Monday, November 4, 2019

"நீதிமான்கள் உயிர்த்தெழும்போது உனக்குக் கைம்மாறு கிடைக்கும்"(லூக்.14:14)




"நீதிமான்கள் உயிர்த்தெழும்போது உனக்குக் கைம்மாறு கிடைக்கும்"
(லூக்.14:14)
*****     ******      *******      *****

"அப்பா, எதுக்காக தினசரி காலையில பைபிள் வாசிக்கிறீங்க?"

'நான் பைபிள் வாசிக்கிறதுல உனக்கென்ன பிரச்சனை?" 

"எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லைப்பா.

இதே கேள்வியை வாத்தியார் எங்கிட்ட கேட்டாரு"

"அப்பா எதுக்காக தினசரி காலையில பைபிள் வாசிக்கிறாங்கன்னா கேட்டாரு?"

"இல்லைப்பா. என்னைப் பற்றிதான்  கேட்டாரு. நானும் பைபிள் வாசிக்கிறேன்.

ஆனால் ஏன் வாசிக்கிறேன்னு சொல்லத் தெரியல."


..."'ஏன் வாசிக்கிறாய்?' என்ற கேள்விக்கு உரிய பதில் ஆளுக்கு ஆள் மாறுபடும்.

ஒரே செயலுக்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

சில பேர் பைபிளில முனைவர் பட்டம் வாங்கிறதுக்காக படிப்பாங்க.

சில பேர் பைபிள மையமா வச்சி ஏதாவது புத்தகம் எழுறதுக்காகப் படிப்பாங்க.

சில பேர் சொற்பொழிவு ஆற்ற அல்லது பிரசங்கம் வைக்கத் தயாரிப்பதற்காக வாசிப்பாங்க.

சில பேர் பட்டிமன்றத்தில பேசறதுக்காக வாசிப்பாங்க..."

"யாரும் எதுக்கு வேண்டுமானாலும் வாசித்துவிட்டுப் போகட்டும்பா.

நாம் எதுக்காக வாசிக்க வேண்டும்? 

அதைச் சொல்லுங்க."

..."பைபிள் இறைவனின் வார்த்தை.

அதை வாசிக்கும்போது இறைவன்  நம்மோடு பேசுகிறார்.

நாம் எப்படி வாழ வேண்டும் என்று கூறுகிறார்.

இறைவன் சொற்படி வாழ்வதற்கே பைபிள் வாசிக்கிறோம்.

ஆனால் நம்மில் பெரும்பாலோர் இறைவன் சொல்லைக் கேட்கிறோம்,

ஆனால் அதன்படி நடப்பதில்லை.

"நல்ல மனதுள்ளோருக்கு சமாதானம்" என்று வாசிக்கிறோம்.

நம்மில் எத்தனை பேர் சமாதானத்தோடு வாழ்கிறோம்?

இயேசு மாடடைக் குடிலில் பிறந்தார். படுக்க இடமின்றி தீவனத்தொட்டியில் படுத்திருந்தார்.
 
ஏழையாகப் பிறந்த அவர் விழாவை இலட்சக்கணக்கில் செலவழித்து ஆடம்பரமாகக் கொண்டாடுகிறோம். 

இது இயேசுவைக் கிண்டல் செய்கிறது மாதிரி இல்லை? 

எளிய மனது (Poor in spirit) உள்ளவர்களுக்கு  விண்ணரசு
என்று வாசிக்கிறோம்.

எத்தனைபேர் பணத்தின்மேல் பற்று இல்லாமல் இருக்கிறோம்? 

"உன் விரோதியை நேசி, தீமை செய்வோருக்கு நன்மை செய்''
என்று வாசிக்கின்றோம்.

இக்கட்டளைப்படி வாழ்ந்தால் நாட்டில் சண்டை சச்சரவு ஏன் வருகிறது?"

"புரிகிறது. சாப்பிட்ட உணவு சீரணிக்க வேண்டும்.

சீரணிக்காமல் சாப்பிட்டுக் கொண்டே போனால் வயிற்று வலிதான் மிஞ்சும்.

பைபிளில் வாசிப்பதை நடைமுறைப் படுத்தாமல் வாசித்துக் கொண்டே போனால் அறிவு மட்டும் வளரும்.

அறிவு மட்டும் வளர்ந்தால் கர்வம் மட்டும்தான் மிஞ்சும்.

அப்பா, நீங்கள் இன்று வாசித்த வசனங்களை எப்படி நடமுறைப் படுத்தலாம் என்று கூறுங்களேன்."


"நீ பகல் உணவிற்காவது இராவுணவிற்காவது, உன் நண்பர்களையோ சகோதரர்களையோ உறவினர்களையோ, செல்வரான அண்டை வீட்டாரையோ அழைக்காதே. அவர்களும் உன்னைத் திரும்ப அழைக்கலாம். அப்போது உனக்குக் கைம்மாறு கிடைத்துவிடும்.

13 மாறாக, நீ விருந்து நடத்தும்போது ஏழைகள், ஊனர்கள், முடவர்கள், குருடர்கள் ஆகியோரைக் கூப்பிடு.

14 அப்போது நீ பேறுபெற்றவன். ஏனெனில், உனக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நீதிமான்கள் உயிர்த்தெழும்போது உனக்குக் கைம்மாறு கிடைக்கும்" என்றார்.
(லூக். 14:12-14)

இவைதான் இன்று வாசித்த வசனங்கள்.

