Friday, December 13, 2019

"பூவுலகில் நல் மனதோற்குச் சமாதானம் உண்டாகுக." கிறிஸ்மஸ் செய்தி.

http://lrdselvam.blogspot.com/2019/12/blog-post_13.html

"பூவுலகில் நல் மனதோற்குச் சமாதானம் உண்டாகுக."  கிறிஸ்மஸ் செய்தி.
*   *    *   *   *    *   *    *    *   *  *  *

"என்ன அண்ணாச்சி, ரொம்ப அமைதியாய் இருக்கீங்க?"

..."பேசறதுக்கு ஆள் கிடைக்கல.
இப்ப நீ வந்திட்டல்ல. உட்கார். பேசுவோம்."

"அமைதியைப்  பற்றியே பேசுவோமா?"

...."ஏன் அமைதியைப் பற்றி அவ்வளவு ஆர்வம்?"

"அமைதியாய் இருப்பது எப்படி என்று தெரிஞ்சிக்கிடலாம் என்றுதான்.''

..."அதற்கு ஏன் பேசணும். பேசாமல் இருந்தாலே போதும்.

ஆசிரியர் வகுப்பிற்குள் நுழையும்போது பையன்கள் சப்தம் போட்டுக்கிட்டு இருப்பாங்க.

கையில் உள்ள பிரம்பைக் கொண்டு மேசையில ஓங்கி அடிச்சாப் போதும், வகுப்பு அமைதியாயிடும்."


"மேசையில அடிக்கதுக்கு முன்னால சண்டை போட்டுக் கொண்டிருந்தவங்க சமாதானம் ஆயிடுவாங்களா?"


..."அமைதி ஆயிடுவாங்க. அவ்வளவுதான்.

ஆசிரியர் வகுப்பை விட்டுப் போனவுடனே சண்டையைத் தொடருவாங்க."

"அப்போ அமைதிக்கும் சமாதானத்துக்கும் சம்பந்தமே கிடையாதா?"

..."எப்போவாவது கல்லரைத் தோட்டத்துக்குப் போயிருக்கியா? "

"அதெப்படி போகாம இருக்க முடியும்?

யார் இறந்தாலும் அவங்ககூட சேர்ந்து நாமும்தான போவோம்.

என்ன, அவங்க அங்கேயே படுத்துக்கிடுவாங்க, நாம திரும்பி வந்திடுவோம், தற்காலிகமா."

..."கல்லரைத் தோட்டத்தில பேசாம, அமைதியா படுத்திருப்பாங்க.

சமாதானமாகவா படுத்திருப்பாங்க? 

இரண்டு பேர் சண்டைபோட்டுக் கொண்டிருக்கும்போதே செத்திட்டாங்க.

இப்போ கல்லறைத் தோட்டத்தில்தான் 'அமைதியாய்ப்' படுத்திருக்காங்க.

இப்போ எழுப்பிவிட்டாக்கூட விட்ட இடத்திலிருந்து சண்டையை ஆரம்பிச்சிடுவாங்க.


ஆகையினால அமைதியும், சமாதானமும் ஒரே பொருள் உள்ள வார்த்தைகள் அல்ல."

"சண்டைக்குப் பின் சமாதானம்,
போருக்குப் பின் அமைதி,

என்ன பொருள்? "

..."சண்டையும், போரும் ஒரே பொருள் உள்ள வார்த்தைகள்தான்.

வழக்கமா மொழி உபயோகத்தில(Usage)

 ஆட்களுக்குள்ளே நடப்பது சண்டை, 

நாடுகளுக்குள்ளே நடப்பது போர், யுத்தம்.

இரண்டு பேர் சண்டை போட்டு  அப்புறம் சமாதானம் ஆகிட்டாங்கன்னா 

அவர்களுக்கு இடையிலான கோபத்தை விட்டுவிட்டு நண்பர்கள் ஆகிட்டாங்கன்னு அருத்தம்.

