"இவளோ தன் வறுமையிலும் தன் பிழைப்புக்கானது முழுவதையுமே போட்டுவிட்டாள்" (லூக்.21:4)
* * * * * * * * * *
எல்லோரும் காற்றைத்தான் சுவாசிக்கிறோம்.
ஆனால் இடத்திற்கு இடம் சுற்றுப்புறத்தின் தன்மை வித்தியாசமாக இருப்பதால்
காற்றின் தன்மை மாறுகிறது, சுவாசிப்பதன் தன்மையும் மாறுகிறது, விளைவும் மாறுகிறது.
சுற்றுப்புற சூழ்நிலை அதற்குள் வாழும் மக்களையும் பாதிக்கிறது.
மாசுபட்ட சூழ் நிலையில் வாழ்வோர் அநேக நோய் நொடிகளுக்குப் பலியாகிறார்கள்.
சுத்தமான சூழ்நிலையில் சுகமாக வாழ்கிறார்கள்.
இது உலகியல் வாழ்வில்.
ஆன்மீக வாழ்வில்?
பங்குக் கோவில்.
பங்கு மக்கள் அனைவரும் ஞாயிறு வழிபாட்டிற்காக அதே கோவிலுக்குதான் போகிறோம்.
அதே பங்குச் சாமியார் வைக்கும் திருப்பலியில்தான் அனைவரும் கலந்து கொள்கிறோம்.
அதே பிரசங்கத்தைத்தான் கேட்கிறொம்.
அதே திருவிருந்தில்தான் அனைவரும் பங்கேற்கிறோம்.
அதே பரிசுத்த ஆவிதான் அனைவரிலும் செயல் புரிகிறார்.
ஆனால் திருப்பலி காண்பதின் விளைவு எல்லோருக்கும் ஒரே மாதிரியாய் இருப்பதில்லை.
எல்லோரிடத்திலும் மாற்றம் இருக்கும். ஆனால் மாற்றத்தின் தன்மையும் அளவும், ஆளுக்கு ஆள் மாறுபடும்.
பெறும் அருள் வரங்களின் அளவில் மாற்றம் இருப்பது மட்டுமல்ல
ஆன்மாவின் நிலையிலும் மாற்றம் இருக்கும்.
சிலர் பாவிகளாய் நுழைந்து பரிசுத்தவான்களாய்
வெளியேறுவவார்கள்.
சிலர் பரிசுத்தவான்களாய் நுழைந்து அதில் கொஞ்சம் இழந்து வெளியேறுவவார்கள்.
போனபடியே யாரும் திரும்புவதில்லை.
இதற்கெல்லாம் என்ன காரணம்?
அல்லது,
யார் காரணம்?
உலகியல் சூழ்நிலையின் மேல் பழியைப் போடுவதுபோல்
ஆன்மீகவியலில் போடமுடியாது.
அவரவர் செயலுக்கு அவரவர்தான் பொறுப்பு.
இறுதி நாளில் கடவுள் கணக்குக் கேட்கும்போது
ஆதாம் ஏவாள் மேலும், ஏவாள் பாம்பின்மேலும் பழியைப் போட்டதுபோல
நாமும் யார்மேலேயும் பழியைப்போடமுடியாது.
கடவுள் ஒவ்வொரு மனிதனையும் தனித்தன்மையுடன் (Uniqueness) படைத்திருக்கிறார்.
Suppose, நாம் ஆண்டவரிடம்
"ஆண்டவரே,
நான் உம் கட்டளைகளின்படி தான் நடக்க ஆசைப் படுகிறேன்,
ஆனால், என்னை சுற்றி வாழ்ந்தோரின் ஆதிக்கத்தினால் என்னால் நான் நினைத்தபடி நடக்க இயலவில்லை.
முடியாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன்?" என்று சொன்னால்
அவர் இப்படிச் சொல்வார்,
"நான் மனுக்குலத்தை மொத்தமாகப் படைக்கவில்லை.
ஒவ்வொருவரையும் தனித்தனியே படைத்தேன்.
ஒவ்வொருவரையும் என் சாயலாகப் படைத்தேன்.
ஒவ்வொருவருக்கும் முழுச் சுதந்திரத்தைக் கொடுத்தேன்.
ஒவ்வொருவருக்கும் தனித்தனியே மனசாட்சியைக்
கொடுத்தேன்.
ஒவ்வொருவரும் எனக்குதான் பதில் சொல்ல வேண்டியவர்கள், சூழ் நிலைக்கு அல்ல.
நான் யாரையும் 'எப்படியாவது வாழுங்கள்' என்று படைக்கவில்லை.
'இப்படித்தான் வாழவேண்டும்' என்ற கட்டளையோடுதான் ஒவ்வொருவரையும் படைத்தேன்.
படைத்து தனியே யாரையும் விட்டுவிடவில்லை.