நாம் கிறிஸ்தவர்கள். 

நாம் எதைச் செய்தாலும் கிறிஸ்தவ மதிப்பீட்டின் (Christian value)
அடிப்படையில்தான் செய்ய வேண்டும்.

விண்ணக வாழ்வை நோக்கிச் செய்யப்படும் எந்தச் செயலுக்கும் ஆன்மீக மதிப்பீடு
உண்டு,

அதாவது விண்ணகத்தில் சன்மானம் உண்டு.

அதே செயலை சுய திருப்திக்காக 

அல்லது

இவ்வுலகத்தில் பிரதிபலன் எதிர்பார்த்து செய்தால்

இவ்வுலக சம்பந்தப்பட்ட பலன் கிடைக்கலாம்,

விண்ணகத்தில் எந்த பலனும் கிடைக்காது.

இவ்வுலக வழக்கப்படி 

நாம் ஏதாவது வீட்டு விழாவிற்கு அழைக்கப் பட்டிருந்தால் 

நம்மை அழைத்ததற்கு நன்றியாக 

ஏதாமொரு பரிசு கொடுக்கிறோம்.


நாம் யாரையாவது நமது வீட்டு விழாவிற்கு அழைத்தால் அவரும் நாம் கொடுத்ததற்கு ஈடாக ஒரு பரிசைத் தருகிறார்.

இதனால் நமக்கோ, அவருக்கோ கூடுதல் பலன் கிடைக்கப் போவதில்லை.

அவர் தரும் பரிசு  நாம் கொடுத்ததைவிட பெரியதாய் இருந்தால் நமக்கு வருமானம் கிடைக்கும்.

ஆனால் நாம் ஆன்மீகரீதியாகப் பலன் அடைய வேண்டுமென்றால்,

முதலாவது விழாவை கடவுளுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.

அடுத்து  பரிசு எதுவும் தர முடியாதவர்களை விழாவிற்கு அழைக்க வேண்டும்.

அவர்களை அழைத்தால் நமக்கு இவ்வுலகப் பலன் எதுவும கிடைக்காது.

ஆனால் அவர்களுக்கு நாம் கொடுக்கும்  வரவேற்பு 

இறைவனுக்கு நாம் கொடுக்கும்  வரவேற்பு.

அவர்களுக்கு நாம் கொடுக்கும் உபசரிப்பு

இறைவனுக்கு நாம் கொடுக்கும் உபசரிப்பு.

அவர்களுக்கு நாம் கொடுக்கும் விருந்து

இறைவனுக்கு நாம் கொடுக்கும் விருந்து,  

அவர்கள் நமக்கு பரிசுப் பொருள் எதுவும் தராமலிருக்கலாம்.

ஆனால் விண்ணகத்தில் இறைவன் நமக்குத் தரவிருக்கும் சன்மானம் மிக அதிகமாக இருக்கும்."
  

"அப்பா, உண்மையிலேயே நண்பர்களையோ சகோதரர்களையோ உறவினர்களையோ, செல்வரான அண்டை வீட்டாரையோ விழாக்களுக்கு அழைக்கக் கூடாதா?"

"ஆண்டவர் சொல்வதன் கருத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அவர்களும் நம் அயலான்தான்.

 அவர்களையும் நாம் நேசிக்க வேண்டும்.

அவர்களுக்கும் நாம் சேவை செய்ய வேண்டும்.

யாருக்கு எதைச் செய்தாலும் கடவுளுக்காகச் செய்ய வேண்டும்.

பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும்.

அதுதான் நற்செயல்.

நற்செயல் செய்வோர் அதற்குரிய விண்ணக சன்மானத்தைப் பெறுவர்."

"அதுவும் எதிர்பார்த்துச் செய்வதுதானே?"

"இறைவன் நம்மைப் படைத்ததின் நோக்கமே அதுதானே!

ஓட்டப் பந்தையத்தில் ஓடுவதே எல்லோருக்கும் முந்தி முடிவுக் கோட்டைத் தொடுவதுதான்! 

நோக்கமே இல்லாமல் ஓடுவதுதான் தப்பு.

நமது ஆன்மீக வாழ்வின் நோக்கமே விண்ணகமாகிய சம்பாவனைதான்!

அதை எதிர்நோக்கிதான் நாம் செயல்பட வேண்டும்."

" 'நீதிமான்கள் உயிர்த்தெழும்போது உனக்குக் கைம்மாறு கிடைக்கும்'

என்று ஆண்டவர் சொல்கிறாரே, அப்போ இறந்த நாளில் கிடைக்காதா?"

"நாம் இறந்த நொடியிலேயே நமக்கு விண்ணகமா, நரகமா என்பது  தீர்மானமாகிவிடும்.

நமது வாழ்வை ஒட்டியே சன்மானமோ, இழப்போ இருக்கும்.

உலகின் இறுதி நாளில் நாம் உயிர்த்தெழுவோம் என்பதை ஞாபகப்படுத்தவே 'உயிர்த்தெழும்போது' என்கிறார்.

நமது மரணம் எப்படி உறுதியோ, அப்படியே நாம் உயிர்த்தெழுவதும் உறுதி.

நமது வாழ்வின் நோக்கம் விண்ணகம். அதை நோக்கியே பயணிப்போம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment