Sunday, December 1, 2019

"என் பின்னே வாருங்கள்:"(மத்.4:19)

"என் பின்னே வாருங்கள்:"
(மத்.4:19)
*   *    *   *   *    *   *    *    *   *  *  *
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

சர்வ வல்லவருக்குச் சொல்லும் ஆயுதம்.


"கடவுள் ஒளி உண்டாகுக என்றார்.  ஒளி உண்டாயிற்று."


"நீரெல்லாம் ஒரே இடத்தில் ஒன்றாகச் சேரக்கடவது: காய்ந்த தரை தோன்றக்கடவது என்றார்.

 அது அப்படியே ஆயிற்று.''


இயேசு,

 "என் பின்னே வாருங்கள்." என்றார்.


"உடனே அவர்களும் வலைகளை விட்டுவிட்டு, அவரைப் பின்சென்றனர்."


"உங்கள் விசுவாசத்தின்படியே உங்களுக்கு ஆகட்டும்" என்றார்.

 அவர்களுடைய கண்கள் திறந்தன"


"விரும்புகிறேன், குணமாகு"

உடனே தொழுநோய் குணமாயிற்று. (மத்.8:3)

"லாசரே, வெளியே வா" என்றார்.

 என்றதும் இறந்தவன் வெளியே வந்தான்." 
(அரு.11:43,44)


 இயேசுவின் சொல்லின்  வல்லமையை  உணர்ந்த நூற்றுவர் தலைவன்  அவரிடம்,

"நீர் ஒரு வார்த்தை சொன்னால் போதும்: என் ஊழியன் குணமடைவான்." (மத்.8:8)
என்கிறான்.

இயேசு , "நீ போகலாம், விசுவசித்தபடியே உனக்கு ஆகட்டும்" என்று சொன்னார்.

 அந்நேரமே ஊழியன் குணமடைந்தான்.
(மத்.8:13)

இயேசு பொதுவாழ்வில் ஈடுபட்ட   மூன்று ஆண்டுகளுமே 

அவரது சொல்லின் வல்லமையால்   நற்செய்தியை அறிவித்ததுமன்றி

 சென்றவிடமெல்லாம் புதுமைகள் செய்தார்.

அவர் செய்த புதுமைகளில் எல்லாம் மிகப் பெரிய புதுமை

சீடர்களை வரச் சொன்னதும், போகச் சொன்னதும்தான்!

அதில் அப்படி என்ன புதுமை இருக்கிறது? 

"என் பின்னே வாருங்கள்."

இது இயேசு சீடர்களுக்கு விடுத்த அழைப்பு.


உடனே அவர்களும் வலைகளை விட்டுவிட்டு, அவரைப் பின்சென்றனர்."

இது சீடர்களின் செயல்.


"நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள்"

இது அவர் சீடர்களுக்கு இட்ட கட்டளை.

இதற்கு எல்லா சீடர்களும் கீழ்ப்படிந்தார்கள்.

இதில் புதுமை எங்கே இருக்கிறது?

இயேசு சர்வ வல்லப கடவுள்.

அவரது நற்செய்தி உலகின் கடைசி எல்கை வரை எடுத்து செல்லப்பட வேண்டும்.

அதற்காக எப்படிப்பட்ட சீடர்களைத் தேர்ந்தெடுக்கிறார்?

படிப்பறிவு இல்லாதவர்கள்.

தங்கள் அன்றாட வாழ்க்கையை ஓட்ட மீன்பிடிப்பதைத் தொழிலாகக் கொண்டவர்கள்.

ஒருவர் வரி வசூலிப்பவர்.

கோழைகள். 

மூன்று ஆண்டுகள் அவரோடே சுற்றிவிட்டு, 

அவர் கைது செய்யப்பட்டபோது அவரை விட்டு ஓடிப்போனவர்கள்.

ஒருவர், "எனக்கு அவரைத் தெரியாதம்மா." என்று இயேசுவை  மூன்று முறை மறுதலித்தவர்.

.இப்படிப்பட்டவர்களைக் கொண்டுதான் இயேசு தன் நற்செய்தியை உலகெங்கும் பரப்பினார்!

அவரை மூன்று முறைமுறை மறுதலித்த பயந்தாங்கொள்ளி மேல்தான் 

உலகின் எல்கைவரைப் பரவி

 உலகின் இறுதிவரை உறுதியாய் நிற்கக்கூடிய திருச்பையைக் கட்டினார்.

இயேசு செய்த மிகப்பெரிய புதுமை இதுதான்!

புல்லின் நுனியைக்கொண்டு இமயமலையைப் புறட்டிப் போடமுடியுமா?