அமைதியாக மட்டும் ஆகிட்டாங்கன்னா வாய்ச் சண்டையை மட்டும் விட்டிருப்பாங்க,  

மனசுக்குள்ள இன்னும் கோபமாக இருக்கலாம்.


நாடுகளுக்கு இடையிலான போரின் இறுதியில் வெற்றி, தோல்வி காரணமாக அமைதி ஏற்படலாம்.

ஆனால் சமாதானம் ஆகியிருக்கும் என்று சொல்ல முடியாது.

முதல் உலகப்போரின் இறுதியில் 

வென்ற நாடுகளும்,

தோற்ற நாடுகளும்

 அமைதி ஒப்பந்தம் செய்து செய்து கொண்டார்கள்.

ஆனால் அமைதிக் காலத்தில் இரண்டாம் உலகப் போருக்காகத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள்."

"சமாதானமாக இருப்பவர்கள் அமைதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லையே!"

..."சமாதானம் மனதைச் சார்ந்தது. அமைதி வாயைச் சார்ந்தது.

நாம் நண்பர்ள்தானே!  நாம சந்திக்கும்போது அமைதியாகவா இருக்கிறோம்?"

"அமைதிக்கு வேறு அர்த்தமே இல்லையா?"

..."இருக்கு. அமைதிக் கடல்னு ஒண்ணு இருக்கு, தெரியுமா?"

"தெரியுமே! பசிபிக் பெருங்கடல்!"

..."வகுப்பில மாணவர்களிடம் 'பசிபிக் பெருங்கடலுக்கு ஏன் அந்தப் பெயர் வந்ததுன்னு தெரியுமா'ன்னு கேட்டேன்.

ஒரு பையன் நான் நினைத்துப் பார்த்திராத ஒரு பதிலைச் சொன்னான்.

'பசிbig' கடல், சார். அதாவது 'ரொம்ப பசி' உள்ள கடல், சார்.'

'ஏண்டா அந்தப் பெயர் வச்சாங்க?'

'அத வச்சவங்ககிட்டதான் சார் கேட்கணும்.எங்கிட்ட கேட்டா, சார், வச்சாங்க?' ன்னு சொன்னான்!"

"குறும்புக்காரப் பையன் போலிருக்கு.

ஏன் அந்தப் பெயர்வந்தது? "

..."Pacific என்றால் Peaceful அதாவது அமைதியானன்னு அருத்தம்.

மற்ற கடல்களில் மாதிரி இக்கடலில் பெரிய அலைகளோ கொந்தளிப்போ இருக்காது.

தண்ணீர் பேரிரைச்சல் ஏற்படுத்தாது அமைதியாக இருக்கும். 

அதனால் அதற்கு பசிபிக் பெருங்கடல் என்று பெயர் வைத்தார்கள்.


Peaceful என்றால் அமைதியான என்று பொருள்.


நம்முடைய மனதில் தீர்வு காணக் கடினமான பிரச்சனைகள்,

கோபம் போன்ற எதிர்மறை உணர்வுகள்

பாவம்

போன்றவை இருந்தால்  மனஅமைதி இருக்காது.

மனது ஏதோ ஒரு போரட்டத்தில் சிக்கிக் கொண்டிருக்கும்.

ஆனால் மேற்கூறப்பட்ட பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் இருந்தால்,

மன அமைதியை (Peace of mind) அனுபவிப்போம்.

இந்த மன அமைதிக்கும்,

 பேசாமல் அமைதியாய் இருப்பதற்கும் அர்த்தத்தில் சம்பந்தமே இல்லை.

முந்தியது Peace of mind.

பிந்தியது Silence.

திவ்ய நற்கருணை முன்பு

 அமைதியாய் (Silent) அமர்ந்து தியானித்தால் 

மன அமைதி
(Peace of mind.) கிடைக்கும்."


"சமாதானம் என்றால் என்ன?

