Monday, December 9, 2019

அவ்விதமே, இச்சிறுவருள் ஒருவன்கூட அழிவுறுவது வானகத்தில் உள்ள உங்கள் தந்தையின் விருப்பமன்று."(மத்.18:14)

"அவ்விதமே, இச்சிறுவருள் ஒருவன்கூட அழிவுறுவது வானகத்தில் உள்ள உங்கள் தந்தையின் விருப்பமன்று."
(மத்.18:14)
*   *    *   *   *    *   *    *    *   *  *  *

"ஏங்க, ஒரு சின்ன சந்தேகம்.
இரண்டு பேர் ஒருத்தரை ஒருவர் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறாங்க.

ஆனால் கல்யாணம் முடிந்த கொஞ்ச நாட்களுக்குள்ள சண்டை போட ஆரம்பிச்சிடுறாங்கள, ஏன்?"

"காதலில் இருப்பது அன்பு.
சண்டையில் இருப்பது வெறுப்பு.

மனிதனிடம் இரண்டுமே இருக்கு.

கல்யாணத்திற்கு முன்பேயே அவர்களிடம் இரண்டு குணங்களுமே இருக்கு.

கல்யாணத்திற்கு முன்பு அன்பை மட்டும் காண்பிக்கிறாங்க.

கல்யாணத்திற்குப் பிறகு இரண்டையுமே காண்பிக்கிறாங்க.

அதனால சண்டையும், சமாதானமும் மாறி மாறி வருது."

"நாம இறைவனுடைய சாயலிலதான படைக்கப் பட்டோம்.

கடவுள் அன்புமயமானவர். அவர் அவரது அன்பைத்தானே நம்மோடு பகிர்ந்து கொண்டார். அப்புறம் வெறுப்பு எப்படீங்க நம்முள் நுழைந்தது? "

..."நாம காலையில் வீட்ல இருந்து சுத்தமான உடை அணிந்துதான் வெளியே கிழம்புகிறோம்.

ஆனால் மாலையில் வீடு திரும்பும்போது நமது உடை அழுக்காக இருக்கிறதே, அது  எப்படி?"

"வீட்டை விட்டு வெளியேறும்போது மாசு படிந்த சூழ்நிலைக்குள்  (Polluted atmosphere) நுழைகிறோம்.

சூழ்நிலையிலுள்ள மாசு நம் உடையை அழுக்காக்கி விடுகிறது"

..."அதேபோல்தான் கடவுள் நமது முதல் பெற்றோரைப் படைக்கும்போது

தனது  பண்புகளான அன்பு, இரக்கம், நீதி, ஞானம் ஆகியவற்றை

அவர்களோடு பகிர்ந்து கொண்டார்.

ஆனால் இந்தப் பண்புகளுக்கு எதிர்மறைப் பண்புகளுக்கு உரியவனான சாத்தான்

ஆதாம் ஏவாளைப் பாவத்தில் விழத்தாட்டிய நொடியில் அவனது பண்புகளும் மனிதனுக்குள் நுழைந்தன.

அப்புறம் மனிதனின் வாழ்க்கையே

அவனிடத்தில் உள்ள எதிர்மறைப் பண்புகளுக்கு இடையிலான போராட்டம்தான்.

இந்த போராட்டத்தில் அன்பு வெற்றி பெறவேண்டும்."

"அதாவது நமது வாழ்க்கை அன்பினால் இயக்கப்பட வேண்டும்.

ஒரு பேருந்தை இயக்குவது அதன் ஓட்டுனர்.

அவர் எங்கே போக வேண்டும் என்று நினைக்கிறாரரோ அங்கேதான் பேருந்தும் செல்லும்.

அதேபோல் நமது வாழ்க்கையை அன்புதான் இயக்க வேண்டும்.

அன்பு இயக்கினால்

நமது வாழ்க்கை அன்பின் ஊற்றாகிய இறைவனை நோக்கிப் பயணிக்கும்.

