Sunday, November 10, 2019

"எங்களிடம் விசுவாசத்தை அதிகமாக்கும்" (லூக்.17:5)

"எங்களிடம் விசுவாசத்தை அதிகமாக்கும்" (லூக்.17:5)
*****     ****    ****     *****     ****
இயேசு தன் சீடர்களுக்கு மன்னிப்பின் அவசியத்தைப் பற்றி போதித்தார்:

உன் சகோதரன் குற்றம் செய்தால் அவனைக் கடிந்துகொள். 

மனம் வருத்தினால் அவனை மன்னித்துவிடு.

4 அவன் ஒரு நாளில் ஏழு முறை உனக்கெதிராகக் குற்றம் செய்து, 

ஏழு முறையும் உன்னிடம் திரும்பி வந்து, 

"நான் மனம் வருந்துகிறேன்" என்றால், அவனை மன்னித்துவிடு" என்றார்

சீடர்கள் இயேசுவிடம்,

"எங்களிடம் விசுவாசத்தை அதிகமாக்கும்"

என்கிறார்கள்.

இவ்வசனங்களை வாசித்தபின் இரண்டு வினாக்களை நாமே நமக்குள் எழுப்பி, அவற்றுக்கு விடைகாண முயல்வோம்.

1.மன்னிப்புக்கும், விசுவாசத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?

2.ஏன் சீடர்கள் தங்கள் விசுவாசத்தை அதிகரிக்கும்படி இயேசுவிடம் வேண்டினார்கள்? 

நாம் எல்லோருமே இயேசுவின் சீடர்கள். 

கிறிஸ்தவத்தை நமது வாழ்வாக ஏற்றுக் கொண்டவர்கள்.

 கிறிஸ்தவத்தின் உயிரே விசுவாசமும், மன்னிப்பும்தான்.

இயேசு இறைமகன். 

பரிசுத்த தம திரித்துவத்தின் இரண்டாம் ஆள்.

கடவுளாகிய அவர் மனிதனாய்ப் பிறந்ததே 

நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து,

நம்மில் மனஸ்தாபத்தைத் தூண்டி,

அவற்றை மன்னிப்பதற்காகவே.


இறைமகன் மன்னிப்பதற்காகவே மனிதன்
ஆனார்.

இயேசுவையும் மன்னிப்பையும் பிரிக்க முடியாது.

மன்னிப்பைத் தர அவர் எப்போதும் ரெடி.

தருவதைப் பெற நாம் ரெடியாக வேண்டும்.

விசுவாசம்?

விசுவாசம் கடவுள் நமக்குத் தந்த இலவசப் பரிசு.

கடவுளை நாம் பார்க்கவில்லை.

மனிதனாய்ப் பிறந்த இயேசுவையும் பார்க்கவில்லை.

அவர் நமக்காகப் பலியான நிகழ்வையும் நாம் பார்க்கவில்லை.

அவர் உயிர்த்ததையும் நாம் பார்க்கவில்லை.

நம்மிடம் இருப்பது

அவர் நிறுவிய கத்தோலிக்கத் திருச்சபையும், 

அவரைப் பற்றி எழுதியுள்ள பைபிள் மட்டும்தான்.

நாம் நேரடியாகப் பார்க்காத ஒன்றை 

திருச்சபையின் போதனையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு 

உண்மை என்று ஏற்றுக் கொள்கிறோமே, 

அதுதான் நமது விசுவாசம்.

விசுவாசம் நமது புத்தியிலிருந்து வந்ததல்ல.

கடவுளிடமிருந்து வந்தது.

நம்மிடம் விசுவாசம் இல்லாவிட்டால்

 நமக்கும் இயேசுவுக்கும் சம்பந்தம் இல்லை.

நமக்கும் இயேசுவுக்கும் சம்பந்தம் இல்லாவிட்டால்
 நமக்கு பாவமன்னிப்பும் இல்லை.

எப்படி இயேசுவையும் மன்னிப்பையும் பிரிக்க முடியாதோ,

அதேபோல் விசுவாசத்தையும் மன்னிப்பையும் பிரிக்க முடியாது.

