Wednesday, November 13, 2019

"கடவுளின் அரசு இதோ! உங்களிடையே உள்ளது"(லூக்.17:21)




"கடவுளின் அரசு இதோ! உங்களிடையே உள்ளது"
(லூக்.17:21)
*****          *****        *****
".ஏங்க, ஒரு நிமிசம் உட்கார்ந்து என் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு அப்புறம் எதாவது வேலை இருந்தால் பாருங்க."

"நான் உட்காருவதற்கே ஒரு நிமிசம் ஆயிடும். அதுக்குள்ளே  எப்படிடி நீ கேள்வி கேட்டு நான் பதில் சொல்ல?" 

"உட்காரத்தாங்க ஒரு நிமிசம்.
கேள்வி பதில் எவ்வளவு நேரம் வேணும்னாலும் ஆகும்.

ஒவ்வொரு தடவை கர்த்தர் கற்பித்த செபம் சொல்லும் போதும் கடவுளைப் பார்த்து
'உம்முடைய அரசு வருக' என்று சொல்கிறோமே.

ஆனால் தொடர்ந்து நாம ஓட்டு போட்டவங்க அரசுதானே நடந்துகிட்டிருக்கு.

கடவுளின் அரசு எப்போ வரும்?"

..."நீ இப்படிக் கேள்வி கேட்பன்னு தெரிஞ்சிதான் இயேசு அதற்குரிய பதில பக்கத்திலேயே வச்சிருக்கார்."

"பக்கத்திலேயே வச்சிருக்காரா?  நான் பார்க்கலியே!"

..."அதென்ன கடலை மிட்டாயா, பார்க்கதுக்கு?

செபத்தின் அடுத்த வரியைச் சொல்லு."
 
"உமது சித்தம் விண்ணகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப் படுவதாக."

..."அப்படின்னா என்ன அருத்தம்?"

"விண்ணகத்தில் கடவுளோடு சம்மனசுக்களும், புனிதர்களும் வாழ்கின்றார்கள். 

அவர்கள் எப்படி அவருடைய சித்தப்படி வாழ்கின்றார்களோ

 அதேபோல பூலோகத்தில் உள்ளவர்களும் 

அவருடைய சித்தப்படி வாழ அருள் புரிய வேண்டும்' 

என்று கடவுளிடம் கேட்கிறோம்."

..."இறைவன் சித்தப்படி நடப்பது இறையரசு.

அரசு(Kingdom)ன்னா அதை ஆள ஒரு அரசர்(King) இருக்க
வேண்டும்.

அரசர் சொன்னபடி மக்கள் நடக்க வேண்டும்.

இறையரசில் இறைவன்தான் அரசர்.  நாம் அரசின் மக்கள்.
(Citizens)

நாம் இறைவன் சித்தப்படி நடக்கவேண்டும். 

நடந்தால் நம்மிடையே இறையரசு இருக்கிறது என்பது பொருள்.

இறைவன் சித்தப்படி நடக்காவிட்டால் நாம் இறைவனை ஏற்றுக் கொள்ளவில்லை என்று அருத்தம்.

'உம்முடைய அரசு வருக' என்று நாம் வேண்டும்போது

'இறைவா, புவியில் உள்ள அனைவரும் உமது சித்தப்படி நடக்க அருள் தாரும், அப்பா'

என்று வேண்டுகிறோம்."

"விண்ணகத்தில் உள்ளவர்கள் முழுக்க முழுக்க இறைவனுள் வாழ்கின்றார்கள்.

அவர்களை முழுக்க முழுக்க ஆள்வது இறைவனின் சித்தம்தான்.

அவர்களின் சித்தமும் இறைவனின் சித்தமும் ஒன்றித்திருப்பதால் அவர்கள் இறைவன் சித்தப்படிதான் வாமுடியும்.

நமது நிலை அப்படி இல்லையே.

இவ்வுலகைச் சார்ந்த அரசு சட்டங்களை இயற்றி,  அச்சட்டங்கள் படி வாழச் சொல்கிகிறது.

சட்டங்களை மீறுபவர்களைத் தண்டிக்கிறது.

இறைவனின் சித்தம்தான் இறையரசின் சட்டம்.

அது எனக்குப் புரிகிறது.

அநேக சமயங்களில் புவியரசின் சட்டங்களும், இறையரசின் சட்டங்களும் ஒத்துப்போவதில்லை.

ஒரு வண்டியில் மாட்டப்பட்ட இரண்டு மாடுகளும் ஆளுக்கொரு திசையில் இழுத்தால் வண்டி என்னங்க செய்யும்?"

..."பேசாம நான் கேட்கிற கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லு.

எல்லா கேள்விகளுக்கும் உனக்குப் பதில் தெரியும்னு  எனக்குத் தெரியும்.

முதலாவது  'கடவுளின் அரசு  நம்மிடையே உள்ளது.' என்பதை ஏற்றுக் கொள்கிறாயா? "

"..........."

..."என்னடி பதிலைக் காணோம்."

"பேசாம எப்படிப் பதில் சொல்றதுன்னு யோசிச்சிக் கிட்டிருக்கேன்.''

"அப்போ யோசிச்சி முடிச்சிட்டுக் கூப்பிடு. வாரேன்."

"ஏங்க,உட்காருங்க.

கடவுளின் அரசு இதோ! நம்மிடையே உள்ளது." என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

நம்மிடையே மட்டுமல்ல நமக்குள்ளும் இருக்கிறது."