வெறுப்பு இயக்கினால்

நமது வாழ்க்கை வெறுப்பின் ஊற்றாகிய சாத்தானை நோக்கிப் பயணிக்கும்."

..."சிறு குழந்தை அன்பினால் மட்டுமே ஆளப்படும்.

எதிர்மறைப் பண்புகளின் அதனிடம் இருக்காது.

சிறு குழந்தைக்கு அன்பு செய்ய மட்டும்தான் தெரியும்,

வெறுக்கத் தெரியாது.

அதனால்தான் திருடனைப் பார்த்தால்கூட அது புன்முறுவல் பூக்கும்.

ஒரு முறை ஒரு திருடன் ஒரு வீட்டிற்குத் திருடப் போயிருக்கிறான்.

முதலில் கழுத்தில் தங்கச் சங்கிலி அணிந்திருந்த ஒரு ஒரு குழந்தையை நெருங்கி யிருக்கிறான்.

குழந்தை அவனை நோக்கி புன்முறுவல் செய்ததோடு,

தன்னை எடுக்கும்படி கைகளை உயர்த்தியிருக்கிறது.

அதன் புன்சிரிப்பிலும், கள்ளங்கபடற்ற தன்மையிலும் மயங்கி,

அதைக் கைகளில் எடுத்து, அதன் கன்னங்களில் ஐந்தாறு முத்தங்கள் கொடுத்து,

குழந்தையை இறக்கி வைத்து விட்டு,

தான் வந்த வேலையைக் கைவிட்டுவிட்டு,

கள்ளனாக வந்தவன் நல்லவனாகத் திரும்பிச் சென்றான்.

அதனால்தான் இயேசு,

"நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில், விண்ணரசில் நுழையமாட்டீர்கள்.

எனவே, இக்குழந்தையைப்போலத் தன்னைத் தாழ்த்திக்கொள்ளுகிறவன் எவனோ, அவனே விண்ணரசில் பெரியவன்.

மேலும் இத்தகைய குழந்தை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்கிறவன் எவனும்,

என்னையே ஏற்றுக்கொள்கிறான்."

என்கிறார்.

"நாம், பெரியவர்கள், எப்படிக் குழந்தைகளாக மாறமுடியும்?"

..."இதோ நீயே குழந்தையாக மாறிவிட்டாயே!"

"நானா?  எப்படி?"

..."குழந்தைதான் இப்படி அப்பாவித்தனமாக கேள்வி கேட்கும்!

மாறவேண்டியது உருவத்தில் அல்ல, குணத்தில்.

குழந்தையைப்போல கள்ளங் கபடற்றவர்களாக,

அன்பினால் மட்டும் இயக்கப்படுபவர்களாக,

பாவம் அற்றவர்களாக மாறவேண்டும்.

குழந்தை மாசுமருவற்றது.

ஆனால் நம்மிடம்  வளர்வதால் நம்மிடம் உள்ள வேண்டாத குணங்களை அது கற்றுக் கொள்கிறது.

நாம் குழந்தைகளைப்போல ஆவதற்குப் பதில்

அவர்களை நம்மைப்போல் ஆக்கிவிடுகிறோம்!"

"அதாவது நமது பெற்றோர்கள் நம்மை ஆக்கியதுபோல!"

..."ஏண்டி, நீயும் ஆதாம் ஏவாளாக மாறவேண்டுமா?

நாம் சரி இல்லை என்றால் அதை ஏற்றுத் திருந்த வேண்டும்.

பழியைப் பெற்றோர் மேல போடக்கூடாது."

"ஹலோ!  அத்தான்! நான் யார் மேலேயும் பழி போடல.

யதார்த்தமான உண்மையைச் சொன்னேன்.

