ற ஒரு உண்மையே போதும் அவள் மற்ற எல்லோரையும் விட மேலானவள் என்று கூற.
ஆனால் அது அவர்களுக்குப் புரியவில்லை.
இயேசுவின் தாய் என்றால் ஏற்றுக்கொள்வார்கள்,
இறைவனின் தாய் என்றால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
பிறந்து 30 வருடம் கழித்து ஒருவன் கலெக்டர் ஆகியிருப்பான்,
அவன் தாயைக் கலெக்டரின் அம்மா என்றால் ஏற்றுக்கொள்வார்கள்.
பிறந்து 25 வருடம் கழித்து ஒருவன் டாக்டர் ஆகியிருப்பான்,
அவன் தாயைக் டாக்டரின் அம்மா என்றால் ஏற்றுக்கொள்வார்கள்.
ஆனால் மனுவுரு எடுக்கு முன்பும் கடவுள்,
மனுவுரு எடுக்கும்போதும் கடவுள்,
மனுவுரு எடுத்த பின்பும்
கடவுள்,
பிறக்கும்போதும் கடவுள்,
பிறந்தபின்னும் கடவுள்,
மரித்தபோதும் கடவுள்,
உயிர்த்தபோதும் கடவுள்,
இப்போதும் கடவுள்,
எப்போதும் கடவுள்.
அவரைப் பெற்றவளைக் கடவுளின் தாய் என்றால்
ஏற்றுக்கொள்ள மாட்டாகள்!
மனித சுபாவத்திற்குத்தானே
தாய் என்பார்கள்.
சுபாவம் தனியே இருக்காது, ஒரு ஆளுக்குதான் சொந்தமாய் இருக்கும்.
இயேசுவின் மனித சுபாவம் இறைமகன் என்னும் தேவ ஆளுக்கு உரியது.
இறைமகனுக்கு மனுவுரு எடுத்தபின் இரண்டு சுபாவங்கள், தேவ சுபாவம், மனித சுபாவம்.
இறைமகன்
அதாவது இயேசு
அதாவது கடவுள்
தன் மனித சுபாவத்தில் பாடுபட்டு மரித்தார்.
கடவுள்
(மனித சுபாவத்தில்)
பாடுபட்டு மரித்தார்.
(மனித சுபாவத்தில்)
பாடுபட்டு மரித்த 'கடவுளின் தாய்' மரியாள்.
'கடவுளின் தாய்' மரியாள்.
'கடவுளின் தாய்' என்ற ஒரு பட்டமே மரியாளுக்கு மனுக்குலத்திலேயே மிக உயர்ந்த அந்தஸ்தைக் கொடுத்திருக்கிறது.
இந்த அந்தஸ்தை மரியாளுக்கு
கொடுத்தது இயேசு!
இவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்வார்களாம்,
அவர் கொடுத்த அந்தஸ்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்களாம்.
அவர்களுக்கு பைபிள்தான் முக்கியம்.
இயேசுவைப் பற்றி பைபிள் என்ன கூறுகிறதோ அதை மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள்.
அதாவது புதிய ஏற்பாடு எழுதப்படுவதற்கு முன் இவர்கள் பிறந்திருந்தால்
மத்தேயுவோ, அருளப்பரோ
'இயேசு மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தார்' என்று சொல்லும்போது
'எங்கே பைபிள்? எங்கே ஆதாரம்?' என்று கேட்டிருப்பார்கள்!!!
"வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்."
என்ற இறைவாக்கை
எவ்வாறு மாதாவுக்கு எதிரான
தங்கள் கொள்கைக்கு ஆதாரமாக
இவர்கள் காட்டுகிறார்கள்?
இயேசு போதித்துக் கொண்டிருந்தபோது
ஒருவன் அவரிடம்,
"இதோ! உம் தாயும் சகோதரரும் உம்மோடு பேச வெளியே காத்துக்
கொண்டிருக்கின்றனர்."
என்றான்.
இயேசு
"வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ
அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்" என்றார்.
இவர்களுடைய வாதம்,
" தந்தையின் விருப்பப்படி நடக்கிறவனே என் தாய்" என்று இயேசு சொல்கிறார்.
ஆகவே பெற்ற தாயை விட சீடர்களுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.
இயேசுவே முக்கியத்துவம் கொடாத மரியாளுக்கு நாம் ஏன் கொடுக்க வேண்டும்?"
இறை வசனத்தை தங்கள் கருத்துக்கு ஏற்றபடி வளைக்கும் அவர்களின் பழக்கத்திற்கு இது ஒரு உதாரணம்.
3.இறை வசனம் குறிப்பது அவர்களது கருத்தை அல்ல.
இயேசு தன் தாய்க்கு அதிக முக்கியத்துவம் கொடாதவராய் இருந்திருந்தால்
தனது 33 வயது வாழ்க்கையில் 30 ஆண்டுகளைத் தன் தாய்க்குக் கீழ்ப்படிந்து நடப்பதிலே கழித்திருக்க மாட்டார்.
நற்செய்தியாளர் மத்தேயு சீடத்துவத்தின் முக்கியத்தை வலியுறுத்த மாதா மகனைப் பார்க்க வந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.
இயேசுவின் வார்த்தைகள் அவருக்கு உதவியாய் இருந்தன.
இயேசு புவியில் மனுவுரு எடுத்தது தன் தந்தையின் சித்தத்தை நிறைவேற்ற.
அவருக்கு உதவியாய் இருந்தவர்கள்
முதலில் அவருடைய அன்னை.
அவள் மூலம்தான் இயேசு பிறந்தார்.
அடுத்து அவருடைய சீடர்கள்.
அவர்கள் மூலம்தான் அவருடைய நற்செய்தி உலகெங்கும். அறிவிக்கப்பட்டது.
அவர் மனுவுரு எடுக்குமுன் கபிரியேல் தூதரை மரியாளிடம் அனுப்புகிறார்.
பிதாவின் சித்தம் இயேசு மனிதனாய்ப் பிறந்து, மனுக்குலத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாகப் பாடுபட்டு மரிக்க வேண்டும்.
மனிதனாய்ப் பிறக்க ஒரு தாய் வேண்டும்.
கடவுள் மனிதனுடைய சுதந்திரத்தை எப்போதும் மதிப்பவர்.
ஆகவே தனக்குத் தாயாக ஒரு கன்னிப் பெண் முழு மனதுடன் சம்மதிக்க வேண்டும்.
அந்தச் சம்மதத்தைப் பெறவே கபிரியேல் தூதரை மரியாளிடம் அனுப்பினார்.
மாதாவும்,
"இதோ ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது"
என்று கூறி,
தந்தையின் சித்தத்தை
நிறைவேற்றவேண்டிய பணியில் ஒத்துழைக்கத் தன் முழுச் சம்மதத்தைத் தெரிவிக்கிறாள்.
இயேசு மனுவுரு எடுக்கிறார்.
இயேசுவைப் பொறுத்த மட்டில் யாரெல்லாம் தன் தந்தையின் சித்தத்தை நிறை வேற்ற உதவுகிறார்களோ
அவர்களெல்லாம் தன் தாய்க்குச் சமம்.
மரியாள் தந்தையின் சித்தத்தை நிறைவேற்ற உதவினாள்.
தன் அன்னை செய்ததைச் செய்பவர்களையும் தன் அன்னையாகவே நினைக்கிறார்.
ஒருவரைப் பற்றி பெருமையாய் பேச எண்ணும்போது உயர்ந்த நிலையில் உள்ளவர்களோடுதான் ஒப்பிடுவோம்.
தன் தாயை மிக உயர்ந்த நிலையில் வைத்திருப்பதால்தான்
தன் சீடர்களைப் பெருமைப்படுத்த தன் தாயோடு ஒப்பிடுகிறார்.
இந்தத் தனது கருத்தைத்தான்
தன் தாய் தன்னைப் பார்க்கவந்த செய்தியை ஒருவர் அவரிடம் தெரிவித்தபோது
தன் போதகத்தைக் கெட்டுக் கொண்டிருந்த மக்களிடம்
தன் சீடர்களைக் காண்பித்துக் கூறினார்.
எந்தவிதத்திலும் தன் தாயைக் குறைத்துப் பேசவில்லை.
மாறாக தன் சீடர்களைத் தன் தாயின் ஸ்தானத்திற்கு உயர்த்திப் பேசினார்.
அவரது வார்த்தைகளை விளக்க வேண்டுமானால்,
இப்படிக் கூறவேண்டும்:
"யார் என் தாய்?
என் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுபவரே என் தாய்.
என்னைப் பெற்ற தாயும் என் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றினாள்.
என் சீடர்களும் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுகிறார்கள் என்னைப் பின்தொடர்வதன்மூலமும்
என்னை உலகிற்கு அளிக்கயிருப்பதன்மூலமும்.
என்னைப் பெற்றவள் ஆரம்பித்து வைத்த நற்செய்திப் பணியை என் சீடர்கள் தொடர்வார்கள்.
என் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுவதால் என் சீடர்களும் என் தாய்தான்."
இயேசு தன் சீடர்களை எந்த ஸ்தானத்தில் வைத்திருந்தார் என்பதை விளக்கவே மத்தேயு இந்நிகழ்வை தன் நற்செய்தி நூலில் பதிவு செய்திருக்கிறார்.
நாமும் இறைவன் சித்தத்தை நிறைவேற்றினால் இயேசுவின் தாயாக மாறுவோம்.
இயேசுவை உலகிற்கு அளிப்போம்,
உன்னதரின் தாயாக மாறுவோம்.
லூர்துசெல்வம்.
.
No comments:
Post a Comment