எப்போதும் ஒவ்வொருவருடனும் இருக்கிறேன்.
எதற்காக?
வேடிக்கை பார்க்கவா?
இல்லை, உதவி செய்வதற்காக.
கட்டளைப்படி வாழக் கஸ்டமாக இருந்தால் என்னிடம் உதவி கேட்கவேண்டியதுதானே!
நான் என் அருள் வரங்களால் ஒவ்வொருவருக்கும் உதவ ஒவ்வொரு வினாடியும் காத்துக்கொண்டிருக்கிறேன்.
உன் நடத்தைக்கு சூழ்நிலை மேல் பழிபோடுவதை விட்டுவிட்டு என்னிடம் வந்து உதவி கேள்.
எந்தச் சூழ்நிலையிலும் உன்னைப் பத்திரமாகப் பாதுகாத்து,
எதிர்ப்புகள் மத்தியில் வெற்றி நடை போடவைப்பேன்."
இயேசு காலத்தில் வாழ்ந்த ஒரு
ஏழைக் கைம்பெண்.
அவள் வாழ்ந்ததும் ஒரு சமூகச் சூழ்நிலையில்தான்.
ஆனாலும், அவள் கோவிலில் காணிக்கை போட்ட விதத்தைப் பார்க்கும்போது
அவள் வாழ்ந்த சமூகச் சூழ்நிலை அவளை எந்த விதத்திலும் பாதித்திருப்பதாகத் தெரியவில்லை.
பணக்காரர்கள் காணிக்கை போட்டார்ள்.
அவர்கள் எவ்வளவு போட்டார்கள் என்பது பிரச்சனை இல்லை.
அவர்கள் தங்களிடம் மிகுதியாயிருந்த பணத்திலிருந்து
ஒரு பகுதியை எடுத்து
கடவுளுக்குக் காணிக்கை போட்டனர்.
ஆனால் ஏழைக்கைம்பெண்
இரண்டு செப்புக்காசுகள் போட்டாலும்
வறுமையிலும் தன் பிழைப்புக்கானது முழுவதையுமே போட்டுவிட்டாள்.
உண்மையில் அவள் மற்ற எல்லாரையும்விட அதிகம் போட்டாள்.
செல்வந்தர்கள் காணிக்கையாகப் போட்டது அவர்கள் கையிலிருந்த பணம்.
ஆனால் ஏழைக் கைம்பெண் காணிக்கையாகப் போட்டது அவளது வாழ்க்கை.
செல்வந்தர்களைப் பொறுத்த மட்டில் மறுநாள் செலவிற்கான பணம் அவர்கள் கையில் இருந்தது.
ஆனால் ஏழைக் கைம் பெண்ணைப் பொறுத்த மட்டில் மறுநாள் செலவிற்கான பணம் கடவுளிடம் இருந்தது.
ஏனெனில் கையில் இருந்ததை எல்லாம் கடவுளிடம் ஒப்படைத்து விட்டாள்.
"அன்றன்றுள்ள அப்பம் எங்களுக்கு இன்று தாரும்"
"Give us this day our daily bread." என்று செபிக்க வேண்டும் என்பதுதான் இயேசுவின் விருப்பம்.
அதன்படி இன்றைய கவலை இன்றைக்கு, நாளைய கவலை நாளைக்கு.
நாளையைப் பற்றி இன்று கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
அன்றன்றையக் கவலையை அன்றன்று கடவுளே தீர்த்து வைப்பார் என்று அசையாத நம்பிக்கை உள்ளவர்கள்தான்
மறுநாளைக்காக சேர்த்து வைக்காமல் அன்றன்று செலவு போக மீதி இருப்பதை முழுவதும் கடவுளிடம் கொடுத்து விடுவார்கள்.
இவர்களுக்கு சூழ்நிலையைப் பற்றிக் கவலை இல்லை.
மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றியும் கவலை இல்லை.
தங்களுக்குத் தேவையானது எல்லாம் கடவுளிடம் இருக்கிறது,
அன்றன்றைய தேவையை அன்றன்றே கடவுள் நிறைவேற்றுவார் என்பது இத்தகையோரின் அசையா நம்பிக்கை.
நமது உழைப்பும் ஊதியமும்
உழைக்க சக்தியைக் கொடுத்த இறைவனுக்கே சொந்தம்.
'அவருக்காக உழைக்கிறோம்,
அவருக்காகவே ஊதியம் பெறுகிறோம்,
அவருக்காகவே செலவு செய்கிறோம்,
மீதியை அவரிடமே கொடுத்து விடுகிறோம்.'
என்ற பாடத்தை அந்த ஏழையிடமிருந்து கற்றுக் கொள்கிறோம்.
உண்மையில் கடவுளிடம் விசுவாசம் உள்ள ஏழைகள்தான் மிகப்பெரிய பணக்காரர்கள்.