நாம் பேச ஆரம்பிக்கும்போதே

"எதிர்மறைப் பண்புகளுக்கு உரியவனான சாத்தானா''ல வெறுப்பு நுழைஞ்சுதுன்னு சொன்னோம்.

அதாவது உண்மையைச் சொன்னோம். பழி போடல.

குழந்தைகளை வளர்ப்பவர்கள்

குழந்தைகளின் வளர்ப்புக்கு பொறுப்பேற்க வேண்டும். அதைத்தானே சொன்னேன்."

"சாரிடா! "

"ஏங்க, நான் இப்போ உங்ககிட்ட Saree கேட்டேனா?"

..."இதுக்குப் பேர்தான் 'கேட்காம கேட்கிறது.'

இப்போ பேசறத பேசி முடிச்சிட்டு கடைக்குப் போவோம்."

"பேசிக்கொண்டே கூட போகலாமே!"

..."அதுவும் நல்ல Ideaதான். வா.
எங்கே விட்டேன்?"

"நாம் குழந்தைகளைப்போல ஆவதற்குப் பதில்

அவர்களை நம்மைப்போல் ஆக்கிவிடுகிறோம்!"

..."பெற்றோர்,மாசற்ற வாழ்வு வாழ்ந்து, பிள்ளைகளுக்கு முன்மாதிரிகையாய் இருக்க வேண்டும்.

தாங்கள் சரியான வாழ்வு வாழாமல் இடறலாய் இருக்கக் கூடாது.

சிறுவருக்கு இடறலாய் யாராவது இருந்தால்

'அவன் கழுத்தில் பெரிய எந்திரக் கல்லைத் தொங்கவிட்டு

நடுக்கடலில் அவனை ஆழ்த்தி விடுவது அவனுக்கு நலம்.' என்று ஆண்டவர் கூறுகிறார்.

மாசற்றதாய் இருக்கும் ஒவ்வொரு குழந்யையும் அதே மாசற்ற தன்மையில் வளர்த்து
ஆளாக்கி விடவேண்டியது நமது கடமை.

"இச்சிறுவருள் ஒருவனையும் புறக்கணியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்."

என்று ஆண்டவர் கூறுகிறார்.

தன்னிடம் உள்ள நூறு ஆடுகளில் ஒன்றைக்கூட  தவற விடமாட்டான் நல்ல மேய்ப்பன்.

ஒரு ஆடு வழி தவறிப் போய் விட்டால் அதைக் கண்டுபிடிக்கும் வரை ஓயமாட்டான்.

அதைக் கண்டு பிடித்தவுடன் அவன் அடையும் ஆனந்தம்

மற்ற 99 ஆடுகளால் ஏற்படும்ஆனந்தத்தை விட பெரியதாய் இருக்கும்.

அவ்விதமே, சிறுவருள் ஒருவன்கூட அழிவுறுவது

வானகத்தில் உள்ள நமது தந்தையின் விருப்பமன்று.

அவன் குழந்தையாய் இருந்தபோது எப்படி மாசற்றவனாய் இருந்தானோ

அதே  மாசற்ற விதமாய் வாழ்நாள்  முழுவதும் இருக்கவேண்டும்.

உலகத்தில் ஒரு மாசற்ற சூழ்நிலை உருவாக வேண்டும்.

ஒவ்வொரு பெரியவரும் ஒரு குழந்தையைப் போல் வாழ ஆரம்பித்தால்

குழந்தைகளும் அதே மாசற்ற தன்மையில் பெரியவர்களைப் போல் வாழ ஆரம்பிப்பார்கள்."

"ஹலோ! அத்தான்!  அத்தான் கடை வந்தாச்சி."

..."ஆனால் பேச வேண்டிய விசயம் நிறைய இருக்கே! "
.
"அதை வீட்டுக்குத் திரும்பும்போது பேசுவோம்."

..."அதுவும் நல்ல Idea தான்."

லூர்துசெல்வம். 

No comments:

Post a Comment