"இரண்டு அரசுகளில் நாம் எந்த அரசுக்குக் கட்டுப் பட்டவர்கள்?"

"நாம் இறையரசுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள்."

..."புவியரசுக்கு?"

"அதுவும் இறையரசுக்குக் கட்டுப்பட்டதுதான்."

"நமக்குள் இன்னொரு அரசு இருக்கிறது தெரியுமா?"

"தெரியும். நமது உடலின் அரசு. ஆனால் நாம் அதற்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல. அதுதான் நமக்குக் கட்டுப் பட்டது."

..."கொஞ்சம் விளக்கமாகச் சொல்லு."

"நமது என்பது நமது ஆன்மாவைத்தான் குறிக்கும்.

இறையரசே நமது ஆன்மாவைச் வழிநடத்தும் அரசுதான்.

இறைவன் சித்தம் நமது ஆன்மா சம்பந்தப் பட்டதுதான்.

நமது உடல் மண்ணிலிருந்து எடுக்கப் பட்டதால் அது மண்ணுலகைச் சார்ந்தது.

மண்ணுலகமும் இறைவனால் படைக்கப் பட்டதுதான்.

ஆனால் அது இறையரசைச் சார்ந்ததல்ல.

இறையரசு முழுமையாக நிறுவப்படும்போது 
மண்ணுலகம் அழிந்துபோகும்.

அதாவது மண்ணுலகம் அழிந்தபின்தான் மனுக்குலம் முழுவதும் நித்தியத்திற்குள் நுழையும்.

நல்லவர்கள் முடிவில்லா பேரின்பத்திற்குள்ளும்,

கெட்டவர்கள் முடிவில்லா பேரிடர்க்குள்ளும் நுழைவர்.

கடவுள் மனிதன் ஆனது மனித ஆன்மாவை மீட்க.

பூமித்தாயையோ (Mother Earth) அல்லது அதோடு சங்கமம் ஆகப்பபோகிற உடலையோ மீட்க அல்ல.

அநேக ஆன்மீகவாதிகள் பூமித்தாயைக் காப்பாற்றப் புறப்பட்டிருக்கிறார்கள்.

இறையரசு பூமியைச் சார்ந்ததல்ல.

நாம் உலகம் அழியும்போது உயிர்ப்போம்.

உயிர்க்கும்போது நமக்குத் தரப்படும் உடல் இவ்வுலகைச் சார்ந்ததாய் இருக்காது.

இப்போது நம்மிடம் இருப்பது Material body.

ஆனால் விண்ணரசில் நுழையும்போது நமக்கு இருக்கப்போவது Spiritual body.

ஆகவே இறையரசைச் சேர்ந்த நாம் காப்பாற்ற வேண்டியது நமது ஆன்மாவை, பாவத்திலிருந்து."

..."நாம் இறையரசைச் சார்ந்தவர்களாக இருப்பதால் இறைவன் சித்தத்தை நிறைவேற்ற வேண்டும்.

ஆனால் இறைவன் நேரடியாக நம்மிடம் வந்து தன் சித்தத்தைத் தெரிவிக்க மாட்டார்.

இறைவன் சித்தத்தை எப்படி அறிவது?"

"இறைவன் நம்மைப் படைத்ததே நம்மை அன்பு செய்யவும்,  நம்மால் அன்பு செய்யப்படவும்தான்.
To love and to be loved.

அன்பு செய்யும்பொருட்டு அவர் நமக்குத் தந்த பத்து கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

அடுத்து நம்மை ஆன்மீகப் பாதையில் வழி நடத்துவதற்காக 

அவர் நிறுவிய தாய்த் திருச்சபையை நேசித்து ஆன்மீகப் பாதையில் 

அது காட்டுகிற வழியே நடக்க வேண்டும்.

நம்மை வழி நடத்துவதற்காக அழைக்கப்பட்ட மேய்ப்பர்கள் இயேசு எந்த வழியில் நம்மை நடத்தச் சொன்னாரோ அதே வழியில் நடத்த வேண்டும்.

அடுத்து நமது ஆன்மீக வாழ்வில் எப்படிச் செயல்படண்டும் என்பதை

 ஆண்டவர் நம் இதயத்தில் ஏற்படும் தூண்டுதல்கள் (Inspirations) தெளிவுபடுத்துவார்.

அவற்றை ஏற்று நடத்த வேண்டும்.

நமது ஆன்மீகக் குரு நமக்குக் கூறும் அறிவுரைகளும் இறைவனின் சித்தம்தான்.

அவற்றையும் ஏற்று நடக்க வேண்டும்.

நமது வாழ்வில் இன்பமோ, துன்பமோ எது நடந்தாலும்

அதை இறைவனின் சித்தமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்."

..."இறை அரசின் சட்டங்களுக்கு எதிரான லௌகீக அரசின் சட்டங்களுக்கு நாம் கட்டுப்பட்டவர்கள் அல்ல.

இறைவனுக்கு சாட்சியாக நமது உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.

நாம் இறைவனின் பிள்ளைகள். அவருக்கு மட்டுமே கட்டுப்பட்வர்கள்."

"சரிங்க. இன்னொரு இறைவசனத்திற்கு விளக்கம் வேண்டும், நாளைக்கு."

லூர்துசெல்வம்.

No comments:

Post a Comment