ஆனால் தன் சொல்லின் வல்லமையினால் உலகையே இரட்சித்தவர் இயேசு! 

 "Follow me."


"Go forth to the whole world and preach the Gospel."


"என் பின்னே வாருங்கள்."

"நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள்"

'வாருங்கள்',      'சீடராக்குங்கள்'

உலகிலேயே மிக சக்திவாய்ந்த சொற்கள் இவைதான்!

இந்த சொற்களுக்கு மிகப் பெரிய சக்தி எங்கிருந்து வந்தது?

எல்லாம் வல்ல இயேசுவிடமிருந்து!


நாம் யாரையாவது வேலை ஏவ வேண்டும் என்றால்,
 
ஏவிவிட்டு உட்கார்ந்து கொள்வோம்.

ஏவப்பட்டவர் உத்தரவை எடுத்துக் கொண்டு போய்விடுவார்.

உத்தரவு போய்விடும், நாம் போகமாட்டோம்.

ஆனால் இயேசு  எப்போதும், எங்கும் இருப்பவர்.


"நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள். 

இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."
(மத்.28:30)


"போதியுங்கள்."

"உங்களோடு இருக்கிறேன்."

இயேசு போதிக்கச் சொன்னது மட்டுமல்ல, 

போதிப்பவர்கள் கூடவே இருந்து, தன் சொல்லுக்கு (போதனைக்கு)
சக்தியாக இருக்கிறார்.

சாமியார் பிரசங்கம் வைக்கும்போது அவர் கூறுவது வெறும் வார்த்தைகள் அல்ல.

இயேசுவோடு வரும் வார்த்தைகள்.

அப்படியானால் நாம் காதுகளில் வாங்கி கருத்தில் பதிப்பதும் 

இயேசுவோடு வரும் வார்த்தைகள்தான்.

இயேசு இரண்டு விதங்களில் நம்மிடம் வருகிறார்:

1.திவ்ய நற்கருணை மூலமாக.
..
2.இறை வார்த்தை மூலமாக.

திவ்ய நற்கருணையில் இயேசு பிரசன்னமாய் இருப்பதால்

சிலுவையில் நமக்காக மரித்த அதே இயேசு  

அதே ஆன்ம சரீரத்தோடு நமக்குள் வருகிறார்.

பைபிள் வாசிக்கும்போதும், 
சாமியார் பிரசங்கத்தைக் கேட்கும்போதும் வார்த்தை வடிவில் நமக்குள் வருகிறார்.

இயேசுவும் அவரது வார்த்தைகளும் சர்வ வல்லமை உள்ளவை.

நற்கருணை வாங்கும்போதும்,
இறை வார்த்தையைக் கேட்கும் போதும்

எல்லாம் வல்ல இறைவனோடு ஒன்றித்திருக்கிறோம்.

அவரின் வல்லமையோடும் ஒன்றித்திருக்கிறோம்.

நமது விசுவாசத்தின் ஆழத்திற்கு ஏற்றபடி

 இயேசுவின் வல்லமையின் உதவியால் 

உலகம் சாதிக்க முடியாதவற்றையும் சாதிக்கலாம்.

இயேசுவே அதற்கான வாக்குறுதி அளித்துள்ளார்.

"விசுவசிப்பவர்களிடம் இவ்வருங்குறிகள் காணப்படும்: 

என் பெயரால் பேய்களை ஓட்டுவர், புதிய மொழிகளைப் பேசுவர்,

 பாம்புகளைக் கையால் பிடிப்பர். 

"கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கிழைக்காது.

 பிணியாளிகள் மேல் கைகளை வைப்பர், அவர்களும் நலமடைவர்" என்றுரைத்தார்.
(மாற்கு.16:17,18)

விசுவசிப்பவர்களால் இவற்றைச் செய்யமுடியும்.

விசுவாசத்தின் ஆழத்திற்கேற்ப நமது செயல்களின் அளவும் இருக்கும்.


கையில் ஒரு பைசாவை வைத்துக்கொண்டு,

"எனக்குப் பிரியாணி வாங்க முடியவில்லையே!" என்று ஏங்கக் கூடாது.

இத்தினிப்போல விசுவாசத்தை வைத்துக்கொண்டு 

"என்னால் சாதிக்க முடியவில்லையே"

 என்று ஏங்கக் கூடாது.


இறைவார்த்தை வல்லமை உள்ளது.

அதன் உதவியால் புதுமைகள் கூட செய்யலாம், ஆழமான விசுவாசம் இருந்தால்.

ஆழமாக விசுவசிப்போம்.

அருஞ் செயல் புரிவோம்.

ஆண்டவரை அடைவோம்.

லூர்துசெல்வம். 

No comments:

Post a Comment