இயேசுதான் விசுவசிப்பவர்களை மன்னிக்கிறார்.

இயேசுவின் சீடர்கள் அவரை விசுவசித்தார்கள்.

இயேசு தம் சீடர்களுக்கு விசுவாசத்தைப் பரிசாக அளித்தார் என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

அம்மா சாப்பாடு தரும்போது, அது போதாவிட்டால்,

"அம்மா,இன்னும் கொஞ்சம் சாப்பாடு" என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுகிjuறோம் அல்லவா,  

அது போல்தான் அப்போஸ்தலர்களும்,

"எங்களிடம் விசுவாசத்தை அதிகமாக்கும்."

ஆண்டவரிடம் கேட்கிறார்கள்.

விசுவாசத்தின் அளவு அதிகமாக அதிகமாக ஆண்டவரின் போதனைகளும்,

 அவருடைய வழிநடத்துதல்களும் நன்கு புரியும்.

அம்மா ஏன்  குழந்தை அழும்போது பால் கொடுக்கிறாள்?

அப்போதுதான் பிள்ளைக்கு தாயின் அருமையும்,தேவையும் புரியும்.

 நாம் கேளாமலேயே கிடைக்கும் பொருட்களின் அருமை நமக்குத் தெரிவதில்லை.

அவற்றைத் தந்து உதவுபவர்களுடைய அருமையும் புரிவதில்லை.

நமக்கு எது தேவை என்பதை உணர்ந்து, 

அதை நிவர்த்தி செய்ய இறைவனால் மட்டுமே முடியும் .

ஆகவேதான் இயேசு "கேளுங்கள், கொடுக்கப்படும்."

என்றார்.

அப்போஸ்தலர்ளும் தங்களது விசுவாசத்தின் தேவையை உணர்ந்து 

இயேசுவிடம், "ஆண்டவரே,எங்களிடம் விசுவாசத்தை அதிகமாக்கும்" என்று வேண்டுகிறார்கள்.

பைபிளில் நாம் இந்த வசனங்களை வாசிப்பது வெறும் பழக்கத்தின் காரணமாகவோ அல்லது பொழுது போக்குக்காவவோ இருக்கக் கூடாது.

இறைவார்த்தையை வாசிப்பதே அதன் வழி நடப்பதற்காகத்தான்.

நமக்கு விரோதமாகக் குற்றம் செய்தோரை நாம் மன்னிக்க வேண்டும்.

இறைவனுக்கு விரோதமாக நாம் செய்த பாவங்களுக்கு மன்னிப்புக்கேட்கவேண்டும்.

மன்னிப்பதும், மன்னிப்பு கேட்பதும் நமது விசுவாசத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

இறைவன் நமது தந்தை என்பதை விசுவசித்தால்தான்

 மனிதர் அனைவரும் இறைவனில் நமது சகோதர சகோதரிகள் என்பது புரியும்.

விசுவாசத்தின் அடிப்படையில் குடும்ப உணர்வு இருந்தால்தான் 

பாவம் குடும்ப உறவை முறிக்கிறது, 

மன்னிப்பு உறவை வலுப்படுத்துகிறது 

என்பது புரியும்.

எத்தனை முறை மன்னிக்க வேண்டும்?

கடவுள் அளவற்றவர்.

அவரது அன்பும் அளவற்றது.

ஆகவே தரும் மன்னிப்புக்கும் அளவு கிடையாது.

எத்தனை முறை பாவம் செய்தாலும், நாம் மன்னிப்புக் கேட்கும்போது இறைவன் மன்னிக்கிறார்.

அதேபோல் நாமும் நமது அயலானை மன்னிக்க வேண்டும்.

அப்போஸ்தலர்கள் நாமும் இயேசுவிடம் வேண்டுவோம்,

"ஆண்டவரே, எங்கள் விசுவாசத்தை அதிகரித்தருளும்."

லூர்துசெல்வம். 



No comments:

Post a Comment