"என் வீடு செபவீடாகும்"
(லூக்.19:46)
* * * * * * * * * * *
ஒருநாள் இயேசு கோவிலுக்கு வந்தபோது அங்கே வியாபாரிகள் தங்கள் விற்பனைத் தொழிலை நடத்திக்கொண்டிருந்தனர்.
கோவில் இறைவனை ஆராதிப்பதற்காகக் கட்டப்பட்ட இடம், வியாபாரத்திற்கான இடமல்ல.
ஆகவே இயேசு
அங்கே விற்பவர்களைத் துரத்தத் தொடங்கினார்,
அவர்களை நோக்கி, ""என் வீடு செபவீடாகும்" என்று எழுதியிருக்கிறது.
நீங்களோ அதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்" என்றார்.
"உங்களுடைய உடல் பரிசுத்த ஆவியின் ஆலயம்.
நீங்கள் உங்களுக்குச் சொந்தமல்ல,
நீங்கள் விலைகொடுத்து வாங்கப்பெற்றீர்கள்.
ஆகவே, உங்கள் உடலில் கடவுளை மகிமைப் படுத்துங்கள்."
இவை புனித சின்னப்பரின் வார்த்தைகள்.
இறைவனால் தனக்காகப் படைக்கப்பட்ட நம்மை
சாத்தான் பாவத்தின் மூலம் அபகரித்துக் கொண்டு போய் விட்டான்.
இறைமகன் இயேசு தனது விலைமதிப்பில்லாத இரத்தத்தைச் சிந்தி நம்மை மீட்டிருக்கிறார்.
இப்போது நாம் இயேசுவுக்குச் சொந்தம்.
இயேசுவுக்கு மட்டும்தான் சொந்தம்.
நம்மில் வாழ்வதற்காக தன் இரத்தத்தை விலையாகக் கொடுத்து வாங்கியிருக்கிறார்.
வாங்கியது மட்டுமல்ல, நம்மில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
நாம் இயேசு வாழும் ஆலயம்.
நாம் ஒரு செப வீடு.
நாம் எப்போதும் செபிக்க வேண்டிய இடம் 'நாம்.'
'செபிக்க வேண்டிய இடம் நாம்' என்றால்,கோவில்?
பொது வழிபாட்டிற்காக பொதுவான ஆலயத்துக்கு செல்லுகிறோம்.
பொது ஆலயத்துக்குச் செல்லும்போதும் நாம் இயேசு வாழும் ஆலயமாகத்தான் செல்லுகிறோம்.
ஆலயத்திற்குள் ஆலயம்.
ஆலயமாகிய நம்மை முழுமையான வழிபாட்டு இடமாக மாற்றி,
அதாவது,
வழிபாட்டிற்கு எதிரான, இடைஞ்சலான அத்தனையையும் வெளியேற்றிவிட்டு,
அதை இயேசுவுக்குப் பிடித்தமான ஆலயமாக மாற்றி
அங்கே வீற்றிருக்கும் இயேசுவை ஆராதிக்க வேண்டும்.
அப்புறம் திவ்யநற்கருணைப் பேழையை ஏறிட்டுப்பார்த்தால்
நம்முள் இருக்கும் அதே இயெசுதான் அங்கும் இருப்பார்.
இப்போது நாமாகிய ஆலயம்
பொது ஆலயத்தோடு ஒன்றித்திருக்கும்.
இரண்டிலும் இருப்பது அதே இயேசுவே.
நமது உள்ளத்துக்கும், திவ்யநற்கருணைப் பேழைக்கும் இடை யில்
இடைஞ்சல் எதுவும் இருக்காது.
இடையூரின்றி ஆண்டவரோடு இணைந்து செபிக்கலாம்.
கோவிலில் இருந்து செபித்தாலும்,
வெளியே இருந்து செபித்தாலும்
நாம் செப வீடுதான்.
எதிர் எதிரான இரண்டு ஆட்கள் ஒரே இடத்தில் இருந்தால் அங்கே சமாதானம் இருக்காது.
நமக்குள்ளும் இயேசுவுக்குப் பிடித்த உணர்வும்( அன்பும்)
பிடிக்காத உணர்வும் (வெறுப்பும்) இருந்தால் நமக்குள் எப்படி சமாதானம். இருக்கும்?
நமது இருதயம் பாவமோ பாவநாட்டமோ இன்றி சுத்தமாக இருக்க வேண்டும்.
இயேசுவுக்குப் பிடித்தமான புண்ணியங்களால் அலங்கரிக்கப் பட்டிருக்க வேண்டும்.