இதற்கும் அமைதிக்கும்

 ஏதாவது சம்பந்தம் இருக்கா?"

..."இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோருக்கு இடையே இருக்கும் சுமூகமான உறவையே சமாதானம் என்கிறோம்.

அமைதியாய் இருக்க ஒருவர் போதும்.

ஒருவர் தனியே இருந்து பேசாமல் இருக்கலாம்,

மன அமைதி வேண்டுமானால் இறைவனோடும், அயலானோடும் சமாதானம் வேண்டும்.

உறவில் சமாதானம் நிலவ குறைந்தது இரண்டுபேர் தேவை.

இரண்டுக்கு மேல் எத்தனை பேர் வேண்டுமானாலும் இருக்கலாம்.

இறைவன் மனினைப் படைக்கும்போது தேவ இஸ்டப்பிரசாத நிலையில் (Sanctifying grace) படைத்தார்.

அதாவது பாவம் இல்லாத நிலையில் படைத்தார்.

அதாவது படைப்பின்போது இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையே சமாதானமான உறவு இருந்தது.

மனிதனைப் படைத்தது பொம்மை போல் வைத்திருந்து விளையாடுவதற்காக அல்ல.

அவனை நேசிக்க, அவனால் நேசிக்கப்பட.

கடவுள் மாறாதவர்,

ஆகவே அவர் நம்மீது கொண்ட நேசத்தில் எந்த மாற்றமும் இருக்காது.

ஆனால் மனிதன் தான் செய்த பாவத்தினால்

இறைவனோடு அவனுக்கு இருந்த சமாதானமான உறவை முறித்துக் கொண்டான்.

இறைவன் முறிக்கவில்லை, அவர் பாவியை எப்போதும் போல நேசிக்கிறார்.

ஆனால் சமாதான உறவிற்கு இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும்.

சமாதான உறவு திரும்ப வேண்டுமென்றால் 

மனிதன் தான் செய்த பாவத்திற்குப் பரிகாரம் செய்து, 

இறைனின் மன்னிப்பைப் பெறவேண்டும்.

ஆனால் பாவம் அளவில்லா அன்புள்ள கடவுளுக்கு எதிராகச் செய்யப்பட்டிருப்பதால் 

அளவுள்ள மனிதனால் பரிகாரம் செய்ய முடியாது.

ஆனால் மனிதன்தான் செய்ய வேண்டும்.

ஆகவே அளவில்லா கடவுள் மனிதனாகப் பிறந்து, 

மனிதன்
செய்ய வேண்டிய பரிகாரத்தைத் 

தன் சிலுவை மரணத்தின் மூலம் செய்தார்.

ஞானஸ்நானம் மூலம் நமக்கு பாவமன்னிப்புக் கிடைத்தது,

இழந்த சமாதான உறவை மீண்டும்  பெற்றோம்.

திரும்பவும் நாம் பாவம் செய்து,  உறவை இழந்தால்

 பாவசங்கீர்த்தனம் மூலம் பாவமன்னிப்புப் பெற்று

 உறவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

நமது அயலானோடும் சுமூகமான உறவை வளர்த்து, சமாதானமாய் வாழவேண்டும்.

இறைவனோடும், அயலானோடும் சமாதானமாய் வாழ்ந்தால் மன அமைதி கிடைக்கும்."

"ஒருவரைப் பார்த்து 'அமைதி' என்று சொன்னால் என்ன அருத்தம்?"

..."பேசாம இருன்னு அருத்தம்."

"ஒருவரைப் பார்த்து 'சமாதானம்' என்று சொன்னால் என்ன அருத்தம்?"

..."சுமூகமான உறவோடு இருப்போம் என்று அருத்தம்."

"பூவுலகில் நல் மனதோற்குச் சமாதானம் உண்டாகுக."  கிறிஸ்மஸ் செய்தி.

 லூர்துசெல்வம்.

No comments:

Post a Comment