Sunday, November 10, 2019

சிலுவை வெறும் அடையாளம் மட்டும் அல்ல, நமது வாழ்வே அதுதான்.

சிலுவை வெறும் அடையாளம் மட்டும் அல்ல, நமது வாழ்வே அதுதான்.
*****     *****     *****     *****


சிலுவை கிறிஸ்தவத்தின் அடையாளம்.

நாம் காலையில் எழுந்ததிலிருந்து, இரவில் படுக்கச் செல்லும்வரை

 செய்யும் ஒவ்வொரு ஒவ்வொரு செயலையும்

 சிலுவை அடையாளத்தோடுதான் ஆரம்பிக்கிறோம், முடிக்கிறோம்.

ஒரு காலத்தில் சிலுவை குற்றவாளிகளின் அடையாளமாக இருந்தது.

மரணத்தீர்வை இடப்பட்ட குற்றவாளிகள் சிலுவை மரத்தில்தான் அறையப்பட்டு
கொல்லப்பட்டார்கள்.

இயேசு தனது சிலுவை மரணத்தால் 

தண்டனையின் சின்னத்தை ஆசீர்வாதத்தின் சின்னமாக மாற்றினார்.

குற்றவாளிகளின் சின்னத்தை இரட்சகரின் சின்னமாக மாற்றினார்.


தோல்வியின் சின்னத்தை வெற்றியின் சின்னமாக மாற்றினார்.

பாவத்தின் சின்னத்தை மன்னிப்பின் சின்னமாக மாற்றினார்.

பயத்தின் சின்னத்தை நம்பிக்கையின் சின்னமாக மாற்றினார்.

சிலுவைக்குப் பெயர் வாங்கிக்
கொடுத்தது

அதில் தொங்கி, 

நமக்காகத் தன்னையே தன் அன்புத் தந்தைக்குப் பலியாக ஒப்புக் கொடுத்த 

இறைமகன் இயேசு. 

"தந்தையே, உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்."


நாம் இயேசுவின் பாடுபட்ட சுரூபத்தை எப்போதும் நம்முடனே வைத்திருக்கிறோம்.

அடிக்கடி அதைக் கையில் எடுத்து முத்தம் கொடுக்கிற பக்தி முயற்சி  நம்மில் அநேகருக்கு உண்டு.

பாடுபட்ட சுரூபத்துக்கு மட்டுமல்ல,

நாம் நமது உடலின் மேல் வரையும் சிலுவை அடையாளத்திற்கும் ஒவ்வொரு முறையும் முத்தம் கொடுக்கிறோம்.

முத்தம் அன்பின் அடையாளம்.

ஒவ்வொரு முறையும் சிலுவை அடையாளத்திற்கும்,   பாடுபட்ட சுரூபத்துக்கும் முத்தம் கொடுக்கும்போது,

"இயேசுவே, நீர் என்னை நேசிப்பதுபோல நானும் உம்மை நேசிக்கிறேன்,

நீர் எனக்காக உயிரைக் கொடுத்ததுபோல நானும் உமக்காக உயிரைக் கொடுக்கத் தயாராய் இருக்கிறேன்" என்று சொல்லுகிறோம்.

சிலுவை அடையாளத்திற்கு முத்தம் கொடுப்பதில் இன்னொரு பொருள் இருக்கிறது.

நாம் வலது கையால் சிலுவை அடையாளம் போடுகிறோம். 

அப்படிப் போடும்போதே நமது வலது கரம் இயேசுவின் வலது கரமாக மாறிவிடுகிறது. 

ஆகையினால்தான் இயேசுவுக்குக் கொடுக்கவேண்டிய முத்தத்தை நமது வலது கரத்துக்கே கொடுத்து விடுகிறோம்.

இப்போது நாம் இயேசுவுக்கு வலது கரம்,

அதாவது அவருக்காக எதையும் செய்யத் தயாராய் இருக்கும் அவருடைய கையாள்! 

இந்த உணர்வோடு சிலுவை அடையாளம் வரைந்தால் நாம் நமது கரங்களைப் பாவம் செய்யப் பயன்படுத்துவோமா?

இறைப்பணிக்காக நற்செயல் செய்ய மட்டும் பயன்படுத்துவோம்

ஏதாவது ஒரு பொருளைப் பார்க்கும்போது அதோடு தொடர்புடைய பொருளோ, ஆளோ, கருத்தோ ஞாபகத்துக்கு வரும்.