அன்பு,
தாழ்ச்சி,
இரக்கம்,
விவேகம்,
பொறுமை,
மட்டசனம்,
கற்பு
ஆகியவை இயேசுவுக்குப் பிடித்தமான புண்ணியங்கள்.
பாவமின்றி, பரிசுத்தமான,
புண்ணியங்களால் அலங்கரிக்கப்பட்ட நமது இருதயமான செபக்கூடத்தில்
நாம் ஒரு நாளைக்கு 24 மணி நேரமும்
இயேசுவோடு செபத்தில் இணைந்திருக்க வேண்டும்.
இருதயத்தைச் சுத்தமாக வைத்திருப்பது சரி.
புண்ணியங்களால் அலங்கரிப்பதும் சரி.
அதெப்படி 24 மணி நேரமும் செபத்தில் இணைய முடியும்?
செபம் என்றால் என்ன என்று தெரியாதவர்கட்கே இந்த சந்தேகம் வரும்.
அநேகர் வார்த்தைகளைப் பயன்படுத்தி வாயினால் சொல்லப்படுவது மட்டுமே செபம் என்று எண்ணுகிறார்கள்.
அதுவும் செபம்தான்,
ஆனால், வாயோடு உள்ளமும் இணைந்திருந்தால் மட்டுமே.
மனதை எங்கோ அலைய விட்டுவிட்டு வாயிலிருந்து வார்த்தைகளை உதிர்ப்பது செபம் அல்ல.
உண்மையில் இருதயங்கள்,
நமது இருதயமும், இறைவனின் இருதயமும்
இணைவதுதான் செபம்.
நாம் இறைவனோடு ஒன்றித்து வாழ்வது வாழ்க்கை என்னும் செபம்.
இறைவனோடு ஒன்றித்து என்றால்,
இறைப் பிரசன்னத்தில்,
இறைவனுக்காக
வாழ்வது.
ஒரு இரண்டு வயதுக் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு
அம்மா வெளியூருக்குச் சென்றுவிட்டால்
அது அம்மாவைத் தேடி அழும்.
ஆனால் அம்மா வீட்டில் இருக்கும்போது
குழந்தை அடுத்த அறையிலோ,
வீட்டிற்கு வெளியே கூட
அம்மாவைப் பார்க்காமலே விளையாடும்.
ஏனைனில் அம்மா வீட்டில்தான் இருக்கிறாள் என்று அதற்குத் தெரியும்.
சில குழந்தைகள் அப்பப்போ வந்து அம்மாவை எட்டிப் பார்த்துவிட்டுப் போய் விளையாடும்.
குழந்தை அம்மாவின் பிரசன்னத்தில்,
அதாவது,
அம்மா அருகில் இருக்கிறாள் என்ற உணர்வோடு விளையாடும்.
நாமும் இறைவன் நம்மோடு இருக்கிறார்
என்ற உணர்வோடு வாழ்வதுதான்
இறைப் பிரசன்னத்தில் வாழ்வது.
அடுத்து நாம் இறைவனுக்காக வாழ வேண்டும்.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் இறைவனுக்காக செய்ய வேண்டும்.
நாம் எழுவது,
காலைக் கடன்களைச் செய்வது,
உண்பது,
உடுப்பது,
வேலைக்குப் போவது' விளையாடுவது,
ஓய்வு எடுப்பது ,
இரவில் தூங்குவது
போன்ற எல்லா செயல்களையும் இறைவனுக்காகச் செய்தால்
அவை செபமாக மாறிவிடுகின்றன.
நமது இறுதி நேரத்தில் நமது மரணத்தை கடவுளுக்கு ஒப்புக் கொடுத்துவிடால்
மரணமும் செபமாக மாறிவிடுகிறது.
இதே போன்று நமது வாழ்நாள் முழுவதும் இறைவனது சன்னதியில், இறைவனுக்காக வாழ்வதே
வாழ்நாள் முழுவதும் செபிப்பது.
ஆக 'நாம்' ஆகிய செபக்கூடத்தில் எப்போதும் செபம் நடந்து கொண்டே இருக்கும்.
பாவங்களாகிய வியாபாரிகள் உள்ளே நுழைய முடியாது.
நாம் செபித்துக் கொண்டே வாழ்ந்து,
செபித்துக் கொண்டே மரித்து,
செபித்துக் கொண்டே விண்ணுலகில் நுழைந்து
செபித்துக் கொண்டே நித்திய வாழ்வு வாழ்வோம்.
லூர்துசெல்வம்.
No comments:
Post a Comment