ஏனெனில், அவர்கள் உலகின் எல்லா செல்வங்களுக்கும் உரிமையாளரான கடவுளின் பிள்ளைகள்.
கிறிஸ்தவ மதிப்பீடுகள் (Christian values) பற்றி நிறைய பேசுகிறோம்.
ஆனால் அவற்றைக் கடைப் பிடிப்போரை பூதக்கண்ணாடி வைத்துத் தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இயேசு சுட்டிக்காட்டிய ஏழைக் கைம்பெண்ணின் பணம் பற்றிய மதிப்பீடு கிறிஸ்தவ மதிப்பீடு.
"எல்லாப் பணமும் இறைவனுக்கே சொந்தம்."
நம்மில் எத்தனை பேர் அன்றன்றய உழைப்பில் மிஞ்சுவதை
நாளைக்கென்று சேர்த்து வைக்காமல்
தேவைப்படுவோரோடு பகிர்ந்து கொள்கிறோம்?
தேவைப்படுவோருக்குக் கொடுப்பதும் இறைவனுக்குக் கொடுக்கும் காணிக்கைதான்.
துன்பங்கள் நமது விண்ணக வங்கியில் ஆன்மீகச் செல்வங்களைச் சேர்க்க உதவும் சிலுவைகள் என்பது கிறிஸ்தவ மதிப்பீடு.
நம்மில் எத்தனை பேர் துன்பங்கள் வரவேண்டும் என்று செபிக்கிறோம்?
இயேசுவே துன்பங்களைத் தேடிதான் உலகிற்கு வந்தார்.
நமக்கு துன்பங்கள் வரும்போது,
"துன்பங்களைத் தேடி உலகிற்கு வந்த இயேசுவே,
'இதோ என் துன்பங்கள்,
அவற்றை எல்லாம் நீரே எடுத்துக்கொள்ளும்''
என்றுதானே செபிக்கிறோம்!!
"இலவசமாய்ப் பெற்றுக்கொண்டீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்."
(மத்.10:8)
"பெறுவதில் விட கொடுப்பதில்தான் மகிழ்ச்சி அதிகம்."
நம்மில் எத்தனை பேர் இந்த மகிழ்ச்சியை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறோம்?
ஒருநாள்
திருப்பலியின்போது குருவானவர், "நமது சமாதானத்தை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்வோம்." என்று சொன்னபோது
நண்பர் ஒருவர் எதுவும் செய்யாமல் இருந்தார்.
பூசை முடிந்து வெளியே வந்தபின் அவரிடம்,
"ஏன் சார், உங்க சமாதானத்தில எனக்குக் கொஞ்சம் தரக்கூடாதா?" என்றேன்.
"அட போங்க சார், இல்லாததை எப்படித் தரமுடியும்?
வீட்டில் ஆயிரம் பிரச்சனைகள்.
பத்தாயிரம் சண்டைகள். சமாதானம் எட்டிக்கூட பார்க்க மறுக்கிறது."
"எல்லோரிடமும் சமாதானம்" என்பது முதன்மையான கிறிஸ்தவ மதிப்பீடு என்று சொல்லலாம்.
இயேசு மனிதன் ஆனதே நமக்கும் அவருக்கும் இடையில் சமாதானத்தை உண்டாக்கதான்.
சமாதானத்திற்கு அடிப்படை நல்ல மனது.
மற்றவர்களுக்கு நல்லது செய்ய ஆசைப்படும் மனதுதான் நல்ல மனது.
"நன்மனதோற்கு சமாதானம்" என்பதுதான் கிறிஸ்மஸ் நற்செய்தி.
இயேசுவின் மனது நல்ல மனது, ஏனெனில் அவர் நமக்கு நல்லது செய்யவே ஆசைப்பட்டார்.
அதற்காகவே வாழ்ந்து, அதற்காகவே உயிர்நீத்தார்.
நாம் அவருக்கு எதிராக ஆயிரம் பாவங்கள் செய்தாலும் அவர் நமக்கு நன்மையையே நினைக்கிறார்.
நமது அயலான் நமக்கு தீங்கு நினைத்தாலும்
நாம் அவனை மன்னித்து, நல்லதையே நினைத்தால்
நம் மனத்தில் சமாதானம் நிலவும்.
நாம் கிறிஸ்தவ மதிப்பீடுகளைப் பின்பற்றி வாழ்ந்தால்
நமது சூழ்நிலை மோசமாக இருந்தாலும் அது நம்மைப் பாதிக்காது.
இயேசு சுட்டிக்காட்டிய ஏழைக் கைம்பெண்ணின் மதிப்பீட்டை பின் பற்றி வாழ்ந்தால்
நாம் விண்ணகத்தில் மிகப் பெரிய செல்வந்தர்கள்.
லூர்துசெல்வம்.
No comments:
Post a Comment