இது பார்க்கின்றவருடைய மன நிலையையும் பொறுத்தது



உதாரணத்திற்கு இராட்டையை பார்த்தவுடன் மகாத்மா காந்தி  ஞாபகத்துக்கு வருவார்.

மகாத்மா காந்தி சிலருக்கு  சுதந்திர நாட்டையும்,

சிலருக்கு ரூபாய் நோட்டையும் ஞாபகப்படுத்துவார்! 


பாடுபட்ட சுரூபத்தைப் பார்த்தவுடன் நமக்கு என்னென்ன ஞாபகத்துக்கு வரவேண்டும்?

1.பாடுகள்.
2.பலி,
3.பாவன்னிப்பு,
4.நிலை வாழ்வு.


1.மனிதர் செய்த பாவங்களுக்குக் கடவுளே பரிகாரம் செய்யத் தீர்மானித்தார்.

ஆனால் தேவசுபாவத்தால் கஸ்டப்பட முடியாது.

ஆகவே  நம் பாவங்களுக்குப் பரிகாரமாக கஸ்டப்பட அதாவது பாடுகள் பட வேண்டுமென்பதற்காகவே மனிதனாய்ப் பிறந்தார்.

நாம் என்றென்றும் பேரின்பத்தோடு வாழ வேண்டும் என்பதற்காகவே

 கடவுள் மனிதனாய்ப் பிறந்து பாடுபட்டார்

 என்ற உண்மை நாம் பாடுபட்ட சுரூபத்தைப் பார்க்கும் போதெல்லாம் 

நமது நினைவுக்கு வரவேண்டும்.

அது நினைவில் இருந்தால்

 கடவுள் நமக்காகப் பட்ட துன்பங்கள் முன் 


நமது துன்பங்கள்
துன்பங்களாகவே தெரியாது!


2. இயேசு வெறுமனே துன்பங்கள் மட்டும் படவில்லை.

நமக்காகத் தன் உயிரையே பலியாகக் கொடுத்தார்.

நமக்காக கடவுள் பலியானார்

என்ற உண்மை நாம் பாடுபட்ட சுரூபத்தைப் பார்க்கும் போதெல்லாம் 

நமது நினைவுக்கு வரவேண்டும்.

3.தன்னையே பலியாகக்  கொடுத்தது நமது பாவங்களுக்குப் பரிகாரமாக மட்டுமல்ல,

நாம் நமது பாவங்களுக்கு மன்னிப்புப் பெறவும் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.

அம்மா சமைத்து வைத்துவிட்டால் மட்டும் நம் வயிறு நிறையாது.

நாம் சாப்பிட்டால் மட்டுமே நிறையும்.


இயேசு நம் பாவங்களுக்குப் பரிகாரம் செய்துவிட்டதால் மட்டும் நம் பாவங்கள் மன்னிக்கப்படாது.

நாம் மன்னிப்பைக் கேட்டுப் பெற வேண்டும்.

நமது பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு, 

அவற்றை குருவிடம் சங்கீர்த்தனம் செய்து

 மன்னிப்புப் பெற வேண்டும்.

நாம் சிலுவை அடையாளம் போடும்போதும்,

பாடுபட்ட சுரூபத்தைப் பார்க்கும்போதும்

நாம் நமது பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்றுவிட்டோமா?  என்ற எண்ணம் வரவேண்டும்.

மன்னிக்கப்படாத பாவங்கள் இருந்தால் மன்னிப்புப் பெற ஏற்பாடு செய்யவேண்டும்.

பாவங்களை வைத்துக் கொண்டு பாடுபட்ட சுரூபத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் என்ன பயன்?

இயேசு நமக்காகப் பட்ட பாடுகளை நினைக்கும்போது நமக்குள் உத்தம மனஸ்தாபம் பொங்கி எழ வேண்டும்.

4. ஒவ்வொரு முறை பாடுபட்ட சுரூபத்தைப் பார்க்கும்போதும்

 இயேசுவின் இரத்தத்தால் நாம்  இரட்சண்யம் அடைந்து, 

நிலை வாழ்வைப் பெறுவோம் என்ற எண்ணம் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும்.

ஒவ்வொரு முறை சிலுவை அடையாளம் போடும்போதும் நமது ஆன்மீக வாழ்வு புதுப்பிக்கப் பட்டுக் கொண்டே இருக்கும்.

சிலுவை வெறும் அடையாளம் மட்டும் அல்ல, நமது வாழ்வே அதுதான்.

சிலுவையைச் சுமப்பதுதானே   நமது வாழ்வு! 

லூர்துசெல்வம்.

No comments:

Post a Comment